disalbe Right click

Monday, May 25, 2015

கிரடிட் கார்டு வாங்கும் முன்


கிரடிட் கார்டு வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
கிரெடிட் கார்டு வாங்கும்முன்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
கிரெடிட் கார்டு என்பது நம் உடனடி பணத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள உதவும். ஆனால், அதில் கடன் வாங்கி அதைச் சரியாகத் திரும்பச் செலுத்த முடியாமல் போனால், அந்தக் கடன் தலைவலியாக மாறிவிடும். எனவே, கிரெடிட் கார்டு வாங்குவதற்குமுன் சில விஷயங்களைக் கவனித்தாலே இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும். அந்த விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு!
புதிதாக ஒரு கிரெடிட் கார்டு கிடைக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்வதற்கு பலருக்கும் மனம் வருவதே இல்லை. அதிலும் அந்த கிரெடிட் கார்டு இலவசமாக, அதாவது சேர்ப்புக் கட்டணமோ அல்லது ஆண்டு பராமரிப்புக் கட்டணமோ இல்லாமல் கிடைக்கும்போது பலரும் வேண்டாம் என்று சொல்வதே இல்லை. இப்படி சேரும் பல கிரெடிட் கார்டுகளினால் நமக்கு பிரச்னைகளே உருவாகும். உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருக்கும்போது நீங்கள் வைத்திருக்கும் சில கார்டுகளுக்கான மாதாந்திர கட்டணத்தைக் கட்டாமலே போவதற்கு வாய்ப்புண்டு. இப்படிக் கட்டாமல் விடப்படும் கடன் தொகைக்கு நீங்கள் மிக அதிகமான வட்டியைச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் உங்கள் கடனை திரும்பச் செலுத்தும் மதிப்பெண் குறையும். எனவே, கார்டு வாங்குவதற்குமுன் புது கிரெடிட் கார்டு தேவையா என்பதை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
புதிய கார்டில் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்!
புதிதாக கிரெடிட் கார்டு வாங்க நீங்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், பழைய கார்டில் உள்ள நிலுவைத் தொகையை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா என்பதைப் பாருங்கள். இப்படி டிரான்ஸ்ஃபர் செய்துகொள்ளும் வசதிக்கு கூடுதலாகக் கட்டணம் உள்ளதா என்பதைக் கவனிப்பது முக்கியம். சில வங்கிகள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்வதற்கு 30-90 நாட்களுக்கு வட்டி வசூலிப்பதில்லை. ஆனால் சில வங்கிகள் 1.5% - 2.5% வரை வட்டி வசூலிக்கின்றன. இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். எனவே, புதிதாக கிரெடிட் கார்டு வாங்கும்முன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு வட்டி கிடையாதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஆண்டுக் கட்டணம் இல்லை என்னும் உத்தரவாதம்!
புதிதாக கிரெடிட் கார்டு வாங்கும்போது ஆண்டுக் கட்டணம் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் அதற்குரிய ஆண்டுக் கட்டணத்தை சில வங்கிகள் வசூலித்துவிடும். சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஆண்டுக் கட்டணம் இல்லை என்று கூறும். ஆனால், அந்த வசதி குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டும்தான் பொருந்தும். ஆயுள் முழுக்க எந்த கட்டணமும் இல்லை என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் தவறுதான். எனவே, கட்டணம் தொடர்பான நிபந்தனைகளை உன்னிப்பாகப் படியுங்கள். பொதுவாக, குறிப்பிட்ட காலம் வரையில்தான் அல்லது குறிப்பிட்ட தொகை அளவுக்கு கார்டினை உபயோகப்படுத்து பவர்களுக்கு மட்டுமே இந்தக் கட்டணங்கள் இல்லாமல் இருக்கும். புதிய கார்டு ஒன்றை வாங்குவதற்குமுன் இந்த ஆண்டு கட்டண விவகாரத்தை முழுமையாக அறிந்துகொள்வது நல்லது.
நிதி சார்ந்த கட்டணங்கள்!
கடன் தொகை முழுவதையும் செலுத்த முடியாத நேரங்களில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது வழக்கம். மீதமுள்ள தொகைக்கு கிரெடிட் கார்டு நிறுவனம் வட்டி போட்டு வசூலிக்கும். இந்த வட்டி விகிதமானது மாதத்துக்கு 2-3 சதவிகிதமும், அதுவே வருடத்துக்கு 24-36 சதவிகிதமாகவும் இருக்கும். சில வங்கிகள் பில் செய்யப்பட்ட மொத்த தொகைக்கும் கட்டணம் விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, புதிய கார்டு வாங்கும்போது கடனுக்கான வட்டி எந்த நிறுவனத்தில் குறைவாக இருக்கிறது என்பதைப் பார்ப்பது மிகமிக அவசியமாகும்.
வட்டி இல்லாத காலகட்டம்!
