disalbe Right click

Monday, March 14, 2016

வெளிநாட்டில் படிக்க


வெளிநாட்டில் படிக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவர்கள் ஐ.ஐ.டி-க்களையும் ஐ.ஐ. எம்-களையும் எல்லை இலக்காக நினைத்துப் படித்த காலம் மாறி, இன்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் படிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்வதேச தரத்திலான கல்வி, புதுப்புது அனுபவங்கள் மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகள் என இதில் அட்வான்டேஜ்கள் நிறைய இருப்பதால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா எனக் கிளம்புகிறார்கள் பலரும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் பெறுவதில் கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், கல்வி ஆலோசகர் போர்ஷியா ரிச்சர்ட்.

நாடு, பல்கலைக்கழகம்!
‘‘நண்பர்கள் படிக்கிறார்கள், உறவினர்கள் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் தாண்டி, ஒரு நாட்டில் கிடைக்கக் கூடிய அனுபவங்கள் மற்றும் வாழ்க்கைச் சூழலின் அடிப்படையில், எந்த நாட்டில் படிக்கச் செல்லலாம் என்பதை முடிவெடுங்கள். அடுத்ததாக, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ரேங்க் பட்டியலை இணையம் அல்லது ஏதேனும் ஒரு கன்சல்டன்ஸியிடம் பெற்று, நீங்கள் படிக்கவிருக்கும் துறையில் டாப் ரேங்கில் இருக்கும் பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்யுங்கள். சில நேரம், ஒட்டுமொத்தமாக ஒரு பல்கலைக்கழகம் தரவரிசையில் முன்னணியில் இருக்கும். ஆனாலும், உங்கள் துறையில் அது பின்தங்கியே இருக்கும். எனவே, துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தே பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்வு செய்திருக்கும் பல்கலைக்கழகம் கோரும் மாணவர் தகுதியை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை செக் செய்துகொள்ளுங்கள்.
இதன் பின்னர் பாஸ்போர்ட் வேலைகளை ஆரம்பிக்கலாம். நீங்களாகவே அப்ளை செய்து பாஸ்போர்ட் பெறுவது ஒரு வழி. இதற்கென பிரத்யேகமாக இருக்கும் ஏஜென்சி மூலம் பாஸ்போர்ட் பெறுவது இன்னொரு வழி. தகுந்த சான்றிதழ்கள் சமர்ப்பித்து பாஸ்போர்ட் வாங்கிய உடனே நீங்கள் செல்லவிருக்கும் நாட்டுக்கான விசா வேலைகளையும் முடித்துக்கொள்ளலாம். அமெரிக்கா, கனடா போன்ற சில நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்போதே பாஸ்போர்ட் ஹோல்டராக இருக்க வேண்டியது கட்டாயமாதலால் இது மிக முக்கியமான வேலை.
IELTS
TOEFL தேர்வு கடினம் என்று நினைப்பவர்களின் ஆல்டர்நேட்டிவ் ஆப்ஷன், IELTS தேர்வு. இதில் வாங்கும் மதிப்பெண்களையும் பல பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இது சற்றே எளிமையான தேர்வாதலால் ஒரு சில மாதங்கள் தயார் செய்தால் நல்ல ஸ்கோர் பெறலாம். பிரிட்டிஷ் கவுன்சிலால் நடத்தப்படும் இந்தத் தேர்வில் படித்தல், கவனித்தல், பேசுதல், எழுதுதல் என நான்கு வகையான திறன்கள் சோதிக்கப்படும். தேர்வு எழுதி முடித்த 12, 13 நாட்களில் முடிவுகள் தெரிந்துவிடும். உடனடியாக அந்த மதிப்பெண்களை வைத்து விண்ணப்பிக்கலாம்.
படிப்பும், பார்ட் டைம் வேலையும்!
இந்த மொழித்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதி, நல்ல மதிப்பெண்களோடு விண்ணப்பித்தால், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இடம் கிடைப்பதோடு அங்கே சென்ற பிறகு பகுதி நேர வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கும் உதவியாக இருக்கும். சில பல்கலைக்கழகங்கள் விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரிக் காலங்களில் நல்ல மதிப்பெண்களோடு தேர்வாகியிருந்தாலே அட்மிஷன் கொடுத்துவிட்டாலும், அவர் ஏதேனும் ஒரு மொழித்தேர்வை எழுதி கிளியர் ஆகும் வரை ‘கண்டிஷனல் ஆஃபர்’ மட்டுமே கொடுப்பார்கள். எனவே, இந்தத் தேர்வு மிக அவசியம். மொத்தத்தில், முறையான திட்டமிடல், தகுந்த பயிற்சி, தெளிவான வழிகாட்டுதலோடு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தால், ரூட் க்ளியர்!
TOEFL
மாணவர்களின் ஆங்கிலத் திறனை மதிப்பிட்டு சர்வதேச பல்கலைக்கழகங்களில் இடம் பெறுவதற்கு உதவும் தேர்வுகளில் முதன்மையானது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒரு குறிப்பிட்ட TOEFL ஸ்கோரை நிர்ணயித்து இருப்பார்கள். அதற்கு மேல் வாங்கும் மாணவர்களின் விண்ணப்பங்களையே பரிசீலிப்பார்கள். படித்தல், கவனித்தல், பேசுதல், எழுதுதல் - இந்த நான்கு திறன்களையும் சோதிக்கும் இந்தத் தேர்வு வருடத்தில் கிட்டத்தட்ட 50 தடவைக்கு மேல் நடத்தப்படும். மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரை நடத்தப்படும் ஆன்லைன் தேர்வு இது. இதில் வாங்கும் மதிப்பெண்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு மட்டுமே செல்லும். எப்போது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.
மொழித் தேர்வுகள்!
பல வெளிநாட்டுப் பல்கலை கழகங்கள், ஆங்கிலம் தாய்மொழி அல்லாத நாடுகளில் இருந்து தங்களிடம் விண்ணப்பிப்பவர்களை TOEFL, IELTS, Pearson போன்ற ஏதாவதொரு ஆங்கில மொழித்திறன் தேர்வை எழுதி, அதன் மதிப்பெண்களோடு விண்ணப்பிக்கச் சொல்வார்கள்.
Pearson Test
பிரபலமாகி வரும் மொழித்தேர்வு இது. TOEFL, IELTS, தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலாதவர்கள், அவற்றைவிட எளிமையான இதை முயற்சிக்கலாம். ஆனால், பலருக்கு இதைப் பற்றிய விழிப்பு உணர்வு இல்லை. பலர் இத்தேர்வெழுதி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோ.இராகவிஜயா
நன்றி : அவள்விகடன் - 09.02.2016

No comments:

Post a Comment