disalbe Right click

Friday, October 23, 2015

மாயன்கள் மாயமான வரலாறு - 4


மாயன்கள் மாயமான வரலாறு
பாகம் : 4

நேற்று எழுதியது போல, மீண்டும் ஒன்றை நினைவுபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இப்போதும் உள்ளது. இங்கு நான் கொடுக்கும் எந்தத் தகவலும், எனக்குச் சொந்தமானவை அல்ல. இவைகளின் உண்மைத் தன்மை பற்றி என்னிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால் பல ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள், காணொளிகள் என இணையங்களிலும், அச்சு வடிவங்களிலும் ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவை கொட்டிக் கிடக்கின்றன. ‘சதித் தத்துவம்’ (Conspiracy Theory) என்னும் பெயரில், இவை காணொளிகளாக வெளிவருகின்றன. இவை இப்படி இப்படி இருக்கின்றன என்று உங்களுக்குச் சுட்டிக் காட்டுவது மட்டுமே எனது வேலை. அத்துடன் என் கடமை முடிந்து போய் விடுகிறது. படித்த பின் சரியான முடிவுகளை எடுப்பது உங்கள் பொறுப்பு. நான் சொல்லும் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தால், நான் சொன்னவை சிறிதளவோ என்று நீங்களே பிரமித்துப் போவீர்கள். சொல்லாதவை மிக அதிகமாக இருக்கும். இதற்கு மேலும் இது பற்றி நான் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்………..!



 கடந்த பதிவில், டென்வெர் விமான நிலையம் பற்றியும் நோர்வேயில் அமைக்கப்பட்ட மரங்களின் பாதுகாப்பு மையத்தைப் பற்றியும் நான் எழுதியது உங்களைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கும் என்றே நம்புகிறேன். அவற்றை யார் முன்னின்று நடத்துகிறார்கள் என்ற கேள்வியும் நமக்குள் எழுந்திருந்தது. அவர்கள் யார் என்பதற்கு ஆதாரம் டென்வெர் விமான நிலையத்திலேயே எமக்குக் கிடைத்தது. டென்வெர் விமான நிலையக் கட்டுமானத்தின்போது, அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பற்றிக் கடந்த பதிவில் கூறியிருந்தேன். அதன் முழுமையான வடிவம் மேலே உள்ள படத்தில் காணப்படுகின்றது. அந்தப் படத்தைச் சரியாகப் பார்த்தீர்களானால், அதில் ஒரு சின்னம் (Symbol) காணப்படுகிறது. அத்துடன் கீழே ‘புதிய உலகம்’ (New World) என்னும் வார்த்தைகளும் காணப்படுகிறது. இவை இரண்டுமே எல்லா மர்மங்களையும் எமக்கு தீர்க்கப் போதுமானவையாக இருக்கலாம். 

அவை என்ன என்றுதான் பார்ப்போமே! 

‘புதிய உலக ஒழுங்கு’ என்று தமிழில் சொல்லப்படக்கூடிய ‘The New World Order’ என்னும் அமைப்பு, உலகத்தின் கோடீஸ்வரர்களையும், தொழிலதிபர்களையும், அரசியல் பெரு முதலைகளையும், அதிகார மையங்களின் உச்சங்களில் அமர்ந்திருப்பவர்களையும் தன் அங்கத்தவர்களாகக் கொண்டது என்று சொல்கிறார்கள். ஒரு மாயச் சங்கிலி மூலம் இவர்கள் அனைவரையும் இந்த அமைப்பு இணைத்து வைத்திருக்கிறது. அந்தச் சங்கிலியின் எந்த ஒரு வளையத்திலும் சாதாரண பாமர மக்களான நாங்கள் இருக்கவே முடியாது. இவர்களின் கொள்கை ஒரே ஒரு உலகம், ஒரே ஒரு பணம், ஒரே ஒரு வங்கி என்பதுதான். அதாவது உலக மக்கள் அனைவரையும் ஒரே ஒரு சக்தி ஆள வேண்டும். அவர்களுக்குப் பணமாக ஒரே ஒரு பணம் இருக்க வேண்டும். அந்தப் பணத்தை நடை முறைப்படுத்துவதற்கு ஒரே ஒரு வங்கி இருக்க வேண்டும்.

 ‘என்னடா இவன் கதைவிடுகிறானே!’ என்று நீங்கள் நினைக்கலாம். சம்பந்தம் உண்டோ, இல்லையோ, இங்கு சொன்னது போல, சம்பவம் ஒன்று சமீபத்தில் நடைபெற்று இருக்கின்றது. பதினைந்துக்கும் மேற்பட்ட, உலகத்தில் மிக முக்கியத்துவமும், சக்தியும் வாய்ந்த நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து தனி ஒரு பணமான ‘யூரோ’வை (Euro) உருவாக்கியது எம் கண் முன்னாலேயே நடந்தது. ஆசிய நாட்டிலுள்ளவர்கள் அனேகருக்கு ‘புதிய உலக ஒழுங்கு’ அமைப்புப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தன் முகத்தை ஆசிய நாட்டினர்களுக்குப் பெரிதாகக் காட்டாத இந்த அமைப்பைப் பற்றி அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்கள் நிறையவே தெரிந்து வைத்திருக்கின்றனர். 


இதில் மறைந்திருக்கும் இன்னுமொரு செய்தி என்னவென்றால், The New World Order என்னும் அமைப்பை, ‘Free Mason’ என்னும் அமைப்பே கொண்டு நடத்துகிறது என்று சொல்கிறார்கள். இந்த Free Mason அமைப்பு மிகவும் பிரபலம் வாய்ந்தது. அது மட்டுமில்லாமல் பலரால் மர்மம் நிறைந்தது என்றும் வர்ணிக்கப்படுவது. இந்த அமைப்பை ‘மேசனிக்ஸ்’ (Masonics) என்றும் அழைப்பார்கள். இந்த மேசனிக்ஸ் என்பது மதம் சார்ந்தது என்றும், கடவுளுக்கு எதிரானது என்றும் இரண்டு விதமான கருத்துக்கள் இருந்தாலும், நாம் அதற்குள் போகத் தேவையில்லை. ஆனால் இந்த அமைப்பு மிகவும் ஆளுமையுள்ள அமைப்பு என்பது மட்டும் உண்மை ஆகும்.

 இந்த அமைப்புக்கு எனப் பல சின்னங்கள் இருந்தாலும், கீழே படத்தில் கொடுத்திருப்பதுதான் அதன் முக்கிய சின்னமாகும். 


மேசனிக்ஸ் சின்னம்

இந்தப் படத்தில் உள்ள அடையாளத்தையும், டென்வெர் விமான நிலையக் கல்வெட்டில் இருந்த அடையாளத்தையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல் மேசனிக்ஸ் அமைப்பு மேலும் சில சின்னங்களைத் தமக்கென வைத்திருக்கின்றது. மேலே படத்தில் காட்டப்பட்ட கணித வரை கருவிகள், ஒற்றைக் கண், ஐந்து நட்சத்திர வடிவம், ஆறு நட்சத்திர வடிவம், கைவிரல்களை மடக்கிக் காட்டும் ஒருவித சைகையான அடையாளம், ஆங்கில ‘G’ என்னும் எழுத்து என்பவற்றுடன் ஆச்சரியகரமாக பிரமிட் சின்னமும் மேசன்களின் சின்னங்களாகும். 







இந்த மேசனிக்ஸ் அமைப்பின் ஆளுமை பற்றிச் சொல்வதானால், நான் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொன்னால் உங்களுக்கு அதன் தீவிரமும், அதிகாரமும் புரியும். அமெரிக்காவின் ஒரு டாலரை உங்களில் அநேகர் பார்த்திருக்கலாம். அந்த ஒரு டாலரில் (One Dollar Note) இருக்கும் படம் இது. 






இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ள ‘NERVUS ORDO SECLORUM’ என்னும் லத்தீன் வார்த்தைகள் ‘Secular New Order’ என ஆங்கிலத்தில் அர்த்தம் தருகிறது. இது New World Order என்று தவறாக அர்த்தப்படுத்தப்படுகின்றது என்று விக்கிப்பீடியா (Wikipedia) தெரிவித்தாலும், இல்லை இது மறைமுகமாக அதையே குறிக்கின்றது எனப் பலர் அடித்துச் சொல்கின்றனர். அவற்றின் விபரங்களை நீங்கள் பல இணையத் தளங்களில் காணலாம். அது தவிர அமெரிக்க டாலரில் ஏன் லத்தீன் வார்த்தைகள் வரவேண்டும் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மேசன்களின் அடையாளமான ஒற்றைக் கண்ணும், பிரமிட் அடையாளமும் அங்கு வர வேண்டிய அவசியமே இல்லை எனக் கேள்விகள் வருகின்றது. அத்துடன் அந்தப் பிரமிட்டின் அடுக்குகள் மொத்தமாக 13 ஆகவும் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்தப் 13 என்னும் இலக்கம் மேசன்களின் முக்கிய இலக்கங்களில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். சரி, இந்தப் 13 படிகள் என்பது தற்செயலாக அமைந்தது என்று நாம் எம்மைச் சமாதானப்படுத்தினால், அதே டாலரில் இருக்கும் இன்னுமொரு படம் எம்மை அசர வைக்கிறது. அந்தப் படத்தில் இருக்கும் அமெரிக்கக் கழுகு, தன் இடது காலில் வைத்திருக்கும் இலைகளின் எண்ணிக்கையும், வலது காலில் வைத்திருக்கும் அம்புகளின் எண்ணிக்கையும் தற்செயலில்லாமல் 13 ஆக இருக்கிறது. அது மட்டுமா? அதில் செங்குத்தாக வரையப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளைக் கோடுகளின் எண்ணிக்கை 13. மேலே இருக்கும் லத்தீன் எழுத்துகள் மொத்தம் 13. அதற்கும் மேலே இருக்கும் நட்சத்திரங்கள் 13. இதற்கு மேலும் 13 என்பது தற்செயல்தானா என்பதை நீங்களே முடிவு செய்துவிட்டு, படத்தில் எண்ணிப் பாருங்கள்(13 இந்த எண்ணை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள் )



 “அடப் போங்கப்பா! எதைப் பார்த்தாலும் உங்களுக்குச் சந்தேகம்தான். எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒன்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்” என்று நீங்கள் சொல்லலாம். இருக்கட்டும், இதையும் பாருங்கள். அந்த டாலரில் இருக்கும் படத்தில் மேசனின் ஆறுகோண அடையாளத்தை வரையும்போது என்ன வருகிறது என்று தெரிகிறதா? MASON. 



ஆச்சரியம் இத்துடன் முடிந்து விடவில்லை. அமெரிக்க ஒரு டாலரின் முன் பக்கம் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனே (George Washington) ஒரு மேசன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 





ஆபிரகாம் லிங்கன், கென்னடி ஆகிய இருவர் தவிர்த்து, அமெரிக்க ஜனாதிபதிகளில் அனைவரும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இந்தக் கருத்துகளை முன்னணியில் வைத்து ‘நிக்கலஸ் கேஜ்’ (Nicolas Cage) நடித்து வெளிவந்த National Treasure (The Book of Secrets) என்னும் ஆங்கிலப் படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கின்றன. முடிந்தால் அவற்றைப் பாருங்கள். அத்துடன் அந்தப் படத்தின் போஸ்டர்களில் பிரமிட்டுக்குள் இருக்கும் ஒற்றைக் கண்ணையும் கவனிக்கத் தவறிவிடாதீர்கள். 



இந்து மதத்தின் சின்னங்களில் ஒன்றான ஸ்வஸ்திக் சின்னத்தை, ஹிட்லர் தனக்கென்று ஒரு சின்னமாக மாற்றிவிட்டது சரித்திரத்தில் நடந்தது. அது போல, இன்னுமொரு சின்னத்தையும் தங்களுக்கென வைத்துக் கொண்டார்கள் மேசன்கள். அது அவர்கள் கைகளாலேயே காட்டும் ஒரு சின்னம். அதை அமெரிக்காவின் எத்தனை பெருந் தலைகள் பாவித்திருக்கின்றனர் என்று நீங்களே பாருங்கள். இவையெல்லாம் சில உதாரணங்கள்தான். பல கொடுக்க முடியவில்லை. 







இங்கு ஒரு விசயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். இவர்களெல்லாம் மேசனாக இருந்தால், அப்படி இருப்பதில் எந்தத் தவறும் கிடையாது. மேசன் என்பது மறைந்து தொழிற்படும் ஒரு அமைப்பல்ல. வெளிப்படையாகவே இயங்கும் ஒரு அமைப்பு அது. அதில் அங்கத்தவர்களாக இருப்பது ஒன்றும் தவறானது அல்ல. உலகில் அதி உச்சத்தில் இருப்பவர்கள் பலர் ‘நான் ஒரு மேசன்’ என்று சொல்லத் தயங்கியதே இல்லை. ஆகையால் இங்கு அமெரிக்க ஜனாதிபதிகளைக் குறிப்பிடும்போது, அவர்கள் தவறு செய்பவர்கள் என்று சொல்வது என்பதல்ல அர்த்தம். மேசன்கள் பற்றிய ஒரு மர்மமான கருத்து உலகில் பலமாக உலவுகிறது என்பதை இங்கு சொல்லி, அதற்கு மேலும் சொல்வதற்காக இவற்றையும் சொல்ல வேண்டி இருக்கிறது அவ்வளவுதான். அதிகம் ஏன், ஜார்ஜ் வாஷிங்டன் போல, ஜார்ஜ் புஷ் கூட மேசன்களுடன் இருக்கும் படங்கள் வெளிப்படையாகவே கிடைக்கின்றன. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது நிச்சயம் புரியும் என்று நினைக்கிறேன். 





இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இன்னுமொரு அதிர்ச்சியும் எம்மை வேறொரு புறத்தில் இருந்து தாக்குகிறது. நீங்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சி அது. எதிர்பார்க்காதது என்பது மட்டுமல்ல, அது பற்றிச் சொன்னால் நீங்கள் நம்பப் போவதே இல்லை. “நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது நடப்பதையே இப்படி மாற்றிச் சொல்கிறீர்களே, நீங்கள் எதைத்தான் மாற்றிச் சொல்ல மாட்டீர்கள்?” என்று திருப்பி என்னையே கேள்வி கேட்பீர்கள். அந்த அளவுக்கு நீங்கள் நம்பும் ஒன்று இது. இதை நான் சொன்னால், இதுவரை நான் சொன்னவை எல்லாமே, இப்படிப்பட்ட அபத்தங்கள்தான் என்று முடிவைக் கூட நீங்கள் எடுத்துவிடுவீர்கள். 

“அட! எதற்கு இவ்வளவு பீடிகை?” என்றுதானே கேட்கிறீர்கள். விசயம் அப்படி. நான் சொல்லப் போவதை முதலில் நீங்கள் நம்பாவிட்டாலும், சொல்லி முடிக்கும் வரை கொஞ்சம் பொறுமையாக வாசியுங்கள். முடிந்தால் அது பற்றி இணையங்களில் தகவல்களையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சரி, இப்போ விசயத்துக்கு வருகிறேன்.

 உலகம் வெப்ப மயமாதல் (Global Warming) என்பது தற்போது, மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு பாரிய பிரச்சினை. இதற்குக் காரணமாகச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைக் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். அதிலும் குறிப்பாக உலகமெங்கும் பயணித்துக் கொண்டிருக்கும் வாகனங்கள் வெளிவிடும் புகையால், சுற்றுச்சூழல் மாசடைகிறது என்கிறார்கள். வாகனங்கள் வெளிவிடும் காபனீரொக்சைட் (CO2) என்னும் வாயுவும், மீதேன் (Methene – CH4) என்னும் வாயுவும் சுற்றுச்சூழலை நஞ்சாக்குகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதாவது எமது பூமி சூரியனின் வெப்பக் கதிர்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க தன்னைச் சுற்றி ‘கிறீன் ஹவுஸ் விளைவு’ (Greenhouse effect) எனப்படும் ஒன்றை, பூமியைச் சுற்றிப் பல வாயுக்களால் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கிறீன் ஹவுஸ்தான் எம்மை இதுவரை காத்து வருகிறது. இந்த கிறீன் ஹவுஸை மேற்படி இரண்டு வாயுக்களும் பழுதடைய வைக்கின்றன எனச் சொல்லப்படுகிறது. 



ஆனால் தற்போது விஞ்ஞானிகள் மிகப்பெரிய எழுத்துகளில், ‘குளோபல் வார்மிங் என்பதே பொய்’ என்று அலறுகிறார்கள். ஆமாம், நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள். குளோபல் வார்மிங் என்று சொல்லப்படுவதே முழுப் பூசணியை சோற்றுக்குள் மறைக்கும் பொய் என்கிறார்கள். உலகம் வெப்பமாவது என்பது உண்மையிலும் உண்மைதான். அதை எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை. ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணமான மேற்படி வாயுக்களின் மாசுத் தன்மைதான் என்பது மகா பொய் என்கிறார்கள். இதைச் சொல்வது ஒருவர், இரண்டு பேர் கிடையாது. அமெரிக்காவில் மட்டுமே 31457 விஞ்ஞானிகள் இதற்கு எதிராக பெட்டிசன் ஒன்றை உருவாக்கி, அமெரிக்க அரசுக்கு அனுப்பினார்கள். அதில் 9029 பேர் Ph.D என்று சொல்லப்படும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் அனைவருமே குளோபல் வார்மிங் என்பது பொய் என்கிறார்கள். குளோபல் வார்மிங் என்பது உண்மைதான் என்று சொல்லும் விஞ்ஞானிகள் வெறும் 3100 பேர் மட்டுமே! அரசுக்கு விஞ்ஞானிகள் அனுப்பிய கடிதத்தின் ஒரு உதாரணம் இது. 



விஞ்ஞானிகள் சொல்லும் காரணம், காபனீரொக்சைட், மீதேன், நைட்ரஸ் ஒக்சைட், நீராவி, ஓஸோன் ஆகிய ஐந்து வாயுக்களே, கிறீன் ஹவுஸ் விளைவுக்குக் காரணமாக இருக்கின்றன. இந்த உலக மாசுபடுதலுக்குக் காரணம் என்று சொல்லப்படும் காபனீரொக்சைட்டும் (CO2), மீதேனும்தான் (CH4) இந்த கிறீன் ஹவுஸ் உருவாவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் வாயுக்கள். அடிப்படையில் எமக்கு உதவியாக CO2, CH4 ஆகிய இரு வாயுக்களும் இருக்க, அந்த வாயுக்களால் எப்படி எங்கள் பூமி மாசுபட முடியும் என்று கேட்கிறார்கள். இந்த இரு வாயுக்களும் எமக்கு உதவிதான் செய்ய முடியுமே ஒழிய, தீமையைச் செய்ய முடியாதவை. அப்படி இந்த வாயுக்களால்தான் பூமி வெப்பமாகின்றது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், இதுவரை வெளியிடப்பட்ட வாயுக்களால் அதிகபட்சம் ஒரு சதம பாகை வெப்பம்தான் அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள். 

அப்படி என்றால் உலகம் வெப்பமாதல் இல்லையா என்கிறீர்களா? நிச்சயமாக வெப்பமாகிறது. நாங்கள் நினைப்பது போல இல்லாமல், மிகவும் அதிகமாகவே வெப்பமாகிறது. ஆனால் அப்படி வெப்பமாவதற்குக் காரணமே வேறு. சூரியன் சமீப காலங்களாக மிகவும் ஆவேசமாகத் தன் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன் வெப்பக் கதிர்த் தாக்குதல் முன்னைவிட மிகவும் அதிகரித்துப் போய் உள்ளது. சொல்லப் போனால், 2012 இல் உலகம் அழியாவிட்டாலும் எதிர்வரும் மிகக் குறுகிய காலத்தில் உலகம் அழியும் அளவுக்கு சீற்றத்தைக் கொடுக்கிறது சூரியன்.



 ஆனால் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, உலகம் மாசாவதால் பூமி வெப்பமாகின்றது என்று கதைவிட ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர் என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்படிப் பொய் சொல்வதில் “இவர்களுக்கு அப்படி என்ன நோக்கம் உண்டு?” என்றுதானே கேட்கிறீர்கள். ஒன்றுமில்லை, வெறும் பணமும் அதனால் கிடைக்கும் அதிகாரமும்தான் அவர்கள் நோக்கம். அதுவும் சாதாரணமான பணம் அல்ல. பில்லியன், ட்ரில்லியன் டாலர் பணம். ஆம்! புவி மாசடைதல் என்பதை வைத்து அறவிடப்படும் பெட்ரோலிய வரி என்பது நீங்கள் கற்பனையே பண்ண முடியாதது. குளோபல் வார்மிங் என்று சொல்லி மாசுக் கட்டுப்பாட்டிற்காக உள்ளீடு செய்யப்பட்ட பணம் மிக மிக மிக அதிக அளவிலான பணம். 

இதில் இரண்டு விசயங்கள் உள்ளன. 1. புவி வெப்பமாதலுக்கான உண்மையான காரணம் மறைக்கப்படுகிறது. 2. புவி வெப்பமாதல் தவறாக வழி நடத்தப்பட்டு பணம் சம்பாதிக்கப்படுகிறது. முதலாவதில் எங்கள் தொடருக்குச் சம்பந்தமான உலக அழிவு உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதாகச் சொல்லியதில், உலகம் அழிந்தால் யார் தப்புவதற்கு முயற்சி செய்வார்களோ அவர்கள், அப்படித் தப்புவதற்குக் காரணமாக இருக்கும் கோடி கோடியான பணம் சம்பாதிப்பது. பின்னர் அதன் மூலம் அசைக்க முடியாத சக்தியாக மாறுவது உள்ளடங்கி இருக்கிறது. 

இந்த குளோபல் வார்மிங் சிக்கலில் முக்கியமாகப் பலர் கையைக் காட்டும் நபர்கள் இருவர். அதில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி போட்டியில், போட்டியிட்ட மாபெரும் கோடீஸ்வரர் ஒருவர். அடுத்தவர் ஐ.நா. சபையில் மிக முக்கிய பதவியை வகித்துப் பின்னர் ஒரு சிக்கலில் பதவியைத் துறந்து, உலகின் உச்சியில் இருக்கும் கோடீஸ்வரர்களில் ஒருவர். இதில் நகைச்சுவை என்னவென்றால், அந்த இரண்டாவது நபர், தற்சமயம் தனது நாடான கனடாவை விட்டுவிட்டு சீனாவில் குடியிருக்கிறார். இந்தச் சம்பவம் உங்களுக்கு ’2012′ என்னும் ஹாலிவுட் படத்தை நினைவுபடுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இந்தத் தொடரில் நான் இவர்கள் இருவரின் பெயர்களையும் உங்களுக்குச் சொல்லப் போவது இல்லை. ஆனால் இணையம் இருக்கும் நிலையில் இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சிக்கலான விசயமாக உங்களுக்கு இருக்கப் போவதில்லை. உங்கள் தேடலுக்கு இது ஒரு சவாலாக அமையும், தேடுங்கள். 

இதுவரை நான் சொன்னவற்றில் எங்குமே மாயா வரவில்லை. மாயா இனம் பற்றிச் சொல்லப் போய் எங்கேயோ சென்று விட்டேனோ என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவற்றுக்கும் மாயாவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எப்படி டென்வெர் விமான நிலையத்தில் வரையப்பட்டிருந்த சித்திரத்தில் மாயா இனச் சிறுமி இருந்தாளோ அதுபோல, இவற்றிலும் மாயா கலந்தே இருக்கிறது. 

அப்படி இங்கு மாயாபற்றி என்ன உள்ளது என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன். 



  இந்தத் தொடரை வாசித்து வரும் பலர், ‘இப்படியும் இருக்குமா?’ என்ற தங்கள் ஆச்சரியத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இறுதியாக வந்த தொடரை வாசித்த ஒரு நண்பர், “இது நிறையக் கண் திறப்பைத் தருகிறது” என்றார். அவர் இதை எந்த அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும், ‘கண் திறப்பு’ என்பதற்கும், இன்று நான் எழுதும் தொடரின் இந்தப் பகுதிக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. கடைசித் தொடரில் நான் ‘மாயன்களுக்கும், மேசனிக்ஸுக்கும் ஒரு விதத்தில் சம்பந்தம் வருகிறது என்று சொல்லி முடித்திருந்தேன். அந்தச் சம்பந்தமே ஒரு ‘கண் திறப்பில்தான்’ ஆரம்பமாகிறது என்றால், என் நண்பர் சொன்னது, என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கு மேலும் கண் திறப்பைப் பற்றிச் சொல்லாமல் போனால் சட்டென்று மூடிவிட்டு ஓடிவிடுவீர்கள்.

 எனவே அதைச் சொல்கிறேன். மேசனிக்ஸின் மிக முக்கியமான அடையாளம் (Symbol) என்பது, ஒரு பிரமிட்டின் உச்சியில், விழித்திருக்கும் ஒற்றைக் கண்தான். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதிகமாக வளர்ந்தது இந்த மேசனிக்ஸ் அமைப்பு. ஆனால் இந்த இரண்டு கண்டங்களுக்குமே சம்பந்தம் இல்லாதது பிரமிட். உலகில், பிரமிட் என்பது விசேசமாக உணரப்பட்டது இரண்டே இரண்டு இடங்களில்தான். ஒன்று எகிப்து மற்றது மாயன்களின் பிரதேசம். அதிலும் குறிப்பாக, நான் முன்னர் சொல்லியிருந்த ‘ஷிசேன் இட்ஷா’ (Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டில், 13 என்னும் இலக்கத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்பது அடுக்குகளாகக் கட்டப்பட்டிருக்கும் ஷிசேன் இட்ஷா, பூமியின் ஆரம்ப வரலாற்றை அப்படியே சொல்கிறது என்கிறார்கள். அதற்கமையவே அது கட்டப்பட்டும் இருக்கிறது என்கிறார்கள். அந்தப் பிரமிட்டில் உள்ள ஒன்பது அடுக்குகளையும், தனித் தனியாக 13 பிரிவாகப் பிரித்திருந்தார்கள் மாயன்கள். அவற்றை ஏழு பகல்கள், ஆறு இரவுகள் என மொத்தமாக 13 ஆகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றின் விபரத்தை இப்போது சொல்லப் போனால் நேர விரயம் அதிகமாகும் என்பதால் படம் தருகிறேன், அதன்மூலம் அது புரிகிறதா எனப் பாருங்கள். புரியாவிட்டாலும் ஒன்றும் பரவாயில்லை. எமக்குத் தேவை அந்த 13 ஆகப் பிரிக்கப்பட்டதன் முக்கியத்துவம் மட்டும்தான். 





இந்த 13 இலக்கம் எப்படி மாயன்களுக்கு முக்கியத்துவமாக இருந்ததோ, அது போல அமெரிக்க ஒரு டாலரிலும் (One Dollar) அந்த 13 இலக்கம் முக்கியமானதாக இருந்ததை நாம் கடந்த தொடரில் அவதானித்திருந்தோம். ஆனால் அதில் அமெரிக்கக் கழுகின் உடம்பில் வரையப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளைக் கோடுகளைச் சரியாக நாம் கவனித்திருக்க மாட்டோம். அவையும் 13 கோடுகள் என்று நாம் கவனித்திருந்தாலும், அவை ஏழு வெள்ளைக் கோடுகளும், ஆறு கறுப்புக் கோடுகளுமாக இருக்கின்றன. இது மாயன்களின் பிரமிட்டில் உள்ளது போல, ஏழு பகல்களையும், ஆறு இரவுகளையும் குறிப்பது போல இருக்கின்றன அல்லவா? இது எப்படி சாத்தியமாகியது? அத்துடன் நீங்கள் அந்த டாலரில் இன்னுமொன்றையும் கவனித்து வையுங்கள். அதன் விபரம் கீழே ஆராயப்பட்டாலும் இப்போதே அதைப் பார்த்து வைப்பது நல்லது. படத்தில் மொத்தமாக 13 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அவை எப்படிப்பட்ட உருவத்தினுள் இருக்கிறது? ஆறுகோண வடிவில் அமைந்த ஒரு வடிவத்தின் உள்ளே அல்லவா காணப்படுகிறது. இந்த ஆறுகோண வடிவத்தின் விசேசத்தைப் பின்னர் ஆராயலாம். 



இப்போது கூட, ‘இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்’ என்னும் மிக எளிமையான பழமொழி மூலம், நான் சொல்லும் மாயன் தொடர்பை நீங்கள் மறுக்கலாம். ஆகவே, இப்போ தருவதைப் பாருங்கள். மாயன்களின் பிரதேசமான ‘மெசோ அமெரிக்க’ (Mesoamerica) பிரதேசத்துக்கு சற்றுக் கீழே இருக்கும் நாடுதான் ‘எக்வாடோர்’ (Ecuador). மாயன் இனம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயம் எஞ்சிய மாயன்கள் இந்தப் பிரதேசங்களில்தான், ஓடிச் சென்று வாழ்ந்தார்கள். அந்த எக்வாடோரில் 300 அடி ஆழத்துக்குக் கீழே ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த பிரமிட் போன்ற ஒரு கல், அவர்களைப் பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. அது உங்களையும் ஆச்சரியத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்பதில் எனக்கு ஆச்சரியமே இல்லை.




 ‘அதே கண்கள்’ என்று நாங்களும் அலறலாம் போல இருக்கிறது. ஆம்! அதே பிரமிட். அதன் உச்சியில் அதே கண்கள். அது மட்டுமல்ல, அந்தப் பிரமிட்டின் அடுக்குகளை எண்ணிப் பாருங்கள். அவை மொத்தமாக 13. இந்தப் பிரமிட் வடிவக் கல்லின் பெயர் ‘லா மனே பிரமிட்’ (La Mane Pyramid) என்பதாகும். இதற்கு மேலும், மாயனுக்கும், அமெரிக்க டாலருக்கும், மேசனுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நான் விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் அவநம்பிக்கை என்பது நமது பிறப்பிலேயே அமைந்த ஒரு சுபாவம். யார், எதை, எப்படிச் சொன்னாலும் நம்ப மறுக்கும் சுபாவம் நமக்கு என்றுமே இருந்து வருகிறது. அதில் ஒன்றும் தப்பு கிடையாது. நம்பும் வரை புரிய வைக்க வேண்டியது என் கடமை. மிருகங்கள் போல காட்டுவாசிகளாக வாழ்ந்த மாயன்களை, நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த அமெரிக்க அரசாவது கண்டுகொள்வதாவது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு இன்னும் ஒரு முக்கிய உதாரணத்தைத் தந்துவிட்டு நகர்கிறேன். 

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்த ‘காப்பிடல் பில்டிங்’ (Capitol building in Washington D.C.) என்பது கி.பி. 1793 களில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதைக் கட்டுவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர் வேறு யாருமல்ல, ஒரு டாலரில் அமர்ந்திருக்கும் அதே அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வாசிங்டன்தான். இவர் மேசனிக்ஸ் அமைப்பின் மிகமிக முக்கிய உறுப்பினர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். 



அந்த காப்பிடல் பில்டிங்கின் பிரதான மண்டபத்தில், சுவரில் அமைந்திருக்கும் ஒரு சிலை அமைப்புத்தான் இன்று நம்மை ஆச்சரியப்படுத்தப் போகும் ஒன்று. அதை நான் வார்த்தைகளால் சொன்னால் புரியாது. நீங்களே படத்தில் பாருங்கள். 



படத்தில் உள்ளவர்கள் சுட்டிக் காட்டுவதும், வணங்குவதும் எதைத் தெரியுமா? சரியாகப் பாருங்கள். இன்று உலகம் அழியப் போகின்றது என்று மாயன் சொல்லும் அதே காலண்டர்தான் அதில் இருக்கிறது. மாயன் காலண்டரை இவ்வளவு முக்கியமாக இவர்கள் இங்கு ஏன் அமைக்க வேண்டும்? நன்றாக யோசியுங்கள்? இதை விட வேறு என்ன ஆதாரங்கள் உங்களுக்கு வேண்டும்? அதே கட்டடத்தின் மேலே சுவரின் உச்சியில் வரையப்பட்டிருக்கும் இன்னுமொரு சித்திரத்தையும் பாருங்கள். அதில், ஆறுகோண வடிவில் சுற்றிவரப் படங்களும், நடுவே கண் போன்ற அமைப்பில் ஜோர்ஜ் வாசிங்டன் பெண்களுடன் அமர்ந்திருப்பது போலவும் இருக்கிறது. 



கண் என்கிறோம், ஆறுகோண வடிவம் என்கிறோம் அப்படி என்னதான் இவை இரண்டிலும் முக்கியத்துவம் இருக்கிறது? இவற்றை மேசனிக்ஸ் ஏன் இவ்வளவு முக்கியத்துவப்படுத்துகின்றனர்? இந்தக் கேள்விகள் நம்மையறியாமலே நமக்கு ஏற்படுவதை, நாம் தவிர்க்க முடியாது. அதற்கு இந்த மேசனிக்ஸ் என்பவர்கள் யார், இவர்களின் New World Order என்னும் அமைப்பு என்ன என்பதை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். சொல்வதற்கு முன்னர் இன்னுமொன்றையும் சொல்லி விடுகிறேன். இதில் எந்தக் கருத்தும் என் சொந்தக் கருத்தல்ல. 

இதைச் சொல்வதற்கு நான் பைபிளின் (Bible) பழைய ஏற்பாட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். கடவுள் ஆதாமையும், ஏவாளையும் படைத்துவிட்டு அவர்களை ஏடன் (Eden) தோட்டத்தில் வசிப்பதற்கு விடுகிறார். அப்போது கடவுள் ஒரு குறிப்பிட்ட மரத்தைக் காட்டி, “அந்த மரத்தில் உள்ள கனியை மட்டும் உண்ண வேண்டாம். அதை உண்டால் சாகவே சாவீர்கள்” என்று சொல்லி விட்டுச் செல்கிறார். ஆதாமும், ஏவாளும் கடவுள் சொன்னபடியே வாழ்கிறார்கள். அப்போது அங்கு வந்த ‘சாத்தான் (Satan), “நீங்கள் அந்த மரத்தின் கனிகளைச் சாப்பிடுங்கள். அந்த மரத்தின் கனிதான், அறிவைக் கொடுக்கும் கனி. அதைச் சாப்பிட்டால் நீங்கள் சாகவே மாட்டீர்கள்” என்கிறான். சாத்தானை நம்பிய ஆதாமும், ஏவாளும் அந்த மரத்தின் கனியை உண்கிறார்கள். அதை உண்டதால், அறிவையும் பெறுகிறார்கள். தாங்கள் இருவரும் அதுவரை நிர்வாணமாக இருப்பதைக் கூட, கனியை உண்டதால் பெற்ற அறிவின் மூலம்தான் உணர்கிறார்கள். அப்புறம் சாத்தானின் பேச்சைக் கேட்டு கனியை உண்டதால் ஏடன் தோட்டத்திலிருந்து கடவுளால், அவர்கள் விரட்டப்படுவது தனிக் கதை.



 மேற்படி பைபிள் கதையைப் படிக்கும் கிருஸ்தவர்கள் அந்தக் கதையை எடுக்கும் விதம் வேறு. ஆனால் சிலர் எடுத்த விதமே வேறு. அதாவது ஆதாமும், ஏவாளும் அறிவைப் பெறுவது கடவுளுக்கு ஏனோ பிடிக்காமல் இருந்தது. ஆனால் சாத்தானுக்கு மனிதன் அறிவைப் பெறுவது பிடித்திருந்தது. சாத்தான் மனிதர்களுக்கு உதவி செய்தான். அவன் சொன்னது போல, ஆதாமும், ஏவாளும் அறிவைப் பெற்றார்கள். அத்துடன் அவர்கள் சாகவும் இல்லை. இன்று இந்த அளவுக்கு மனிதன் அறிவியல் வளர்ச்சியடைந்திருக்கிறான் என்றால் அது சாத்தானால்தான். இந்த இடத்தில் கடவுள் மனிதர்களுக்கு எதிராகவும், சாத்தான் ஆதரவாகவும் இருந்திருக்கிறான். அதாவது கடவுள் சாத்தான் போலவும், சாத்தான் கடவுள் போலவும் இருந்திருக்கிறார்கள். அமைதி…. அமைதி… இதை நான் சொல்லவில்லை. சிலர் சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்கள் யாரென்று தெரிய வேண்டுமல்லவா? சொல்கிறேன்!

 சாத்தானை வழிபடுபவர்களை ‘லூசிபேரியன்’ (Luciferien) என்பார்கள். ஏன் தெரியுமா? நாம் சாத்தான் என்று சொல்பவன் உண்மையில் கடவுளுடன் இருந்த ஒரு ஏஞ்சல் (Angel). அவன் பெயர் லூசிபெர் (Lucifer). இவனை வெளிச்சத்தின் கடவுள் என்றும் சொல்வார்கள். அதாவது அவனும் ஒரு கடவுள்தான் என்கிறர்கள். அதனால் இந்த லூசிபெர் என்பவனைக் கடவுளாக வழிபடுகிறார்கள் அந்தச் சிலர். அவர்களைப் பொறுத்தவரை லூசிபெர் நன்மை செய்த ஒருவனே ஒழிய கெட்டவன் கிடையாது. நேர்மாறாக கடவுள்தான், மனிதர்களுக்கு, சாவீர்கள் என்ற பொய்யைச் சொல்லிப் பயமுறுத்தி அறிவு கிடைக்காமல் தீமை செய்தவர். 

இந்த லூசிபெரை வழிபடுபவர்கள்தான் உலகத்திலேயே மிக வலிமையாக இருக்கும் மேசனிக்ஸ். இவர்களின் தொடர்ச்சிதான் நியூ வேர்ல்ட் ஆர்டர் என்னும் அமைப்பு. இதை நம்புவது உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ‘அமெரிக்க ஜனாதிபதிகளும், உலகின் மிகமிகச் சக்தி வாய்ந்தவர்களும் அங்கத்தவர்களாக இருக்கும் மேசனிக்ஸ், நாம் சாத்தான் என்று சொல்பவனையா கடவுளாக வணங்குகிறார்கள்?’ என்னும் கேள்வி உங்களுக்கு எழுவதில் ஆச்சரியமே இல்லை. ஆனால் இதுதான் மிகவும் ஆச்சரியமான உண்மை. இவர்களே ‘புதிய உலகம்’ என்பதினூடாக அனைத்து உலக மக்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறார்கள். மதங்களாலும், மத உணர்வுகளாலும் ஊறிப் போன நமக்கு, இது வெறுப்பையே தரும். ஆனால் அவர்கள் சொல்வதோ வேறு. சரி, நம்ப முடியவில்லையா? இவர்களால் ‘லூசிபெர் ட்ரஸ்ட்’ (Lucifer Trust- Lucis Trust) என்ற ஒரு உதவும் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இந்த அமைப்பு ஐ.நா. சபையினாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வளவு பலம். உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி இருக்கிறது இது. உலகின் முதல் பணக்காரராக இருந்த ரொக்கபெல்லர் (Rockefeller), ஹென்றி கிஸ்ஸிஞ்ஞர் (Henry Kissinger) ஆகியோர் கூட இந்த ‘ட்ரஸ்ட்டில்’ இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

சனிக்கிரகத்தை (Saturn) லூசிபெரின் இடமாகக் கருதுகிறார்கள் இவர்கள். Satan-Saturn என்னும் பெயர் ஒற்றுமையையும் இங்கு நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். உலகத்தில் எந்த மதமும், சனியை தீமைக்கான கிரகமாக எடுப்பது இதனால்தான். இந்தச் சனிக்கிரகத்தை ஆறுகோண நட்சத்திரத்தாலும், கண் ஒன்றின் வடிவத்தாலும் ஆதிகால மக்கள் குறித்து வந்திருக்கிறார்கள். அப்படி ஏன் குறித்து வந்தார்கள் என்பதற்கான காரணம் சரியாகப் புரியாவிட்டாலும், சனிக்கிரகம் அதனைச் சுற்றியிருக்கும் வளையத்தினால் கண் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம் என நம்பப்பட்டது. 



சனிக்கிரகத்தின் அடையாளமாக இந்த ஆறுகோண நட்சத்திர அமைப்பையும், கண்ணையும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுமேரியர்களே அவதானித்துச் சொல்லியிருக்கிறார்கள். எப்படி இவர்கள் வெறும் கண்ணால் இதை அவதானித்தார்கள் என்ற ஆச்சரியம் எப்போதும் இருந்தது. ஆனால் இதற்கு மிகச் சமீபத்தில் விடை கிடைத்தது. நாஸாவினால் சனிக்கிரகத்தை ஆராய என அனுப்பப்பட்ட ‘காஸ்ஸினி’ (Cassini) என்னும் விண்கலம், சனிக்கிரகத்தைப் பலவிதங்களில், பல கோணங்களில் படங்களாக எடுத்து அனுப்பியது. அப்படி அது அனுப்பிய படங்களில், குறிப்பிட்ட இரண்டு படங்களைப் பார்த்து உலகமே பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்தது. “ஐயோ! இப்படியும் இருக்குமா? இதை எப்படி எமது மூதாதையர்கள் அறிந்திருந்தார்கள்? ” என்ற ஆச்சரியமும் வந்தது. நமது மூதாதையர்களின் அறிவைப் பற்றிய சந்தேகம் மேலும் அதனால் அதிகரிக்கவும் தொடங்கியது. சனிக்கிரகத்தின் வட துருவத்தையும், தென் துருவத்தையும் காஸ்ஸினி எடுத்த படங்களை நீங்களே பாருங்கள். 




கேத்திர கணிதத்தின் மூலம் மிகச் சரியாகக் கோடு போட்டு வரைந்தது போல, ஒரு ஆறுகோண வடிவம் சனிக்கிரகத்தின் வட துருவத்தில் காணப்பட்டது. நான்கு பூமிகளைத் தன்னுள் அடக்கும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக இருக்கும் அந்த ஆறுகோண வடிவம், எல்லாப் பக்கங்களும் ஒரே அளவானதாக இருப்பது போல அமைந்திருக்கிறது. அதைவிட ஆச்சரியம், தென் துருவத்தில் கண் போன்ற வடிவமும் காணப்படுவதுதான். இது எந்த வகையான மர்மம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சனிக்கிரகத்தின் வட துருவமும், தென் துருவமும் இந்த அமைப்புகளில் இருக்கின்றன என்று எப்படி ஆதிகால மனிதர்கள் கண்டுகொண்டார்கள்? யார் இவர்களுக்கு இதைச் சொன்னார்கள்? நிச்சயமாக வெறும் கண்களால் இதைப் பார்க்கவே முடியாது. அதிகம் ஏன்? தற்போது உள்ள நவீன தொலைநோக்குக் கருவிகளால் கூட அதை அவதானிக்க முடியாது. காரணம், இவை இரண்டும் அமைந்திருப்பது, நமது காட்சிகளிலிருந்து விலகிய துருவப் பகுதிகளில். 

சனிக்கிரகத்தில் மட்டுமல்ல, மேசனிக்ஸ் என்னும் ஆதிக்க சக்தியினால் இந்தக் கண்ணும், ஆறு கோணமும், பிரமிட்டும் அடையாளங்களாகவும், சின்னங்களாகவும் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அவை எங்கே யார் யாரால் சின்னங்களாக பாவிக்கப்படுகின்றன என்பதை இங்கு நான் சொல்வது நன்றாக இருக்காது என்பதால், அவற்றை இணையம் மூலம் பார்க்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கே அளிக்கிறேன். அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் பிரபல கம்பெனிகளில் பல இவற்றை அடையாளங்களாக வைத்திருக்கின்றன.

 மாயன்களின் பிரமிட்டை அடையாளமாக வைத்து மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்த ஐரோப்பியர்கள், மாயன்களின் அறிவின் அடையாளங்கள் அழியவும் காரணமாக இருந்தார்கள் என்பதுதான் கசப்பான வரலாறு. மாயன்களின் அறிவுசார் சாட்சியங்கள் அனைத்துமே ஐரோப்பியர்களால் அழிக்கப்பட்டன. அப்படி அழிந்தவற்றில் எஞ்சியவை மிக மிகச் சொற்பமே! அந்தச் சொற்பத்திலேயே இவ்வளவு ஆச்சரியங்கள் மாயன்கள் மூலம் எமக்குக் கிடைத்திருக்கின்றன என்றால், அவை அழிக்கப்படாமல் முழுவதும் கிடைத்திருந்தால், என்ன என்ன அதிசயங்கள் எல்லாம் எமக்குக் கிடைத்திருக்குமோ….? 

மாயன்களின் அறிவின் அடையாளமாக என்னதான் அழிந்தது? அவற்றை யார் அழித்தார்கள்? எஞ்சியவை என்ன? இந்தக் கேள்விகளின் விடைகளுடன் சந்திக்கும் வரை, மேசனிக்ஸின், ‘பிரமிட் கண்கள்’ உலகெங்கும் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களில் ஊடுருவியிருப்பதைப் படங்கள் மூலமாகப் பாருங்கள். 






சிலவற்றை மட்டும் தருகிறேன் Cao Dai Tempel- வியட்நாம் Kington Parish Church- Jamica   மாயாவின் அழிவுக்குக் காரணமாக யார் இருந்தார்கள் என்ற கடந்த பகுதியின் கேள்வியுடன், மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் மாயா! மாயா இனத்தவர் சொன்ன உலக அழிவைப் பற்றிப் பேசும் நாம், மாயாக்கள் பற்றிய சரித்திரத்தை சிறிதளவேனும் அறிந்திருக்க வேண்டும் அல்லவா. அறிவியல், கணிதம், கட்டடக் கலை, வானியல், விவசாயம், சித்திரம், சிற்பம் என்னும் பன்முகத் திறமை பெற்றிருந்த மாயன் இனத்தவருக்கு, இன்னுமொரு ஆச்சரியமான ஒரு முகமும் இருந்திருக்கிறது. அது யாருமே ரசிக்க முடியாத, சகிக்க முடியாத ஒரு முகமாகவும் இருந்திருக்கிறது. மாயன்களிடம் இதுவரை நாம் பார்த்த முகங்கள் எல்லாமே நல்ல முகங்கள். ஆனால் அந்த மற்ற முகமோ மிகக் கொடுமையானது, கொடூரமானது. 



மாயன் இனத்தவர்கள் கடவுள் பக்தி மிகவும் அதிகம் உள்ளவர்கள். அவர்களின் அதிகப்படியான கடவுள் பக்தியே, அவர்களைக் காட்டுமிராண்டிகள் எனப் பார்க்கும்படி வைத்தது. உலகில் இருக்கும் அனைத்து மதங்களிலும் காணிக்கை செலுத்தும் பழக்கம் இருந்து வந்தது, இன்றும் இருந்து வருகிறது. ஆனால், மாயன்கள் கடவுளுக்குச் செலுத்திய காணிக்கை கொஞ்சம் வித்தியாசமானவை. அது என்ன தெரியுமா…? மனிதர்களின் தலைகளும், இருதயங்களும்தான். 

உயிருடன் இருக்கும் ஒரு மனிதனை, ஒரு பீடத்தில் படுக்க வைத்து, அவன் இருதயத்தை நோக்கிக் கத்தியைச் செலுத்தி, இருதயத்தை வெளியே எடுத்துக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதும், ஒரே வெட்டாகத் தலையைத் துண்டிப்பதும் மாயன்களின் வெகு சாதாரணமான ஒரு வழிபாட்டுமுறை. மாயன்கள், இந்து மதத்தைப் போலவே, பல கடவுள்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்கள். சிலை வணக்கமும் அவர்களிடம் இருந்தது. அவர்கள் வணங்கும் கடவுள்களில், முக்கியமான கடவுள்களுக்காகப் பல பிரமிடுகளையும் கட்டியிருந்தார்கள். அப்படிக் கட்டப்பட்ட பிரமிடுகளின் உச்சிகளில்தான் கடவுள் தொழுகை நடக்கும். அங்குதான் பலிகொடுக்கும் மனிதர்களைக் கொண்டு சென்று, அவர்களை உச்சியில் உள்ள பீடத்தில் படுக்க வைத்து……… கூரிய வாளால் கழுத்தில் ஒரே போடு………..! வெட்டப்பட்ட தலை பிரமிடின் உச்சியிலிருந்து படிகள் வழியே உருண்டபடி கீழே விழும்.



 “இவ்வளவு நாளும் மிக நாகரீகம் உள்ளவர்களாக, அறிவாளிகள் போலப் பார்க்கப்பட்ட மாயாக்கள் இப்படி ஒரு காட்டுமிராண்டிகளா?” என நீங்கள் இப்போது முகம் சுழிப்பீர்கள். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நாகரீகத்தில் வளர்ந்த நாம் அதைக் கற்பனைகூடப் பண்ண முடியாது என்பதால் முகஞ்சுழிக்கிறோம். ஆனால் இந்த நரபலி முறை அந்தக் காலத்தில் எல்லா மதங்களிலும் இருந்திருக்கிறது. எங்கள் இந்து மதத்திலும் இருந்திருக்கிறது. போருக்குச் செல்லும்போது ஒவ்வொரு அரசனும், தன் போர் வீரன் ஒருவனை நரபலியாக கொடுத்துவிட்டே சென்றிருக்கிறான் என்பது வரலாறு. சாக்தம், பைரவம் என்னும் இந்து மதப் பிரிவு மதங்களில், இந்த நரபலி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ‘கால பைரவன்’ என்பவரே நரபலி கேட்பவர்தான். அதிகம் ஏன், இன்றும் கூட காசியில், கங்கை ஆற்றங்கரைக்கு அருகில் தவம் செய்யும் ‘அகோரிகள்’, எரியும் பிணத்தை உண்ணுவது உண்டு. சமீபத்தில் ‘நான் கடவுள்’ என்னும் படத்தில், நடிகர் ஆர்யா கூட ஒரு அகோரியாகத்தான் வருகிறார். இதைச் சொல்வதால் நரபலியை நான் நியாயப்படுத்துவதாக அர்த்தம் கிடையாது. ஆதிகாலத்தில் இது தப்பான ஒரு விசயமாக கருதப்படவில்லை என்பதையும், தெய்வீகமான ஒன்றாகத்தான் பார்க்கப்படது என்பதையுமே சொல்ல வருகிறேன். இதில் மாயன்களும் விதிவிலக்காக இருக்கவில்லை. 




“அட..! அப்படியென்றால் இந்து மதமும், மாயாக்களும் மட்டுமே நரபலியைக் கொடுப்பவர்களா?” என்று நீங்கள் கேட்டால், “அப்படி இல்லை. இது அனைத்து மதங்களிலும் இருந்திருக்கிறது” என்றே பதில் சொல்ல வேண்டும். கிருஸ்தவ, முஸ்லிம், யூத மதங்களுக்குச் சொந்தமான வேதங்களிலும் இந்த நரபலி இருந்திருக்கிறது. தீர்க்கதரிசியான ஆபிரகாம், அவரது மகனான ஈசாக்கை கடவுளுக்குப் பலி கொடுக்க மலையுச்சிக்கு அழைத்துப் போனதும், பலி கொடுக்கப் போகும் கடைசிக் கணத்தில் கடவுள் அதைத் தடுத்ததும் வேதத்தில் இருக்கிறது. யூத, கிருஸ்தவ, இஸ்லாம் மதங்களின் வரலாறுகளிலும் நரபலியின் அடையாளங்கள் இருந்திருக்கின்றன. 



ஆனாலும் மத ரீதியாக எங்கள் மூதாதையர்கள் நரபலி கொடுத்த போது, தெய்வீகமாகப் பார்க்கப்பட்டு அலட்சியம் செய்யப்பட்டது, மாயன்கள் செய்த போது கொடுமையாகப் பார்க்கப்பட்டது. அதுவே அவர்களின் வரலாறு அழிவதற்கும் காரணமாகியது. இந்தக் காரணம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. மாயனை, மாயன் கலாச்சாரத்தை, மாயன் மதங்களை என அனைத்தையும் அழிக்க, மேற்படி ஒரு மனநிலை திட்டமிட்டே விதைக்கப்பட்டது. மாயன் என்றாலே மிகவும் கொடூரமானவர்கள் என்னும் அபிப்பிராயம் ஆதிகாலத்தில் இருந்தே புகுத்தப்பட்டது. இப்படி ஏன் புகுத்த வேண்டும் என்று ஆராய்வதற்கு முன்னர், நாம் ஒரு ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படம் பற்றிப் பார்க்க வேண்டும். 

2006ம் ஆண்டு ‘மெல் கிப்சன்’ (Mel Gibson) என்பவரால் ‘அபோகலிப்டோ’ (Apocalypto) என்னும் ஹாலிவுட் திரைப்படம் வெளியிடப்பட்டது. மிகவும் பரபரப்பாகவும், வெற்றிகரமாகவும் ஒடிய அந்தப் படம், மாயன் என்னும் இனத்தவர்கள் உலக மகாக் கொடியவர்கள் எனச் சொல்லியது. அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எவரும் மாயன் இனத்தவர் மேல், அவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்திருந்தாலும், மதிப்புக் கொள்ள மாட்டார்கள். மாயன் இனம் அழிக்கப்பட வேண்டிய இனம்தான் என நினைப்பார்கள். அவ்வளவு மோசமாக ‘அபோகலிப்டோ’ படத்தில் மாயன்கள் சித்தரிக்கப்பட்டார்கள். அதாவது, மாயன்களின் கலாச்சார அழிவுக்கு யார் காரணமாக இருந்திருந்தாலும், அவர்கள் மேல் எமக்குச் சிறிதேனும் கோபம் வராது. இதுவே மெல் கிப்சனின் உள்மன நோக்கமாகவும் இருந்தது. “மெல் கிப்சன் அந்தப் படத்தில் அப்படி எதுவுமே செய்யவில்லையே? அவர் வெளியிட்டது ஒரு மிக நல்லதொரு படமாச்சே!” என நீங்கள் நினைக்கலாம் 




உண்மைதான்! ‘அபோகலிப்டோ’ என்னும் படம், சாதாரணமாகப் பார்க்கும் போது மிக நல்லதொரு படம்தான். ஆனால், அதில் உள்ள நுண்ணரசியலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி மேலும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், மெல் கிப்சன், 2004ம் ஆண்டில் வெளியிட்ட இன்னுமொரு படமான ‘த பாசன் ஆஃப் த கிரைஸ்ட்’ (The Passion of the Christ) படத்தையும் பார்த்திருக்க வேண்டும். ‘த பாசன் ஆஃப் த கிறைஸ்ட்’ படம் ஏன் மெல் கிப்சனால் எடுக்கப்பட்டது என்பதையும் நீங்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். 



யேசுநாதரின் சரித்திரத்தைச் சொல்கிறேன் பேர்வழி என்றே இந்தப் படத்தை எடுத்திருந்தார் மெல் கிப்சன். ஆனால் யூதர்கள், யேசுநாதரை எப்படி, எப்படி எல்லாம் சித்திரவதை செய்து கொன்றார்கள் என்பதே இப்படத்தில் மிக முக்கிய பகுதியாக அமைக்கப்பட்டது. படத்தின் காட்சி வடிவங்களை மிகவும் அதிர்ச்சிகரமாக உருவாக்கியிருந்தார். படத்தைப் பார்த்த அனைவரின் அடிவயிறே கலங்கும் வண்ணமாக காட்சிகள் அமைந்திருந்தன. இதனால், பலதரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது அந்தப் படம். 




முடிந்தால் ‘த பாசன் ஆஃப் த கிரைஸ்ட்’ படத்தைப் பாருங்கள். உங்களால் பல காட்சிகளைக் காண முடியாத அளவிற்கு கொடூரமாகக் காட்சிகள் இருக்கும். யேசுவின் சரித்திரம் இதுவரை இப்படிச் சொல்லப்பட்டதே இல்லை. படத்தைப் பார்க்கும் உங்களுக்கு, யேசுநாதரைச் சித்திரவதை செய்தவர்கள் மேல் இனந் தெரியாத வெறுப்பும், கோபமும் உருவாகும். மெல் கிப்சனுக்கு வேண்டியதும் அதுதானோ என்ற சந்தேம் பலருக்கு எழுந்தது. தனது படங்களின் மூலம், பார்ப்பவர்கள் ஒரு இனத்தில் மொத்தமாக வெறுப்படைய வேண்டும், கோபப்பட வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கமோ, என விமர்சகர்களை நினைக்க வைத்தது. அதில் உண்மையும் கூட இருக்கலாம். 