பெரும்பாலான கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வட்டி இல்லாத காலத்தை 45-55 நாட்களாக வைத்திருக்கும். இந்தக் காலத்தில் செலுத்தப்படாத தொகைக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது. கிரேஸ் பிரீயட் என்பது பொதுவாக பில்லிங் தேதியிலிருந்து ஆரம்பித்து, பில்லிங் தேதி முடிவடைந்தபிறகும் 15-25 நாட்களுக்கு இருக்கும். பில்லிங் காலகட்டம் ஆரம்பிக்கும் தேதிக்கு அருகாமையில் செய்யப்படும் செலவுகளுக்கு அதிக நாட்கள் கிரெடிட் இருக்கும். அதுவே பில்லிங் முடியும் தருவாய்க்கான தேதிக்கு அருகில் இருக்கும்போது கிரெடிட் காலம் குறைவாக இருக்கும். எனவே, புதிய கிரெடிட் கார்டை தேர்வு செய்யும்போது வட்டி இல்லாத காலகட்டம் அதிகமாக உள்ள கார்டை தேர்வு செய்வது நல்லது.
கோ பிராண்டட் கார்டு!
ஒரே பிராண்டட் கார்டினை வாங்குவதைவிட, நீங்கள் வாங்கும் புதிய கார்டு இன்னொரு பிராண்டினாலும் (Co-branded) அங்கீகரிக்கப் பட்டதாக இருப்பது நல்லது. இதன் மூலம் அதிகம் சுற்றுலா செல்பவர்கள், ஷாப்பிங் செய்கிறவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வட்டி இல்லாத காலத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். தவிர, ரிவார்ட் பாயின்ட் மற்றும் கேஷ் பேக் ஆஃபர் போன்றவற்றைக் கொண்டு இனிமேல் செய்யவிருக்கும் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப உங்கள் கிரெடிட் கார்டு கோ பிராண்டட் கார்டாக இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்.
கான்டக்ட்லெஸ் கார்டு!
வழக்கமாக ஸ்வைப் செய்யும் கார்டுகளைவிட கான்டக்ட்லெஸ் கார்டுகளை (Contactless) தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த கார்டினை பயன்படுத்த ஸ்வைப் மெஷினில் தேய்க்க தேவையில்லை. இந்த கார்டினை டர்மினலுக்கு அருகே கொண்டு வந்தாலே போதும், கார்டில் உள்ள சிப் மற்றும் ஆர்எஃப் ஆன்டனா மூலம் கார்டின் தகவல்கள் பெறப்பட்டு பணம் எடுக்கப்படும். இந்த கார்டினை பயன்படுத்தும் போது அதிக பாதுகாப்பு கிடைக்கும். அதாவது, உங்களின் கார்டை மூன்றாவது நபரிடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. ஷாப்பிங் செய்யும்போது கார்டு உங்களின் கையிலேயே இருக்கும்.
டெபிட் கார்டுடன் சேர்ந்த கிரெடிட் கார்டு!
இதுவும் ஒருவகையான கிரெடிட் கார்டுதான். அதாவது, உங்களின் டெபிட் கார்டில் ஓவர்டிராஃப்ட் எடுத்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய கார்டு ஆகும். இந்த கார்டு உங்களின் சேமிப்பு கணக்குடன் சேர்க்கப்பட்டிருக்கும்.
உங்களுடைய கிரெடிட் லிமிட் எவ்வளவு என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டிருக்கும். இதனால் தேவை இல்லாமல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைத் தனித்தனியாக வாங்க வேண்டிய தேவை இருக்காது.
ஆட் ஆன் கார்டு!
கிரெடிட் கார்டு வாங்கும்போது சில நிறுவனங்கள் ஆட் ஆன் கார்டை (Add-on Card) கணவன்/மனைவிக்கு இலவசமாக வழங்கும்.
சில நேரங்களில் ஆட் ஆன் கார்டு கேட்காமலேயே அனுப்பப்பட்டு விடும். ஆட் ஆன் கார்டில் வாங்கப்படும் கடன், முதல் கார்டு வாங்குபவரின் பெயரில் பதிவாகும். இதில் உள்ள ஒரே கூடுதல் வசதி அதிக கிரெடிட் லிமிட். எனவே, கிரெடிட் கார்டு வாங்கும்போதே ஆட் ஆன் கார்டு வேண்டுமா என்பதை முடிவு செய்வது நல்லது.
சிறப்பாகச் செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையம்!
அனைத்து கிரெடிட் கார்டு நிறுவனங்களும் வாடிக்கையா ளர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்காக சேவை மையம் வைத்துள்ளது. ஆனால், எல்லா வாடிக்கையாளர் மையமும் அவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதில்லை.
எனவே, கார்டு வாங்குவதற்கு முன் வாடிக்கையாளர் சேவை மையம் குறித்த தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
வாடிக்கையாளர் சேவை மையம் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களின் கார்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தேவையான நேரத்தில் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு சொல்லும் நிறுவனத்தில் கார்டை வாங்கினாலே பாதிப் பிரச்னை தீரும்.
தொகுப்பு: இரா.ரூபாவதி.
நன்றி : விகடன் செய்திகள் - 24.05.2015

Thursday, May 21, 2015

ஃபேஸ்புக் கேம் ரெகொஸ்ட்களை ஃபிளாக் செய்ய


ஃபேஸ்புக் கேம் ரெகொஸ்ட்களை ஃபிளாக் செய்ய என்ன செய்ய வேண்டும்?


