disalbe Right click

Monday, October 26, 2015

பி.எஃப். பிடிப்பது எவ்வளவு? தருவது எவ்வளவு?


பி.எஃப். பிடிப்பது எவ்வளவு? தருவது எவ்வளவு? 

மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் தங்களது சம்பளம் எவ்வளவு ? என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,

மொத்த சம்பளம் எவ்வளவு?
அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்?
எதற்கு பிடிக்கிறார்கள்? 
என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.
வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது வருங்கால வைப்பு நிதிக்காக (பிஃஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஃஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள்.
 தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர்.
இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.

எவ்வளவு பிடிக்கிறார்கள்?

பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். 
பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 
8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும், 
3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 
0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். 
ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.
சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந்தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.

நிரந்தர கணக்கு எண்

புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.

தெரிந்துகொள்வது எப்படி?

சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். 
ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா?, வட்டி எப்போது வரவு ஆனது?. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன? என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும பார்த்துக் கொள்ள முடியும்.
இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக்கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்முடைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். 
பி.எஃப். அலுவலகத்தில் தாங்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலமாக, 01122901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம், தங்களது பி.எஃப். இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம். 

பணம் எடுப்பது எப்படி?

பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக்காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனை

வரும் மார்ச் மாதம் 2016 முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.

பங்குச் சந்தையில் பி.எஃப்.

ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்

நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
நன்றி : தி இந்து நாளிதழ் - 26.10.2015


No comments:

Post a Comment