disalbe Right click

Saturday, July 11, 2015

கேவியட் மனு தாக்கல்


கேவியட் மனு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறை
**************************************************************
மாவட்ட  உரிமையியல் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரையில்  (Caveat Petition) கேவியட் மனு படிவம் ஒரே மாதியானதாகவே இருக்கும்.

நபர் ஒருவருக்கு எதிராக, மற்றொரு நபர்  மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலோ
 ( District Munisif Court),  மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் மன்றத்திலோ
 ( District Munisif Cum Magistrate Court), சார்பு நீதிமன்றத்திலோ (Sub Court) , மாவட்ட நீதிமன்றத்திலோ (District Court), உயர்நீதிமன்றத்திலோ (High Court),  தடையாணை (Stay Order) அல்லது உறுத்துக்கட்டளை (Injection Order) யை அவசரத்தன்மையுடன் (Emergent Petition) அறிவிப்புக் கொடுக்காமல் பெற்றிடுவத்ற்கு வாய்ப்புண்டு என்று கருதிடும் சூழ்நிலையில் நபர் ஒருவர் கேவியட் மனுவை தாக்கல் செய்யலாம்.

மேல்முறையீட்டுக் காலங்களிலும்  கேவியட் மனுவை தாக்கல் செய்யலாம். அதற்கான படிவமும் இதே மாதிரியானதாகும்.

கேவியட் மனுவை அவசரத்தன்மையுடனோ அல்லது சாதாரண நிலையிலோ தாக்கல் செய்யலாம். 

அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப்படும் கேவியட் மனுவை, அவசரத்தன்மை மனு மற்றும் அபிடவிட்டுடன் இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டும். சாதாரணமாக தாக்கல் செய்யப்படும் கேவியட் மனுவுக்கு அவசரத்தன்மை மனு மற்றும் அபிடவிட்டை இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

கேவியட் மனுவை அவசரத்தன்மை மனுவுடன் கொடுத்தால் மனு சரியாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அன்றைய தினமே எண் கொடுத்து விடுவார்கள்.
  
கேவியட் மனுவை சாதாரணமாக தாக்கல் செய்தால், அடுத்தடுத்த நாட்களில்தான் எண் கொடுப்பார்கள்.

கேவியட் மனுசாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும்போது, அந்த மனுவில் எண் கொடுப்பதற்கு முன்னர், நபர்கள் எவரும் தமது வழக்கை அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்து தடையாணை அல்லது உறுத்துக் கட்டளையைப் பெற்றிட முடியும்.

கேவியட் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர், அசல் மனுவில் மனுதாரரிடம் கையொப்பத்தைப் பெறுதல் வேண்டும். நகலின் மனுதாரரின் மையொப்பத்தைப் பெறுதல் கூடாது. நகலில் உண்மை நகல் அல்லது T.C (True Copy) என்று குறிப்பிட்டு மனுதாரரின் வழக்கறிஞர் மட்டும் கையொப்பம் இட்டால் போதுமானதாகும். ஆனல், அசல் கேவியட் மனுவில் மனுதாரரும், வழக்கறிஞரும் கையொப்பம் இடுதல் வேண்டும். கேவியட் மனுவில் ரூ.10/-க்கான நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை ஒட்டப்படுதல் வேண்டும்.

கேவியட் மனுவின் நகல் ஒன்றை எதிர் மனுதாரருக்கு மனுதாரரின் வழக்கறிஞர் பதிவு அஞ்சலில் ஒப்புகை அட்டை இணைப்புடன் அனுப்பி வைத்தல் வேண்டும். பதிவு அஞ்சல் உறை மற்றும் ஒப்புகை அட்டையின் பெறுநர் முகவரியில் எதிர்மனுதாரரின் முகவரியையும், அனுப்புனர் முகவரியில் மனுதாரரின் வழக்கறிஞரின் முகவரியையும் குறிப்பிடுதல் வேண்டும்.

கேவியட் மனுவின் நகலை எதிர்மனுதாரருக்கு அனுப்பி வைத்த பின்பே கேவியட் அசல் மனுவை நீதிமன்றத்தில் தக்கல் செய்ய வேண்டும்.

கேவியட் மனு, அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப்படும்போது,  அதில்
1.  கேவியட் அசல் மனு (Caveat Original Petition)
2. எதிர்மனுதாரருக்குப் பதிவுத்தபாலில் கேவியட் மனுவின் நகலை அனுப்பியதற்குச் 
     சான்றாதாரமாக உள்ள அஞ்சல் பற்றுச் சீட்டு (Postal Receipt)
3. வழக்குரைக்கும் அதிகார ஆவணம் (Vakalat)
4. அவசரத்தன்மை மனு (Emergent Petition) 
5. அபிடவிட் (Affidavit)
ஆகியவற்றைத் திறந்த நீதிமன்றத்தில் (Open Court) நீதிபதியிடம் கொடுத்தல் வேண்டும்.

 கேவியட் மனுவை சாதாரண முறையில் தாக்கல் செய்திடும்போது,  அதில்
1. கேவியட் அசல் மனு  (Caveat Original Petition)
2.வழக்குரைக்கும் அதிகார ஆவணம் (Vakalat)
3. எதிர் மனுதாரருக்கு கேவியட் மனுவின் நகலை அனுப்பியதற்குச்  சான்றாதாரமாக உள்ள அஞ்சல் பற்றுச் சீட்டு  (Postal Receipt)
ஆகியவற்றை தலைமை எழுத்தர் (Head Clerk) அல்லது செரஸ்தாரிடம் (Sheristadar ) கொடுத்தால் போதுமானதாகும்.

மனுக்கள், அபிடவிட், வழக்குரைக்கும் ஆவணம் ஆகியவற்றின் மேலுரையில் வழக்கறிஞர் பெயர், ஊர், நீதிமன்றம், மனு விபரம் ஆகியவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும்.

அஞ்சல் பற்றுச் சீட்டை தனியே ஒரு வெள்ளைத்தாளில் இணைத்து, அந்த வெள்ளைத்தாளில் மேல்குறிப்பை (Docket) எழுதுதல் வேண்டும்.

கேவியட் அசல் மனுவில் ரூ.10/-க்கும், வழக்குரைக்கும் அதிகார ஆவணத்தில் வழக்கறிஞர் நல நிதி முத்திரை வில்லையுடன் ரூ.5க்கும், அவசரத்தன்மை மனுவில் ரூ.2/-க்கும் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை ஒட்டுதல் வேண்டும். அபிடவிட்டில்  நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை  ஒட்ட வேண்டிய அவசியமில்லை. 

கேவியட் மனுவில் வாத-பிரதிவாதங்கள் கேட்கப்பட மாட்டாது. அதனால், அதில் எதிர்மனுதாரர் கட்சியாடுகின்ற வகையில் எதிர்வுரையோ, பதிலறிவிப்போ செய்ய வேண்டியதில்லை.

ஒருமுறை தாக்கல் செய்யப்படுகின்ற கேவியட் மனு மூன்று மாதங்கள் வரையில் மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு புதிதாகத்தால் கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

கேவியட் மனு இரண்டாவது முறையாக அல்லது அடுத்தடுத்து எத்தனை முறை தாக்கல் செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் பின்பற்றப்படும் அதே நடைமுறையையே பின்பற்றுதல் வேண்டும்.

நன்றி : சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம், M.A, B.L.,

1 comment:

  1. What is the procedure to file caveat petition by respondent in case of maintenance u/s 125 crpc?

    ReplyDelete