disalbe Right click

Friday, February 19, 2016

வங்கிக்கணக்கு முடக்கப்பட்டால்


வங்கிக்கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்று நினைக்கிற அனைவருக்குமே மிக முக்கியமானது வங்கி சேமிப்புக் கணக்கு. ஆனால், இன்றைய நிலையில் வேலை மாறுவது அடிக்கடி நடக்கும் விஷயமாக மாறிவிட்டது. இதனால் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அல்லது வேறு சில காரணங்களுக்காக புதிய வங்கிக் கணக்கு திறக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் எதுவும் நடக்காமல் 
இருக்கும்பட்சத்தில் நம் பணம் முடங்கிப் போவதற்கு வாய்ப்புள்ளது. நம் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் அதில் 
கோடி ரூபாய் பணம் இருந்தாலும், ஒரு பைசாகூட உடனடியாக எடுக்க முடியாது என்பது முக்கியமான விஷயம். 
முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை என்ன செய்ய வேண்டும், இப்படி வங்கிக் கணக்கு முடக்கப்படுவ தால் ஏதேனும் பிரச்னை  வருமா? பரிவர்த்தனை நடக்காதது மட்டும்தான் முடக்கப்படுவதற்கு காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என்கிற கேள்விகளை ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் கிளை மேலாளர் எம்.பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.
 இரண்டு வருடம் கெடு!
‘‘ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, ஒரு சேமிப்புக் கணக்கோ, நடப்புக் கணக்கோ இரண்டு வருடத்துக்கு எந்தப் பரிவர்த்தனையும் நிகழாமல் இருக்குமானால் செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு முடக்கப்படும். ஆனால், குறைந்தபட்சமாக ஒரு வருடம் வரை எந்தவொரு பரிவர்த்தனையும் நடக்காவிட்டால் வங்கித் தரப்பிலிருந்து வாடிக்கை யாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும். 
வாடிக்கையாளர்கள் உடனடியாக செயல்பட்டு, தங்களுடைய வங்கிக் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ள தங்கள் கணக்கில் ஒரு தொகையைப் போடவோ அல்லது எடுக்கவோ செய்தால், செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால், இந்த அறிவுறுத்தலுக்குப் பிறகும் வங்கிக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் நடக்காவிட்டால், அந்தக் கணக்கு செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு முடக்கப்படும். 

கேஒய்சி கட்டாயம்!
கேஒய்சி குறித்த தகவல்கள் தரப்படாமல் இருந்தாலும், வங்கிக் கணக்கு முடக்கப்படுவதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். வங்கிக் கணக்கைப் பயன்படுத்த தான் அளித்துள்ள விவரங்கள் முற்றிலும் உண்மையானவை என்று வாடிக்கையாளர் அளிக்கும் உறுதிமொழி படிவம் தான் இந்த  கேஒய்சி ஆகும்.
வாடிக்கையாளர்கள் இந்த கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்யாமல் இருந்தாலும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய கேஒய்சி என்ற படிவம் அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கித் தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதத்துக்குள் கேஒய்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். இந்தக் காலத்தில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி படிவத்தை தாக்கல் செய்து தங்களது வங்கிக் கணக்கை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
இந்த கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்ய ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும். அதற்குப் பிறகும் கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்யவில்லை எனில் அந்தக் கணக்குகளின் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்படும். 


குறைந்தபட்ச இருப்பு குறைந்தால்?
சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்தத் தொகை வங்கிக்கு வங்கி மாறும். அது நிறுவனத்தில் தொடங்கப்பட்ட கணக்காக இருப்பின் பூஜ்ய இருப்பில் இருக்கலாம். இதுமாதிரியான ‘சேலரி அக்கவுன்ட்டுகள்’ தவிர வேறு வங்கி சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்பு குறைவதால், அந்த வங்கிக் கணக்கு முடக்கப்படாது. 

மேலும், வங்கி சேமிப்புக் கணக்கு நிர்வாகம் செய்வதற்காக அந்தக் கணக்கில் உள்ள தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கட்டணமாக பிடிப்பதுண்டு. மேலும், ஏடிஎம் கார்டு சேவை, எஸ்எம்எஸ் சேவை, செக் கிளியரன்ஸ் போன்ற வற்றுக்காகவும் கட்டணம் பிடிப்பதுண்டு. இதனால் இருப்பில் உள்ள தொகை குறைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து செயல்படும் கணக்காக இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை.
ஆனால், இரண்டு வருடங்கள் வரை ஒரு வங்கிக் கணக்கு செயல்படாமல் இருந்தால், அது முடக்கப்படும். குறைந்தபட்ச கட்டணத்தை வைக்கவில்லை எனில், சிபில் ஸ்கோரில்  பிரச்னை வர வாய்ப்பில்லை. ஆனால், பிற்பாடு உங்கள் கணக்கை  புதுப்பிக்கும்போது  உங்களுக்கான கட்டணமும், அபராதமும் பிடித்துக்கொள்ளப்படும்.

முடங்கிய கணக்கைப் புதுப்பிப்பது எப்படி?
வங்கிக் கணக்கு முடக்கப்பட் டால் அதனைப் புதுப்பிக்க ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதித் தரவேண்டும். அதனுடன் உங்களுடைய சரியான முகவரி, அடையாள அட்டை, பான் எண், ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 
முடக்கப்பட்ட கணக்கு தொடங்கிய புதுப்பிக்க எந்தக் கட்டணமும் இல்லை. ஒருவேளை கணக்கு தொடங்கிய உரிமையாளர் இறந்திருந்தால், அவர்  குறிப்பிட்டுள்ள நாமினியா னவர் மேற்சொன்ன ஆவணங்களுடன் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு முடங்காமல் இருக்க..!
வங்கிக் கணக்குகள் முடங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
1. அடிக்கடி பயன்படுத்துகிற குறைந்தபட்சம் இரண்டு வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்துக்கொள்வது நல்லது. 
இனி இந்த வங்கிக் கணக்குகளை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களிடம் இருக்கும் பிற வங்கிக் கணக்கு களை உடனடியாக முடித்து விடலாம். 
2. என்றாவது ஒருநாள் ஒரு வங்கிக் கணக்கு தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால், அந்தக் கணக்கில் தொடர்ந்து பணத்தைப் போடுவதும் எடுப்பதும் அவசியம். 
3. பயன்படுத்தும் கணக்கு களிலிருந்து அவ்வப்போது பயன்படுத்தாத கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
4. நிரந்த இருப்புக் கணக்கு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றின் மூலம் வரும் வருமானத்தைத் தொடர்ந்து பயன்படுத்தாத கணக்கில் சேமித்து வரலாம்.
இப்போது ஏடிஎம், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி தங்களுடைய கணக்கை எப்போதும் செயல்பாட்டில் வைத்து முடங்காமல் பார்த்துக் கொள்ளலாமே!
நன்றி : நாணயம் விகடன் - 21.02.2016



    1 comment:

    1. நண்பரே...'வணக்கம்'
      அருமை.பயன் உள்ள அருமையான தகவல் கொடுத்தமைக்கு,"நன்றி"

      ReplyDelete