சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்
வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) மூலம் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 15 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இதில் ஏப்ரல் 17-ஆம் தேதி நிலவரப்படி 12.40 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
3 நாள்களில் மானியம்: வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்தவுடன், அவர்களது வங்கிக் கணக்கில் முன்வைப்புத் தொகையாக ரூ.568 செலுத்தப்படுகிறது.
அதன் பின்னர் அந்தந்த மாதங்களுக்கான மானியத் தொகை, வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து எரிவாயு உருளைகளைப் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 3 வங்கி வேலை நாள்களில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
ஆனால், வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் மானியத்தொகை செலுத்தப்பட்ட பின்னரும் அதற்கான தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படுவதில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால் இணையதள வங்கிச் சேவை வசதி உள்ளவர்கள் அதன் மூலமாகவும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்றும் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்தத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் அல்லது இணைய விரும்பி விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளத்தின் மூலமோ அல்லது எரிவாயு முகவரின் அலுவலகத்துக்கு நேரில் சென்றோதான் அறிய முடிந்தது.
எஸ்.எம்.எஸ். வசதி: இதனைப் போக்கும் வகையில், இணையதளத்தைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களும், எளிய முறையில் நேரடி மானியத் திட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்களைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தாங்கள், சமையல் எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
இதன்படி, "இண்டேன்' வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு ஏற்ற குறியீடுகளை "டைப்' செய்து 81307 92899 என்ற எண்ணுக்கும், "பாரத் கேஸ்' வாடிக்கையாளர்கள் 77382 99899 என்ற எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.
பின்னர் உடனடியாக வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினமணி நாளிதழ் 18.04.2015
பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
ReplyDeleteதயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.