disalbe Right click

Thursday, July 16, 2015

பசுமை வீடு கட்டும் திட்டம்


பசுமை வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெற என்ன செய்ய வேண்டும்?
*********************************************************************************

பசுமை வீடு திட்டம்

ஏழைகளின் வீடுகளுக்கான தேவையை நிறைவு செய்யும் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தமிழக அரசின் முன்னோடி திட்டம் ஆகும். நமது நாட்டிலேயே 300 சதுர அடி பரப்பளவில் சூரிய மின்சக்தி விளக்குகளுடன் கூடிய வீடுகள் வழங்குவது இதுவே முதன் முறையாகும்.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்

1. ஊரகப் பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும்மக்கள் அனைவரும்
  சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் பெற தகுதியானவர்கள்.

2. ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில், ரூ.2.10 இலட்சம் அலகுத்   தொகையுடன் மாநில அரசின் முழு நிதி உதவியுடன் கட்டப்படுகிறது.

3. ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகியவசதிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கட்டப்படுகிறது.

4. ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளி சக்தியில் எரியும் அடர்குறு விளக்குகள் (5) அமைக்கப்படும். இவை படுக்கை அறை, வசிக்கும் அறை, சமையல்அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகிய பகுதிகளில் ஒரு விளக்கு வீதம் அமைக்கப்படும். 

5. பயனாளிகளின் விருப்பத்தின்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மின் இணைப்பு பெறும் விருப்பத்திற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

6. வீடுகள் கட்டும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 110 சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணியை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை செயல்படுத்தும்.

7. பசுமை வீடுகள், பயனாளிகளின் குடியிருப்பு அமைந்துள்ள இடம் (அவன்/அவளின் வசிப்பிடத்தை மாற்றியமைத்து) அல்லது கிராம ஊராட்சியின் பிற பகுதியில் அமைந்துள்ள பயனாளிக்குச் சொந்தமான இடங்களில் கட்டித்தரப்படும். 

8. மேலும், இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கென நில எடுப்புகள் ஏதும் செய்யப்படமாட்டாது. வீட்டுமனைப் பட்டா அல்லது சரியான நில உரிமை உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியானவர்கள் ஆவார்கள்.

பயனாளிகளின் தகுதிகள்

1. சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

2. சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் உள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

3. 300 சதுர அடிக்கு குறையாத வீட்டு மனை இடத்திற்கு சொந்தக்காரராக இருக்க வேண்டும்.

4. குடும்பத் தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினரில் எவரேனும் ஒருவர் பெயரிலோ வில்லங்கமற்ற வீட்டுமனைப் பட்டா இருக்க வேண்டும்.

5. தொடர்புடைய கிராம ஊராட்சியில் அல்லது வேறு எங்கும் கான்கிரீட் கூரை போடப்பட்ட சொந்த வீடு எதுவும் இருக்கக் கூடாது.

6. அரசின் இதர வீடு கட்டும் திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக் கூடாது.

பயனாளிகள் தேர்வு செய்யும் முறை

1. ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோரின் நிரந்தர காத்திருப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் மிகவும் வறிய நிலையில் உள்ளோர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

2. மொத்தம் 60,000 வீடுகளில் 17,400 வீடுகள் அதாவது 29 விழுக்காடு ஆதி திராவிடர்களுக்கும், 600 வீடுகள் அதாவது 1 விழுக்காடு பழங்குடியினர்களுக்கும் மீதமுள்ள 42,000 வீடுகள் அதாவது 70 விழுக்காடு இதர இனங்களுக்கும் (ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாதோர்) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படவேண்டும்.

3. மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு மாற்றுதிறனாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

4. பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும் போது,மாற்றுத் திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றமற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள்,முன்னாள் இராணுவத்தினர் மற்றும் முன்னாள் துணை இராணுவப் படையினர் துறையினரால் அடையாளம் காணப்பட்ட கிராமப் பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்ட
குடும்பங்கள், திருநங்கைகள், ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு, துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) சான்றிதழ் பெற்றவர்கள், வெள்ளம், தீ விபத்து போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். மேலும், மனநலம் குன்றியோர் உள்ள குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

5. தகுதியுள்ள ஏழை ஒருவரின் பெயர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் விடுபட்டிருப்பின், விடுபட்ட நபர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உதவி இயக்குநர் நிலையில் உள்ள அலுவலர், விவரங்களை சரிபார்த்து மாவட்ட ஆட்சியரின் இசைவுடன் அவரது பெயரை பட்டியலில் இடம்பெற செய்து அதனை கிராமசபையில் வைத்து ஒப்புதல் பெறவேண்டும். அவ்வாறு பெயர் சேர்க்கப்படும் நிகழ்வில், அவரது பெயரானது நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் ஒரு பகுதியாக்கப்பட்டு பயனாளி தேர்வுக்கு கருத்தில் கொள்ளப்படும்.

6. கிராம ஊராட்சிகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் தகுதியுள்ள பயனாளிகளின் பட்டியலை தயார் செய்து கிராம சபையின் ஒப்புதலுக்காக வைக்கவேண்டும். பயனாளிகள் தேர்வு, வீடுகள் ஒதுக்கீடு, கட்டுமானப் பொருட்கள் விநியோகம் மற்றும் இத்திட்டம் தொடர்பான நடைமுறைபடுத்தப்படும்.

அலைபேசி அடிப்படையிலான கண்காணித்தல் மற்றும் 

தொகை விடுவித்தல்

1. தற்பொழுது ஒன்றிய பொறியாளர்களால் மதிப்பீட்டு சான்றிதழ் தயார் செய்வதற்கும் பயனாளி காசோலை பெறுதற்கும் இடையே குறிப்பிட்ட காலதாமதம் ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் நிதி விடுவிப்பு, பணிமுன்னேற்றத்துடன் தொடர்பு படுத்தப்படாமல் இருப்பதால் ஒரு சில ஊராட்சிகளில் நிதி தேக்கமடைந்த நிலையிலும் மற்றும் வேறு சில ஊராட்சிகளில் நிதி பற்றாக்குறையாகவும்  உள்ளது. இந்நிலைகளிலிருந்து விடுபட, ஆன்லைன் நேரடிகண்காணித்தல் மற்றும் நிதி மேலாண்மை முறை என்ற ஒரு புதிய முறை 2014-15 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திறனான கணிப்பாய்வு மற்றும் மேலாண்மை முறை மற்றும் பயனாளிகளுக்கு விரைவாக பட்டியல் தொகையை அளிக்கும் பொருட்டும் பின்வரும் முறையில் பட்டியல் தயாரிப்பு மற்றும் நிதி மேலாண்மை 2014-15ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது

2. ஒவ்வொரு நிதியாண்டும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் ஒவ்வொரு மாவட்டத்திற்கான வீடுகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வார்.

3. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கிராம ஊராட்சிகளின் தேவையின் அடிப்படையில் அவற்றிற்கு வீடுகளை ஒதுக்கீடு செய்யும்.

4. வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி உண்மையாக வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்ந்தெடுத்து அப்பயனாளிகளின் பட்டியலை கிராம சபையின் முன் வைத்து ஒப்புதலைப் பெற வேண்டும்.

5. வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பயனாளியின் தகுதி, வீடு கட்ட தேவையான இடத்தின் நில உரிமை மற்றும் அளவு ஆகியவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களைக் கொண்டு ஆய்வு செய்து தகுதியிருப்பின் அப்பயனாளிக்கு பணி ஆணையினை வழங்கவேண்டும்.

6. பணி ஆணை வழங்கும் நேரத்தில், பயனாளியின் வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் அதாவது வங்கியின் பெயர், வங்கி கிளையின் பெயர், வங்கி கணக்கு எண், வங்கியின் ஐகுளுஊ குறியீட்டு எண் ஆகிய அனைத்தும் சேகரிக்கப்பட்டு பணி ஆணையில் குறிப்பிடப்படும். பயனாளியின் வங்கி கணக்கு குறித்த விவரங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கணக்குகளில் செய்யப்பட்டுள்ளதுபோல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலான அலுவலரால் சரிபார்க்கப்பட வேண்டும். பயனாளியின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், முதியோர் உதவித் திட்டம் அல்லது இதர வங்கிக் கணக்குகளை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். பயனாளிக்கு, வங்கியில் கணக்கு இல்லை எனில் ஒரு வங்கியில் புதிய கணக்குதுவங்கப்பட வேண்டும். ஆன்லைனில் உருவாக்கப்பட்ட பணி ஆணையினை பயனாளிக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் மேல் நடவடிக்கைக்காக இந்த பணி ஆணையின் நகல் பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவிப் பொறியாளருக்கு அனுப்பப்படவேண்டும்.


அலைபேசி அடிப்படையிலான ஆன்லைன் கண்காணிப்பு

1. பயனாளிகளின் வங்கி கணக்கு குறித்த விவரங்கள், பணி உருவாக்கத்தின் போதே ஒன்றிய அளவில் ஆன்லைன் திட்ட கண்காணித்தலில் நிரப்பப்படும்.

2. ஒன்றிய மேற்பார்வையாளர் / ஒன்றிய பொறியாளர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணி இடத்தை குறியீடு செய்யும்போதே, வீட்டின் கட்டுமானத்தின் வெவ்வேறு கூறுகள் பற்றியும், வீடு கட்டுதலில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் பட்டியல் வழங்குதல் உள்ளிட்ட துறையின் பங்கு மற்றும் பயனாளியின் பங்களிப்பு குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

3.. இந்த ஆன்லைன் கண்காணித்தல் முறையானது, ஒன்றிய மேற்பார்வையாளர் மற்றும் உதவி பொறியாளரிடம் உள்ள ஸ்மார்ட் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி மென்பொருள் (நேரடி கண்காணிப்பு முறை) இணைக்கப்பட்டிருக்கும். இம்முறையை பயன்படுத்தி, வீட்டின் முன்னேற்றத்தினை தளத்திலிருந்து நேரடியாகவே, புகைப்படம் மற்றும் புவியமைப்பு கூறுகளுடன் (அட்ச-தீர்க்க ரேகை) பதிவு செய்ய முடியும். இது தொகை வழங்குதலுக்கு அடிப்படையாக அமையும். (சென்னை தேசிய தகவல் மையம் சாலைப்பணிகளின் முன்னேற்றத்தை பதிவு செய்ய ஏற்கனவே ஸ்மார்ட் தொலைபேசி பயன்பாடு முறையை வடிவமைத்துள்ளது)

4. பணி இடத்தினை குறியீடு செய்த பிறகு, ஒன்றிய மேற்பார்வையாளர் / ஒன்றிய பொறியாளர் தன்னிடமுள்ள ழுஞளு பொருத்தப்பட்ட ஸ்மார்ட் அலைபேசியைக் கொண்டு வீடு கட்டப்படவுள்ள  இடத்தை புகைப்படம் எடுப்பார். இப்புகைப்படமானது 10 மீட்டர் தொலைவிற்குள் அதாவது வீட்டினை முழுமையாக பார்க்கும் அளவிற்கு எடுக்கப்பட வேண்டும். இந்த புகைப்படம் """"ஆன்லைன் திட்ட கண்காணித்தல் முறையில்"" புவியமைப்பு கூறுகளுடன் பதிவு செய்யப்பட்டு, குறிப்பிட்ட அப்பயனாளிகளுக்கு நிலை வாரியான தொகை விடுவித்தலுக்கு அடிப்படை ஆதாரமாகப் பயன்படுத்தப்படும்.

5. வீடு கட்டுமானத்தில் தரைமட்ட நிலை முடிந்த பிறகு, மேற்பார்வையாளர்/ஒன்றிய பொறியாளர் தள குறியீட்டின் போது எவ்விடத்தில் நின்று புகைப்படத்தினை எடுத்தாரோ முடிந்தவரை அவ்விடத்திலேயே நின்று மற்றொரு புகைப்படத்தை எடுக்க வேண்டும்.

6. மேற்பார்வையாளர்/ஒன்றிய பொறியாளர் பணி தளத்திலிருந்தே பணியின் நிலையினையும், புகைப்படத்துடன் கூடிய வீட்டின் நிலையினையும் ஆன்லைன் திட்ட கண்காணித்தல் முறையில் பதிவு செய்ய வேண்டும். புவியமைப்பு கூறுகள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம், வீடு குறிப்பிட்ட எந்த பயனாளியுடையது என்பதை சரிபார்க்க உதவுகிறது.




அலைபேசி அடிப்படையிலான மதிப்பீட்டுச் சான்றிதழ் மற்றும் 

நிதி மேலாண்மை

1. ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீட்டு சான்றிதழ் மற்றும் தொகை விடுவித்தலுக்கான குறிப்பாணையுடன் கூடிய பட்டியல் தொகுதி ஊரக வளர்ச்சி வலைதளத்தில் உருவாக்கப்படும். இவற்றை அலைபேசி பயன்பாடு மற்றும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள ஆன்லைன் திட்ட கண்காணித்தலுடன் இணைக்கப்படுவதின் மூலம்,  எப்பொழுதெல்லாம் வீட்டின் பணி முன்னேற்றம் அலைபேசியில் பதிவு செய்யப்பட்டு புவியியல் கூறுகளுடன் கூடிய புகைப்படத்துடன் சான்றுரைக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நிலைவாரியான மதிப்பீடு சான்றிதழ் மற்றும் தொகை தானியங்கி முறையில் உருவாகும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது.

