disalbe Right click

Sunday, February 21, 2016

குறைப்பிரசவத்தை தவிர்க்க


குறைப்பிரசவத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தையைப் பாதிக்கும் குறைப்பிரசவம்!

குறைப்பிரசவம் யாருக்கு ஏற்படுகிறது?
நோய்த்தொற்று
கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்ப்பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு, அந்தத் தொற்று  கர்பப்பையைப் பாதிக்கும்போது குறைப்பிரசவம்  ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். 

சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம்
கர்ப்ப காலத்தில் சிலருக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படலாம். இதனால்,  நஞ்சுக்கொடி பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. 
கர்ப்ப கால சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் ப்ரீ எக்லாம்ப்சியா (Pre Eclampsia) என்ற நிலை ஆகியவற்றின் காரணமாகப் குறைப்பிரசவம் ஏற்படுகிறது.
குழந்தைப்பேறின்மை மருந்துகள்
குழந்தையின்மை காரணமாக எடுக்கும் சிகிச்சையும் குறைப்பிரசவத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறது.  இவர்கள் எடுத்துக்கொள்ளும் சிலவகை மருந்துகள் காரணமாகக் கருத்தரிக்கும்போது, இரண்டு, மூன்று என ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் உருவாகின்றன. இதன் காரணமாக குறைப்பிரசவம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
புகைபிடித்தல்
சிகரெட்டில்  இருக்கும் நச்சுக்கள், பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது நஞ்சுக்கொடியைப் பாதிப்பது ஆய்வுகளில்  உறுதிசெய்யப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாலும், கணவர் புகைபிடிப்பதால் ஏற்படும் பேஸிவ் ஸ்மோக்கிங்காலும் குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
போதை மருந்து, ஆல்கஹால்
போதை மருந்து எடுத்துக்கொள்வது, மது அருந்துதல் காரணமாகவும் நஞ்சுக்கொடி பாதிக்கும். போதைப் பழக்கம் அதிகம் உள்ள நாடுகளில் குறைப்பிரசவத்தின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
குறைப்பிரசவக் குழந்தைகளின் பாதிப்புகள்!
32 வாரங்களுக்குள் குறைப்பிரசவமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு, மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம்.
மூளையில் ரத்தம் கசியலாம்.
டிஸ்லெக்சியா, ஏ.டி.ஹெச்.டி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
நுரையீரல் வளர்ச்சிக் குறைவு காரணமாக, சுவாசப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும்.
இதனால், எளிதாக நோய்த் தொற்றுக்கள் ஏற்படக்கூடும்.
1. சுவாசம்
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி முழுமை அடைந்திருக்காது.

நுரையீரல் சுருங்கிப்போய்  இருப்பதால், குழந்தையால் மூச்சுவிட முடியாது. இதன் காரணமாகவே பல குழந்தைகள் இறக்கின்றன. இந்தப் பிரச்னைக்கு தீர்வு உண்டு. ஏழு, எட்டாவது மாதங்களில் ஒருவர் பிரசவ வலியால் மருத்துவமனைக்கு வரும்போது, அவருக்கு இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரத்துக்குள் பிரசவம் ஏற்படும் என்பதை டாக்டர் கணித்தால், தாய்க்கு கார்டிக்கோஸ்டீராய்டு என்ற மருந்தைக் கொடுப்பதன் மூலம், குழந்தையின் நுரையீரலை மேம்படுத்த முடியும். 
ஒருவேளை உடனடிப் பிரசவம் ஏற்பட்டால், அந்தக் குழந்தைக்கு சார்ஃபாக்டன்ட் மருந்தை நுரையீரலில் செலுத்தி, நுரையீரல் உடனடியாகச் சுருங்குவதைத் தடுத்து, எளிதாக உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த இரண்டு சிகிச்சைகள் மூலம் பெருமளவு குழந்தைகள் உயிர் பிழைக்கின்றன.
2. தோல் முதிர்ச்சி
கருத்தரித்ததில் இருந்து, இதயம், நுரையீல், மூளை என ஒவ்வோர் உறுப்பும் வளரத் தொடங்கி, முதிர்ச்சியடையும். இப்படி, ஒவ்வோர் உறுப்பும் வளர்ச்சியடைவதை `வளர்ச்சிக்கான மைல்ஸ்டோன்’ என்று சொல்வோம். இது சரியாக நடைபெற வேண்டும். இவை நடைபெறத் தகுந்த தட்பவெப்பநிலை இருக்க வேண்டும்.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, உடலில் வெப்பத்தைத் தேக்கிவைத்துக்கொள்ளும் ஆற்றல் குறைவாக இருக்கும். மேலும், குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் எடைக் குறைவாகப் பிறப்பதற்கும் அதிக வாய்ப்பு உண்டு. எனவே, இன்குபேட்டர் அவசியம்.

