வீடு கட்ட வங்கியில் கடன் பெற என்ன செய்ய வேண்டும்?
எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது பழமொழி. ஆனால் அது இன்றும் நம் பெரும்பாலானவர்களின் மனங்களிலும் கனன்றுகொண்டிருக்கும் நீங்காத ஆசை. ஒரே படுக்கையறை கொண்ட வீடாக இருந்தாலும் பரவாயில்லை. அது நமக்குச் சொந்த வீடாக இருக்க வேண்டும்.
இந்தக் கனவு நிறைவேற முன்பைவிட இப்போது அதிக சாத்தியக் கூறுகள் உருவாகி உள்ளன. வங்கிக் கடன், அதுவும் வீட்டுக் கடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக் கடனுக்கு மிகவும் குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. 9.6-ல் இருந்து 9.45 சதவீதம்வரைகூடச் சில வங்கிகள் கடன் தருகின்றன.
வீட்டுக்கடனுக்குள்ள சலுகைகள்
மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடனுக்குச் சில சலுகைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று கடனைத் திருப்பி செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம். கடனை நாம் ஐந்து ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தலாம். இருபத்தைந்து ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தலாம். அது நாம் தேர்ந்தெடுக்கும் கடன் தொகை மற்றும் திட்டத்தைப் பொறுத்தது.
வங்கிகள் நாம் புதிதாக நிலம் வாங்கி அதில் வீடு கட்டவும், புது வீடு வாங்கவும், புது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கவும், பழைய வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கவும், இருக்கும் வீட்டை மேம்படுத்தவும் கடன் வழங்குகின்றன.
கடன் பெற தேவையான வயதுத் தகுதி
கடன் பெறத் தகுதி என்பது பதினெட்டு வயது முதல் ஐம்பது வயது வரை ஆகும். சில வங்கிகளில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் அல்லது சட்ட வல்லுநர்கள் எனில் அறுபது வயது வரை அளிக்கின்றனர். கடன் பெறும் நபர் பணியில் இருந்தால் ஓய்வு பெறுவதற்குள் EMI முடிந்து விடுமா என்பதை வங்கிகள் சரிபார்க்கின்றன.
ஒருவேளை ஓய்வு பெற்ற பின்னும் EMI செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு, அதற்கேற்ற வருமானம் நமக்கு இருக்கும் பட்சத்தில் வங்கிகள் கடன் அளிக்கும். சில சமயங்களில் கடன் பெறுபவர் அறுபது வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால் அவரது துணைவியோ, வாரிசுதாரரோ எழுத்துபூர்வமாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் வாரிசுதாரர் அதனைச் செலுத்த நேரிடும்.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
வங்கிகள் கடன் அளிக்கும் என்றாலும் முழுமையாகக் கடன் தராது. 80 சதவீதத்திலிருந்து 85 சதவீதம் வரை வங்கிகள் கடனாகத் தரும். மீதித் தொகை நம் பொறுப்புதான். மீதியைத்தான் கடனாகத் தருவார்கள். இதைக் கட்டுமானம் முடிய முடிய மூன்று நான்கு தடவையாகப் பிரித்து தருவார்கள். வீட்டின் விலை அல்லது தோராயமான மதிப்பீட்டின் எண்பது சதவீதம் கடனாகக் கிடைக்கும் என்றாலும் ஒருவரின் வருமானத்துக்கு தக்கபடிதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.
25- 30 வயதில் வீடு வாங்க நினைத்தால் நம் சம்பளத்தைப் போல எழுபது மடங்கு கிடைக்கும் என்றும் 45 வயதிற்கு கீழ் என்றால் நம் சம்பளத்தைப் போல ஐம்பது முதல் அறுபது மடங்கு வரை கிடைக்கும் என்றும் 45 வயதிற்கும் அதிகம் மற்றும் சுயதொழில் செய்பவர் என்றால் நம் ஆண்டு வருமானத்தைப் போல நான்கு அல்லது ஐந்து மடங்கு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி நம்மிடம் இருக்கிறதா என வங்கிகள் பரிசீலிக்கும். பிற EMI போக, வீட்டுக் கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் முப்பத்தைந்து சதவீதமேனும் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டே வங்கி தன் கடன் தொகையை நிர்ணயிக்க முன்வரும்.
கூடுதல் கடன்
வீடு கட்டி முடித்த பின் உள் அலங்காரம் செய்ய அல்லது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வங்கியில் ‘டாப் அப் லோன்’ எனும் வசதி மூலம் கூடுதலாகக் கடனையும் பெற முடியும். அதன்படி கடன் தொகையிலிருந்து பதினைந்து சதவிகீதம் கிடைக்கும். ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு மட்டுமே கிடைக்கும். செயல்முறை கட்டணம் என்று அளிக்கப்படும் கடன் தொகையின் 1 சதவீதத்தை வங்கி எடுத்துக்கொள்ளும். வங்கிகளுக்கு வங்கி வித்தியாசப்படும். பிற வங்கிகளிலிருந்து கடனை எடுத்துக் கொள்ளும் வசதியும் பல வங்கிகளில் உண்டு. அதாவது பாதி கடன் செலுத்திய நிலையில் நாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேறு வங்கியில் நம் கடனை மாறிக் கொள்ளலாம்.
நம்முடைய ஆவணங்கள் அனைத்தும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் வங்கிக்கடன் பதினைந்து நாட்களுக்குள் கிடைத்து விடும் என்கிறார் வங்கி மேலாளர். வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதன் நடைமுறை வழக்கங்களைப் பற்றி இணையத்திலோ வங்கி உயரதிகாரிகளிடமோ கேட்டு அறிந்து கொள்வது நல்லது. வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களில் சிறு மாற்றங்கள் இருக்கலாம், அவற்றை ஒரு முறை ஒப்பிட்டு ஆராய்ந்து முடிவெடுக்கலாம். கடன் ஒப்பந்தம் முழுவதையும் கவனமாகப் படிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
பொதுவாக நாம் வங்கிகளில் விண்ணப்பிக்கும்போது நம்முடைய ஆவணங்கள் அனைத்தை யும் பரிசீலித்துத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- புகைப்படத்துடன் கூடிய அடையாளச்சான்று
- முகவரிச்சான்று
- வயதுச் சான்று (பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது வகுப்பின் மதிப்பெண் பட்டியல்)
- மனைப் பத்திரம் (சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது)
- தாய்ப்பத்திரம்
- வில்லங்கச் சான்றிதழ்
- விற்பனைப் பத்திரத்தின் நகல்
- சட்ட வல்லுநரின் கருத்து
- வீட்டிற்கு உண்டான வரைபடம், அங்கீகாரம் நகல்
- வீட்டின் மதிப்பீடு, கட்டுமான செலவு ஆகியவற்றின் பொறியாளர் அறிக்கை
- வருமானச் சான்றிதழ்
- கடந்த ஆறு மாதத்துக்கான வங்கி பாஸ்புக் நகல்
- வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்த படிவத்தின் நகல்
- பான் அட்டையின் நகல்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 30.04.2016
No comments:
Post a Comment