பேஸ்புக் பயன்படுத்துறவங்களை இரண்டு விதமாக பிரிக்கலாம், ஒரு வகையை சேர்ந்தவங்க எங்க போனாலும் போட்டோ பிடிச்சு அதை பேஸ்புக்கில் அப்டேட் செய்யுறவங்க, இன்னும் சிலர் எப்போவாவது பேஸ்புக் வருவது வந்தாலும் கேம்ஸ் மட்டும் விளையாடி மற்றவர்களுக்கு கேம் ரிக்வஸ்ட்களை அனுப்புவது.  ஒரு சிலருக்கு கேம் விளையாட பிடிக்கும், ஒரு சிலருக்கு கேம் விளையாடுவது பிடிக்காது, இருந்தும் உங்க நண்ப்ரகள் தொடர்ந்து கேம் ரிக்வஸ்ட் கொடுக்கின்றார்களா? அப்ப அதை எப்படி ப்ளாக் செய்வது என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க

பேஸ்புக்:
முதலில் பேஸ்புக் சைன் இன் செய்யுங்கள்




டவுன் பட்டன்:
இப்போ வலது பக்கம் இருக்கும் டவுன் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.


செட்டிங்ஸ்:
டவுன் பட்டனில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.


ப்ளாக்கிங் செட்டிங்ஸ்:
ஆப்ஷனின் இடது புறத்தில் ப்ளாக்கிங் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்


மேனேஜ் ப்ளாக்கிங்: 
ப்ளாக்கிங் க்ளிக் செய்தவுடன் மேனேஜ் ப்ளாக்கிங் என்ற ஸ்கிரீன் ஓபன் ஆகும்




தேர்வு:
மேனேஜ் ப்ளாக்கிங் ஸ்கிரீனில் உங்களை கடுப்பாக்கும் அப்ளிகேஷன்கள், தேர்வு செய்யலாம். இந்த ஸ்கிரீனில் ப்ளாக் யூசர்ஸ், ப்ளாக் ஆப் இன்வைட் என உங்களுக்கு இடையூறாக இருக்கும் அப்ளிகேஷன்களை ப்ளாக் செய்ய முடியும்.

 

ப்ளாக் ஆப்ஸ்:
 மேனேஜ் ப்ளாக்கிங் ஸ்கிரீனின் கீழ் பகுதியில் ப்ளாக் ஆப்ஸ் என்ற ஆப்ஷன் இருக்கும், இங்கு நீங்க ப்ளாக் செய்ய விரும்பும் அப்ளிகேஷனை என்டர் செய்து ப்ளாக் செய்யலாம்.


அப்ளிகேஷன்:
இப்போ நீங்க ப்ளாக் செய்த அப்ளிகேஷன் ப்ளாக் ஆப்ஸ் ஸ்கிரீனில் இருக்கும், ப்ளாக் செய்த அப்ளிகேஷனை அன்ப்ளாக் செய்யவும் முடியும்.



ப்ளாக் இன்வைட்ஸ்:
மேனேஜ் அப்ளிகேஷன்ஸில் ப்ளாக் இன்வைட்ஸ் ஆப்ஷன் சென்று உங்களுக்கு கேம் ரிக்வஸ்ட் கொடுப்பவர்களின் பெயரை டைப் செய்யதால் அவர்களிடம் இருந்து உங்களுக்கு எந்த ரிக்வஸ்ட்களும் வராது. 


ப்ளாக் பேஜஸ்:
கேம் மற்றும் அப்ளிகேஷன்கள் இல்லாமல் பேஸ்புக் பக்கங்களுக்கு லைக் செய்ய வேண்டும் ரிக்வஸ்ட்களும் அதிகம் வருகின்றது, இதை ப்ளாக் செய்ய மேனேஜ் அப்ளிகேஷன் ஸ்கிரீனின் கடைசி ஆப்ஷனான ப்ளாக் பேஜஸ் சென்று உங்களுக்கு தேவையான பக்கங்களின் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்ய முடியும்.


நன்றி : Mr. Meganathan & TAMIL GIZBOT




ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் எடுக்க


ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் எடுக்க என்ன செய்ய வேண்டும்?
***********************************************************************
அரசு சார்ந்த பல சேவைகள் ஆன்லைனில் கிடைக்க துவங்கி இருப்பது பொதுமக்களுக்கு பேருதவியாக இருந்து வருகின்றது. இண்டர்நெட் மூலம் அரசு ஆவணங்களை பூர்த்தி செய்வது மிகவும் எளிமையான நடைமுறையாகிவிட்டது. அந்த வகையில் ஆன்லை் மூலம் இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி? என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் இணையத்தில் பாஸ்போர்ட் பெற செய்ய வேண்டியவைகளை பாருங்கள்..

இணையதளம்:
முதலில் பாஸ்போர்ட் சேவா (Passport seva) இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 
ரெஜிஸ்டர்:
பாஸ்போர்ட் சேவா தளத்தை பயன்படுத்தும் முன் அதில் உங்களை பதிவு (Register) செய்து கொள்ள  வேண்டும்.

லாக் இன்: 
ரெஜிஸ்டர் செய்த பின் மீண்டும் பாஸ்போர்ட் சேவா தளத்திற்கு சென்று (Log in) லாக் இன் செய்ய வேண்டும்.
அப்ளை:
லாக் இன் செய்ததும் "Apply for Fresh Passport / Re-issue of Passport" க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு க்ளிக் செய்தவுடன் புதிய பக்கத்தில் விண்ணப்ப படிவம் காணப்படும்.

விண்ணப்பம்:
இங்கு காணப்படும் விண்ணப்ப (Application) படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த பின் சமர்பிக்கலாம்.
பணம்:
விண்ணப்ப படிவத்தை சமர்பித்த பின் "Pay and Schedule Appointment" க்ளிக் செய்ய வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்த உங்களது க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு போன்றவைகளை பயன்படுத்தலாம். பணம் செலுத்திய பின் அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய தேதியை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

ப்ரிண்ட்:
பணம் செலுத்தி முடித்த பின் "Print Application Receipt" க்ளிக் செய்து உங்களது விண்ணப்பத்தை ப்ரிண்ட் செய்து கொள்ளலாம்.

பாஸ்போர்ட்:
விண்ணப்பத்தை ப்ரிண்ட் செய்த பின் தேர்வு செய்த தேதியில் வட்டார பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு செல்லும் போது அனைத்து படிவங்களின் ஒரிஜினல்களையும் எடுத்து செல்ல வேண்டும்.
                                     வாழ்த்துக்கள்!      . 

நன்றி: TAMIL GIZBOT

பாஸ்போர்ட் பெறுவதில் தாமதமா?- உரிய காரணத்தை தொலைபேசியில் தெரிவிக்கும் புதிய நடைமுறை அறிமுகம்: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கும் புதிய நடைமுறை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, கல்வி, மருத்து வம், சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளிநாடு செல்கின்றர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன.
பாஸ்போர்ட் கோரி விண்ணப் பிப்பவர்களிடம் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு விண்ணப் பிக்கும்போது ஏதேனும் ஒரு காரணத்துக்காக பாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் ஏற்பட் டால் அதுகுறித்த காரணத்தை சம்மந்தப்பட்ட விண்ணப்ப தாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கும் புதிய நடைமுறை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து, மண்டல பாஸ் போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பல்வேறு தேவைகளுக்காக பாஸ்போர்ட் கோரி தினமும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப் பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப் பிப்பவர்களில் நாள்தோறும் 2 ஆயிரத்து 550 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிலர் நாங்கள் கேட்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் விண்ணப்பிக்கின்றனர். அல்லது விண்ணப்பத்தைத் தவறாக பூர்த்தி செய்கின்றனர்.
மேலும், எங்கள் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் விண்ணப்பத்தை சரியான முறையில் பரிசீலனை செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு பாஸ்போர்ட்டை உரிய நேரத்தில் விநியோகிக்க முடிவதில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு சரியான தகவல் கிடைக்காததால் அவர்கள் தொடர்ந்து எங்கள் அலுவலகத்துக்கு வருகின்றனர். இதனால், அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண்பதற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் புதிய தொலைபேசி சேவையை தொடங்கியுள்ளோம். இதற்காக ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்தவர்களை தொடர்புகொண்டு அவர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பம் என்ன காரணத்துக்காக தாமதமாகிறது என்ற காரணத்தைத் தெரிவிப்பார். மேலும் எத்தனை நாட்களுக்குள் பாஸ்போர்ட் தயார் செய்து வழங்கப்படும் என்ற விவரத்தையும் கூறுவார்.
இதன் மூலம், சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர் தேவையின்றி எங்கள் அலுவலகத்துக்கு வந்து செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்படுகிறது.

 மேலும் கூடுதல் விவரங்களுக்கு 18002581800, 28513640, 28518848, 28513639, 28513641, 28513575 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

நன்றி தி இந்து நாளிதழ் - 01.06.2015

Wednesday, May 20, 2015

செல்போன் தொலைந்தால்


செல்போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
*********************************************************

செல்போன்களின் எண்ணிக்கை, செல்போன் வாங்குவோரின் எண்ணிக்கை மற்றும் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை எப்படி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதோ அதேபோலத்தான் செல்போன் தொலைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. சில போன்கள் திருடப்படுகின்றன. சில செல்போன்களை நாமாகவே தொலைத்துவிடுகின்றோம். அப்படி செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக செய்யவேண்டியது என்ன என்பதையே இன்று நாம் பார்க்கவிருக்கிறோம். 