மெல் கிப்சன் அடிப்படையில், மிகத் தீவிரமான பழமைவாத கிருஸ்தவ மதவாதி. பழமைவாத கிருஸ்தவ மதத்தை நிலைநிறுத்த, எந்த விதமான படங்களை எடுக்கலாம் என்பதில் அவர் ஒரு ‘டாக்டர்’ பட்டமே பெற்றவர் போல சிந்திப்பார் என்கிறார்கள். இந்த மெல் கிப்சன் என்பவர் ஒரு ஹாலிவுட் நடிகர். ஆனால் அவர் வெளியிட்ட மேற்படி இரண்டு படங்களையும் தானே தயாரித்தும், இயக்கியும் வெளியிட்டிருந்தார். ஆனால் நடிக்கவில்லை. 



தயவுசெய்து இனி நான் சொல்லும், சொல்லப் போகும் கருத்துகளை மதம், நம்பிக்கை என்னும் இடங்களிலிருந்து பார்க்காமல், எட்ட இருந்து பாருங்கள். அப்படிப் பார்த்தால், பல உண்மைகளைத் தொலைத்துவிடுவீர்கள். யேசுநாதரின் வரலாற்றைப் படமாக எடுத்த மெல் கிப்சன், ஏன் மாயனின் வரலாற்றை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும்? ‘அபோகலிப்டோ’ என்னும் படத்தின் மூலம், மெல் கிப்சன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறார்? மாயன் இனத்திற்கும், மெல் கிப்சனுக்கும், கிருஸ்தவ மதத்துக்கும் என்ன சம்பந்தம்? இங்கு ஏன் தேவையில்லாமல் கிருஸ்தவ மதத்தை நான் இழுக்க வேண்டும்?’ என்ற கேள்விகளுக்குப் பதில்களை மாயன் கலாச்சாரம் அழிக்கப்பட்ட சரித்திரத்துடன் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். 

எல்லாவறையும் விளக்கமாகச் சொல்கிறேன்…….! 


மாயன் இனத்தின் வளர்ச்சிகள் ஆரம்பித்தது கி.மு.10000 ஆண்டு அளவுகளில்தான். படிப்படியாக வளர்ந்த மாயன் நாகரீகம், கி.மு. 3000 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டது. பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை அதி உச்சத்தைத் தொட்டது. ஒரு இனத்தின் நாகரீகம் என்பது கலை, கலாச்சாரம், மதம் ஆகிய அடையாளங்களுடன் சேர்ந்தே பயணம் செய்வது அல்லவா. மாயன்களின் நாகரீக வளர்ச்சியிலும் அவர்கள் மதம் பாரிய பங்கெடுத்தது. சூரியன், மழை, காற்று, மரணம், மருத்துவம், சந்திரன் என பல கடவுள்கள் அவர்களுக்கு இருந்திருக்கிறது. அதிகம் ஏன், அவர்கள் விவசாயத்தில் வல்லவர்களாக அந்தக் காலத்திலேயே இருந்த காரணத்தால், சோளத்துக்கே (Maize-Corn) கடவுள் ஒன்றை வைத்திருந்தனர். அதுமட்டுமல்ல, பெண் கடவுள்களும் மாயன்களிடம் உண்டு. 

மாயன்களின் கடவுள்களில் இருக்கும் இன்னும் ஒரு கடவுள் யாரென்று கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். “அடப் பாவிகளா!” என்று கூடச் சொல்லத் தோன்றும். ஆம்…! மாயன்கள் தற்கொலைக்கு என, ‘இக்ஸ்டாப்’ (Ixtab) என்னும் பெயருடைய ஒரு கடவுளையும் வைத்திருந்தனர். “என்ன..? தற்கொலைக்குக் கடவுளா….?” என்றுதானே கேட்கிறீர்கள். உண்மைதான் மாயன்களிடம் தற்கொலைக்குக் கூட கடவுள் உண்டு. தற்கொலை தப்பானதாகவே மாயன்களால் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தற்கொலை செய்பவர்கள் சொர்க்கத்தில் கடவுளின் அருகே இருப்பார்கள் என்பது மாயனின் நம்பிக்கை. மாயனின் அரசன் அமர்ந்திருக்கும் அரியணைக்கு கீழே, மாயனில் யாராவது ஒருவர், தானே கழுத்தில் கயிறு சுற்றி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது வெகு சாதாரணம் அவர்களுக்கு. அப்படித் தற்கொலை செய்பவர்கள் சொர்க்கத்தில் உள்ள செடியில் பூவாக இருப்பர் என்பது அவர்கள் நம்பிக்கை. ஏனோ தற்கொலைக் கடவுள் பெண் கடவுளாக இருக்கிறார். 



தாங்கள் வணங்கிய கடவுள்களுக்காக, கோவில்களையும், பிரமிட்களையும் மாயன்கள் மிகப் பிரமாண்டமாகக் கட்டினார்கள். அதுவே அவர்கள் இன்றளவும் பேசப்படும் ஒரு இனமாக இருப்பதற்குக் காரணமாயும் அமைந்தது. ஆனால், அதுவே அவர்கள் அழிவுக்கும் காரணமாகவும் அமைந்தது. மாயன்கள் எப்போதும் ஒரு பேரரசுக்கு கீழே வாழ்ந்து வரவில்லை. பல அரசுகளை மாயன் இனத்தவர் தமக்காக ஏற்படுத்தி வாழ்ந்து வந்தனர். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி பல போர்கள் நடந்து வந்தன. கி.பி.900 ஆண்டுகளில் இருந்து கி.பி.1100 ஆண்டளவுகளில் மாயன்களில் பலர் திடீரெனக் கூண்டோடு மாயமாய் மறைந்ததும் நடந்தது. இது பற்றித்தான் நான் ஆரம்பத்தில் எழுதியிருந்தேன். இவர்கள் எப்படி மறைந்தார்கள் என்னும் மர்மம் பற்றி இன்றுவரை சரியான விளக்கம் கிடைக்காவிட்டாலும், அவர்களுக்கிடையே நடந்த போர்களினால்தான் அழிந்தார்கள் என்று கருதுபவர்களும் உண்டு. அப்படி மறைந்தவர்கள் போக, மாயன்களில் பல இலட்சக்கணக்கானவர்கள் எஞ்சியும் இருந்தார்கள். அப்படி எஞ்சிய மாயன்கள், ‘ஆட்ஸ்டெக்’ (Aztek), ‘இன்கா’ (Inka) என இரண்டு பெரிய அரசுகளாகப் பிரிந்து, வடக்கிலும், தெற்கிலும் வாழ்ந்து வந்தனர். இவை தவிர்த்த மற்றவர்கள் சிதறிய நிலையில் ஆங்காங்கே பரந்து வாழ்ந்தும் வந்தனர். 



இந்தக் காலகட்டத்தில்தான் மாயன்களை நோக்கி அவர்களே எதிர்பார்த்திராத ஆபத்து, கழுகுகள் போல வந்தன. பறந்து அல்ல மிதந்து வந்தன. ஆம்….! விரிந்து, பரந்து இருந்தது அமெரிக்கப் பெருங்கண்டம். வடக்கு, மத்தி, தெற்கு எனப் பிரியாமல், ஒன்றாக இணைந்த பெருங் கண்டமாக இருந்தது அமெரிக்கா என்னும் நிலப்பரப்பு. பெரும் வளங்களையும், பூர்வீக மக்களையும் தன்னுள் அடக்கி அமைதியுடன் இருந்தது அது. அந்த அமைதியைக் குலைக்க மிதந்து வந்தன கழுகுகள்………! 

பெரிய வளங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அதைத் தன் மூக்கினால் முகர்ந்து கொள்ளும் ஆற்றலுடன், வெறி பிடித்து இருந்தன ஐரோப்பிய நாடுகள். தான் முகர்ந்து கொண்டதை, தன் வசமாக்கும் குள்ள நரித்தனம் இரத்தத்தில் ஊறிய நோய் போல அவர்களுக்கு அப்போது ஊறி இருந்தது. பெரும் நிலப்பரப்பாய் விரிந்திருந்த அமெரிக்காவை, ‘அப்பத்தைத் துண்டு போடும் பூனைகள் போல’ ஐரோப்பாவின் பல நாடுகள் துண்டுகளாக்கி தம் வசமாக்கின. அதில் மாயன் பிரதேசங்கள் பக்கம் தன் கழுகுக் கண்ணைத் திருப்பியது ஸ்பெயின் நாடு. 




அப்புறம் என்ன……..! கொலையும், கொள்ளையும், அபகரிப்பும்தான் அமோகமாக அரங்கேறியது. பீரங்கிகளையே பார்த்து அறியாத மாயன்களின் ‘யுகடான்” (Yucatan) மாநிலம் ஸ்பானியர்கள் வசம் வீழ்ந்தது. நிலத்தைக் கைப்பற்றிய ஸ்பானியர்கள், கொள்ளையடிப்பதை மிக நேர்த்தியாகச் செய்தார்கள். ஆனால் அவர்கள் அத்துடன் நிறுத்தி விடவில்லை……..! எந்த நாட்டைக் கைப்பற்றச் சென்றாலும் ஒரு கையில் பீரங்கியும், மறு கையில் பைபிளுமாக செல்வதே அவர்கள் வழக்கமாயிற்றே! இங்கும் அவர்கள் அதைக் கைவிடவில்லை. கத்தோலிக்க மதத்தில் தீவிரமாக இருக்கும் ஸ்பானியர்கள், அடுத்தவர் மதத்தை மதிக்கும் வழக்கமே இல்லாதவர்கள். தங்கள் மதத்தைப் பரப்புவதிலேயே குறிக்கோளுள்ளவர்கள். இதனால், மாயன்களின் பல கடவுள்கள் வழிபாட்டையும், வழிபாட்டு முறைகளையும் ஸ்பானியர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மாயன்கள் தங்கள் மதங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, கிருஸ்தவ மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்றால் ஆயுதத்தால் மட்டும் முடியாது என்பதை உணர்ந்தார்கள். இதற்காகவே, ஸ்பெயினிலிருந்து வந்திறங்கினார் ஒருவர். அவர் பெயர் ‘டியாகோ டி லாண்டா’ (Diego de Landa). இவர் ஒரு கிருஸ்தவ மதகுருவாவார். 



கி.பி.1549ம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காக, மாயனின் பெரு மாநிலமான யுகாடானுக்கு வந்து சேர்ந்தார் லாண்டா. ஆரம்பத்தில் மாயா மக்களுடன் நல்லவர் போல உரையாடி, உறவாடி அவர்களுடன் சேர்ந்தே இருந்தார் லாண்டா. மாயாவுடன் கூட இருந்து, அவர்களை முழுவதுமாக அறிந்து கொண்ட லாண்டா, இறுதியில் செய்த ஒரு விசயம்தான், இப்போதும் அறிஞர்களால் மிகவும் கண்டிக்கப்படுகிறது. அதுவே மாயன்களை முழுமையாக நாம் அறியாமல் செய்த கொடுமையாகவும் அமைந்தது. அப்போதே, “லாண்டா செய்தது சரியானதுதான்” என்று கிருஸ்தவ ஆதரவாளர்கள் சிலர் அவரை ஆதரிக்க, “அட..! இப்படிச் செய்து விட்டாரே!” என அதே கிருஸ்தவர்களில் பலர் கோபத்துடன் கொதித்தார்கள். அப்படி லாண்டா என்னதான் செய்தார்? 

இராணுவ அடக்கு முறையுடன் மாயனை நசுக்கிய ஸ்பானியர்களின் மத்தியில், சாந்தமான முகத்துடன் அன்பைப் பொழியும் அகிம்சை வடிவமான ‘லாண்டா’ வித்தியாசமானவராக மாயன்களுக்குத் தெரிந்தார். “அட! இப்படியும் ஒரு நல்ல ஸ்பானியரா?” என்று அவருடன் உறவாட ஆரம்பித்தனர். மாயா மக்களுடன், மக்களாகச் சேர்ந்து வாழ்ந்தார் லாண்டா. அவர் புத்திசாலித்தனமாக, முதலில் மாயா மக்களின் மொழியைக் கற்றுக் கொண்டார். அப்படிக் கற்றுக் கொண்டவர் ஒரு நல்ல விசயத்தையும் அப்போது செய்தார். அதாவது மாயன்களின் எழுத்து முறையை அவர்களிடமே கேட்டு தனக்கென பதிவு செய்தும் வைத்திருந்தார். 

மாயன்களுடன் பழகிய லாண்டா, படிப்படியாகத் தனது மத போதனையை ஆரம்பிக்கத் தொடங்கினார். கிருஸ்தவ மத போதனைகளை ஆரம்பித்தவர், மாயாக்களின் கடவுள் வழிபாட்டை விட்டு விடும்படி அவர்களை வற்புறுத்த ஆரம்பித்தார். ஸ்பானியர்களிடம் இருந்த பயத்தில் இவரது மதத்தை ஆதரிப்பது போல இருந்த மாயாக்கள், தங்கள் தெய்வங்களை இரகசியமாக வணங்கி வரத் தொடங்கினர். இரவுகளில் சில மணி நேரங்கள் காணாமல் போனார்கள் மாயாக்கள். ‘இவர்கள் இரவில் எங்கே போகின்றார்கள்?’ என்று ஒளிந்திருந்து பார்த்த போதுதான் லாண்டாவுக்கு அந்த உண்மை தெரிய ஆரம்பித்தது.



 ஆம்..! மாயாக்கள் லாண்டாவுக்குத் தெரியாமல் இரவில் தங்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோவிலுக்குச் சென்று, தங்கள் கடவுள்களை வழிபட்டு வந்தனர். மாயன்களே அறியாமல் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அந்தக் கோவிலைக் கண்ட லாண்டா மிருகம் போல ஆனார். அப்படி மிருகமான லாண்டா, செய்த மிருகத்தனமான செயலைத்தான் இப்போது உலகமே கண்டிக்கிறது. வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். அவர்கள் எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா.


