பைக் பராமரிப்பு - என்ன செய்ய வேண்டும்?
கொஞ்சம் அக்கறை.. கொஞ்சம் தெளிவு!
பைக் பராமரிப்பு
எந்த பைக் வாங்கியவர்களாக இருந்தாலும், கணிசமானவர்களுக்கு பைக் மீதான அக்கறை, அதிகபட்சம் ஃப்ரீ சர்வீஸ் முடியும் வரைதான் நீடிக்கும். அப்படி இருந்தால், பைக் அதிக செலவு வைக்கும் என்பதே உண்மை.
'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மெக்கானிக் சொல்கிற அத்தனை ஸ்பேர் பார்ட்ஸையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக் கொடுத்துவிடலாமா? இல்லை. அப்படிச் செய்வதற்குப் பெயர் பராமரிப்பு இல்லை. அப்படி என்றால் பைக்கைப் பராமரிப்பதுதான் எப்படி?
''கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பைக் பற்றிய அறிவு - இவை இருந்தால் போதும். நம் பைக் வாழ்வாங்கு வாழும்'' என்கிறார், மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் பைக் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் ரமேஷ். ''பைக் பராமரிப்பில் இரண்டு வகை. ஒன்று, நாமே செய்கிற தினசரிப் பராமரிப்பு. அடுத்தது, ரெகுலர் மெக்கானிக் சர்வீஸ். இதில், தினசரிப் பராமரிப்பை ஒழுங்காகச் செய்துவந்தாலே, சர்வீஸ் செலவு மிகவும் குறைவாக இருக்கும்'' என்கிறார் ரமேஷ். தினசரி என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவரே சொன்னார்.
பைக் ஸ்டார்ட் செய்வது எப்படி?
இரவு நிறுத்திய பைக்கை காலையில் ஸ்டார்ட் செய்யும்போது, கிக்கரை சில முறை மிதித்து பம்ப் செய்த பிறகு ஸ்டார்ட் செய்வதுதான் இன்ஜினுக்கு நல்லது. அப்படி ஸ்டார்ட் செய்யும்போது ஆக்ஸிலரேட்டரை முறுக்காமல் ஐடிலிங்கில் சிறிது நேரம் இயங்கிய பிறகு ஆக்ஸிலரேட்டரை உயர்த்தலாம். காரணம், இரவு நிறுத்திய பைக்கின் இன்ஜினின் மேல் பகுதியில் தேங்கி இருந்த ஆயில் வடிந்து கீழே தேங்கி இருக்கும். ஆயில் இல்லாமல் உலர்ந்துபோன இன்ஜினை ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால், ஆயில் சரிவரப் பரவாமல் இன்ஜின் தேய்மானம் ஆகும். அதனால், முதலில் பைக்கை ஆன் செய்யாமலேயே மூன்று நான்கு தடவை கிக்கரை மிதித்து ஆயில் பம்ப் செய்துவிட்டு, பிறகு ஆன் செய்து கிக்கர் மூலம் ஸ்டார்ட் செய்வது நல்லது. அதேபோல், செல்ஃப் ஸ்டார்ட் இருக்கும் பைக்காக இருந்தாலும், காலையில் மட்டும் கிக்கரைப் பயன்படுத்துவது பேட்டரியின் ஆயுளுக்கு நல்லது.
பிரேக்
பிரேக் பிடிப்பது ஒரு கலை. அதை பெரும்பாலும் தவறாகவே உபயோகிக்கிறோம். எப்போதும் முன் - பின் இரண்டு பிரேக்குகளையும் ஒன்றாக அப்ளை செய்வதுதான் சிறந்த முறை. அதேபோல், அவசரமாக பிரேக் செய்யும்போது கிளட்ச் பிடிப்பதை அறவே தவிருங்கள். ஏனெனில், இன்ஜின் பிரேக் - பைக்கை நிறுத்த பெருமளவு உதவி செய்கிறது. மேலும், பைக்கின் ஸ்டெபிளிட்டியைக் காக்கிறது. வேகத்தடையைப் பார்த்தவுடன் நம் கையும் காலும் தானாக பிரேக்கைத் தேட வேண்டும். பைக்கின் வேகம் குறைத்த பின்பே, வேகத் தடை மீது ஏற வேண்டும். இதன் மூலம் ஃபோர்க் சேதமாவதைத் தவிர்க்கலாம்.
டிரம் பிரேக் கொண்ட பைக்கில், முன் - பின் இருக்கும் பிரேக் ஷூ ஒரே மாதிரியாகத் தேய்ந்திருக்க வேண்டும். பிரேக் செய்யும்போது, முன் பக்க பிரேக் அதிகமாகவும், பின் பக்க பிரேக் குறைவாகவும் பிடித்தால், பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறுவோம். டிஸ்க் பிரேக் கொண்ட பைக் என்றால், ஆயில் அளவு சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். டிஸ்க் பிரேக்கில் ஏதாவது பிரச்னை என்றால், அதில் நாம் கை வைக்கக் கூடாது. மெக்கானிக்கிடம்தான் கொண்டுசெல்ல வேண்டும்.
பெட்ரோல்
'ரிசர்வ்’ என்ற ஆப்ஷன் உங்கள் பைக்கில் இருப்பதையே மறந்துவிடுவது உத்தமம். காரணம், பெட்ரோல் 'ஆன்’ செய்த நிலையில் பைக் ஓட்டுவதற்கும், ரிசர்வ் நிலையில் ஓட்டுவதற்கும் மைலேஜ் வேறுபாடு இருக்கும். அதனால், எப்போதும், 'ஆன்’ பொசிஷனிலேயே பைக்கை ஓட்டும் வகையில் டேங்க்கில் பெட்ரோல் இருப்பது நல்லது.
டயர்
பெரும்பாலும் இன்று பைக்குகளில் ட்யூப்லெஸ் டயர்கள்தான். நார்மல் டயர் வழியில் பஞ்சரானால், வால் ட்யூபைப் பிடுங்கிவிட்டு பஞ்சர் கடை வரை உருட்டிப் போவோம். ட்யூப்லெஸ் டயரில் ஒரே ஒரு பிளஸ் பாயின்ட்... பஞ்சர் கடை வரை வேண்டுமானால், கவனமாக பைக்கை ஓட்டிக்கொண்டு செல்லலாம். அவ்வளவே! சிலர் ட்யூப்லெஸ் டயர் பஞ்சரானதே தெரியாமல், 'வண்டியில ஏர் கம்மியா இருக்குடா... காலையில நைட்ரஜன் ஃபில் பண்ணாப் போதும்'' என அசால்ட்டாக இருகின்றனர்.
ஒருவேளை, மறுநாள் காலைக்குள் குண்டும் குழியுமான ரோட்டில் பயணம் போனால், புது டயர் வாங்க நேரலாம். காலமறிந்து செய்யப்படும் சிறு செயலும் ஆயிரக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தும். இது தவிர, இன்ஜின் ஸ்பார்க் பிளக் சுத்தம் செய்வது, காற்றழுத்தத்தைக் கண்காணிப்பது போன்ற அடிப்படை வேலைகளைத் தெரிந்துவைத்திருப்பதும் நல்லது.
செயின் ஸ்பிராக்கெட் ஒரு முக்கியமான பாகம். இது, அதிக இறுக்கமாகவும் இருக்கக் கூடாது: தளர்வாகவும் இருக்கக் கூடாது. எப்போதும் சரியான இறுக்கத்தில் இருக்க வேண்டும். செயின் தளர்ந்தால், சத்தம் வரும். லேசாகத்தானே சத்தம் வருகிறது. சர்வீஸ் செய்யும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டால், செயின் ஸ்பிராக்கெட் செட்டையே மாற்ற வேண்டி வரலாம். இதை சரியாகப் பராமரிக்கவில்லை என்றால், பிக்-அப், மைலேஜ் இரண்டும் குறையும்
இது எல்லாவற்றையும்விட, முதலில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் உங்கள் பைக்கோடு கொடுக்கப்பட்ட மேனுவலை (manual) வாசிப்பது. அது உங்கள் பைக் பற்றிய புரிதலைக் கொடுக்கும்.
மோ.அருண்ரூப பிரசாந்த்
நன்றி : மோட்டார் விகடன் - 01.05.2016
No comments:
Post a Comment