disalbe Right click

Tuesday, May 31, 2016

வேலைக்கு தேர்ந்தெடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள்


வேலைக்கு தேர்ந்தெடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள்
என்ன செய்ய வேண்டும்?
"பிளேஸ்மென்ட்' என்ற பெயரில் பொறியியல் மாணவர்கள் நூதன முறையில் ஏமாற்றப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 சென்னையில் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்தியப் போராட்டம் இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

 பொறியியல் துறைகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, படிப்பை முடிப்பதற்கு முன்பே 100 சதவீத வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதத்தை அளித்து, கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களையும் காண்பித்து தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை ஈர்த்து வருகின்றன.

 இந்த விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, இதுபோன்ற பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்குப் படிப்பை முடிக்கும் முன்பே வேலைவாய்ப்பு கிடைக்கும். படிப்பை முடித்த பின்னர் அந்த நிறுவனத்திலும் பணிக்குச் சேர்ந்துவிடுவார். ஆனால், 6 மாதம் கழித்து அந்த நிறுவனத்தின் சார்பில் மீண்டும் நடத்தப்படும் தேர்வில் 85 சதவீத மாணவர்கள் தோல்வியைச் சந்தித்து, அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்
படுகின்றனர்.

 இப்படி, "எல் அண்ட் டி இன்ஃபோடெக்' என்ற நிறுவனத்தின் சார்பில் வெளியேற்றப்பட்ட மாணவர்கள்தான் சென்னை சோழிங்கநல்லூரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 1500-க்கும் அதிமான மாணவர்களை இந்த நிறுவனம் இதுபோல நிராகரித்துள்ளது. கடந்த 2014-இல் இந்த மாணவர்களுக்கு பணி வாய்ப்புக்கான கடிதத்தை வழங்கிய இந்த நிறுவனம் அதன் பிறகு, பணியில் சேருவதற்கான தேதியை மாணவர்களுக்குத் தெரிவிக்காமலே இருந்து வந்துள்ளது.

 இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வை அந்த நிறுவனம் நடத்தியுள்ளது. அந்தத் தேர்வில் தகுதி பெறவில்லை என்று கூறி இந்த மாணவர்கள் அனைவரையும் நிராகரித்துள்ளது.

 "பிளேஸ்மென்ட்' விஷயத்தில் இந்த ஒரு சம்பவம்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. வெளியில் தெரியாமல் பல ஆயிரம் பொறியியல் மாணவர்கள் இதுபோன்று வேலைவாய்ப்பை இழந்து வருவதாக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
 நடவடிக்கை எடுக்க இயலாது: "பிளேஸ்மென்ட்' என்ற பெயரில் நூதனமாக மாணவர்கள் ஏமாற்றப் படுகின்றனர்.

 பெரும்பாலான கல்லூரிகள் மாணவருக்கு ரூ. 10 ஆயிரம் என்ற வீதத்தில் கமிஷன் கொடுத்தே நிறுவனங்களை வளாகத் தேர்வுக்கு கல்லூரிக்குள் அழைத்து வருகின்றன. அவ்வாறு வரும் நிறுவனங்கள் கல்லூரியில் நடத்தும் எழுத்துத் தேர்வில் மிக எளிமையான கேள்விகளையே கேட்கின்றன.

 இதில், சராசரிக்கும் குறைவாக படிக்கும் மாணவர்களும் தகுதி பெற்று, பணி வாய்ப்புக்கான கடிதத்தைப் பெற்று விடுகின்றனர்.

 பின்னர் படிப்பை முடித்ததும் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தில் 6 மாத கால பயிற்சியில் அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அந்தப் பயிற்சி முடிந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித் தேர்வை அந்த நிறுவனம் நடத்தும். அப்போது மிகவும் கடினமான கேள்விகளை நிறுவனங்கள் கேட்கின்றன.