 ‘ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்’ என்பார்கள். அது போல, ‘ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்’. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதை மாயாக்களுக்கு உதவி செய்யும் இரட்சகர் போல வந்து சேர்ந்த லாண்டாவும் செய்தார். 

இந்தச் செயலை உலகில் உள்ள எவருமே ஆதரிக்கவில்லை. அனைவருமே கடுமையாகக் கண்டித்தார்கள். இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், பொன் போலக் கிடைக்கவே முடியாத பொக்கிசங்கள். அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் இப்போதுள்ள பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் வெகு சுலபமாக விடை கிடைத்திருக்கும். அதிகம் ஏன், ’2012ம் ஆண்டு உலகம் அழியுமா? இல்லையா?’ என்பதை நாம் இந்த அளவுக்கு ஆராயத் தேவையே இல்லாமல் விடை சுலபமாகக் கிடைத்திருக்கும். 



லாண்டாவினால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்களில், அவர் கண்ணில் படாமல் தப்பியது நான்கே நான்கு நூல்கள் மட்டும்தான். The Madrid Codex, The Dresden Codex, The Paris Codex, Grolier Codex என்பவையே எஞ்சிய நான்கு புத்தகங்களுமாகும். அவையும் பின்னாட்களில் ஐரோப்பியத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்பெயினில் ஒன்றும், ஜெர்மனியில் ஒன்றும், பிரான்ஸில் ஒன்றும், மெக்சிககோவில் ஒன்றுமாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. மான் தோலைப் பாடமாக்கி, விசிறி போன்று மடிக்கப்பட்டு புத்தகங்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றன அவை. 


ஆயிரக்கணக்கான புத்தகங்களை எரித்த இந்தக் கொடுமையை மாயன் மக்களுக்குச் செய்வதாக நினைத்து, ஒட்டு மொத்த உலகிற்கே செய்தார் லாண்டா. அவர் நினைத்தது என்னவோ, ‘ஒரு காட்டுமிராண்டிகளின் கலாச்சாரத்தையும், மத நம்பிக்கையையும் நான் அழிக்கிறேன். உண்மையான மதம் என்பது எனது மதம் மட்டும்தான்’ என்பதே! ஆனால் அவர் அறியாமல் போனது ‘இவர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல, பிற்காலத்தில் உலகமே வியக்கப் போகும் அறிவாளிகள்’ என்பதை. ஆனால், உண்மை அவ்வளவு சுலபமாக அழிந்து விடுவது இல்லை அல்லவா…….? லாண்டா அறியாத ஒன்றும் அப்போது நடந்தது. ‘நான் எல்லா நூல்களையும் அழித்து விட்டேன்’ என்ற மமதையுடன் திரும்பிய லாண்டா, எப்படி அதைத் தவற விட்டார் என்பதுதான் இன்றும் உலகம் வியக்கும் ஒன்று. ஆம்…….! தங்கள் நூல்களில் உள்ள அனைத்து விசயங்களையும் முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு பகுதிகளையாவது தாங்கள் வாழ்ந்த அனைத்து இடங்களிலும், கட்டடங்களிலும், கோவில்களிலும், நிலங்களிலும், ‘ஹைரோ கிளிஃப்ஸ்’ (Hieroglyphs) என்று சொல்லப்படும் சித்திர எழுத்துகளில் வடித்து வைத்திருந்தார்கள் மாயன்கள். கொஞ்சம் யோசித்தால் , இப்படி எல்லாம் நடக்குமோ என்று மாயன்களுக்கு முன்னரே தெரிந்திருக்குமோ என்ற ஆச்சரியமே எமக்கு மிஞ்சுகிறது. மாயன்கள் எழுதி வைத்த சித்திர எழுத்துகளைப் பார்த்தால் அசந்தே போய்விடுவீர்கள். அவ்வளவு அதிக எண்ணிக்கையான சித்திர எழுத்துக்கள். இலட்சக்கணகான எழுத்துக்களை எல்லாச் சுவர்களிலும் தீட்டி வைத்திருந்தார்கள். புத்தகங்கள் போல இல்லாவிட்டாலும், இதுவாவது கிடைத்ததே என்னும் மன நிம்மதியைத் தரும் அளவிற்கு இருந்தன அவை


லாண்டா என்னும் கிருஸ்தவப் பாதிரியார் ஒருவர் இப்படிச் செய்தது அக்காலங்களிலேயே கிருஸ்தவர்கள் பலராலேயே கண்டிக்கப்படத் தொடங்கிவிட்டது. படிப்படியாக இந்தக் கண்டனம் அதிகரித்து, இது ஒரு கிருஸ்தவ சர்வாதிகாரத்தனம் என்னும் ஒரு எண்ணமும் தோன்றியது. அதனால், லாண்டா செய்தது சரிதான் என்று உலகத்தை நம்ப வைக்க வேண்டிய கட்டாயம் சிலருக்கு உருவாகியது. எதைச் சொன்னால் லாண்டா செய்தது நியாயமாகும் என யோசித்தார்கள்? அதற்கு அவர்கள் ஒரு ‘துருப்புச் சீட்டைக்’ கையில் எடுத்தார்கள். அந்த துருப்புச் சீட்டுத்தான், ‘மாயன்கள் நரபலி கொடுக்கும் மிருகங்களுக்கு ஒப்பானவர்கள். இவர்கள் மனிதர்களே இல்லை. மிகவும் கொடூரமான பயங்கரவாதிகள்’ என்னும் சிந்தனையை விதைப்பது. கொடூரமான மிருகங்களின் நூல்களும் கொடூரமானதாகத்தானே இருக்கும். அதை அழித்தால் தவறில்லை அல்லவா? இந்த நினைப்பை உலகிற்கு நிலை நாட்டத் திட்டமிட்டார்கள். இதன் இன்றைய ஒரு வடிவம்தான் ‘மெல் கிப்சன்’ எடுத்து வெளியிட்ட ‘அபோகலிப்டோ’ என்னும் மாயன்கள் பற்றிய கொடூரமான சித்தரிப்புப் படம் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். 

மாயன்களின் மதங்களையும், அவர்களின் நிலைப்பாடுகளையும் சில கோணங்களில் அவதானிக்கும்போது, இந்துக்களின் சாயல் அவர்களுக்கு இருக்கிறதோ என்னும் எண்ணம் பலருக்குத் தோன்றாமல் இல்லை. மாயாக்களுக்கும் இந்துக்களுக்கும் சம்பந்தம் உண்டா என்ற ஆராய்ச்சியும் சிலரால் மேற்கொள்ளவும் பட்டது. அப்போது அவர்களுக்குக் கிடைத்த சில பதில்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. இந்துக்கள் என்ன இந்துக்கள், மாயன்களுக்கும் தமிழர்களுக்குமே சம்பந்தம் உண்டு என்று நான் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? 

“என்னடா இது? இதுவரை நன்றாகத்தானே எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது, என்ன ஆச்சு இவருக்கு?” என்றுதானே நினைக்கிறீர்கள்? “குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் என்று இவரும் ஆரம்பிக்கப் போகிறாரோ?” என்றும் யோசிக்கிறீர்கள். இல்லையா? 

‘இல்லை, நிச்சயமாக இல்லை’ நீங்கள் இதுவரை நினைக்க முடியாத, கேள்விப்பட்டிராத கோணத்தில் இந்தத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு சாத்தியங்கள் சில உண்டு. இதை நான் சொன்னால், நீங்கள் நம்பவே தேவையில்லை. வேறொருவர் சொன்னால்? அதுவும் அவர் ஒரு அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் என்றால் நம்புவீர்களா? 

அந்த அமெரிக்க ஆய்வாளர் என்ன சொன்னார் தெரியுமா? சொல்கிறேன்….! 

பிற்குறிப்பு: கிருஸ்தவ மதவாதிகள் என்று இங்கு நான் குறிப்பிடுவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அடிப்படைப் பழமைவாதிகளைத்தான். இன்று இருக்கும் யாரையும் அல்ல. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை-ராஜ்சிவா.  



 “மாயன் இனத்துக்கும், நம் தமிழ் இனத்துக்கும் தொடர்பு இருந்திருக்கலாமா……? அதற்குச் சாத்தியங்கள் உண்டா………?” என்ற கேள்வியைக் கடந்த பதிவில் கேட்டு முடித்திருந்தேன். நமது இனம், தமிழ் இனம் என்பதால் தமிழுக்கு மதிப்பையும், மரியாதையையும் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் நமக்கு எப்போதும் இருந்து வருகிறது. இதனால் தமிழின் பெருமைகளைச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொல்லும் தந்திரமாகச் சிலர் இதைப் பார்க்கலாம். ஆனால் தமிழின் பெருமைகளை நாம் அறிந்திருப்பதை விட, வெளிநாட்டவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்தத் தொடரை நான் எழுதுவதற்குப் படித்தவைகளும், காணொளிகளாகப் பார்த்தவைகளும் ஏராளம். பல வரலாற்று அறிஞர்களின், அறிவியலாளர்களின் படைப்புகளையும், மேற்கோள்களையும் படித்திருக்கிறேன். அதில் விசேசம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் மனித வரலாற்றின் புராதன ஆச்சரியங்களைப் பற்றிச் சொல்லும்போது, ஏதாவது ஒரு இடத்தில் இந்து மதத்தைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் குறிப்பிடாமல் இருந்ததில்லை. இந்து மதம், சமஸ்கிருதம் என்று அவர்கள் கூறிவிட்டு, அவர்கள் மேற்கோள் காட்டுவதில் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டுப் புராதன அடையாளங்களாகத்தான் இருக்கின்றன.

 மாயன் இனம் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சியே, நாம் அவர்கள் பற்றி இன்றும் விரிவாகப் பேசுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. மாயன்களின் சரித்திரத்தில், குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விசயமே, அவர்களின் ‘மாயா’ என்னும் பெயரைத்தான். ‘மாயா’ என்னும் இனமாக இருப்பதால், அவர்களை நாம் ‘மாயன்கள்’ என்று சொல்கிறோம். ஆனால் இதில் நாம் அவதானிக்க வேண்டிய இன்னுமொரு விசயம், உலகில் ‘மாயா’ என்னும் சொல், மாயா இனத்தவர்கள் தவிர்ந்து, வேறு ஒரே ஒரு பெரு நிலத்தில் மட்டும்தான் பாவனைக்கு இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. அது எங்கு என்று உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதே இல்லை. இலங்கை, இந்தியா சார்ந்த இடங்களில் மட்டுமே இந்த ‘மாயா’ என்னும் சொல் பரவலாகப் பாவிக்கப்படுகிறது. 

’2012ம் ஆண்டு உலகம் அழியும்’ என்று மாயன்களின் நாட்காட்டியில் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறியப்பட்டது முதல், மாயன் பற்றிப் பேசாதவர்கள் உலகத்திலேயே இல்லை என்றே சொல்லலாம். இதனால் ஆராய்ச்சியாளர்கள் கூட்டம் மத்திய அமெரிக்காவில் உள்ள மாயன் நிலங்களை நோக்கிப் படையெடுத்தபடியே இருக்கிறது. ஆனால் இதை இன்று வரை யார் கவனித்திருக்க வேண்டுமோ, அவர்கள் அதாவது இந்தியா மற்றும் இலங்கையில் வாழும் யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. இந்த மன நிலை ஏன் நமக்கு இருக்கிறது என்று கேட்டால், வேதனைக்குரிய பதிலே நமக்குக் கிடைக்கும். அதனால் அதை அப்படியே விட்டு விடலாம். ஆனால் நாம் இதைக் கவனிக்கத் தவறினாலும், மேற்கத்தைய ஆராய்ச்சியாளர்கள் இதைக் கவனித்து, இது பற்றி விரிவாகவே ஆராய்ந்திருக்கிறார்கள். அதில் குறிப்பாக உங்களுக்கு நான் சுட்டிக் காட்ட விரும்புபவது, அமெரிக்காவில் பிறந்த எழுத்தாளரும், சரித்திர ஆய்வாளருமான ‘மாட்லாக்’ (Gene D.Matlock) என்பவரைத்தான். மாட்லாக் என்பவர் தமிழனுக்கும், இந்துக்களுக்கும், மாயன்களுக்கும் சம்பந்தம் உண்டு என்று உறுதியாகச் சொன்னார். இவர் இது பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதி வெளியிட்டும் இருக்கிறார். இனி நான் எழுதப் போகும் பல விடயங்கள் அவர் சொன்னதை முன்வைத்துச் சொல்வதாகவே இருக்கும். இந்தக் கருத்துகளில் முரண்பாடு இருப்பவர்கள் முதலில் மாட்லாக்கைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். 




முழு அளவு காட்டு மாயா என்ற சொல் நம்மிடையே எங்கெல்லாம் பயன்பட்டிருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்……..! ‘மாயா’ என்னும் தெய்வம் நம்மிடையே உண்டு. ‘மாயா’ என்பது ஒரு தத்துவமாகவும் நம்மிடம் உண்டு. ‘மாயா’ பற்றிப் பகவத் கீதையில் நிறையவே சொல்லப் பட்டிருக்கின்றது. ‘மாயாலோகம்’ என்று ஒரு உலகம் உண்டு என்ற நம்பிக்கையும் நம்மிடையே உண்டு. ‘மாயா தேவி’ என்பவர் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, கௌதம புத்தரின் தாயாராக இருந்திருக்கிறார். அத்தோடு, ‘மாயை’ என்னும் சொல், பெயர்ச் சொல்லாகவும், வினைச் சொல்லாகவும் நம் மொழியில் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதிகம் ஏன், இலங்காபுரியை அழகுற அமைத்தனர் ‘மயன்’ என்று சொல்லப்படுபவர் பற்றி நமது புராணங்களிலேயே இருக்கிறது. கட்டடக் கலையில் வல்லவர் மயனா? மாயனா? நீங்களே சிந்தியுங்கள். 




முழு அளவு காட்டு “இங்கு ‘நமக்கு’ என்று நான் சொல்வது யாரை?” என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழலாம் அல்லவா? இந்தியா, புத்தர், இந்துமதம், தமிழர் என்று கலந்து கட்டிச் சொல்லியிருக்கிறேன். இதில் எப்படி மாயன்களையும், தமிழர்களையும் மட்டும் தொடர்புபடுத்திக் குறிப்பிட்டு நான் சொல்ல முடியும்? 