2. தற்போது உதவிப் பொறியாளர் குறிப்பிட்டுள்ள பயனாளிக்கான குறிப்பிட்ட நிலைக்கான ஆன்லைன் மதிப்பீட்டு சான்றிதழை, புகைப்படத்துடன் உருவாக்க முடியும். இந்த மதிப்பீட்டு சான்றிதழ், ஆய்வு செய்யும் அதிகாரியான உதவி செயற் பொறியாளரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு ஆன்லைன் திட்ட கண்காணித்தல் முறை மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) க்கு அனுப்பப்படும்.

3. இந்த மதிப்பீட்டு சான்றிதழின் ஒரு நகல் உதவிப்பொறியாளரால் ஆன்லைன் கண்காணிப்பு தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு, உதவி செயற்பொறியாளரின் கையொப்பத்துடன், அலுவலகத்தில் ஆவணப்படுத்தலுக்கு சமர்ப்பிக்கப்படும்.

4. வீட்டின் அடித்தள நிலையில், தொகை விடுவிக்க வேண்டுமெனில் அந்நிலையில் வீட்டின் புகைப்படம் பதிவு செய்யப்பட வேண்டும். தொடர்புடைய அலுவலர் ஊரக வளர்ச்சித் துறை வலைதளத்தினுள் சென்று, ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மதிப்பீட்டுச் சான்றிதழை நகல் எடுத்து, கையொப்பமிட்டு மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

5. உதவிப் பொறியாளர் / உதவிச் செயற் பொறியாளரிடமிருந்து மதிப்பீட்டுச் சான்றிதழை பெற்ற பிறகு தொடர்புடைய உதவியாளர் / கணக்காளர்/ துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊரக வளர்ச்சித் துறை வலைதளத்தினுள் சென்று குறிப்பிட்ட அந்த வீட்டிற்கான தொகை விடுவித்தலுக்கான குறிப்பாணையை உருவாக்கி கோப்பினை தயாரித்து, பட்டியலை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) க்கு வைக்க வேண்டும்.

6. வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பயனாளிக்கு வழங்கப்பட்ட கட்டுமானப் பொருட்களுக்கான தொகை ஏதேனும் இருப்பின் அதனை கழித்த பிறகு பட்டியலை அனுமதிக்க வேண்டும். தேவையான பதிவுகளை மதிப்பீட்டு ஒதுக்கீடு புத்தகம் மற்றும் தொடர்புடைய திட்ட ரொக்க புத்தகத்தில் பதிவு செய்தபிறகு, அந்த பட்டியல் மற்றும் தொகை விடுவித்தலுக்கான குறிப்பாணையை பயனாளிக்கு தொகை வழங்கும் பொருட்டு தொடர்புடைய கிராம ஊராட்சியின் தலைவருக்கு அனுப்ப வேண்டும். 121 பட்டியல் மற்றும் தொகை வழங்குதலுக்கான குறிப்பாணையை பெற்ற பிறகு கிராம ஊராட்சியின் தலைவர், நடைமுறையில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி, தொடர்புடைய பயனாளிக்கு தொகையை வழங்க வேண்டும்.


அலைபேசி அடிப்படையிலான 

ஆன்லைன் கண்காணித்தல் முறையின் அனுகூலங்கள்

1. அலைபேசி அடிப்படையிலான ஆன்லைன் கண்காணித்தல் முறையின் மூலம், பணி ஆணை வழங்குதல், மதிப்பீட்டு சான்றிதழ் தயாரித்தல் மற்றும் பயனாளிகளுக்கு தொகை வழங்குதல் ஆகியவற்றிற்கான கால அளவு குறைகிறது.

2. மேலும், ஒவ்வொரு நிலையின் போதும் புகைப்படங்கள் பதிவு செய்யப்படுவதால், ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள், திட்டத்தை நுண்ணிய முறையில் கண்காணித்தலுக்கு உதவுவதுடன் வீடுகளின் பணி முன்னேற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு ஊராக வளர்ச்சித்துறை

No comments:

Post a Comment