ஜாக்கிரதை - சைபர்கிரைம்
*************************************************************
சமீபகாலமாக நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியினால் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன், கிரெடிட்கார்டு பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் பலமடங்காகியுள்ளது. இதுபோன்ற நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகள் இருந்தாலும், அதே அளவிற்கு தீமைகளும் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்த நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை பயன்படுத்தி சிலர் மோசடியிலும் ஈடுபடுகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் எடுத்து மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவது, கிரெடிட் கார்டுகளில் உள்ள ரகசிய எண்களை திருடி மோசடி செய்வது, அந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி செய்வது போன்ற சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் சமீபகாலமாக அதிகரிக்கிறது.
கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்கள் வெளியிடங்களுக்கு சென்று பொருட்களை ஆன்லைன் முறையில் வாங்குவது, வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் போது, பொருட்களை வாங்கும் போது கிரெடிட் கார்டை தருகின்றனர். இந்த கார்டை சம்பந்தப்பட்டவர்கள் வாங்கி அவர்களிடம் உள்ள கருவியை சுவிப் செய்து தருகின்றனர்.
ஆனால், சில மோசடி நபர்கள் வாடிக்கையாளர்கள் தரும் இதே கார்டை, அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் போது பயன்படுத்தி �ஸ்கிம்மர் கருவி� என்ற கருவியில் சுவிப் செய்கின்றனர்.இதனால் மோசடி நபர்களுக்கு அந்த கிரெடிட் கார்டுதாரரின் கார்டுஎண், பெயர், முகவரி, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தெரியவருகிறது.
ஆனால், கிரெடிட் கார்டை அளிக்கும் வாடிக்கையாளர்கள் இதுகுறித்து அறியாமல் கார்டை வாங்கிச் சென்றுவிடுகின்றனர். சிலநாள்கள் கழித்து அந்த மோசடி நபர்கள், அந்த கிரெடிட் கார்டுதாரரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, வங்கியில் இருந்து பேசுவது போல், வங்கி எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிவிக்கின்றனர். பின், அவர்களின் கிரெடிட் கார்டு எண்ணை சரிபார்ப்பதற்காக கேட்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் மறுமுனையில் பேசுவது போல் வங்கி ஊழியர்கள் தான் என நினைத்து தங்களது கிரெடிட் கார்டு ரகசிய எண்ணை தெரிவிக்கின்றனர்.
இதனை பயன்படுத்தி அந்த மோசடி நபர்கள், சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டுதாரர்களின் எண், பாஸ்வேர்டை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் பலஆயிரம் மதிப்பிற்கு பொருட்களை வாங்கிவிட்டு தப்புகின்றனர். பொருட்கள் வாங்கியது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் வரும்போதே, அவர்களுக்கு நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தெரியவருகிறது.
வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டின் பதிவு எண்ணை திருடும் மோசடி நபர்கள், போலி கார்டு தயாரித்து தவறான ரகசிய குறியீட்டு எண்ணை 3 முறை தவறாக அடிக்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அந்த வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு லாக் ஆகிவிடும். அதுகுறித்த எஸ்எம்எஸ் தகவல் வாடிக்கையாளர்களுக்கு வரும்.
சிறிதுநேரத்தில் மோசடி நபர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்பு கொண்டு, �நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களது கணக்கில் பணம் இல்லாததால் கார்டு லாக் ஆகிவிட்டது. உங்கள் கார்டு ரகசிய எண்ணை கூறுங்கள்� எனக்கேட்பர்.
வாடிக்கையாளரும் வங்கியில் இருந்து கேட்கின்றனர் என நினைத்து கார்டு ரகசிய குறியீடு எண்ணை தெரிவிக்கின்றனர். அதை பெறும் மோசடி நபர்கள், வங்கி இலவசசேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வலியுறுத்துகின்றனர். வாடிக்கையாளர்களும் சேவை மையத்தைதொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கின்றனர்.
சேவை மையத்தினர் அந்த கார்டின் லாக்கை சரிசெய்கின்றனர். அதன்பின், மோசடி நபர்கள் வாடிக்கையாளர் அளித்த ரகசிய எண்ணை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுபோல சராசரியாக மாதத்திற்கு 10 முதல் 20 புகார்கள் வருகிறது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட புகார்கள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு வந்துள்ளது.
பேஸ்புக்கில் பெண்கள் தங்களுக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.
தங்களது படங்களை அதில் வெளியிடக்கூடாது. படத்தை வெளியிட்டால் அதை பயன்படுத்தும் மர்மநபர்கள் அந்த படத்தை டவுன்லோடு செய்து, மார்பிங் முறையில் ஆபாசமாக மாற்றி மீண்டும் சமூகவலைதளத்தில் வெளியிடுகின்றனர்.
இதனால் பாதிக்கப்படுவது பெண்கள் தான். இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் இருந்து வாடிக்கையாளர்கள், பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment