பி.ஃஎப் - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்
மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் ( ஆகஸ்ட், 2015) விளக்குகிறார்.
நாமினி!
"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.
பென்ஷன்!
பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.
மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.
இடையில் பணம் எடுத்தல்!
பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.
மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதைhttp://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.
பிஎஃப் கணக்கை முடிப்பது!
பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.
இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)
பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.
அனைத்தும் ஆன்லைன்!
பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.
எதற்கு எந்தப் படிவம்?
பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதைhttp://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தைhttp://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
புகார் தெரிவிக்க!
பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும்.http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx…& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.
டிடிஎஸ்!
பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ் (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில் உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும்.
http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541
http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541
நிரந்தரக் கணக்கு எண்!
பிஎஃப் அமைப்பு UAN(Universal Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.
இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே வாங்க முடியும். இந்த எண்ணைhttp://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.
இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”
*****************************************************************************************************************************************
மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம் எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர, மொத்த சம்பளம் எவ்வளவு? அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்? எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது.வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர்.
இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.
எவ்வளவு பிடிக்கிறார்கள்?
பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.
சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.
நிரந்தர கணக்கு எண்
புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.
தெரிந்துகொள்வது எப்படி?
சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும்.
இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம்.
பணம் எடுப்பது எப்படி?
பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை
வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.
பங்குச் சந்தையில் பி.எஃப்.
ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
நன்றி : தி இந்து நாளிதழ் - 26.10.2015
குறிப்பு: பி.எஃப். அலுவலகத்தில் தாங்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலமாக,
01122901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், தங்களது பி.எஃப். இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment