disalbe Right click

Monday, April 6, 2015

கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872



கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872
*************************************************************************

நமது இந்திய பண்பாட்டில் திருமணம் என்பது சடங்காக மட்டுமில்லாமல், இரு ஜீவன்கள் கடவுள் கொடுத்த ஆயுள் வரை இன்ப-துன்பங்களில் இணைந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டுள்ளது. அதே சமயத்தில் ஒவ்வொருவர் வாழ்விலும் பிரச்னைகள் வரும் சமயத்தில் அதன் தீர்வுக்கு சட்டம் அவசியமாகும். அதை கருத்தில் கொண்ட பல சாதி, மதம், மொழியினர் ஒருமரத்து பறவையாக கூடி வாழும் இந்திய திருநாட்டில், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியாக திருமண சட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறோம்.
அதன்படி கிறிஸ்துவ திருமண சட்டம் 1872ன் கீழ் என்னென்ன அம்சங்கள் சொல்லப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வோம்.
கிறிஸ்துவ திருமண சட்டம்-1872
*****************************************************
திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக நமது நாட்டில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சி, யஹொதி ஆகிய மதங்களுக்கு தொடர்புடைய வெவ்வேறு சட்டங்கள் உள்ளது. அதன்படி கிறிஸ்துவ திருமண சட்டம்-1872, (இது இந்து, இஸ்லாமியர், பார்சி, யஹொதி மதங்களை தவிர்த்து) இந்து, ஜெயின், பவுத்த, சிக்கிய மதத்தினருக்கு இந்து திருமண சட்டம்-1955 பொருந்தும். அதேபோல் பார்சி, யஹொதி ஆகிய மதங்களுக்கு தனி தனியாக திருமண சட்டங்கள் உள்ளது. கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு தனியாக திருமண சட்டம் பல ஆண்டுகளுக்கு முன் வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய கிறிஸ்துவ திருமண சட்டம்-1872 உள்ளது. அதேபோல் அவர்கள் எதிர்பாராத சூழ்நிலையில் பிரியும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் இந்திய கிறிஸ்துவ விவாகரத்து சட்டம்-1869 வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இஸ்லாமிய திருமணம் சமூகத்தின் அவசியம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படுகிறது. ஆனால் கிறிஸ்துவ மதத்தில் திருமணம் என்பது வேதாகமத்தின் அடிப்படையில் புனிதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவர் என்ற வார்த்தைக்கு கிறிஸ்துவின் வழியை பின்பற்றி நடக்கும் நபர் மற்றும் அதே மதத்தை பின்பற்றும் வம்சத்தினர் என்று அர்த்தமாகும்.
சட்டபூர்வமான திருமணத்திற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:
**********************************************************************************************************
* திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் கண்டிப்பாக ஒருவர் கிறிஸ்துவராக இருக்க வேண்டும். அவர்களின் திருமணம் கீழே குறிப்பிட்டுள்ள (காலம் 5ல் குறிப்பிட்டுள்ளபடி) கிறிஸ்துவ மத்திற்கு உட்பட்ட பிற வழிபாட்டிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அத்தகைய திருமணம் சட்டப்படி செல்லாத பூஜ்ஜிய திருமணமாக கருதப்படும் ( திருமண சட்டம் 4வது பத்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது).
திருமணம் கீழ் காணும் விதிமுறைகள்படி தான் நடக்க வேண்டும்.
*******************************************************************************************************
* திருச்சபை ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். கிறிஸ்துவ கோட்பாட்டின் படி ஞானஸ்தானம் பெற்றிருக்க வேண்டும். திருச்சபையின் தலைமை போதகர், பங்குதந்தை, ஆயர் உள்பட அதிகாரம் படைத்தவர்களால் உருவாக்கப்பட்டுள்ள விதிமுறை (Rules), மதவிதிமுறை (Rites), வழிபாடு
(Ceremony), பாரம்பரம் (Custom) ஆகியவைக்கு ஏற்ற வகையில் திருமணம் நடக்க வேண்டும். அல்லது
* திருமணம் செய்து வைக்கும் போதகர் (Minister of Religion) அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
* கிறிஸ்துவ திருமண சட்டத்தின் படி நியமனம் செய்துள்ள திருமண பதிவாளர் (Marriage Registrar) அல்லது அவருக்கு இணையான அதிகாரி முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும்.
