08: தோல்வி அவமானம் அல்ல!
தொழில் செய்து தோற்றால் எப்படி உணர்வீர்கள்?
இதற்கான பதிலில் உங்களுக்குத் தொழில் ஒத்து வருமா என்று சொல்லிவிடலாம்.
யார் மீது பழி போடலாம்?
உங்களுக்குத் தெரிந்து தொழில் செய்து தோற்றவர்களைக் கேளுங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று. “ஃபைனான்ஸ்தான் பிரச்சினை. தொடர்ந்து கொட்டப் பணமில்லை.” “பார்ட்னர் ஏமாத்திட்டாரு.” “பேமென்ட் நிறைய நின்னுப்போச்சு. காசு திரும்ப வாங்கறதுக்குள்ள உயிர் போச்சு” “ஃபாரின் மார்க்கெட் விழுந்ததில நமக்குப் பெரிய அடி!” “கஸ்டமர் டேஸ்ட் மாறிப்போச்சு!”
இப்படி வெளிப்புறக் காரணிகளைக் குறை கூறுவோர் பொதுவாகத் தொடர்ந்து தொழில் செய்தாலும் தோல்வியைத்தான் தழுவுவர். ஆனால் தோல்விக்கு முழுதாகத் தான் பொறுப்பேற்கும்போது தோல்வியில் கிடைக்கும் பாடங்களைச் சுலபமாக உள்வாங்க முடியும்.
தோல்விக்கு யார் மீது பழி போடலாம் என்ற எண்ணம் தன்னம்பிக்கையின்மையால்தான் வரும். தன் மீது தவறில்லை என்பதை நிலைநாட்ட எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உண்மையைச் சந்திக்கும் தைரியமின்மையைத்தான் காட்டும். அதற்குப் பதில் ‘என்ன செய்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்?’ என்று யோசிக்கையில் நம் பொறுப்புகள் புரியும்.
எங்கே கணக்கு?
எனக்கு நேர்ந்த வியாபார அனுபவம் இது. ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் தொடர்ந்து சில ஆண்டுகளாகப் பயிற்சியும் தனிநபர் ஆலோசனைகளும் நடத்திக்கொண்டிருந்தேன். அனைவரும் பாராட்டும்விதமாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது, எப்போதும் பேமெண்ட் சற்றுத் தாமதமாகத்தான் வரும். துறைத்தலைவர் தெரிந்தவர். அதனால் எதையும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
ஒரு நாள் அந்தத் துறைத்தலைவர் வேலையை விட்டுச்சென்றார். அடுத்து வந்தவர் என் ஆறு மாதப் பேமெண்ட்டை நிலுவையில் வைத்தார். நேரில் சென்று கேட்டபோது, கடந்த ஆறு மாதங்களாக நீங்கள் அக்ரிமெண்ட்டை ரென்யூ செய்யவில்லை என்றார் (அதெல்லாம் அவசரமில்லை என்று சொல்லியிருந்தார் பழைய துறைத் தலைவர்!). புதியவர் என்னைப் பார்த்துக் கேட்டார், “எந்தக் கணக்கில் இதை நான் கொடுப்பது?” அப்போது, அவர் மீது மிகுந்த ஆத்திரம் வந்தது. சாட்சிக்கு ஆயிரம் பேரைக் கூட்டினாலும் இருக்க வேண்டிய முக்கிய ஒப்பந்தம் கையில் இல்லை. கேஸ் நிக்காது. சில லட்சங்கள் நஷ்டம்.
படிப்பினைக்கு ஃபீஸ்
திரும்பி வருகையில் ஒன்று புரிந்தது. அந்த ஆளை, பழைய ஆளை, கம்பெனியைக் குற்றம் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. சரியான ஒப்பந்தம் இல்லாமல் வாய் வழியாக வேலையை ஏற்றுக்கொள்வது எவ்வளவு பேராபத்து என்பதை உணர்ந்தேன். இந்தப் படிப்பினைக்கு நான் கொடுத்த ஃபீஸ் அந்தச் சில லட்சங்கள். மனம் மிகவும் லகுவானது. என்னால் மீண்டு வரக்கூடிய தொகையில், விலையில் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டேனே என்று நன்றியோடு எண்ணிக்கொண்டேன். அதனால் தான் இன்று பன்னீரில் நனைத்துப் பேசி அழைத்தாலும் ஒப்பந்தம் போடாமல் ஒரு நாள் கூட வேலை செய்வதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளேன்.