இன்குபேட்டரில் குழந்தையை வைப்பதன் மூலம், குழந்தைக்குத் தேவையான வெப்பம் கிடைக்கும். எப்போது குழந்தைக்கு நன்றாகத் தோல் வளர்ச்சி அடைந்து வெப்பத்தைத் தேக்கி வைத்துக்கொள்ளும் திறன் முழுமையாகக் கிடைக்கிறதோ, அதுவரை இன்குபேட்டரில் வைத்துப் பாதுகாப்பதுதான் சிறந்தது.
‘கங்காரு மதர் கேர்’ என்பது மிகவும் முக்கியமான சிகிச்சை. கங்காரு, தன் குட்டியை வைத்துக்கொள்வதுபோல, தினமும் சில மணி நேரம், தாய் தனது குழந்தையை மார்போடு சேர்த்துக் கட்டிக்கொள்ள வேண்டும். குழந்தை, தாயின் அருகில் இருக்கும்போது, தாயிடம் இருந்து குழந்தைக்குத் தேவையான வெப்பம் கிடைத்துவிடும். அதேபோல குழந்தை, தாயின் உடலோடு ஒட்டி இருக்கும்போது, ஹார்மோன்கள் தூண்டப்பட்டு தாய்க்கு நன்றாகப் பால் சுரக்கும்.
3. பாலூட்டுதல் 
குறைப்பிரசவக் குழந்தைகளின் முக்கியப் பிரச்னை உணவு உட்கொள்ளுதல். 
32 வாரங்களுக்கு முன்பே பிறக்கும் குழந்தைகளுக்கு தாயிடம் இருந்து பால் குடிக்கத் தெரியாது.
32 வாரங்களுக்கு மேல்தான், மூளை வளர்ச்சி சீராகி, பால் குடிக்கும் உணர்வு குழந்தைக்குத் தூண்டப்படும். 
32 வாரங்களுக்கு முன் பிறந்த சில குழந்தைகளுக்குத் தாயிடம் பால் குடிக்கும் திறன் சிறிதளவு இருந்தாலும், அதனை விழுங்கும் திறன் இல்லாததால், தாய்ப்பால் மூச்சுக்குழாய் வழியாகப் பாய்ந்து, பிரச்னை ஏற்படலாம். 
எனவே, தாயிடம் இருந்து ஒரு பிரத்யேகக் கருவி மூலம் தாய்ப்பால் எடுத்து, குறிப்பிட்ட காலம் வரை குழந்தையின் வயிற்றில் செலுத்துவதன் மூலம் உணவுப் பிரச்னையைச் சமாளித்து விடலாம். 
இந்த முறையில் தாய்ப்பால் குழந்தைக்குக் கிடைப்பதால், குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.
4. ஆக்சிஜன் கவனம்
சில குழந்தைகளுக்கு செயற்கை ஆக்சிஜன் தேவைப்படும். 
குழந்தை முழு வளர்ச்சி அடையாத சமயங்களில், பார்வைத் திறனுக்கு மிகவும் அவசியமான ரெட்டினாவும் ( கண்ணின் பின்பகுதி அதாவது விழித்திரை) வளர்ச்சி அடைந்திருக்காது. 
மருத்துவ மனையில் மருத்துவர்கள் செயற்கை ஆக்சிஜன் கவனமின்றி அதிகமாகக் கொடுத்துவிட்டால், குழந்தைக்கு ரெட்டினா பாதிக்கப்படும். 
ரெட்டினாவில் ரத்தநாளங்கள் ஒழுங்கற்ற முறையில் வளர்ந்தால், பிற்காலத்தில் பார்வை பறிபோக நேரிடும்.
இந்த நிலைக்கு குறைப்பிரசவ ரெட்டினொபதி (Retinopathy of Premature) என்று பெயர். 
, குழந்தைக்குத் தேவையான அளவு, சீராகச் செயற்கை ஆக்சிஜன் கொடுக்கவேண்டியது அவசியம். 
அதேபோல, தற்போது ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் பிரச்னை அதிகமாக இருப்பதால், குழந்தைக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பதில் கவனம் தேவை.
5. ஹைஜீன் அவசியம்
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைக் கையாள்வதில் அதிகக் கவனம் தேவை. 
சுத்தமின்றி குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினால், நோய்த்தொற்று ஏற்படலாம். 
கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். 
நன்றாகக் கைகளின் இடுக்குகளைக் கழுவி, சுத்தம் செய்த பிறகுதான் குழந்தையைத் தொட வேண்டும்.


வேண்டாமே மூடநம்பிக்கை!
மூடநம்பிக்கை காரணமாக சிலர் எட்டு, ஒன்பது மாதங்களிலேயே ஜோதிடம் பார்த்து, சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுகொள்கிறார்கள். 
37 வாரங்களுக்குப் பிறகு சிசேரியன் செய்துகொண்டால், குழந்தைக்குப் பெரிய பாதிப்புகள் இல்லை.
 உரிய மருத்துவக் காரணங்கள் இன்றி சொந்த விருப்பத்துக்காக, குறை மாதங்களில் சிசேரியன் செய்து, குழந்தையைப் பெற்றெடுப்பது அந்தக் குழந்தைக்கு நாம் செய்யும் தீங்கு. 
மூடநம்பிக்கையை காரணமாக வைத்து குழந்தையின் உயிரோடு விளையாடக் கூடாது.
குறைப்பிரசவம் தவிர்க்க எளிய வழிகள்
ஹெல்த்தி லைஃப்ஸ்டைல் அவசியம் தேவை. எப்போதும் மன அழுத்தத்தில் சுழலும் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி செய்து, பி.எம்.ஐ அளவை நார்மலில் வைத்திருக்க வேண்டும்.

சிகரெட், போதைப் பொருட்கள், மது தவிர்க்க வேண்டும்.
காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 
ஊட்டச்சத்துக் குறைவும், குறைப்பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

குழந்தையைத் தள்ளிப்போடாதீர்கள்

குழந்தைப்பேறைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்துவருகிறது. வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அதற்காகக் குழந்தைபேற்றைத் தள்ளிப்போட வேண்டாம். வயது அதிகரிக்கும்போது பெண்களுக்கு, கருமுட்டையின் தரம் குறைவதால், கரு உருவாவதிலும் பிரச்னை ஏற்படலாம்
 

நன்றி : டாக்டர் விகடன் - 01.03.2016 

No comments:

Post a Comment