* இந்திய கிறிஸ்துவர்கள் திருமணம் தொடர்பாக திருமண உறுதி சான்றிதழ் (Marriage Certificate) கொடுக்கும் அதிகாரத்தை மாநில அரசின் மூலம் பெற்றுள்ளவர் முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும்.
* திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் எந்த இடத்தில், எந்த சமயத்தில் திருமணம் செய்யப்படும் என்பதை குறிப்பிட வேண்டும் (திருமணம் காலை 6 மணி முதல் மாலை 7 மணிக்குள்) மட்டுமே நடக்க வேண்டும். மேலும் திருமணம் திருச்சபையில் நடப்பது நல்லது. இருப்பினும் சில எதிர்பாராத சூழ்நிலையில் திருமண மண்டபங்களில் நடத்தலாம். அங்கும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட போதகர்கள் மூலம் மட்டுமே நடக்க வேண்டும்.
* திருச்சபையின் தலைமை போதகர் (பிஷப்), பங்குதந்தை (பாதர்), ஆயர் அல்லது Minister of Religion மூலம் மட்டுமே திருமணம் நடக்க வேண்டும்.
* மேலே குறிப்பிட்டுள்ளபடி கிறிஸ்துவ திருமண சட்டம் பிரிவு 5 (1), (2) மற்றும் (3)ல் குறிப்பிட்டுள்ளபடி திருமணம் செய்து வைக்கும் அதிகாரம் திருச்சபையின் தலைமை போதகர் அல்லது அவரால் திருமணம் செய்துவைக்க அதிகாரம் வழங்கப்பட்ட போதகர் மட்டுமே திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படி செய்யப்படும் திருமணம் மட்டுமே சட்டப்படி அங்கிகரிக்கப்பட்ட திருமணமாக ஏற்றுகொள்ளப்படும். இத்தகைய திருமணம் செய்து வைக்கும் போதகர்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
* மேலும் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் திருமணம் தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன் தங்கள் திருச்சபை போதகரிடம் கடிதம் கொடுக்க வேண்டும். அதில் தான் திருமணம் செய்து கொள்ளும் தேதி, மணமுடிக்கும் பெண்களின் பெயர், முகவரி, பெற்றோர், பிறந்த தேதி உள்பட முழு விவரங்கள் கொடுக்க வேண்டும். அதை பெற்றுகொள்ளும் போதகர்கள், நகல் எடுத்து திருச்சபையின் தகவல் பலகையில் வெளியிட்டு, இத்திருமணத்திற்கு நியாயப்படி ஏதாவது எதிர்ப்பு இருக்குமானால் கைப்பட கடிதம் எழுதி கொடுக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும். திருமணம் நடக்கும் நாள் வரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் மண முடிக்கும் தம்பதியர்களின் உறவினர்கள் இருவரை சாட்சியாக வைத்து சம்மந்தப்பட்ட திருச்சபை போதகர் திருமணம் செய்து வைக்க வேண்டும்.
திருச்சபையின் தலைமை போதகர் (பிஷப்), பங்குதந்தை (பாதர்), ஆயர் அல்லது 
Minister of Religion ஆகியோர் திருமணம் பதிவு செய்வது தொடர்பாக:-
* திருமணம் செய்து வைக்கும் போதகர்கள், பிஷப் உள்பட பங்கு தந்தையாக இருப்பவர்கள் தாங்கள் செய்து வைக்கும் திருமணத்தை பதிவு செய்யும் உரிமை பெற்றுள்ளனர். திருமணம் முடித்தபின் தன்னிடம் வைத்து கொண்டுள்ள திருமண பதிவு புத்தகத்தில் மணமக்கள் பெயர், திருமண தேதி, நேரம், இருவரின் பெற்றோர் பெயர், நம்பிக்கைகுரிய இருவரின் சாட்சிகளை புத்தகத்தில் பதிவு செய்து கையெழுத்து பெற வேண்டும். அதை தேவைப்படும் போது அரசு அதிகாரிகள் யாராவது கேட்கும் போது காட்ட வேண்டும். மேலும் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், தங்கள் திருமணத்தை அரசு பாதிவாளரிடம் பதிவு செய்யவிரும்பினால், தங்களுக்கு திருமணம் நடத்தி வைத்த போதகரிடம் சான்றிதழ் பெற்றுகொண்டு, அதை தாலுகா அல்லது மாவட்ட திருமண பதிவாளரிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ளும் அதிகாரம் உள்ளது.
