disalbe Right click

Thursday, April 9, 2015

செல்வமகள் சேமிப்புத்திட்டம் - முழு விபரங்கள்


செல்வமகள் சேமிப்புத்திட்டம் பற்றிய முழு விபரங்கள்
***************************************************************
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ”சுகன்யா சம்ரிட்ஹி யோஜனா” என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். ஆங்கிலத்தில் அதை ”Girl Child Prosperity Scheme” என்கிறார்கள். தமிழில் அதன் பெயர் “செல்வ மகள் சேமிப்புத் திட்டம்” என்பதாகும்..
இந்த செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கும், அது முதிர்வடையும்போது வழங்கப்படும் தொகைக்கும் வருமான வரி கிடையாது என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பினால், இந்தத் திட்டத்தில் சேருகிறவர்களுக்கு லாபகரமான திட்டமாக மாறிவிட்டது.
யார் யார் இதில் சேரலாம்?
***************************************

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் பத்து வயது அல்லது பத்துக்கும் குறைவான வயதாகும் பெண் பிள்ளைகள் மட்டுமே சேர முடியும். மற்றவர்கள் பெயரில் இந்த கணக்கு தொடங்க முடியாது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் இந்த ஆண்டுக்கு மட்டும் ஒரு சிறிய விதிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள்.
அதன்படி, வயது பத்துக்கும் மேலாக ஓர் ஆண்டு கூடுதல் ஆகியிருந்தாலும், அதாவது 2003-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதிக்கும், 2004-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கும் இடையில் பிறந்த பெண் குழந்தைகள், அவர்களுக்கு வயது பத்துக்கு மேல் ஆகியிருந்தாலும் இந்தத் திட்டத்தில் சேர அனுமதி உண்டு. அப்படிச் சேர்வதற்கு கடைசி நாள் 01.12.2015.
யார் கணக்கு துவங்கலாம்? என்ன சான்றிதழ்கள் தேவை?
**********************************************************************************
பெண் குழந்தையின் பெற்றோர்தான் துவங்க வேண்டும். பெற்றோர் இருவரும் இல்லாதபட்சத்தில் மட்டும் அந்தப் பெண்ணின் சட்டபூர்வமான கார்டியன் கணக்குத் துவங்கலாம்.
எவ்வளவு கட்டவேண்டும்?
**************************************

திட்டத்தில் சேருகிறவர்கள், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் ரூ.1,000 கட்ட வேண்டும். நூறின் மடங்குகளில் கட்டுகிற தொகை, ஆண்டுக்கு ஆண்டு மாறுபடலாம். குறிபிட்ட அளவு, ஒரே தொகைதான் கட்ட வேண்டும் என்பதில்லை. ஆனால், அதிகபட்சமாக ஒரு ஆண்டில் ஒன்றரை லட்சம்தான் கட்டலாம். கட்டுகிற பணத்தை ஒரே தவணையில்தான் கட்ட வேண்டும் என்பதில்லை. சீட்டு கட்டுவது போல, எஸ்ஐபி போல மாதா மாதமும், மாதம் 100 ரூபாய் முதல் 12,500 ரூபாய் வரைகூடக் கட்டலாம்.
எப்படிக் கட்டினாலும், திட்டத்தில் தொடருவதற்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 கட்ட வேண்டும். எந்த ஒரு ஆண்டும் ரூ.1,000 கட்டத் தவறினால், அதன்பிறகு ரூ.50 அபராதம் செலுத்திவிட்டுத்தான் சேமிப்பைத் தொடரமுடியும்.
இந்தத் திட்டத்தினால் என்ன பலன்?
****************************************************

கட்டுகிற பணத்துக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80-சியின் கீழ் முழு வரி விலக்கு உண்டு. அதேபோல், முதிர்வுத் தொகையை பெறும் நேரமும், பெறுகிற முழுத்தொகைக்கும் வரி கிடையாது.
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் சேரும் பணத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு வட்டி தருவார்கள். அந்த வட்டியை கையில் தரமாட்டார்கள். கணக்கில் சேர்த்துவிடுவார்கள். தற்சமயம் இருக்கிற பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, வரும் ஆண்டுக்கு அறிவித்திருக்கிற 9.1 சதவீதம் என்பது நல்ல வட்டி. அதுவும், வரிவிலக்குடன். இதனுடன் ஒப்பிடக்கூடிய மற்றொரு சிறுசேமிப்புத் திட்டத்துடன் வைத்துப் பார்த்தால், பி.பி.எஃப்.-ல் இந்த ஆண்டு வட்டி 8.75 சதவீதமாக இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வட்டி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, கவர்மென்ட் செக்யூரிட்டிகளுக்கு நிலவும் வட்டியைவிட 0.75 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று பதில் சொல்கிறார்கள்.
எவ்வளவு காலம் பணம் கட்ட வேண்டும்?
************************************************************

திட்டம், 21 ஆண்டுகளுக்கானது. ஆனால், பணம் கட்டுவது அதிகபட்சமாக 14 ஆண்டுகளுக்குத்தான். அதன்பிறகு பணம் கட்ட வேண்டாம். கட்டவும் முடியாது. கணக்கில் இருக்கிற பணத்துக்கு வட்டியைக் கணக்கிட்டு, முதிர்வுகாலம் வரை கணக்கில் சேர்த்துக்கொண்டே வருவார்கள்.
முதிர்வு எப்போது?
***************************

