disalbe Right click

Monday, April 6, 2015

பொதுநலவழக்குத் தொடுக்க .....


பொதுநலவழக்குத் தொடுக்க .....
*************************************
பொதுநல வழக்கு தொடுப்போர் தங்களது ஆண்டு வருமானம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்வது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏதேனும் பிரச்சினையால் பாதிக்கப்படும் ஒருவர், நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியாக நிவாரணம் தேட இயலாதவராக இருந்தால், அவரது பிரச்சினையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவருக்கு நீதி கிடைக்கச் செய்வதற்காக யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்யலாம்.

அதேபோல, ஒரு பிரச்சினை காரணமாக திரளான மக்கள் பாதிக்கப்படும்போது, அவர்களது நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம். இந்த வகையில் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் ஏராளமான பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

எனினும், சுயலாபம் மற்றும் விளம்பரம் தேடிக்கொள்ளும் நோக்கில் சிலர் பொதுநல மனுக்களைப் பயன்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, இதுபோன்ற நோக்கில் மனு தாக்கல் செய்வதைத் தடுப்பதற்காக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுதொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரின் அறிவிக்கை தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கை விவரம்:

‘பொதுநல வழக்கை தாக்கல் செய்யும் மனுதாரர் தனது தொழில், ஆண்டு வருமானம், வருமான வரி செலுத்துபவரா என்ற விவரம், வருமான வரி செலுத்துபவராக இருந்தால் வருமான வரி அட்டை (PAN) எண், சொந்தப் பணத்திலிருந்து மனுவை தாக்கல் செய்கிறாரா என்ற விவரம், மற்றவர்களின் நிதியைக் கொண்டு தாக்கல் செய்தால் அதுதொடர்பான விவரம் ஆகியவற்றை தாக்கல் செய்வது அவசியம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கை தமிழக அரசின் அரசிதழில் வெளியாகியுள்ளதால், புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

தி இந்து செய்திகள் - 30.01.2015


No comments:

Post a Comment