தொடர்ந்து இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டமுடியாத சூழ்நிலை, என்ன செய்ய வேண்டும்?
ராம், தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவருக்குக் கை நிறைய வருமானம் வந்துகொண்டிருந்தது. திருமணமாகி மூன்று மற்றும் ஐந்து வயதில் இரண்டு குழந்தைகள் அவருக்கு இருந்தன. அவரை ஒரு இன்ஷூரன்ஸ் ஆலோசகர் அணுகி, குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்காக ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்குமாறு கூறினார்.
ராமுவும் தன் தேவைக்கேற்ப பாலிசி இருப்பதாக நினைத்து இரண்டு பாலிசிகளை வாங்கினார். அவை இரண்டும் 15 வருடம் பிரீமியம் செலுத்தும் எண்டோவ்மென்ட் பாலிசி. ஒரு வருடத்துக்கு ரூ.50,000 வீதம் பிரீமியமாக இரண்டு பாலிசிகளுக்கும் ரூ.1,00,000 கட்டிக்கொண்டு வந்தார்.
ஐந்து வருடம் கழித்து அவருடைய நிறுவனம் சரியாக இயங்காத காரணத்தி னால் மூடும் நிலை ஏற்பட்டதால், அவருக்கு வேலை இல்லாமல் போனது. இதனால் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் கட்ட முடியாமல் போனது.
அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு நிதி ஆலோசகரை அணுகினார். அந்த நிதி ஆலோசகரோ அந்த பாலிசிகளை அலசி ஆராய்ந்து விட்டு, ‘‘நீங்கள் வைத்திருப்பது எண்டோவ்மென்ட் பாலிசி. இந்த பாலிசியை எடுக்கும்முன் நன்கு யோசித்து முடிவெடுப்பது முக்கியம். ஏனெனில், இந்த பாலிசிகளை எடுத்துவிட்டால், நீண்ட கால அடிப்படையில் பிரீமியம் செலுத்தும் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவீர்கள். பிரீமியத்தை முழுக்க செலுத்தி னால் மட்டுமே இந்த பாலிசி மூலம் முழுமையான பலனை நீங்கள் அனுபவிக்க முடியும். இடையில் பாலிசியில் பிரீமியம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டால், அந்த பாலிசியை சரண்டர் செய்யலாம். அல்லது ‘பெய்ட் அப் பாலிசி’யாகவோ மாற்றிக் கொள்வதுதான் ஒரே வழி’’ என்றார்.
இப்போது ‘பெய்ட் அப் பாலிசி’ என்றால் என்ன என்று தெரியாமல் குழம்பிப் போயிருக் கிறார் ராம். இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருக்கும் பலரும் ‘பெய்ட் அப் பாலிசி’ என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள்.
ஒரு பாலிசியின் பிரீமியத்தை குறைந்தபட்சமாக 3 அல்லது 5 வருடத்துக்கு தொடர்ந்து செலுத்தி இருந்தால், அதை ‘பெய்ட் அப் பாலிசி’யாக மாற்ற முடியும்.
இவ்வாறு செய்வதால், பாலிசியின் பிரீமியத்தை தொடர்ந்து கட்டும் அவதியில் இருந்து தப்பிப்பதுடன், குறைந்த பட்ச பாலிசிப் பலன்களையும் அனுபவிக்க முடியும்.
ரூ.50,000 வீதம் 15 வருடம் பிரிமீயம் கட்ட வேண்டிய பாலிசியின் காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் என்று எடுத்துக் கொள்வோம். பாலிசிதாரர் 5 வருட பிரீமியம் தொடர்ந்து செலுத்தி இருக்கும் நிலையில், இந்த பாலிசியை தொடர முடியாமல் ‘பெய்ட் அப் பாலிசி’ யாக மாற்றினால் என்ன ஆகும் என்பதற்கான சூத்திரம் இதோ:
பெய்ட் அப் மதிப்பு =
(பிரீமியம் கட்டிய வருடங்கள் X காப்பீட்டுத் தொகை) / மொத்த பிரீமியம் கட்டும் வருடம்
அதாவது, பெய்ட் அப் மதிப்பு = (5 X ரூ.10,00,000) / 15 = ரூ.3.33 லட்சம் ஆகும். இந்த பாலிசியை பெய்ட் அப்பாக மாற்றினால், ரூ.3.30 லட்சத்துக்குக் காப்பீடு கிடைப்ப துடன், பாலிசியின் போனஸ் மற்றும் இதர வருமானங்களை பாலிசி முதிர்வில் மொத்தமாக பெற முடியும். தோராயமாக, இப்போது உள்ள பெரும்பாலான பாலிசிகளில் 4% முதல் 5% வரை வருடாந்திர போனஸாக வழங்கப் படுகிறது. இந்த பாலிசியை ‘பெய்ட் அப்’பாக மாற்றினால், பாலிசியின் முதிர்வுத் தொகையாக சுமார் ரூ.3.5 லட்சம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுவே பாலிசிதாரர் பாலிசி முதிர்வுக்குமுன் இறக்கும் தருவாயில், குறைக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையான ரூ.3.33 லட்சம் காப்பீட்டாளரின் குடும்பத்துக்குப் போய் சேரும்.
இதே பாலிசியை சரண்டர் செய்ய விரும்பினால், எவ்வளவு கிடைக்கும் என்பதற்கான சூத்திரம் இதோ:
சரண்டர் மதிப்பு =
(30% அல்லது 40% X பிரீமியம் செலுத்தி யது) – முதல் வருட பிரீமியம்
அதாவது, சரண்டர் மதிப்பு = (30% X ரூ. 2,50,000) – ரூ. 50,000 = ரூ. 1,00,000 ஆகும். அதாவது, இவர் ஐந்து வருட பாலிசித் தொகையாக ரூ.2.5 லட்சம் கட்டி இருந்தாலும், பாலிசி சரண்டர் தொகையாக ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
இரண்டில் எது பெஸ்ட்?
சரண்டர் தொகையான ரூ.1 லட்சத்தை மீதமுள்ள 10 வருடத்துக்கு 8% வட்டியில் வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்தால், சுமாராக ரூ.2.15 லட்சம் கிடைக்கும். இதுவே, சிறிது ரிஸ்க் எடுத்து பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்தால், 12% முதல் 15% வரை வருமானம் கிடைக்கும். சரண்டர் தொகையான ரூ.1 லட்சத்தை 10 வருடத்துக்கு 15% வருமானத்தில் முதலீடு செய்தால், சுமாராக ரூ.4 லட்சம் வரை கிடைக்கும். ஆனால், இப்படி செய்யும் போது, ‘பெய்ட் அப் பாலிசி’ மூலம் கிடைக்கும் ரூ.3.33 லட்சம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் உங்களுக்குக் கிடைக்காது.
பிரீமியம் கட்டாமல் ஏதாவது ஆயுள் காப்பீடு பாலிசி உங்களிடம் இருந்தால், ‘பெய்ட் அப்’ மதிப்பு, சரண்டர் மதிப்பு ஆகியவற்றை கணக்கிட்டு, எது லாபம் என கவனித்து முடிவு எடுங்கள்.
No comments:
Post a Comment