முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்
****************************************
முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை பெறுவது எப்படி?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான வருமானச் சான்றிதழ் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற வேண்டும். வருமானச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை (ரேசன் கார்டு) ஆகியவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீ்ட்டு திட்ட மையத்தில் வழங்கி, புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின், குறிப்பிட்ட நாள் இடைவெளியில் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்படும்.
tamilnadu chief minister health insurance scheme details, maruththuva sigichai perum valigal
இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான வழிமுறை என்ன?
மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. மருத்துவமனை குறித்த பட்டியல் அடங்கிய கையேடு அடையாள அட்டையுடன் வழங்கப்படும். கையேட்டில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனையில் காப்பீட்டு நிறுவன தொடர்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் அவரை அணுகி காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினால் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். பழைய காப்பீட்டு திட்டத்தில் பெறப்பட்ட அடையாள அட்டை இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.
மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான அதிகபட்ச தொகை எவ்வளவு?
இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ. 1.50 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். மேலும், பச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரும் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1,016 மருத்துவ சிகிச்சை உள்பட 113 தொடர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிகிச்சை பெறுவோர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. காப்பீட்டு நிறுவனம் மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான தொகை வழங்கப்படும்
இத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற யாரை அணுக வேண்டும்?
இத்திட்டத்தில் சேரவும், சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் 1800 425 3993 என்ற கட்டணமில்லா (toll free) தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டால் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் குறித்த முழு விவரங்களையும் அறிய முடியும். தவிர, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீட்டு திட்ட மையத்தை அல்லது கிராம நிர்வாக அலுவலரை அணுகியும் காப்பீட்டு திட்ட விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment