பிரதமர் இன்சூரன்ஸ் திட்டம் - என்ன சாதகம்?
*********************************************************
பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?
பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கும் நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்று விவரிக்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினி.
யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?
‘‘இந்தத் திட்டங்களில் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள எல்லோரும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு திட்டங்களிலும் கவரேஜ் தொகை 2 லட்சம் ரூபாயாகும்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் (PMSBY) இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.
அதேபோல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர் 18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர், தன் 50-வது வயதில் விண்ணப்பித்தால், அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். இந்தச் சலுகை, திட்டம் தொடங்கப்படுகிற 2015-ம் ஆண்டு மட்டுமே கிடைக்கும்.
ஒருவர் மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் இணையலாம். அல்லது ஒரே ஒரு திட்டத்தில்கூட சேரலாம். தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும்கூட இந்தத் திட்டத்தில் இணையலாம்.
எப்போது சேரலாம்?
2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால் அனைத்து தரப்பு வயதினரும் எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றி இந்தத் திட்டங்களில் இணையலாம். மே 2015-க்குப் பின் அதாவது, ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வரை திட்டங்களில் இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டியிருக்கும்.
பொதுவாக, இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் தர வேண்டியிருக்கும். ஆனால், இந்த அரசு திட்டத்தில் 2015 மே மாதத்துக்குள் இணைபவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் தரத் தேவையில்லை.
என்ன வேண்டும்?
இந்தத் திட்டத்தில் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அவசியம் வேண்டும். மற்றவகையான வங்கிக் கணக்கை வைத்து இந்த இன்ஷூரன்ஸ் திட்டங்களில் இணைய முடியாது. ஒருவர் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் ஒருமுறைதான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக விண்ணப்பித்தால், அந்த மனு நிராகரிக்கப்படும்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இந்தத் திட்டத்துக்கான சேவைகளை வழங்குகின்றன. சில வங்கிகள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையாமல் இருக்கின்றன.
விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்?
இந்தத் திட்டத்தை பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதற்கான விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.
பிரீமியம் செலுத்துதல்!
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் (விபத்து காப்பீடு)ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்துக்கு (ஆயுள் காப்பீடு)ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். இந்த பிரீமியம் க்ளெய்ம் தொகை வழங்கப்படுவதைப் பொறுத்து மாற வாய்ப்புள்ளது. அசாதாரண சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருந்தால், மூன்று வருடம் வரை பிரீமியம் உயர வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களுக் கும் ஆட்டோ டெபிட் என்கிற முறையில் வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத் திலேயே ஆட்டோ டெபிட் செய்ய சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். எனவே, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தந்தாலே வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்ய வங்கிக்கு அனுமதி அளித்தது போலதான்.
மே 31, 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்பிக்கும் போது ஒரு ரசீது வழங்கப்படும். இது நீங்கள் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம்.
ஆனால் ஜுன் 1, 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்கு களின் மூலம் பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்ட பின் வங்கி, ரசீதை வழங்கும்.
இந்த ரசீதுதான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம். பிரீமியம் செலுத்திய ரசீதே இன்ஷூரன்ஸ் பாலிசியின் சான்றிதழாக கருதப்படும்.
ரெனீவல் செய்வது!
நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்கள் கேட்கப் பட்டிருக்கும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்கு முன் வங்கிகள், சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோ டெபிட் செய்து அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும்.
யார் க்ளெய்ம் வழங்குவார்கள்?
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய் திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும்.
எவ்வளவு க்ளெய்ம்?
இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் அமலுக்கு வருகிறது. எனவே, 2015 ஜூனிலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்த காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.
ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்த ஒருவர் எந்த வகையில் இறந்தாலும் அவருக்கு இன்ஷூரன்ஸ் திட்டத்தின் மூலம் முழுத் தொகையும் க்ளெய்மாகக் கிடைக்கும். இதற்கு இறந்தவர் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, அவரின் இறப்புச் சான்றிதழ் போன்றவைகளை நீங்கள் எந்த வங்கியின் கணக்கை வைத்து இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கியில் சமர்பிக்க வேண்டும். அதாவது, நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிதான் மாஸ்டர் பாலிசி ஹோல்டராக கருதப்படும்.
விண்ணப்பத்திலேயே நாமினியின் பெயரையும், அவர் உங்களுக்கு என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும். நாமினிக்கு டிடி மூலம் க்ளெய்ம் தொகை அனுப்பப்படும். வங்கிக்கு உங்கள் முகவரி தெரியும் என்பதால், தனியாக எந்தக் கூடுதல் விவரங்களும் தரத் தேவை இல்லை.
சுரக்ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமை யாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disailment) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட்மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் (மேற்கூறியது போல) சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.
இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட்மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் (மேற்கூறியது போல) சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.
எப்போது காலாவதி?
கணக்கில் போதுமான பணம் இல்லாமல், இந்த திட்டத்துக்கான பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்ய இயலவில்லை என்றால் பாலிசி காலாவதியாகும்.
நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும். பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்துச் செய்யப்படும். தவிர, வயது வரம்பு கடந்தவுடன் திட்டம் காலாவதியாகிவிடும்'' என்றார் இந்திரா பத்மினி.
பொதுவாக, ஆக்ஸிடென்ட் பாலிசியை பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிக குறைந்த பட்சமாக 50 - 150 ரூபாய் வரை (பாலிசிதாரரின் பணிச் சூழலை பொறுத்து) பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு 6 ருபாய் பிரீமியத்துக்கு ரூ.1 லட்சம் கவரேஜ் வழங்குகிறது.
பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு 18 வயதுள்ள ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ்க்கு 103 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும், ஆனால், இதற்கு காத்திருப்புக் காலம் இருக்கும். ஜீவன் ஜோதி திட்டத்தில் ஒரு லட்சத்துக்கு
165 ரூபாய் செலுத்தினாலும் காத்திருப்புக் காலம் கிடையாது. அனைத்து வயது வரம்பினருக்கும் ஒரேமாதிரியான பிரீமியமே வசூலிக்கப்படுகின்றன.
165 ரூபாய் செலுத்தினாலும் காத்திருப்புக் காலம் கிடையாது. அனைத்து வயது வரம்பினருக்கும் ஒரேமாதிரியான பிரீமியமே வசூலிக்கப்படுகின்றன.
மேலும், மெடிக்கல் டெஸ்ட் கிடையாது. ஏதாவது நோய் பாதிப்பு இருந்தாலும் பிரீமியம் அதிகரிக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாக, 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வேறு எந்த நிறுவனத்திலும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது. இந்தத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு பாலிசி கிடைப்பது சிறப்பான விஷயம். குறைந்த பிரீமியத்தில் கூடுதல் பலன் தரும் இந்த இரு திட்டங்களிலும் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்!
மு.சா.கெளதமன்
நன்றி: நாணயம் விகடன், 10.05.2015
பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
ReplyDeleteதயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.