திருமணம் ஆகி இருந்தாலும் கருணைப்பணி வழங்கணும்
திருமணமான பெண்ணிற்கு கருணை பணி மறுப்பது சட்ட விரோதம் : 4 வாரங்களில் பணி வழங்க உத்தரவு
மதுரை: 'திருமணமான பெண் கருணைப் பணி கோர தகுதி இல்லை என மறுப்பது அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது. பெண்ணிற்கு விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் பணி வழங்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் பிச்சை என்பவர் டிரைவராக பணிபுரிந்தார். அவர் 2008 மார்ச் 17 ல் இறந்தார். அவரது மகள் தேனி பி.சி.பட்டியைச் சேர்ந்த யசோதை கருணைப் பணி நியமனம் கோரி, வங்கி நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். நடவடிக்கை இல்லை.
உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலிக்க 2014 ல் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.வங்கி நிர்வாகம், 'தந்தை இறந்தபோது, மனுதாரருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆதலால், மனுதாரர் கருணைப் பணி நியமனம் கோர தகுதி இல்லை,' எனக்கூறி நிராகரித்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் யசோதை மனு தாக்கல் செய்தார்.
மனுதாரருக்கு பணி வழங்க 2015 ல் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், 'மனுதாரருக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் 30 வயதை கடந்துவிட்டார்,' எனக்கூறி நிராகரித்தார்.
அதை எதிர்த்து யசோதை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். பதிவாளரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றக் கிளை, யசோதைக்கு பணி வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர், உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் ஆர். சுப்பையா, ஜெ. நிஷாபானு கொண்ட அமர்வு விசாரித்தது.வங்கி தரப்பில்,'வங்கியின் துணை விதிகளின்படி யசோதைக்கு கருணைப் பணி வழங்க வழிவகை இல்லை. பணிக்குரிய வயதை கடந்துவிட்டார். அவர் நிவாரணம் கோர முடியாது,' என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் :
திருமணமான பெண்கள் கருணைப் பணி கோர தகுதி இல்லை என்பதை ஏற்க முடியாது. திருமணத்தை காரணமாகக்கூறி, கருணைப் பணி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
யசோதை 30 வயதை கடந்ததால், அவர் கருணைப் பணி கோர தகுதி இல்லை என்பதை ஏற்க முடியாது. தனி நீதிபதி விசாரிக்கும்போது, வயது பற்றி வங்கி தரப்பில் தெரிவிக்கவில்லை.கருணைப் பணிக்கு அதிகபட்ச வயது 40 என வங்கியின் துணை விதிகளில் உள்ளது.
இதை யசோதை தாக்கல் செய்துள்ளார். இதை கருத்தில் கொண்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.எந்த கோணத்தில் பார்த்தாலும், தனி நீதிபதியின் உத்தரவில் குறைபாடு காண முடியாது. வங்கியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
யசோதை நீண்ட நாட்களாக நியாயம் கோரி, இந்நீதிமன்றத்தின் கதவை தட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு 4 வாரங்களில் பணி நியமனம் வழங்க வேண்டும், என்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 04.04.2017
No comments:
Post a Comment