எளிதாக இன்சூரன்ஸ் க்ளெய்ம் பெற என்ன செய்ய வேண்டும்?
இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் மிகப் பெரிய சவாலாக இருப்பது க்ளெய்ம்தான். இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டாலே, எளிதாக க்ளெய்ம் கிடைத்துவிடும் என்று நினைத்து பாலிசி எடுப்பவர்கள், பிற்பாடு இழப்பீடு கிடைக்கவில்லை என்றதும் ஏமாந்து போகிறார்கள். எதற்கு, எவ்வளவு க்ளெய்ம் கிடைக்கும் என்பது தெரியாமல் பாலிசி எடுப்பதே இதற்கு காரணம். தவிர, க்ளெய்ம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் பலருக்கு தெரிவதில்லை. நாம் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு க்ளெய்ம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களை எப்படி தவிர்க்கலாம் என்று மெட்சேவ் ஹெல்த்கேர் டிபிஏ நிறுவனத்தின் மேலாளர் மாரியப்பனிடம் கேட்டோம்.
க்ளெய்ம் நடைமுறை!
‘‘ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இரண்டு வகையில் க்ளெய்ம் பெற முடியும். ஒன்று கேஷ்லெஸ். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது பாலிசிதாரர் பணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. இன்னொன்று, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தபிறகு பாலிசியில் க்ளெய்ம் செய்வது. இதில்தான் க்ளெய்ம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க அல்லது குறைக்க பாலிசியில் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பம் செய்யும்போது சில விஷயங்களை கவனிப்பது அவசியம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை 24 மணி நேரத்துக்குள் டிபிஏவுக்கு தெரிவிப்பது அவசியம். அதேபோல சிகிச்சை எடுத்துக் கொண்ட 15 நாட்களுக்கு க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்!
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்ததற்கான ஒரிஜினல் பில், மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது மருத்துவமனையில் வழங்கப்படும் அறிக்கை (Discharge Summary Report of Patient), சிகிச்சைக்கு தொடர்புடைய ஆவணங்கள் அதாவது, லேப் ரிப்போர்ட், ஸ்கேன் ரிப்போர்ட் போன்றவை, மருந்து வாங்கியதற்கான ஆதாரம், அதற்குரிய மருத்துவர் அறிக்கை, மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் படிவத்துடன் இணைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனம் அல்லது டிபிஏவிடம் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கலாம் ’’ என்றார்.
பல பாலிசிகள்!
ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகள் மற் றும் டாப்அப் பாலிசியில் எப்படி க்ளெய்ம் செய்வது என்பது குறித்து ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பாகுபலி விளக்கமாக கூறுகிறார்.
“வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் குரூப் பாலிசி, தனிநபர் பாலிசி, டாப் அப் பாலிசி என பல பாலிசிகள் வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் குரூப் அல்லது தனிநபர் பாலிசியில் எதில் வேண்டு மானாலும் பாலிசிதாரர் க்ளெய்ம் செய்துகொள்ள முடியும்.
சில நேரங்களில் மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும் போது இரண்டு பாலிசியிலும் க்ளெய்ம் செய்ய வேண்டிவரும். அதாவது, குரூப் மற்றும் தனிநபர் பாலிசியில் தலா ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ் தொகை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் க்ளெய்ம் 1.5 லட்சம் ரூபாய் வருகிறது. அப்போது இரண்டு பாலிசியிலும் நீங்கள் க்ளெய்ம் செய்யலாம். அப்படி செய்யும்போது முதலில் எடுத்த பாலிசி மூலம் அதிகபட்ச கவரேஜ் தொகை எவ்வளவோ, அது க்ளெய்மாக கிடைத்துவிடும். மீதமுள்ள க்ளெய்ம் தொகைக்கு இரண்டாவதாக எடுத்த பாலிசியில் க்ளெய்ம் செய்யலாம்.
முதலில் க்ளெய்ம் செய்யும் பாலிசி நிறுவனத்திடம் ஒரிஜினல் பில்களை தர வேண்டும். மீதமுள்ள தொகையை மற்றொரு நிறுவனத்தில் க்ளெய்ம் செய்வதற்கு வசதியாக ஒரு சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
டாப் அப் க்ளெய்ம்!
டாப் அப் பாலிசியை பொறுத்தவரை, குறிப்பிட்ட தொகைக்கு மேல்தான் க்ளெய்ம் செய்ய முடியும். அதாவது, ரூ. 2.5 லட்சத் துக்கு க்ளெய்ம் வருகிறது எனில் டாப் அப் பாலிசியில் உங்களுடைய அடிப்படை பாலிசி கவரேஜ் தாண்டி, மீதமுள்ள தொகைக்கு க்ளெய்ம் செய்யலாம். அடிப்படை பாலிசியின் கவரேஜ் தொகை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். 2.5 லட்சம் ரூபாய் க்ளெய்ம் தொகையில், அடிப்படை பாலிசி 2 லட்சம் ரூபாய் கவரேஜ் எனில் மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாய்க்குதான் டாப்அப் பாலிசியில் க்ளெய்ம் செய்ய முடியும். க்ளெய்ம் தொகை 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும்போது டாப் அப் பாலிசியில் க்ளெய்ம் செய்ய முடியாது.