* திருச்சபைக்கு கொடுக்கப்படும் கடிதத்தில் மணமக்கள் முழு விவரம், கல்வி, வயது, இருப்பிட முகவரி, தொழில், குடும்ப பின்னணி, திருச்சபையில் எத்தனை ஆண்டுகள் உறுப்பினராக உள்ளீர்கள், தாங்கள் கொடுக்கும் முகவரியில் எத்தனை காலம் வாழ்ந்து வருகிறீர்கள், சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்ற விவரங்கள் கொடுக்க வேண்டும். அதை பெற்று கொள்ளும் போதகர், தங்கள் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வை விழும் இடத்தில் வெளியிட வேண்டும்.
* திருமணம் செய்து வைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் மூலம் கொடுக்கப்படும் திருமண பதிவு சான்றிதழ் மணமக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் வழங்க வேண்டும். ஒருவேளை திருமணமான தம்பதிகள் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும்பட்சத்தில் தங்களுக்கு திருமணம் நடந்ததை உறுதிபடுத்தும் சான்றிதழ் வழங்கும்படி போதகர் உள்பட திருமணம் நடத்தி வைத்தவரிடம் கேட்டால், தடையில்லாமல் கொடுக்க வேண்டும்.
* திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தங்கள் வயது தொடர்பாக சம்மந்தப்பட்டவரின் தாய், தந்தை இருவரும் இல்லாத பட்சத்தில் அவரது ரத்த சம்மந்தமான உறவினர்கள் மூலம் எழுத்து மூலமாக கடிதம் பெற்றுகொள்ள வேண்டும். அதை திருச்சபையின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். (திருமணம் செய்து கொள்ள ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.) மேலும் திருமணம் செய்து கொள்பவர்கள் விதவை அல்லது மனைவியை இழந்தவராக இருக்ககூடாது.
* திருச்சபையில் ஒப்புதல் சான்றிதழ் பெற்ற பின் திருமணம்:- பொதுவாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தங்கள் திருமணம் தொடர்பாக தான் சார்ந்த திருச்சபைக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். அதை பரிசீலனை செய்யும் போதகர் முன் புதுமண தம்பதிகள் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து போதகர் மூலம் திருமணம் செய்துகொள்ள தடையில்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும். அதன் பிறகே இரு வீட்டாரின் ஒப்புதலுடன் திருமணம் நிறைவேற்ற வேண்டும்.
* திருமண நாளில் சபை போதகர் அல்லது திருமணம் செய்து வைக்கும் உரிமை பெற்றவர் முன் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் மணமகனான (பெயரை குறிப்பிட்டு) மணமகளாகிய உன்னை (மணமகளின் பெயரை குறிப்பிட்டு) உன்னை கடவுளின் சன்னிதானத்தில் மனைவியாக ஏற்றுகொள்வதுடன், சட்டபடி மனைவியாக ஏற்றுகொள்கிறேன். இருவரும் வாழ்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும், மரணம் நம்மை பிரிக்கும் வரை கணவன், மனைவியாக வாழ ஒப்புதல் அளிக்கிறேன் என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும். அதே உறுதிமொழியை மணமகளும் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் உறுதிமொழியை தம்பதியரின் உறவினர்கள் இருவர் சாட்சியாக கையெழுத்திட வேண்டும். அப்போது தான் திருமணம் அங்கிகரிக்கப்படும்.
தாம்பத்திய உரிமைகள் (Restitution of Conjugal Rights):
********************************************************************************
* சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் பரஸ்பர ஒற்றுமையுடன் வாழும் உரிமை பெறுகிறார்கள். எதிர்பாராத சூழ்நிலையில் கணவன், மனைவி இடையில் பிரச்னை வந்து தனித்தனியாக வாழும் நிலை ஏற்பட்டாலும், தம்பதியரில் யாரும் நீதிமன்றத்தை நாடி தங்களை ஒன்றாக வாழ உத்தரவிடும்படி முறையிடும் உரிமை பெற்றுள்ளனர்.
