ஓட்டுநர் உரிமம் - என்ன செய்ய வேண்டும்?
1. பழகுநர் உரிமம்
பழகுநர் உரிமம் (LLR) பெற்ற பின்னரே, நிரந்தர உரிமம் பெற இயலும். பழகுநர் உரிமம் மற்றும் நிரந்தர உரிமம் பெற 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
பழகுநர் உரிமம் பெறwww.tn.gov.in/staஎன்ற இணையதள முகவரி அல்லது ஏரியாவில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அங்கு கிடைக்கக்கூடிய படிவம்-1, படிவம்-1 ஏ, படிவம்-2 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து, முகவரி சான்று (குடும்ப அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/பாஸ்போர்ட்), பிறந்த தேதிக்கான சான்று (பிறப்புச் சான்றிதழ்/பள்ளிச் சான்றிதழ்) ஆகியவற்றின் நகல் மற்றும் பழகுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை இணைத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், விண்ணப்பப் படிவம் 1-ல் உள்ள மருத்துவச் சான்றினை மருத்துவரிடம் பெற்று இணைக்க வேண்டியது கட்டாயம்.
2. நிரந்தர உரிமம்
பழகுநர் உரிமம் பெற்ற ஆறு மாதத்துக்குள் நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். ஏரியாவில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கிடைக்கக்கூடிய படிவம் 4-ஐ பூர்த்தி செய்து, LLR அசலுடன் வாகனப்பதிவு சான்று, வாகனத்துக்கான புகை சோதனை சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெறக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
3. வயது வரம்பு
`50 சிசி'-க்கும் குறைவான திறன் கொண்ட, கியர் இல்லாத மோட்டார் சைக்கிளுக்கு டிரைவிங் லைசன்ஸ் பெற 16 வயது முடிந்திருக்க வேண்டும். கியர் உள்ள மற்றும் `50 சிசி'-க்கு அதிகமான வாகனங்களுக்கு டிரைவிங் லைசன்ஸ் பெற 18 வயது முடிந்திருக்க வேண்டும். லாரி, பஸ் போன்ற வாகனங்களுக்கு டிரைவிங் லைசன்ஸ் பெற 20 வயதைத் தாண்டியிருக்க வேண்டும்.
4. காத்திருப்பு நேரம்
LLR: சான்றிதழ்களை சரிபார்த்த பின், விண்ணப்பித்த தினத்திலேயே LLR வழங்குவார்கள். நிரந்தர உரிமம்: வாகனத்தை இயக்குவதை நேரடியாகப் பரிசோதித்த பிறகு, அன்றைய தினமே நிரந்தர ஓட்டுநர் உரிமம் வழங்குவார்கள். தேர்ச்சி பெறாதவர்கள், ஏழு நாட்களுக்குப் பிறகு மீண்டும் விண்ணப்பித்து, தேர்ச்சி பெற்றால் உரிமம் பெறலாம்.
5. தொலைந்துவிட்டால்...
டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து `எஃப்.ஐ. ஆர்' பதிவு செய்ய வேண்டும். டிரைவிங் லைசன்ஸ் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் வழங்கும் `நான்-ட்ரேசபிள்' (Non -tracable) சான்றிதழுடன் டிரைவிங் லைசன்ஸ் எண் மற்றும் முகவரி, பிறந்த தேதிக்கான சான்றிதழ்களை இணைத்து, உரிய கட்டணம் செலுத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். லைசன்ஸ் பழுதடைந்திருந்தாலும் இதே முறையைப் பின்பற்றலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் டூப்ளிகேட் லைசன்ஸ் வழங்கப்படும்.
6. புதுப்பித்தல்
டிரைவிங் லைசன்ஸ் பெற்றதில் இருந்து 20 ஆண்டுகள் அல்லது லைசன்ஸ் பெற்றவருக்கு 50 வயது பூர்த்தியாகும் வரை... இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை அந்த லைசன்ஸ் செல்லுபடியாகும். அதன் பின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை லைசன்ஸை புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு முறை புதுப்பிக்கும்போதும் படிவம்-9ஐ பூர்த்தி செய்து முகவரிச் சான்று, பிறந்த தேதிக்கான சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2 மற்றும் புதுப்பிப்பதற்கு உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
7.பதிவு பெயர் மாற்றம்
பழைய வாகனங்களை வாங்கு பவர்கள் பதிவு பெயர் மாற்றம் செய்ய, படிவம்-29, படிவம் 30-ஐ பூர்த்தி செய்து... வண்டியின் பதிவுச் சான்று, புகை சோதனை சான்று, காப்பீட்டுச் சான்று ஆகியவற்றின் அசலை மோட்டார் வாகன ஆய்வாளரிடம் சமர்ப்பித்து உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். தவணை கொள்முதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்கிய வாகனம் எனில், விற்பவரிடம் இருந்து தவணை முடிந்ததற்கான சான்றிதழைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
8. முகவரி மாற்றம்
டிரைவிங் லைசன்ஸ் முகவரி மாற்றம் செய்ய அதற்குரிய காரணத்துடன் விண்ணப்பக் கடிதம் எழுதி, டிரைவிங் லைசென்ஸ், புதிய முகவரி மாற்ற சான்றாக வீட்டு வரி ரசீது / குடும்ப அட்டை / பாஸ்போர்ட்டின் நகலை இணைத்து, உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மூன்று நாட்களில் டிரைவிங் லைசன்ஸ் கைகளில் கிடைக்கும்.
9. படிக்கும் இடத்தில்...
வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அந்தப் பகுதியிலேயே கூட டிரைவிங் லைசன்ஸுக்கு விண்ணப்பிக்கலாம். நிரந்தர முகவரிச் சான்றாக அவர்கள் குடும்ப அட்டை / வாக்காளர் அடையாள இணைக்க வேண்டும். தற்போதைய முகவரியாக அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் முதல்வரிடம் ஒரு கடிதம் பெற்று இணைக்க வேண்டும். இந்த முறையில் டிரைவிங் லைசன்ஸ் பெறுபவர்களுக்கு தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி என இரண்டும் டிரைவிங் லைசன்ஸில் இடம்பெறும்.
10. சர்வதேச ஓட்டுநர் உரிமம்
படிப்பு, வேலை, இதர காரணங்களுக்காக வெளிநாடு செல்பவர்கள், அங்கு செல்லுபடி யாகக்கூடிய ஓட்டுநர் உரிமத்தையும் உங்கள் பகுதியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திலேயே உரிய கட்டணத்துடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை: நடப்பில் இருக்கும் டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், செல்லவிருக்கும் நாட்டின் விசா, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் - 3, இந்திய நேஷனாலிட்டி சான்று, மருத்துவச் சான்று (படிவம் 1-A).
11. தரகர்களைத் தவிர்க்கவும்...
டிரைவிங் லைசன்ஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள், சந்தேகங்களை நிவர்த்திசெய்துகொள்ள ஏரியாவின் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக மக்கள் தொடர்பு அலுவலரை அணுகலாம். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட டிரைவிங் ஸ்கூல் மூலமும் விண்ணப்பிக்கலாம். இடைத் தரகர்களைத் தவிர்க்கவும்.
12. மேலதிக தகவல்களுக்கு...
www.tn.gov.in/staஎன்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
சு.சூர்யா கோமதி
நன்றி : அவள் விகடன் - 29.12.2015
No comments:
Post a Comment