பாலிசி எடுத்தபிறகு!
பாலிசி பத்தி ரம் கையில் கிடைத்த வுடன் உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் இருந்தால், அதற்கான ஆதாரத்தை தந்து மாற்றுவது நல்லது. மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனை பட்டியல், எந்தெந்த சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்கும், எந்த வியாதி களுக்கு காத்திருப்புக் காலம் உண்டு என்பதை கேட்டுத் தெரிந்துக் கொள்வது முக்கியம்.
பாலிசி எடுப்பதற்கு முன்பு உள்ள நோய்களுக்கு காத்திருப்புக் காலம் இருக்கும். இது பொதுவாக 48 மாதங்கள் இருக்கும். ஏற்கெனவே உள்ள நோய்களை தெரிவிக்காமல் இருந்தால் க்ளெய்ம் நிராகரிப் பதற்கான வாய்ப்புள்ளது.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது சில பொருட்களுக்கு க்ளெய்ம் கிடைக்காது. அதாவது சிரஞ்ச், கையுறை போன்றவை இருக்கும். எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடையாது என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மாற்றங்கள் அப்டேட்!
இன்ஷூ ரன்ஸ் பாலிசி எடுத்தபிறகு பாலிசி தாரரின் முகவரியில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதை உடனடியாக அப்டேட் செய்வது நல்லது. ஏனெனில் முகவரி மாற்றத்தை அப்டேட் செய்யவில்லை என்றால் க்ளெய்ம் கிடைக்க காலதாமதம் ஆகலாம்” என்றார்.
டேர்ம் இன்ஷூரன்ஸ்! (ஆயுள் காப்பீடு)
ஆயுள் காப்பீடான டேர்ம் இன்ஷூரன்ஸிலும் க்ளெய்ம் சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது. இதை சமாளித்து எளிதாக க்ளெய்ம் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து பார்தி அக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை துணைத் தலைவர் சி.எல்.பரத்வாஜிடம் கேட்டோம்.
‘‘டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை பாலிசிதாரரின் மரணத்துக்கு பிறகு நாமினிதான் க்ளெய்ம் செய்ய முடியும். எனவே, க்ளெய்ம் விஷயத்தில் சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
க்ளெய்ம் நடைமுறை!
பாலிசிதாரர் மரணம் அடைந்தபிறகு பாலிசியின் ஒரிஜினல் பத்திரம், நாமினியின் (நாமினி பற்றிய விரிவான கட்டுரையைப் படிக்க:http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10958 அடையாளம் மற்றும் முகவரி சான்று, பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ், விபத்து மூலமாக மரணம் ஏற்பட்டிருந்தால் மருத்துவரின் அறிக்கை ஆகியவற்றுடன் நாமினி, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் க்ளெய்ம் கேட்டு கடிதம் எழுத வேண்டும். க்ளெய்ம் படிவத்தை பூர்த்திசெய்து, மேற்கூறிய ஆவணங்களை இணைத்து க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசி வைத்திருப்பவர்கள் மேற்கூறிய ஆவணங்களை இணைத்து அந்தந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் க்ளெய்ம் செய்யலாம். பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ் வாங்கும் போது கூடுதல் படிகள்(copy) வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இறப்புச் சான்றிதழ் ஒரிஜினல் கொடுப்பது அவசியம்.
மேலும், பாலிசிதாரர் மரணம் அடையும் சூழ்நிலையின் அடிப்படையில் உடற்கூறு ஆய்வறிக்கை கேட்கப்படும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும் போது மரணம் அடைந்திருந்தால் மருத்துவரின் அறிக்கை அவசியம். இதன் மூலமாக பாலிசிதாரரின் மரணத்துக்கான காரணத்தை தெரிந்துகொள்ள இது உதவும்” என்றார்.
நிராகரிப்பை தவிர்க்க!
டேர்ம் இன்ஷூ ரன்ஸ் பாலிசியில் பெரும்பாலா னவர்கள் தங்களின் விவரங்களை தவறாக தந்துவிடுகிறார்கள். வயது, ஏற்கெனவே உள்ள நோய், அதற்கான சிகிச்சை குறித்த விவரத்தை குறிப்பிடுவது அவசியம். ஏஜென்ட் மூலமாக பாலிசி எடுத்தாலும், ஆன்லைனில் பாலிசி எடுத்தாலும் பாலிசிதாரர்கள் தகவல்களை தவறாக தருகிறார்கள். இது முற்றிலும் தவறு. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது எந்த தகவல் தந்தாலும் அது உண்மையான தகவலாக இருப்பது அவசியம்.
இரா.ரூபாவதி
நன்றி : நாணயம் விகடன் 18.10.2015
No comments:
Post a Comment