சாதாரண செல்போன் காணாமல் போனால் கூட அதிக கவலை இல்லை. ஸ்மார்ட்போன்கள் எனப்படுகின்ற அதிநவீன, விலையுயர்ந்த செல்போன் காணாமல்போனால் என்ன செய்ய? ஸ்மார்ட்போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும் அது தரும் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த தவறுகிறார்கள். தகவல்கள் கீழே!

செல்போன் பாதுகாப்பு: 
ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்' வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும். பின் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல கடவுச்சொற்கள் முறையானது உங்கள் செல்போன் அல்லது ஸ்மார்ட்போனை மற்றொருவர் பயன்படுத்துவதற்கெதிராக செயல்படும்.

மொபைல் டிராக்கிங்: 
மொபைல் டிராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விபரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்குமாறும் அமைக்கலாம்.

மொபைல் இன்ஷூரன்ஸ்: 
பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போனுக்கான இன்ஷூரன்ஸ் வெறும் நூற்று சொச்ச ரூபாய்கள் தான். போலீஸில் புகார் கொடுத்ததற்கான சான்றோடு, மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விபரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ, தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும். 

சிம்கார்டை பிளாக் செய்க: 
மொபைல் காணாமல் போனது உறுதியானதும் நீங்கள் சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை முடக்குங்கள். பின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.   

காவல் நிலையத்தில் புகார்: 
சிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். முடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பின்னர், 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள். 

மொபைல் பேங்கிங் வசதியை முடக்குங்கள்:
 ஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை. மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான். இதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு கோரலாம்.


அந்தரங்க படங்களை தவிருங்கள்: 
தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட்போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். ஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம். 

ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள்: 
நீங்கள் பயன்படுத்தும் செல்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுவதாக இருந்து, உங்கள் போனில் அதிநவீன வசதிகள் இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் பயன்படுத்தியும் பாதுகாக்கலாம்.

நன்றி : TAMIL GIZBOT

சாதாரண செல்போனாக இருந்தால்,

1. அது தொலைவதற்கு முன்பே,  அந்த போனில் இருந்து *#06# என்ற எண்ணுக்கு போன் செய்யுங்கள்.

2. உங்கள் செல்போனில் 15 டிஜிட் நம்பர் வரும்,

3. இந்த நம்பர் தங்கள் செல்போனின் IMEI (International Mobile station Equipment Identity) number ஆகும்.

4. இதனை தாங்கள் டைரியிலோ அல்லது வேறு இடத்திலோ குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5.மொபைல் காணாமல் போனது உறுதியானதும் நீங்கள் சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை முடக்குங்கள். பின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.  

6. அதன்பிறகு , உடனே இந்த (IMEI) நம்பரை  cop@vsnl.net - க்கு  மெயில் அனுப்ப வேண்டும்.

7.  தங்களது செல்போன் இருக்குமிடம் 24 மணி நேரத்துக்குள்  GPRS (General Pocket Radio Service) மூலம்  கண்டறியப்படும்.





Monday, May 18, 2015

ஃபேஸ்புக்கில் வக்கிரமான பக்கங்களைப் பார்த்தால்


ஃபேஸ்புக்கில் வக்கிரமான பக்கங்களைப் பார்த்தால் ............?
********************************************************************
                            ஃபேஸ்புக் என்பது ஒரு அருமையான ஊடகம் ஆகும்.  அதில் பொதுமக்களுக்கு பயன்படும் பல செய்திகள், படங்கள்,  வீடியோக்கள் பலராலும் பதிவு செய்யப்பட்டு உலகம் முழுவதும் உலா வருகிறது. இதனால் பலரும் பயன்பெறுகின்றனர். 

                                ஆனால், இதனை வக்கிர எண்ணம் கொண்ட சிலர், தங்களது வக்கிரத்தை வெளிப்படுத்தும் களமாக, ஆபாசங்களை பரப்புகின்ற தளமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

                                  இப்படிப்பட்ட பக்கங்களை போகிற போக்கில் நீங்களும் பார்த்திருக்கலாம். அது உங்களை அறுவெறுப்படைய வைத்திருக்கலாம். உங்கள் நெஞ்சத்தில் அது கொதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.   இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்று ஒரு நிமிடம் உங்களை யோசிக்கவும் வைத்திருக்கலாம்.  

                                  உங்களைப் போன்றவர்களுக்குத்தான் இந்தப்பதிவு.  உங்கள் பெயரையோ, முகவரியையோ நீங்கள் வெளிப்படுத்த வேண்டியதில்லை. நம்மைப் பற்றி புகார் செய்தவர் யார் என்று அந்த வக்கிரபுத்தி கொண்டவருக்கு தெரியப்போவதே இல்லை. ஃபேஸ்புக்கில் இதற்கு நமக்கு அந்த வசதியை  செய்து தந்திருக்கிறார்கள். 

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
                                நீங்கள் ஆட்சேபிக்க வேண்டிய  ஃபேஸ்புக் பக்கத்தின் வலதுபுறத்தில் Message 
என்ற Option-க்கு  அருகில் மூன்று புள்ளிகள் (...) தொடர்ச்சியாகத் தெரியும்.  அதனை Click  செய்தால்  Report  மற்றும் Block என்னும் இரு தேர்வுகளைக் காட்டும். 

                       அதில்   Report  என்பதை Click  செய்தால் , என்ன மாதிரியான  பதிவு அந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பது குறித்து தங்களிடம் கேட்கப்படும். அதனை நீங்கள்  தேர்வு செய்தால், உங்கள் புகாரானது பதிவு செய்யப்படும். தங்களைப் போல, அந்த குறிப்பிட்ட பக்கத்தை 20 பேருக்கு மேல் புகார் செய்தால், அந்தப் பக்கத்தை ஃபேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நீக்கிவிடும். 

Monday, May 11, 2015

பிரதமர் இன்சூரன்ஸ் திட்டம் - சாதகம்


பிரதமர் இன்சூரன்ஸ் திட்டம் - என்ன சாதகம்?
*********************************************************
பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?
பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கும் நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்று விவரிக்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினி.
 யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?
‘‘இந்தத் திட்டங்களில் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள எல்லோரும்   விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளும்  விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு திட்டங்களிலும் கவரேஜ் தொகை 2 லட்சம் ரூபாயாகும்.
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் (PMSBY)  இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.
அதேபோல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர்  18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர், தன் 50-வது வயதில் விண்ணப்பித்தால், அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். இந்தச்  சலுகை, திட்டம் தொடங்கப்படுகிற   2015-ம் ஆண்டு மட்டுமே கிடைக்கும்.
 ஒருவர் மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் இணையலாம். அல்லது ஒரே ஒரு திட்டத்தில்கூட சேரலாம்.  தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும்கூட இந்தத் திட்டத்தில் இணையலாம்.
 எப்போது சேரலாம்?
2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால்  அனைத்து தரப்பு வயதினரும் எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றி இந்தத் திட்டங்களில்  இணையலாம். மே 2015-க்குப் பின் அதாவது, ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வரை திட்டங்களில்  இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டியிருக்கும்.
பொதுவாக,  இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் தர வேண்டியிருக்கும். ஆனால், இந்த அரசு திட்டத்தில் 2015 மே மாதத்துக்குள்  இணைபவர்கள் எந்த வயதினராக இருந்தாலும்,  எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் தரத் தேவையில்லை.
 என்ன வேண்டும்?
இந்தத் திட்டத்தில் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அவசியம் வேண்டும். மற்றவகையான வங்கிக் கணக்கை வைத்து இந்த  இன்ஷூரன்ஸ் திட்டங்களில்  இணைய முடியாது. ஒருவர் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் ஒருமுறைதான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக விண்ணப்பித்தால், அந்த மனு நிராகரிக்கப்படும்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இந்தத் திட்டத்துக்கான சேவைகளை வழங்குகின்றன.  சில வங்கிகள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையாமல் இருக்கின்றன.
 விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்?
இந்தத் திட்டத்தை பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதற்கான விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.
 பிரீமியம் செலுத்துதல்!
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் (விபத்து காப்பீடு)ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்துக்கு (ஆயுள் காப்பீடு)ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். இந்த பிரீமியம் க்ளெய்ம் தொகை வழங்கப்படுவதைப் பொறுத்து மாற வாய்ப்புள்ளது. அசாதாரண சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருந்தால், மூன்று வருடம் வரை பிரீமியம் உயர வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 
இந்த இரண்டு திட்டங்களுக் கும் ஆட்டோ டெபிட் என்கிற முறையில் வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத் திலேயே ஆட்டோ டெபிட் செய்ய சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். எனவே, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தந்தாலே வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்ய வங்கிக்கு அனுமதி அளித்தது போலதான்.
மே 31, 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்பிக்கும் போது ஒரு ரசீது வழங்கப்படும். இது நீங்கள் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம்.
ஆனால்  ஜுன் 1, 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்கு களின் மூலம் பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்ட பின் வங்கி, ரசீதை வழங்கும்.
இந்த ரசீதுதான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம். பிரீமியம் செலுத்திய ரசீதே இன்ஷூரன்ஸ் பாலிசியின் சான்றிதழாக கருதப்படும்.
 ரெனீவல் செய்வது!
நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்கள் கேட்கப் பட்டிருக்கும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்கு முன் வங்கிகள், சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோ டெபிட் செய்து அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும்.
 யார் க்ளெய்ம் வழங்குவார்கள்?
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய் திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும்.
 எவ்வளவு க்ளெய்ம்?
இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் அமலுக்கு வருகிறது. எனவே, 2015 ஜூனிலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்த காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.
ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்த ஒருவர் எந்த வகையில் இறந்தாலும் அவருக்கு இன்ஷூரன்ஸ் திட்டத்தின் மூலம் முழுத் தொகையும் க்ளெய்மாகக் கிடைக்கும். இதற்கு இறந்தவர் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, அவரின் இறப்புச் சான்றிதழ் போன்றவைகளை நீங்கள் எந்த வங்கியின் கணக்கை வைத்து இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கியில் சமர்பிக்க வேண்டும். அதாவது, நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிதான் மாஸ்டர் பாலிசி ஹோல்டராக கருதப்படும்.
விண்ணப்பத்திலேயே நாமினியின் பெயரையும், அவர் உங்களுக்கு என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும். நாமினிக்கு டிடி மூலம் க்ளெய்ம் தொகை அனுப்பப்படும்.  வங்கிக்கு உங்கள் முகவரி தெரியும் என்பதால், தனியாக எந்தக் கூடுதல் விவரங்களும் தரத் தேவை இல்லை.
சுரக்‌ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமை யாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disailment) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட்மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் (மேற்கூறியது போல) சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.
 எப்போது காலாவதி?
கணக்கில் போதுமான பணம் இல்லாமல், இந்த திட்டத்துக்கான  பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்ய இயலவில்லை என்றால் பாலிசி காலாவதியாகும்.
நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும். பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்துச் செய்யப்படும். தவிர, வயது வரம்பு கடந்தவுடன் திட்டம் காலாவதியாகிவிடும்'' என்றார் இந்திரா பத்மினி.
பொதுவாக, ஆக்ஸிடென்ட் பாலிசியை பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிக குறைந்த பட்சமாக 50 - 150 ரூபாய்    வரை (பாலிசிதாரரின் பணிச் சூழலை பொறுத்து) பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு 6 ருபாய் பிரீமியத்துக்கு  ரூ.1  லட்சம் கவரேஜ் வழங்குகிறது.
பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு 18 வயதுள்ள ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ்க்கு 103 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும், ஆனால், இதற்கு காத்திருப்புக் காலம் இருக்கும். ஜீவன் ஜோதி திட்டத்தில் ஒரு லட்சத்துக்கு
165 ரூபாய் செலுத்தினாலும் காத்திருப்புக் காலம் கிடையாது.  அனைத்து வயது வரம்பினருக்கும் ஒரேமாதிரியான பிரீமியமே வசூலிக்கப்படுகின்றன.
மேலும், மெடிக்கல் டெஸ்ட் கிடையாது. ஏதாவது நோய் பாதிப்பு இருந்தாலும் பிரீமியம் அதிகரிக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாக, 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வேறு எந்த நிறுவனத்திலும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது. இந்தத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு பாலிசி கிடைப்பது சிறப்பான விஷயம்.  குறைந்த பிரீமியத்தில் கூடுதல் பலன் தரும் இந்த இரு திட்டங்களிலும் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்!
மு.சா.கெளதமன்
நன்றி: நாணயம் விகடன், 10.05.2015 