கணக்கு துவங்கியதில் இருந்து 21-ம் ஆண்டுடன் இந்தத் திட்டம் முதிர்வு அடைந்துவிடும். அதன்பிறகும் தொடருவதென்றால் தொடரலாம். கணக்கில் இருக்கிற பணத்துக்கு வட்டி உண்டு.
கணக்குதாரர் விரும்பினாலும், 18 வயதுக்குப் பின் எந்த வயதில் திருமணம் நடந்தாலும், அதன்பின் இந்தத் திட்டத்தில் தொடர முடியாது. முதிர்வுத் தொகை, கணக்குதாரரான பெண்ணிடம்தான் வழங்கப்படும்.
முன்கூட்டியே விலக முடியுமா?
*********************************************

முடியும். ஆனால், விலகுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.
1. கணக்குதாரருக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேலும்,
2. அவருக்கு திருமணம் முடிந்திருக்க வேண்டும்.
அப்படியிருந்து விண்ணப்பித்தால், கணக்கை முடித்து மொத்தப் பணத்தையும் கொடுத்துவிடுவார்கள். கொடுக்கப்படும் தொகை எவ்வளவாக இருந்தாலும் அதற்கு வருமான வரி இல்லை.
இடையில் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?
***************************************************************************

கணக்கு வைத்திருக்கும் பெண்ணுக்கு 18 வயது ஆன பிறகு, தேவைப்பட்டால் கணக்கில் இருக்கும் பணத்தில் பாதியை பெற முடியும். இந்தத் திட்டத்தில் 50 சதவீதம் பார்ஷியல் வித்டிராயல் அனுமதிக்கப்படுகிறது. இது, அந்தப் பெண்ணின் கல்வி போன்ற செலவுகளுக்கு உதவுவதற்காக.
18 வயதாகும் வரை, முதலீடு செய்த பணத்தை எடுக்கவே முடியாது. அது முழு ‘லாக் இன். 18 வயதுக்குப் பின், பாதிப் பணத்தை எடுக்கலாம். திருமணத்துக்குப் பின் முழுப் பணத்தையும் எடுக்கலாம். பெற்றோர் அல்லது கார்டியன் மிக மோசமான நிதி நெருக்கடியில் இருக்கும்பட்சத்தில், அதற்கென உள்ள தனிப் படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பரிசீலனைக்குப் பின் கணக்கை முடித்து பணம் கொடுப்பார்கள்.
எத்தனை கணக்குகள் ஆரம்பிக்கலாம்?
********************************************************

ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்குதான் ஆரம்பிக்க முடியும். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர், இரண்டு குழந்தைகளின் பெயரிலும் தனித்தனியே இரண்டு கணக்குகள் துவங்கி சேமிக்கலாம்.
இரட்டைக் குழந்தைகள் இருந்தால் கணக்கு துவங்குவது எப்படி?
*********************************************************************************************

இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் என்றால் மட்டும், முதல் பிரசவத்தில் பிறந்த பெண்ணுக்கும் சேர்த்து மொத்தம் மூன்று தனித்தனி கணக்குகள் துவக்க அனுமதி உண்டு. முதல் பிரவத்திலேயே மூன்று பெண் குழந்தைகள் என்றாலும், மூன்று கணக்குகளுக்கு அனுமதி தருகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் ஐந்து பெண் குழந்தைகள் இருந்தால்?
********************************************************************************

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் பிள்ளைகளுக்குத்தான் செல்வமகள் கணக்குத் துவங்க முடியும்.
வாரிசுதாரர் என்னும் நாமினேஷன் வசதி உண்டா?
************************************************************************

வாரிசுதாரர் எனும் நாமினேஷன் வசதி இந்தத் திட்டத்தில் இல்லை. கணக்குதாரருக்கு ஏதும் நிகழும்பட்சம், கணக்கை துவங்கிய பெற்றோர் அல்லது கார்டியனிடம் கணக்கு முடித்துக் கொடுக்கப்படும்.
எங்கே, எப்படி இந்தக் கணக்கை துவங்குவது?
******************************************************************
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், கணக்கு துவங்குபவரின் அடையாள அட்டை மற்றும் அவரது முகவரி சான்றிதழ் ஆகியவை போதும். அஞ்சலகங்கள் அல்லது அரசு குறிபிட்டிருக்கும் 28 வங்கிகளில் செல்வ மகள் திட்டக் கணக்கை துவங்கிவிடலாம். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி ஆகியவை அவற்றில் சில.
பத்துக்கும் குறைவான வயதில் பெண் குழந்தைகள் இருப்பவர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பு. காரணம், சந்தை நிலவரத்தை ஒட்டிய வட்டி; முதலுக்கும் வட்டிக்கும் வருமான வரிவிலக்கு;

வருமான வரிச் சலுகை:
*************************************''வருமான வரிச்சட்டத்தின் 80-வது பிரிவு, உட்பிரிவு 2-ன் கீழ் உள்ள 8-வது சட்ட உட்கூறின் கீழ் ‘செல்வ மகள்' சேமிப்புத் திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘செல்வ மகள்' சேமிப்புத் திட்டத்துக்கு வருமான வரி சலுகை வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையை அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிப்பவர்கள் பெறலாம். கடந்த ஆண்டு வருமான வரிக் கணக்கில் ‘செல்வ மகள்' சேமிப்புத் திட்டத்தின் கீழ் உள்ள தொகையை சேர்க்க தேவையில்லை. சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர் அல்லது பெற்றோர் / பாதுகாவலர் இச்சலுகையை பெற உரிமை கோரலாம்''

No comments:

Post a Comment