disalbe Right click

Showing posts with label உத்தரவு. Show all posts
Showing posts with label உத்தரவு. Show all posts

Saturday, February 24, 2018

கலெக்டர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

நிலத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை: சென்னை மாவட்ட கலெக்டர் ஆஜராக உத்தரவு
நிலத்தை ஆர்ஜிதம் செய்து, 30 ஆண்டுகள் ஆகியும் அதன் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்காததால், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிலம்

சென்னை, மயிலாப்பூரில், ராமசாமி என்பவருக்கு சொந்தமான, 487 சதுர அடி இடம் இருந்தது. இந்த இடம் பறக்கும் ரயில் திட்டத்துக்காக, 1986ம் ஆண்டில் அரசால் கையகப்படுத்தப்பட்டது; 1993-ம் ஆண்டில், அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு ரூபாய் 2..33 லட்சம் இழப்பீடாக அரசால் நிர்ணயிக்கப்பட்டது.

குறைவான இழப்பீட்டுத் தொகை

அந்த இழப்பீட்டு தொகையை உயர்த்தும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலத்தின் உரிமையாளர் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2017 ஜூலையில் 35.44 லட்சம் ரூபாயாக இழப்பீட்டு தொகையை நிர்ணயித்து,உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், 'இடம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகியும், அதற்கான பலனை அதன் உரிமையாளர் அனுபவிக்க வில்லை. .

'எனவே, ஒரு லட்சம் ரூபாய், அவரது வழக்கு செலவு தொகையாக அளிக்க வேண்டும். மொத்த தொகையை 12 வாரங்களில் வழங்க வேண்டும்' என, கூறப்பட்டது.

கண்டு கொள்ளாத கலெக்டர்

உயர்நீதிமன்றம் நிர்ணயித்த கெடு முடிந்ததும், இழப்பீட்டு தொகையை வழங்கும்படி, 2017 டிசம்பரில், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு, ராமசாமி, 'நோட்டீஸ்' அனுப்பினார்; ஆனால், எந்த பதிலும் இல்லை. 2018 ஜனவரியில், நினைவூட்டும் கடிதத்தையும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார்.நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக, அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி, கிருபாகரன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:

சொத்தை இழந்தும், இழப்பீட்டின் பலனை, 30 ஆண்டுகளாக அதன் உரிமையாளரால் அனுபவிக்க முடியவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவை சென்னை மாவட்ட ஆட்சியர் மீறியிருப்பது தெரிகிறது.

நேரில் ஆஜராக வேண்டும்

நீதிமன்ற உத்தரவுகளுக்கு, அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. உத்தரவுகள் எப்படி எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்கு, இந்த வழக்கு ஒரு உதாரணம். எனவே, மார்ச், 5ம் தேதி, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆஜராகும்படி, நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 25.02.2018

Saturday, February 10, 2018

நேர்முக தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவு

பிறந்த தேதியை விண்ணப்பத்தில் தவறாக குறிப்பிட்ட பெண் 
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவிலுள்ள தாஞ்சூர் கிராமத்தை சேர்ந்த பெண் அமுதினி என்பவர் 'குரூப் - 2' பணியிடங்களுக்காக நடந்த, ஆரம்பகட்ட தேர்வு மற்றும் எழுத்து தேர்வில், வெற்றி பெற்றார்; இருந்த போதிலும் அவருக்கு நேர்முக தேர்வுக்கு, அழைப்பு கடிதம் வரவில்லை. காரணம் என்னவென்று ஆராந்தபோது, 'தகுதி நிபந்தனையை பூர்த்தி செய்திருக்கவில்லை' என, அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது
மனுத் தாக்கல்
இதனால், தனக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில், அமுதினி மனு தாக்கல் செய்தார்.  மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், யு.எம்.ரவிச்சந்திரன், அவர்கள் ஆஜரானார். அவர், அமுதினி தனது ''விண்ணப்பத்தில், பிறந்த தேதியாக, 06.12.1993     என்று குறிப்பிடுவதற்கு பதிலாக , 06.02.1993 என்று தவறுதலாக, குறிப்பிட்டு விட்டார்; அமுதினி ''வனத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்; அமுதினிக்கு எதிராக, துறை நடவடிக்கை, தண்டனை எதுவும் இல்லை; இது தவறுதலாக நடந்து விட்ட செயல்தான். ஆதாயம் பெறும் நோக்கம் எதுவும் அவருக்கு இல்லை! என்று அவர் வாதாடினார். 
அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லோகநாதன் அவர்கள், ''தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், அமுதினியின் விண்ணப்பத்தில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அது நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்   விண்ணப்பத்தை, சரியாக நிரப்பவில்லை; எனவே, நிராகரித்ததை குறை கூற முடியாது,'' என்று வாதாடினார்.
மனுவை விசாரித்த, நீதிபதி, டி.ராஜா அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
அமுதினி தனது பிறந்த தேதியை தவறுதலாக குறிப்பிட்டு விட்டார்தலைமை வனப் பாதுகாவலர் அளித்த சான்றிதழில், 'அமுதினிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எதுவும் இல்லை; எந்த தண்டனையும் இல்லை; அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க, ஆட்சேபனை எதுவும் இல்லை' என, கூறப்பட்டு உள்ளது
இதுபோன்ற வழக்கு ஒன்றை ஏற்கனவே விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம்,  விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி உத்தரவிட்டுள்ளதுஆதாயம், சலுகை பெறும் நோக்கம் இல்லை என்பதால்அமுதினியின் விண்ணப்பத்தை, தேர்வாணையம் பரிசீலிக்க வேண்டும். நேர்முக தேர்வில் கலந்து கொள்ள அமுதினியை அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.02.2018 

Saturday, January 6, 2018

ஒரு பிரைவேட் கம்ப்ளைன்ட்டை

ஒரு பிரைவேட் கம்ப்ளைன்ட்டை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்ளும் போது, குற்றவியல் நடுவர் அந்த புகாரிலுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்தாரர் மற்றும் அவர் தரப்பு சாட்சிகளால் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை

CRL. RC. NO - 224/2016, DT - 31.3.2016, சென்னை உயர்நீதிமன்றம்

புகார்தாரரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் மற்றும் இதர சாட்சிகள் அளித்த உறுதிமொழி வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு, அவற்றில் ஏதேனும் குற்றச் செயலுக்கான வழக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதைதான் குற்றவியல் நடுவர் பரிசீலிக்க வேண்டுமே தவிர, அந்த புகாரிலுள்ள குறைபாடுகள் மற்றும் ஆதாரங்களின் தன்மை ஆகியவை குறித்து, அந்த புகாரை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலையில், குற்றவியல் நடுவர் பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை
இது குறித்து உச்சநீதிமன்றம் "அதாலத் பிரசாத் Vs ரூஃப்லால் ஜிந்தால் (2004-4-CTC-608)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
தனிநபர் புகார் தாக்கல் செய்வதற்கு கு. வி. மு. பிரிவு 200 வகை செய்கிறது. அது தனிப்பட்ட ஒரு வழக்கு நடவடிக்கையாகும். தனிநபர் புகாரை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து கு. வி. மு. பிரிவு 190(1)(a) ல் கூறப்பட்டுள்ளது. தனிநபர் புகாரின் மீது பிடிக்கட்டளை வழக்கு அல்லது அழைப்பாணை வழக்கு போன்றவற்றில் எவ்வாறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கு. வி. மு. பிரிவுகள் 200,202 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.
மேற்கொண்டு அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள் இருந்தால், இதனை வேறு விதமாக கூற வேண்டுமென்றால் அந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச் செயலுக்கு வழக்கு முகாந்திரம் இருந்தால் குற்றவியல் நடுவர் அந்த புகாரை கு. வி. மு. பிரிவு 190(1)(a) ன் கீழ் நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொண்டு, எதிரிக்கு கு. வி. மு. பிரிவு 204 ன் கீழ் அழைப்பாணை அனுப்ப வேண்டும். அந்த புகாரில் வழக்கு முகாந்திரம் எதுவும் இல்லையென்றால் அந்த புகாரை தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை சுருக்கமாக குறிப்பிட்டு கு. வி. மு. பிரிவு 203 ன் கீழ் தள்ளுபடி செய்யலாம்.
கு. வி. மு. பிரிவுகள் 200,202 ஆகியவற்றின் கீழ் ஒரு பரிசீலனையை மேற்கொள்வற்கு குற்றவியல் நடுவர் எவற்றையெல்லாம் தன்னுடைய கருத்தில் கொள்ள வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் மேற்கண்ட "அதாலத் பிரசாத் Vs ரூஃப்லால் ஜிந்தால் மற்றும் பலர்" என்ற வழக்கில் கூறியுள்ளது.
கு. வி. மு. பிரிவு 201 நீதிமுறைக் கட்டளை பிறப்பிப்பதை தள்ளி வைப்பது குறித்து கூறுகிறது. ஒரு புகாரை பெற்றுக் கொண்ட குற்றவியல் நடுவர் அதன் மீது ஒரு கட்டளை பிறப்பிப்பதை ஒத்தி வைத்து, அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சங்கதிகள் குறித்து தாமே அல்லது காவல்துறை அதிகாரிக்கு புலன் விசாரணை செய்வதற்கு அல்லது வேறு எந்தவொரு நபராலும் புலன் விசாரணை செய்வது அவசியமென்று கருதுகிற நிலையில், அந்த புகாரில் மேற்கொண்டு கட்டளைகளை பிறப்பிப்பதற்கு சாட்சிகளின் சாட்சியத்தை மெய்யுறுதியின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். காவல்துறையினர் புலன் விசாரணை செய்து அதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை பெற்று அந்த அறிக்கையில் மேற்கொண்டு அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எந்தக் காரணங்களுமில்லை என்று தெரிய வருகிற நிலையில், அந்த புகாரை தள்ளுபடி செய்யலாம். அவ்வாறு தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை சுருக்கமாக கு. வி. மு. பிரிவு 203 ல் கூறப்பட்டுள்ளவாறு பதிவு செய்துவிட்டு தள்ளுபடி செய்ய வேண்டும்.
புகாரை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொண்டு, புகார்தாரர் மற்றும் அவருடைய சாட்சிகளை விசாரித்ததற்கு பின்னர், அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான காரணங்கள் உள்ளது என்று மனநிறைவு அடைந்தால் கு. வி. மு. பிரிவு 204 ன் கீழ் நீதிமுறைக் கட்டளையை பிறப்பிக்கலாம். கு. வி. மு. பிரிவு 204 ன் கீழ் நீதிமுறைக் கட்டளையை பிறப்பிப்பதற்கு தேவையானது அல்லது நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனை என்னவென்றால், குற்றவியல் நடுவர் புகார்தாரர் மற்றும் சாட்சிகளை தாமே விசாரித்து மனநிறைவு அடைந்திருக்க வேண்டும் அல்லது கு. வி. மு. பிரிவு 202 ல் கூறப்பட்டுள்ளவாறு, ஒரு பரிசீலனையை மேற்கொண்டு அதன் பின்னர், அந்த புகாரில் மேல் நடவடிக்கை எடுக்கலாம். இந்த இரண்டு நிலைகளிலும் எதிரிக்கு அழைப்பாணை அனுப்பப்பட வேண்டிய அவசியம் இல்லை அந்த இரண்டு நிலைகளும் ஆரம்பக்கட்ட நிலைகளாகும் அதற்கு அடுத்த நிலையில் தான் எதிரியை கேட்டறிய வேண்டும்.
எனவே ஒரு பிரைவேட் கம்ப்ளைன்ட்டை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்ளும் போது, குற்றவியல் நடுவர் அந்த புகாரிலுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்தாரர் மற்றும் அவர் தரப்பு சாட்சிகளால் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. RC. NO - 224/2016, DT - 31.3.2016
P. Mani Vs V. Ganesh Kumar
(2017-2-MLJ-CRL-471)
வழக்கு குறித்த தீர்ப்பு நகலுக்கு   ghttps://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wSXA2RjY3WDFfekk/view?usp=sharing

நன்றி : முகநூல் நண்பர் வழக்கறிஞர் திரு Dhanesh Balamurugan அவர்கள்
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 06.01..2018