எங்கு, எப்படித் தோற்றோம்!
இப்படி ஒவ்வொரு தோல்வியிலும் நாம் கற்க வேண்டிய பாடங்கள் உள்ளன. பல பாடங்கள் பிஸினஸில் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டிவரும். வெகு சில நேரம் அது உங்கள் தொழிலையே ஒரு ஆட்டு ஆட்டும். தொழிலைவிட்டே வெளியே வரும் சூழல் வரலாம். அதுவும் ஒரு தொழில் முடிவுதானே தவிரத் தனிப்பட்ட தோல்வி என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
முதல் தொழிலே பெரும் வெற்றியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. கமல் பாடியது போல, “ஒண்ணு இரண்டு எஸ்கேப் ஆன பின்னே, உன் லவ்தான் மூணா சுத்துல முழுமை காணுமேடா!” என்பது உண்மையாகலாம்.
இங்கு பிஸினஸில் தோல்வி என்று குறிப்பிடுவதை அவமானமாக நினைக்கிறார்கள். எம்.பி.ஏ. போன்ற படிப்புகளுக்கு உங்கள் வியாபார அனுபவம் மிகப்பெரிய பிளஸ். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் பலவற்றில் உங்கள் வெற்றியடையாத் தொழில் முனைவுகளுக்கு மதிப்பு தந்து அட்மிஷனில் முன்னுரிமை தருகிறார்கள். தொழிலே செய்யாதவனை விடத் தொழில் செய்து தோற்றவனுக்குக் கண்டிப்பாகப் பிஸினஸ் கற்கும் ஆர்வம் அதிகம் இருக்கும். எங்கு எப்படித் தோற்றோம் என்று அறியத்தான்!
ஆங்க்ரி பேர்ட் கதை தெரியுமா?
பணம் கிடைத்தவுடன் கடின உழைப்பில் சில காலத்தில் ஒரே ஒரு உற்சாகப் பாட்டில் தொழிலில் வெற்றி பெற்று நிலைக்கலாம் என்பது விடலை லட்சியம். உங்களுக்கு உங்களைப் பற்றித் தெரியவே ஒரு சில தொழில் முனைவுகள் தேவைப்படலாம். அதனால்தான் எடுத்தவுடன் அகலக்கால் வைக்க வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஆங்க்ரி பேர்ட் என்ற மொபைல் விளையாட்டு எவ்வளவு பிரபலம் என்று உங்களுக்குத் தெரியும்? ஆனால் அவர்கள் அதற்கு முன் நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டுகளை ஆப்களாக வெளியிட்டு அனைத்தும் தோல்வியைத் தழுவ, கம்பெனியை மூடும் சமயம் வெளிவந்ததுதான் ஆங்க்ரி பேர்ட். பின் லாபம் கொழிக்கும் மிகப் பெரிய நிறுவனமானது அது.
நாம் செய்வது தவறா சரியா என்று செய்யும்போது உணர முடியாது. அதனால் தான் தொழில் முனைவோர் எல்லா நேரத்திலும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
தோல்வி என்பது ‘இது வேலை செய்யாது’ என்ற கற்றலையும் வெற்றி என்பது ‘இது வேலை செய்கிறது’ என்ற கற்றலையும் தருபவையே. இரண்டுக்கும் நான் பொறுப்பு என்ற மனநிலை வருகையில் நீங்கள் தொழில் முனைவராகத் தகுதி அடைந்து விடுகிறீர்கள்.
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 28.03.2017
No comments:
Post a Comment