* தவிர்க்க முடியாத நிலையில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெறலாம் (Judicial Separation and Divorce):
* திருமணமான தம்பதியர் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தனி தனியாக வசிப்பதை Judicial Separation என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் தம்பதியர் நிரந்தரமாக பிரிவதை விவாகரத்து என்று அழைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தம்பதியரில் யாராவது ஒருவர் கீழ் காணும் காரணங்களை முன்வைத்து தனியாக பிரிந்து வாழ்வது அல்லது நிரந்தரமாக பிரிந்துவிட விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்.
தம்பதிகள் இருவர் விருப்பத்தின் பேரில் விவாகரத்து:-
**********************************************************************************
திருமணமான தம்பதிகள் எதிர்பாராத சூழ்நிலையில் ஒன்றாக வாழவே முடியாது எனும் பட்சத்தில் அவர்கள் தங்களின் திருமண உறவை முறித்து கொள்ள முடியும். இருவரும் பிரிந்துவிட ஒன்றாக சுய விருப்பத்துடன் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம்.
* விவாகரத்து மனுவை திருமணமாகி ஓராண்டு முடிவதற்குள் தாக்கல் செய்ய முடியாது.
* விவாகரத்து பெற்றபின் இருபாலரும் தாங்கள் விரும்புவோரை திருமணம் செய்து கொள்ளலாம் கிறிஸ்துவ திருமண சட்டத்தின்படி திருமணமான தம்பதிகள் நீதிமன்றத்தின் மூலமே விவாகரத்து பெற முடியுமே தவிர, வேறு வழியில் விவாகரத்து பெற முடியாது. அப்படி பெற்றால் அது சட்டப்படி செல்லாது.
* தம்பதிகள் ஒன்றாக வாழ முடியாத நிலையில் விவாகரத்து பெறுவதாக எழுத்து மூலம் பத்திரம் எழுதி கொண்டு பிரிந்துவிடுவது சட்டபடியான விவாகரத்து என்று ஏற்றுகொள்ள முடியாது.
திருமணமான தம்பதிகள்:-
****************************************
* கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது மனைவி வேறொரு ஆணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தால் தம்பதியரில் யாராவது ஒருவர் அதிகார தோரணையுடன் கொடுமைப்படுத்தினால்
* இரண்டாண்டுகளுக்கு மேல் யாராவது ஒருவர் அடிமை தனத்துடன் நடந்துகொண்டால் தம்பதியரில் யாராவது ஒருவர் கிறிஸ்துவ மதத்தை விட்டு வேறு மதத்தை பின்பற்றினால்
* தம்பதியரில் யாராவது மனநோயாளியாக பாதிக்கப்பட்டால், எய்ட்ஸ் உள்பட பாலின நோய் பெற்றிருந்தால், தொழுநோயால் பாதிப்பு அல்லது குணப்படுத்த முடியாத நோய் தாக்கும் பட்சத்தில் யாராவது உலக பற்றுடன் வாழ்ந்தால்
* தம்பதியரில் யாராவது ஒருவர் மற்றொருவர் மீது திருமண விவகார உரிமையை மீண்டும் பெறுவதற்கு நீதிமன்றத்தில் டிக்ரி பெற்றுகொண்டு பின் ஓராண்டு முடிந்தால் கணவர் அல்லது மனைவி ஆகிய இருவரில் ஒருவர் வேறொருவருடன் வாழ்ந்தால்
* தம்பதியரில் யாராவது ஒருவர் 7 ஆண்டுகள் காணாமல் போய் இருந்து, அவர் உயிருடன் இருக்கும் தகவல் உறுதியாக தெரியாத பட்சத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் யாராவது ஒருவர் ஓராண்டு பிரிந்து வாழ்ந்து வந்தால்
ஜீவனாம்சம் மற்றும் வழக்கு செலவு:-
**********************************************************
தம்பதிகள் இடையில் மனகசப்பு ஏற்பட்டு இருவர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவரும் சமயத்தில் தனது தேவைகளுக்காக கணவரிடம் ஜீவனாம்சம் பெறும் தகுதி மனைவிக்கு உள்ளது. மேலும் வழக்கு செலவுக்கான தொகையும் பெறலாம். இந்த சலுகை மனைவி வேறொருவரை திருமணம் செய்துகொள்ளும் வரை மட்டுமே வழங்க முடியும். வழக்கு காலத்தில் பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டால், ஜீவனாம்சம் பெறும் உரிமையை இழந்துவிடுகிறார்.

No comments:

Post a Comment