சொல்கிறேன்……! 
உண்மையில் ‘மாயை’ என்னும் சொல் பழந்தமிழிலிருந்தே இந்திய அனைத்து மொழிகளுக்குள்ளும் நுழைந்திருக்க வேண்டும். ‘மயக்கம்’ என்னும் சொல்லின் அடியாகப் பிறந்ததே இந்த ‘மாயை’ என்னும் சொல். இதுவே பிற்காலத்தில் வேறு மொழிகளுள் புகுந்திருக்கிறது. இதற்கு ஆதாரமாகத் தமிழனின் ஆதிகாலச் சிறு தெய்வங்களில் ஒன்று, ‘மாயாண்டி’ என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், தமிழர்கள் பலர் தங்களுக்கு மாயாண்டி எனப் பெயர்களை இப்போதும் கொண்டிருக்கின்றனர். தமிழர்களின் பழம் பெரும் நூல்கள் அனைத்திலும் மாயை என்னும் சொல் இருக்கிறது. தமிழர்களின் மதமான, சைவசமயத்தின் சைவசிந்தாந்தத்தில் குறிப்பிடப்படும் மும்மலங்களில், ஆணவம், கன்மத்துடன் மாயையும் ஒரு மலமாக வருகிறது. அத்தோடு திருமந்திரம், திருவருட்பயன் என்னும் நூல்களில் மாயை என்னும் சொல் பயன்பாட்டில் இருக்கிறது. உண்மையில் மாயை என்பது தமிழர்கள் பாவித்த ஒரு சொல்லாகவே பார்க்கின்றனர் மேற்குலக ஆராய்ச்சியாளர்கள். அப்படி இல்லாமல் போனாலும் பரவாயில்லை. 

நாம் பேசிக் கொண்டு வரும் மாயன் சரித்திரங்கள் எல்லாமே, இன்றிலிருந்து ஆயிரம் வருடங்களிலிருந்து பத்தாயிரம் வருடங்கள் வரைக்கும் முற்பட்ட காலத்திற்கு உரியவை. இந்தக் கால இடைவெளிகளில், உலகில் பல நாகரீகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால் மிக மிக ஆரம்ப கால நாகரீகங்கள் எனப் பார்க்கும் போது, அதில் சிந்து வெளி நாகரீகமும் ஒன்றாக அடங்குகிறது. இது 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நாகரீகம். சிந்து வெளி நாகரீகம் தமிழர்களின் நாகரீகமாகும். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் தேசத்தில் உயிர்ப்புடன் இருந்த ஒரே மொழி தமிழ் மொழி மட்டும்தான். மாயன் இனத்தின் பெயருக்கும் நம்மிடையே வழங்கி வந்த இந்த மாயா என்னும் பெயருக்கும் உள்ள தொடர்பு தற்செயலானதாக இருக்கலாம் எனத் தோன்றவில்லை. உலகில் வேறு எங்குமே இல்லாத மாயா எப்படி நம்மிடத்தில் மட்டும் வந்தது? அதுவும் இவ்வளவு பரவலாக…..! 

“அட! இது ஒன்றை வைத்து எப்படி இவ்வளவு சாதாரணமாக, அந்த மாயனும், இந்த மாயனும் ஒன்று என்று இவர் சொல்லலாம்” என்று நீங்கள் யோசிப்பதற்குப் பதில் வேறு வடிவில் இருக்கிறது. மாயன் இனத்துக்கும், நமக்கும் இந்தப் பெயர் ஒற்றுமை என்பதில் மட்டும்தான் தொடர்பா என்று பார்த்தால்………! ஆச்சரியமான வேறு சில தொடர்புகளும் தெரிகிறது. அவை என்ன தெரியுமா? நீங்களே பாருங்கள்………..! 

தமிழர்கள் முற்காலத்தில், கப்பலில் மேற்கு நோக்கிக் கடற் பயணத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் நிறையக் கிடைத்திருக்கின்றன. அப்படி அவர்கள் பயணம் செய்தபோது பாவித்த வரைபடங்களாகக் கீழே கொடுக்கப்பட்ட இவை இரண்டும் எமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த இரண்டு வரைபடங்ககளையும் சரியாகக் கவனியுங்கள். ஆங்கிலத்தில் குறிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் எமது விளக்கத்திற்காகக் கொடுத்திருக்கின்றனர்.




 முழு அளவு காட்டு முதலாவதாக இருக்கும் வரைபடத்தின்படி, Kethumal (Chethumal) என்னும் மாயன் இடம் வரை மேற்கே தமிழர்கள் சென்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கீழே உள்ள தற்கால வரைபடத்தின் மூலம் அந்த Chethumal எங்கிருக்கிறது என்பதை நீங்கள் சரி பார்த்து அறிந்து கொள்ளலாம். அத்துடன் தமிழர்கள் பிரயாணம் செய்த கப்பல், படத்தில் இருப்பதாகவும் இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 




முழு அளவு காட்டு முழு அளவு காட்டு இது பற்றி மாட்லாக் என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள். அவரது மொழியிலேயே அதை நேரடியாக உங்களுக்குத் தருகிறேன்……! THE MAYANS WERE TAMILS. I am now ready to return to the hypothetical voyage of Tamils to America. They probably used two types of maps. The map below-left shows Mt. Meru with petals pointing in four directions. The left petal points toward a distant land called Ketumal or Chetumal. In order to reach that land, they had to go eastward in order to avoid sailing around the tip of Africa. They knew where they were going, for they had been there before! The map below-right was their own map of the world.

 The Mayans said that the land of their forefathers lay 150 days westward. 

When the Tamils arrived in North America, they crossed over to what is now the Caribbean Sea, through the Isthmus of Panama (The Great Crossing). After coming out the other side, they docked in the safe harbor of Chetumal. It still bears the same name. Chetumal harbor is in Belize. Belize derives from Belisha (God Shiva). 

‘இந்த ஆதாரங்கள் மட்டும் போதாது’ என்று நீங்கள் நினைத்தால். தமிழரசனான, பல்லவ அரசனின் மாமல்லபுரக் கட்டடங்களையும், மாயனது கட்டடங்களையும் சற்றே ஒப்பிட்டுப் பாருங்கள். 






  குறிப்பாக மாயனின் முக்கிய கட்டடம் ஒன்றும், மாமல்லபுரக் கட்டடம் ஒன்றும் அச்சு அசலாக ஒன்று போலக் காணப்படுகிறது. இது தற்செயலாக இருக்க முடியுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இந்த ஆதாரமும் போதாது என்று நீங்கள் அடம் பிடித்தால், ஆதிகாலத்தில் நமது மூதாதையர்கள் விளையாடிய விளையாட்டான ‘சொக்கட்டான்’ அல்லது ‘தாயம்’ என்று அழைக்கப்படும் விளையாட்டு ஓலைச் சுவடியில் வரையப்பட்டிருப்பதைப் பாருங்கள். அதே விளையாட்டு, மாயன்களும் அதே வரைபடம் கொண்டு வரைந்து விளையாடியிருக்கிறார்கள் என்றால் என்ன சொல்வீர்கள்? இதுவும் தற்செயலா…..? 




 


சரி, இவையெல்லாவற்றையும் விட்டுவிடலாம்………..! மாயன்களுக்கும், நமக்கும் உள்ள சில பெயர்களின் ஒற்றுமைகளை இப்போது பார்க்கலாமா? இலங்கை என்னும் பெயர் நீங்கள் அறிந்ததே! தமிழில் இலங்கம், இலங்கா என்பது மருவி இலங்கை என்றாகியது. ஆனால் மாயனின் பல இடங்களின் பெயர்கள் ‘லங்கா’ என்பதில் முடிகிறது. குறிப்பாகச் ‘சிலங்கா’ என்ற ஓசையுடன் உள்ள Xilanca என்னும் மாயன் இடமும், ‘இக்ஸ்பலங்கா’ என ஓசை வரும் Xbalanca என்பதும், ‘பலங்க’ என்று ஓசை வரும் Palenque என்னும் இடமும் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அத்துடன் சேரன் (Ceran) என்னும் மாயனின் அரசன் பெயரும் வியப்பளிக்கிறது. 

“முடியாது! முடியவே முடியாது! இதை எல்லாம் ஒத்துக்கவே முடியாது” 
என்று நீங்கள் இன்னும் நம்ப மறுத்துப் பிடிவாதம் பிடித்தால், அடுத்து நான் சொல்லப் போவதை கவனமாகமாக கவனியுங்கள். உலகமே மாயன்களையும், எகிப்தியரையும் அவர்களின் கட்டடக் கலைக்காக மிகவும் வியக்கிறது. 
அதிலும் குறிப்பாக அவர்கள் கட்டிய பிரமிட்டை வியப்புடன் பார்க்கிறது. ‘பிரமிட்’ என்றால் எகிப்தியரைப் பொறுத்தவரை இறந்தவர்களை அடக்கம் செய்த இடமாகிறது. ஆனால் மாயனைப் பொறுத்தவரை அவர்களின் பிரமிட்டுகள் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோவில்கள். புனிதமான இடங்கள். ஆனால் இங்கு நாம் கவனிக்கத் தவறிய மிகப் பெரிய விசயம் ஒன்று உண்டு.

 பிரமிட் என்றால் அதன் வடிவம் என்ன? நான்கு பக்கங்களும் தட்டையான தளங்களையுடைய, கூம்பு போன்ற ஒரு அமைப்புத்தானே! அப்படிப் பார்த்தால், நமது கோவில்களின் கோபுரங்கள் அனைத்துமே பிரமிட் வடிவங்களில்தானே கட்டப்பட்டிருக்கின்றன. இதை நாம் எப்படிக் கவனிக்காமல் விட்டோம்? நமது கட்டட வடிவத்தை அவர்கள் கவர்ந்து கொண்டார்களா? இல்லை, அவர்களது கட்டட வடிவத்தை நாம் பெற்றுக் கொண்டோமா..? இதற்குப் பதில் மாயன்களின் சரித்தி ரலேயே உண்டு. ‘மாயன்களுக்குக் கிழக்கிலிருந்து வந்தவர்கள்தான் சகல அறிவையும் கற்றுத் தந்தார்கள்’ என்று இருக்கிறது. அப்படிக் கிழக்கில் இருந்து வந்தவர்கள் ஒன்று சுமேரியராக இருந்திருக்க வேண்டும் இல்லை தமிழர்களாக இருந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால், சுமேரியர்கள் கூடத் தமிழர்களின் தொடர்புள்ளவர்களாக இருக்கச் சாத்தியம் உண்டு. இவையெல்லாவற்றுக்கும் சாட்சியங்களும் உண்டு. இப்போது மாயன்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதற்கு சாத்தியங்கள் உண்டு என்பதை நீங்களே பார்த்தீர்கள். அத்துடன் இன்னுமொரு முக்கியமான இந்தக் கோவில்களின் அமைப்பையும் பாருங்கள். ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள். உதாரணத்திற்கு மாயனின் கோவில் ஒன்றையும், அதாவது பிரமிட் ஒன்றையும், நமது கோவில் கோபுரம் ஒன்றையும் படமாகத் தருகிறேன் பாருங்கள். 




 இதற்கு மேலும் நான் ஆதாரங்களைத் தேடித் தர வேண்டியது இல்லை என்றே நம்புகிறேன். ஆனாலும், கோவில்களின் கோபுரங்களுடன் நமது அடுத்த ஒரு பிரமிக்கத் தக்க ஆய்வொன்றைச் செய்து விட்டு மேலே செல்லலாம். நீங்கள் இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை நிச்சயம் மறந்திருக்க மாட்டீர்கள். அதில் நான் மாயன்களுக்கும், ஏலியன்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனப் பல சாட்சியங்களைத் தந்திருந்தேன். மாயன்களுக்கு இவ்வளவு பிரமிக்கத்தக்க அறிவை 
யாரோ கொடுத்திருக்க வேண்டும். அவர்கள் ஏலியன்களாகவும் இருக்கச் சாத்தியம் உண்டு எனப் பல அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறேன். ஒருவேளை அப்படி இருந்திருந்தால், அந்த ஏலியன்கள், பறக்கும் விமானத்தின் மூலமாகத்தான் மாயன்களை வந்தடைந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி என்றால் விமானம் என்பதும் இங்கு முக்கியமாகின்றது அல்லவா? 

இப்போது மிகவும் ஆச்சரியப்படக் கூடிய ஒரு செய்தியைக் கவனியுங்கள். நாங்கள், நமது கோவில்களின் கோபுரங்களை எப்படி அழைப்போம் தெரியுமா? ‘விமானம்’ என்றுதான் 
அழைக்கிறோம். அதேநேரம், எமது பண்டைய காவியங்களில் பறந்து வரும் ஒவ்வொரு உபகரணமும் விமானம் என்றுதான் அழைக்கப்பட்டிருக்கிறது. இது உங்களை ஆச்சரியப் படுத்தவில்லையா? கட்டடமும், பறக்கும் சாதனமும் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை உலகில் வேறு எந்த மொழிகளிலுமோ, இனங்களிலுமோ கிடையாது. இது எப்படிச் சாத்தியமாயிற்று. 

சிவபுராணத்தில் வரும் மிக முக்கியமான ஒரு கதையையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். 
‘தாரகாசுரன்’ என்னும் அசுரன், முருகனால் அழிக்கப்பட, அவனது மூன்று மகன்களான 
வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகியோர் கடுந்தவம் செய்து, சிவனிடமிருந்து மூன்று 
பறக்கும் கோட்டைகளைத் தவமாகப் பெறுகின்றனர். பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று உலோகங்களாலானவை அந்தக் கோட்டைகள். அந்தக் கோட்டைகளின் மீதேறிப் பறந்தபடி 
தேவர்களை அவர்கள் மூவரும் துன்புறுத்தினார்கள் என்பது புராணம். இப்போது நமது கேள்வி என்னவென்றால், கோட்டைகள் பறக்குமாயின், கோவில் கோபுரங்களும் அதை 
அடையாளப்படுத்தும் ஒரு கட்டட வடிவமா? அதனால்தான் அவற்றிற்கு விமானம் என்று பெயர் வந்திருக்கலாமா? அதாவது எம்மூதாதையரிடமிருந்த கோபுரங்கள் எல்லாம் பறக்கும் தன்மை உள்ளவையாக இருந்திருக்கலாமா? இதில் மிகப்பெரிய இன்னுமொரு ஆச்சரியம் என்ன தெரியுமா? மேற்சொன்ன மூன்று பறக்கும் கோட்டைகளையும் வடிவமைத்துக் கட்டியவர் வேறு 
யாருமல்ல. சாட்சாத் ‘மயன்’ (மாயன்) என்பவர்தான். என்ன பெயர்ப் பொருத்தம் பிரமிப்பாக இல்லையா? நம்மிடம் இன்னுமொரு கதையும் உண்டு. இராவணனின் மனைவி மண்டோதரியின் தகப்பனான மயன், ‘மாயா இராட்சியம்’ அதாவது ‘மாயா ராஷ்ட்ரா’ என்னும் இராச்சியத்தைக் கட்டினான். அதுதான் ‘மகாராஷ்ட்ரா’வா தெரியவில்லை. எங்கும் மாயா, எதிலும் மாயா என்று பார்க்கும் போது ஆச்சரியமாக இல்லையா? 