Sunday, May 10, 2015

பிரதமர் இன்சூரன்ஸ் திட்டம்


பிரதமர் இன்சூரன்ஸ் திட்டம்
************************************
பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கும் நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்று விவரிக்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினி.

 யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?
‘‘இந்தத் திட்டங்களில் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள எல்லோரும்   விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளும்  விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு திட்டங் களிலும் கவரேஜ் தொகை 2 லட்சம் ரூபாயாகும். 
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் (PMSBY)  இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். 

அதேபோல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர்  18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர், தன் 50-வது வயதில் விண்ணப்பித்தால், அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். இந்தச்  சலுகை, திட்டம் தொடங்கப்படுகிற   2015-ம் ஆண்டு மட்டுமே கிடைக்கும்.

 ஒருவர் மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் இணையலாம். அல்லது ஒரே ஒரு திட்டத்தில்கூட சேரலாம்.  தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும்கூட இந்தத் திட்டத்தில் இணையலாம்.

 எப்போது சேரலாம்?
2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால்  அனைத்து தரப்பு வயதினரும் எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றி இந்தத் திட்டங்களில்  இணையலாம். மே 2015-க்குப் பின் அதாவது, ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வரை திட்டங்களில்  இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டியிருக்கும். 
பொதுவாக,  இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் தர வேண்டியிருக்கும். ஆனால், இந்த அரசு திட்டத்தில் 2015 மே மாதத்துக்குள்  இணைபவர்கள் எந்த வயதினராக இருந்தாலும்,  எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் தேவை இல்லை.

 என்ன வேண்டும்?
இந்தத் திட்டத்தில் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அவசியம் வேண்டும். வங்கிக் கணக்கை வைத்து வேறு எந்த  இன்ஷூரன்ஸ் திட்டங்களிலும்  இணைய முடியாது. ஒருவர் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் ஒருமுறைதான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக விண்ணப்பித் தால், அந்த மனு நிராகரிக்கப்படும். 
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இந்தத் திட்டத்துக்கான சேவைகளை வழங்குகின்றன.  சில வங்கிகள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையாமல் இருக்கின்றன.

 விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்? 
இந்தத் திட்டத்தை பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதற்கான விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.

 பிரீமியம் செலுத்துதல்! 
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் (விபத்து காப்பீடு)ஆண்டுக்கு 12 ரூபாய்ப் பிரீமியமாக வசூலிக்கப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்துக்கு (ஆயுள் காப்பீடு)ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். இந்த பிரீமியம் க்ளெய்ம் தொகை வழங்கப்படுவதைப் பொறுத்து மாற வாய்ப்புள்ளது. அசாதாரண சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருந்தால், மூன்று வருடம் வரை பிரீமியம் உயர வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது.  
இந்த இரண்டு திட்டங்களுக் கும் ஆட்டோ டெபிட் என்கிற முறையில் வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத் திலேயே ஆட்டோ டெபிட் செய்ய சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். எனவே, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தந்தாலே வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்ய வங்கிக்கு அனுமதி அளித்தது போலதான். 
மே 31, 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்பிக்கும் போது ஒரு ரசீது வழங்கப்படும். இது நீங்கள் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். 
ஆனால்  ஜுன் 1, 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்கு களின் மூலம் பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்ட பின் வங்கி, ரசீதை வழங்கும். 
இந்த ரசீதுதான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம். பிரீமியம் செலுத்திய ரசீதே இன்ஷூரன்ஸ் பாலிசியின் சான்றிதழாக கருதப்படும்.

 ரெனீவல் செய்வது!
நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்கள் கேட்கப் பட்டிருக்கும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்கு முன் வங்கிகள், சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோ டெபிட் செய்து அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும். 

 யார் க்ளெய்ம் வழங்குவார்கள்?
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய் திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும். 

 எவ்வளவு க்ளெய்ம்? 
இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் அமலுக்கு வருகிறது. எனவே, 2015 ஜூனிலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்த காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.
ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்த ஒருவர் எந்த வகையில் இறந்தாலும் அவருக்கு இன்ஷூரன்ஸ் திட்டத்தின் மூலம் முழுத் தொகையும் க்ளெய்மாகக் கிடைக்கும். இதற்கு இறந்தவர் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, அவரின் இறப்புச் சான்றிதழ் போன்றவைகளை நீங்கள் எந்த வங்கியின் கணக்கை வைத்து இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கியில் சமர்பிக்க வேண்டும். அதாவது, நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிதான் மாஸ்டர் பாலிசி ஹோல்டராக கருதப்படும். 
விண்ணப்பத்திலேயே நாமினியின் பெயரையும், அவர்கள் நமக்கு என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும். நாமினிக்கு டிடி மூலம் க்ளெய்ம் தொகை அனுப்பப்படும்.  வங்கிக்கு உங்கள் முகவரி தெரியும் என்பதால், தனியாக எந்தக் கூடுதல் விவரங்களும் தரத் தேவை இல்லை.
சுரக்ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமை யாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disailment) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும். 

இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட்மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் (மேற்கூறியது போல) சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.

 எப்போது காலாவதி?
கணக்கில் போதுமான பணம் இல்லாமல், இந்த திட்டத்துக்கான  பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்ய இயலவில்லை என்றால் பாலிசி காலாவதியாகும்.
நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும். பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்துச் செய்யப்படும். தவிர, வயது வரம்பு கடந்தவுடன் திட்டம் காலாவதியாகிவிடும்'' என்றார் இந்திரா பத்மினி.
பொதுவாக, ஆக்ஸிடென்ட் பாலிசியை பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிக குறைந்த பட்சமாக 50 - 150 ரூபாய்    வரை (பாலிசிதாரரின் பணிச் சூழலை பொறுத்து) பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு 6 ருபாய் பிரீமியத்துக்கு  ரூ.1  லட்சம் கவரேஜ் வழங்குகிறது.

பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு 18 வயதுள்ள ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ்க்கு 103 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும், ஆனால், இதற்கு காத்திருப்புக் காலம் இருக்கும். ஜீவன் ஜோதி திட்டத்தில் ஒரு லட்சத்துக்கு 165 ரூபாய் செலுத்தினாலும் காத்திருப்புக் காலம் கிடையாது.  அனைத்து வயது வரம்பினருக்கும் ஒரேமாதிரியான பிரீமியமே வசூலிக்கப்படுகின்றன. மேலும், மெடிக்கல் டெஸ்ட் கிடையாது. ஏதாவது நோய் பாதிப்பு இருந்தாலும் பிரீமியம் அதிகரிக்காது. 
எல்லாவற்றுக்கும் மேலாக, 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வேறு எந்த நிறுவனத்திலும் ஆயுள் கால பாலிசி எடுக்க முடியாது. இந்தத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் கால பாலிசி கிடைப்பது சிறப்பான விஷயம். 

 குறைந்த பிரீமியத்தில் கூடுதல் பலன் தரும் இந்த இரு திட்டங் களிலும் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்! 
மு.சா.கெளதமன்

நன்றி : விகடன் செய்திகள் - 07.05.2015