நம்மிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. எந்த ஒரு அமானுஷ்ய சக்திக்கும் உடனடியாக, ஒரு தெய்வீகத் தன்மையைக் கொடுத்து விடுகிறோம். சாதாரண வாழ்க்கையில் இருப்பதை விட, அசாதாரணமாக எது இருந்தாலும், அதைக் கடவுள் தன்மையுடன் இணைத்து விடுகிறோம். 

இது சரியா? தப்பா? என்ற விவாதத்திற்கு நாம் இப்போது போகத் தேவையில்லை. ஆனால், 
இப்படி எல்லாவற்றுக்கும் தெய்வீகத் தன்மை கொடுத்து விடுவதால், அவை பற்றி ஆராய எம்மால் முடியாமல் போகிறது. மிகப்பெரிய தடங்கலாக நாம் கொடுக்கும் அந்தத் தெய்வீகத் தன்மை அமைந்து விடுகிறது. நம்பிக்கைக்குரிய விசயங்களை ஆராய்வது மிகப்பெரிய தவறாக ஆகிவிடுகிறது. ஆனால், மேலை நாடுகளில் இவற்றையெல்லாம் ஆராய்ச்சிக்குரிய, ஆச்சரியங்களாகவே பார்க்கின்றனர். அதனால் அவை பற்றிய ஒரு சரியான, விழிப்புணர்வான முடிவுக்கு அவர்களால் வரமுடிகிறது. 

மாயா, எகிப்து போன்ற இடங்களில் இருப்பதை விட விண்வெளி சம்பந்தமான ஆச்சரியங்கள் இந்துக்களிடத்தில்தான் மிக அதிகமாகக் காணப்படுகிறது. மாயாக்களும், எகிப்தியரும் தங்கள் மர்மங்களை ஆராய்ச்சி மூலமாக வெளிக்கொண்டு வர முயற்சி செய்யும் நேரத்தில், இந்துக்கள் தங்கள் ஆச்சரியங்களை கடவுளர்க்குள் திணித்துவிட்டு ஆராயப் பயப்படுகிறார்கள். இராவணன், சீதையைக் கவர்வதற்குப் ‘புஷ்பக விமானம்’ பயன்படுத்தியது. இந்திரன் வானுலகத்தில் இருந்து தனது பறக்கும் தேரில் பூமிக்கு வந்தது. மணிமேகலை ‘மயில் பொறி’ என்னும் இயந்திரத்தின் மூலமாக, இலங்கைக்குப் பறந்து சென்றது. கருடன், மயில், அன்னம் போன்ற பறவைகளை வாகனமாக்கி, வானில் கடவுள்கள் பறந்தது. இப்படிப்பட்ட பலவித இந்து மதக் கதைகளை நாம் நிறையவே படித்திருக்கிறோம். இவற்றை ஒரேயடியாகப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று அப்படியே ஒதுக்கித் தள்ள முடியாது. இவற்றிற்கு கடவுள் தன்மை கொடுக்கப்பட்டதால் மூடநம்பிக்கை என்னும் ஒரு நோக்கால், பகுத்தறிவுவாதிகளால் இது எதிர்க்கப்படுகிறது. ஆனால் இவற்றை விண்வெளி சார்ந்த ‘மிஸ்டரி’ வகை மர்மங்களாகப் பார்த்தால், ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்திப் பார்த்தால் எமக்குக் கிடைக்கும் உண்மைகள் வேறாக இருக்கும். 




உதாரணமாக, மேலே இருக்கும் இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதில் மேலே 
இருப்பது ஒரு நவீன விண்வெளிப் பயணி. கீழே இருப்பது விநாயகர். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பாருங்கள். “இப்படியும் இருக்கலாமோ?” என்று எம்மை யோசிக்க வைக்கிறது அல்லவா? இங்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியலாம். மேற்கிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் பகுத்தறிவு என்னும் பெயரால், யானைத் தலையுடன் எப்படிக் கடவுள் இருக்க முடியும் எனக் கேலி செய்யாமல், அதை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் பார்த்ததால் அவர்களுக்கு இப்படி ஒரு பார்வை தோன்றியுள்ளது. அதாவது, விநாயகர் என்னும் 
கடவுள் விண்வெளியில் இருந்து வந்து இறங்கிய ஒருவராக இருக்கலாமோ என்று 
யோசிக்கின்றனர். ஆனால் இதை இங்கு நமது நாட்டில் ஆராய்ந்தால், எவ்வளவு எதிர்ப்புகள் எந்த எந்தப் பக்கத்தில் இருந்து கிளம்பும் என்று சிந்தித்துப் பாருங்கள். 

இப்படியான மதக் கதைகள் பகுத்தறிவுக்கு ஒத்துவராமல் இருந்தாலும், இக்கதைகள் ஏன் உருவாக வேண்டும் என யோசிக்க வேண்டி இருப்பது என்னவோ உண்மைதான். கடவுள் என்னும் ஒரு கருத்துக்குள் இதை அடக்கி விடாமல் அறிவியலாக நோக்கினால், ஆதிகாலத்து பாரத மக்கள் எதையாவது கண்டு இருக்கலாமோ என்றே எண்ண வைக்கிறது. அப்படித்தான் மேலைத்தேச ஆராய்ச்சியாளர்கள் சிந்திக்கிறார்கள். 

இங்கு மூன்று முக்கிய கேள்விகள் எழுகின்றன.
1. கடவுள் என்பவர் பூமிக்கு வெளியே, வானத்தில் இருந்து வந்தவர் என்ற கருத்து ஏன் வந்தது?
2. கடவுள்கள் தலைகளில் கிரீடம் போன்ற ஒன்றை அணிந்தபடியே ஏன் காட்சியளிக்க வேண்டும். 
3. கடவுள்கள் விமானங்கள், பறக்கும் தேர்கள் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றைப் பாவித்து ஏன் பறக்க வேண்டும்? 
இந்த மூன்று விசயங்களையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்……..! 


இவை ஏன் இப்படியும் இருந்திருக்க முடியாது. மாயன் இனத்தவர்கள் கண்டார்கள் எனச் சொல்லப்படுவது போல, நமது முன்னோர்களும் தலையில் கவசம் அணிந்து, விண்வெளியில் இருந்து பறக்கும் ஒரு சாதனத்துடன் வந்த எவரையாவது கண்டிருக்கலாமல்லவா….? இவ்வளவு ஆழமாக இதை ஏன் சொல்ல வேண்டி உள்ளது என்று நான் உங்களுக்கு விளக்க வேண்டும். இந்து மதக் கதைகள் பற்றி நான் சொல்லும்போது, “இது எல்லாம் எங்களுக்குத் தெரிந்தவைதானே” என்று உங்களுக்கு ஆர்வம் குறைவாகவே இருக்கும். ஆனால் உங்களுக்குத் தெரியாத பல விசயங்களும் நம்மிடையே உண்டு என்பதுதான் யதார்த்தம். இப்போது நான் சொல்லப் போவதும் அப்படிப்பட்ட ஒன்றைப் பற்றித்தான். அதுவும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே உங்களைக் கூட்டிச் செல்லும்.

 நமது வேதங்களிலும் புராணங்களிலும், பழைய நூல்களிலும் உள்ள குறிப்புகளை வைத்து, பரத்வாஜ முனிவரால் எழுதப்பட்டது என்று கருதப்படும் நூல் ஒன்று, ‘சுப்பராயா சாஸ்திரி’ (Subbaraya Sastry) என்பவரால் தொகுக்கப்பட்டது. அந்த நூலின் பெயர் ‘வைமானிக சாஸ்திரம்’ (Vymaanika Shaastra – விமான சாத்திரம்). சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அந்த நூல், 1918 ம் ஆண்டளவில் தொகுக்கப்பட்டது. பின்னர் அதை ஆங்கிலத்தில் ஜோஸ்யர் (Josyer) என்பவர் மொழிபெயர்த்தார். 

பண்டைய காலங்களிலேயே இந்துக்கள் விமானங்களைப் பற்றியும், அவற்றைச் செய்யும் முறைகளைப் பற்றியும் கூறியது, அதில் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தமாக நான்கு வகை விமானங்களை இந்துக்கள் பாவித்தார்கள் என்றும் அதில் சொல்லப் பட்டிருக்கின்றது.
1.சகுன விமானம் (Shakuna Vimana), 
2. சுந்தர விமானம் (Sundara Vimana), 
3. ருக்ம விமானம் (Rukma Vimana), 
4. திரிபுரா விமானம் (Tripura Vimana) 
என்னும் நான்கு வகை விமானங்கள்தான் அவை. அவற்றைப் பற்றி நான் சொற்களால் புரியவைப்பதை விடப் படங்களைப் பார்க்கும்போது நீங்கள் அதிகம் புரிந்து கொள்வீர்கள். அவற்றையும் அவை சம்பந்தப்பட்ட படங்களையும் இப்பொழுது தருகிறேன் பாருங்கள். 

இதுதான் சகுன விமானம்




இதுதான் சுந்தர விமானம் 


இதுதான் ருக்ம விமானம் 



இதுதான் திரிபுரா விமானம் 




என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா…? நம்மிடம் இப்படி ஒரு அறிவியல் இருந்திருக்கிறதா என்ற வியப்பு வருகிறது அல்லவா? அந்தக் காலத்தில் இது எப்படிச் சாத்தியம்? இப்போது எங்கள் கடவுளர்கள் உலாவரும் தேரின் வடிவத்தையும் மனதில் எடுத்துப் பாருங்கள். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் விமானங்களில் சில, தேர்களின் வடிவில் இருக்கிறது எம்மை ஆச்சரியப்படுத்துகிறது. தேர்களும், கோவில் கோபுரங்களும் உண்மையில் விமானங்களாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதாகத் தெரிகிறது அல்லவா? இவற்றை ஒட்டித்தான் நாம் அதை ஒரு வழிபாட்டு முறையாக மாற்றிவிட்டோமா? 

மேலே சொன்னவையெல்லாம் வைமானிக சாஸ்திரம் என்பதில் சொல்லப்பட்டு, அதன்பின் 1918 இல் சுப்பராயா சாஸ்திரிகளின் நூலின்படி வடிவம் கொடுக்கப்பட்ட விமான வரைவுகள். இது மட்டுமல்ல, இந்த விமானங்களை எப்படி எப்படி இயக்க வேண்டும், இயக்குபவர்கள் எப்படி உடை அணிய வேண்டும், எத்தனை பேர் அமர்ந்து இந்த விமானங்களில் செல்ல வெண்டும் என்பது எல்லாமே அட்சர சுத்தமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில வகை விமானங்கள் போருக்கும் பயன்படுத்தப்படுமாம். அத்துடன் இந்த விமானங்களைப் பாதரசத்தைத் திரவ நிலைக்கு உள்ளாக்கி, அதனை அதி வேகமாகச் சுற்ற வைப்பதனால் பெறப்படும் ஒருவித சக்தியினால் இயக்கலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

 நமக்குத்தான் இவை பற்றிக் கவலை இல்லையே! அதிகபட்சமாக இவற்றைத் தெரிந்து கொண்டால், கடவுளைப் போற்றிவிட்டு நமது வேலையைப் பார்க்கச் சென்று விடுவோம். ஆனால் மேலைத் தேச அறிஞர்கள் இந்த வைமானிக சாஸ்திரத்தைப் புகழோ புகழென்று புகழ்கின்றனர். புராதன அறிவியல் பற்றிப் பேசும் ஒவ்வொரு இடங்களிலும் இதை முன்வைத்து சிலாகிக்கின்றனர். எமக்குத் தெரியாதது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதில் ஒருபடி மேலே போய், இரண்டாம் உலகப் போரின் சமயங்களில், ஹிட்லரின் விஞ்ஞானிகள் மேற்படி வைமானிக சாஸ்திரத்தை மையமாக வைத்து பறக்கும் தட்டு ஒன்றைத் தயாரித்துப் பறக்கவிட்ட செய்தியும் உண்டு. பறக்கும் தட்டை ஜெர்மன் தயாரித்தது வதந்தி அல்ல. 

மிக நிச்சயமான உண்மை. இவ்வளவு ஆச்சரியங்களுக்குக் காரணமான மாயன்களுக்கும், மாயன்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படும் நமது முன்னோர்களுக்கும் இடையே இருப்பவை எம்மைத் தலை சுற்ற வைப்பவை. அதைவிட ஆச்சரியம், நாம் தற்சமயம் உலகெங்கும் விளையாடும் கால்பந்தாட்டத்துக்கும், ‘சிபால்பா’ என்னும் அழிக்கும் கடவுள் இருக்கும் இடத்துக்கும், 2012 இல் உலகம் அழிவதற்கும் உள்ள சம்பந்தம். நமது அழிக்கும் கடவுளின் பெயர் ‘சிவா’ என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. “என்ன? மாயன்கள் கால்பந்து விளையாடினார்களா? கால்பந்துக்கும் உலக அழிவுக்கும் சம்பந்தமா?” என்றுதானே கேட்கிறீர்கள்? அது இன்னுமொரு அசத்தலான மாயனின் ஆச்சரியம். அது என்ன ஆச்சரியம் ?  
                                                                                                                                    -தொடரும்-








No comments:

Post a Comment