 இதனால், தேர்வு செய்யப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் தோல்வியடைந்து, நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

 இந்த மோசடி குறித்து மாணவர்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்க இயலாது. ஏனெனில், தெளிவாக தேர்வு வைத்து மாணவர்கள் அவர்கள் தகுதியிழக்கச் செய்கின்றனர்.

 எனவே, பொறியியல் சேர்க்கை நடைபெறும் இந்த நேரத்தில் கல்லூரி முன்னாள் மாணவர்களிடம் நன்கு விசாரித்து சிறந்த பொறியியல் கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்வதுதான் ஒரே வழி என்கின்றனர் அண்ணா பல்கலைககழக பேராசிரியர்கள்.

 எங்கு புகார் தெரிவிப்பது?:

 இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் நல மைய இயக்குநர் இளையபெருமாள் கூறியது:

 சோழிங்கநல்லூரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. மாணவர்கள் புகார் அளித்தால்தான், அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியுமா அல்லது முடியாதா என்பது தெரியவரும். 

கடந்த ஆண்டு, இதுபோல வளாகத் தேர்வே நடத்தாமல் வேலைவாய்ப்புக்கான போலியான கடிதத்தை மாணவர்களுக்கு அளித்தது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு புகார் வந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட கல்லூரியை பல்கலைக்கழகம் எச்சரிக்கை செய்து அனுப்பியது.

 எனவே, போலியான பணிவாய்ப்பு தொடர்பாக 

044 - 22357080 மற்றும் 044-22357081 

என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம். 

அல்லது 

dsa@annauniv.edu 

என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

By  எம். மார்க் நெல்சன், சென்னை

நன்றி : தினமணி நாளிதழ் - 01.06.2016

Monday, May 30, 2016

வருமான வரி ரீபண்ட் பணத்தை உடனடியாக திரும்பப்பெற


வருமான வரி ரீபண்ட் பணத்தை உடனடியாக திரும்பப்பெற
என்ன செய்ய வேண்டும்?

சென்னை: எல்லாரும் வருமான வரி விவரங்களை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்து முடித்து ரீபண்ட் தொகைக்காக காத்திருக்கும் நேரம் இது. ஒரு வருடத்திற்கான வருமானத்தைச் சரியான முறையில் கணக்கிட்டு வருமான வரியைச் செலுத்தினாலும், பல்வேறு காரணங்களுக்காக வருமான வரிதுறையிடம் செலுத்திய வரிப் பணத்தில் மீதமுள்ள தொகையை திருப்பிப் பெறுவது மிகவும் சவாலான விஷயமாக தான் இன்றளவும் உள்ளது. 

சரி உங்கள் வரிப் பணத்தை உடனடியாக திரும்பப்பெற உதவும் 10 வழிகளை நாம் இப்போதும் பார்ப்போம்.

1) வருமானவரி விவரங்கள் தாக்கல் செய்வது கட்டாயம்:

 உங்களுக்கு வருமான வரி ரீஃபன்ட் அல்லது அதிக வரி திரும்பக் கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் வரிவிவரங்களைத் தாக்கல் செய்திருக்க வேண்டியது அவசியம். வருமான வரித் துறை உங்கள் கணக்குகளைத் தானே செய்து உங்களுக்கான வரிப் பணத்தைத் திரும்பத் தராது.

2) வரி விவரங்களைக் கெடுவுக்குள் தாக்கல் செய்தல்: 

வருமானவரி தாக்கல் செய்யவேண்டிய கடைசி நாள் வரை காத்திருக்காமல் கூடிய வரையில் தாக்கல் செய்துவிடுங்கள். உங்கள் அதிகப் பட்ச வரியை உடனே திரும்பப் பெறும் வழிகளில் இதுவும் ஒன்று. இந்த வருடம் நிறையபேர் ஒரு வாரத்திற்குள் ரீஃபண்டுகளைப் பெற்றதாக அறிகின்றோம்.

3) ஆன்லைனில் வரிவிவரத் தாக்கல் 

நடப்பாண்டு முதல் உபரிவரியை திரும்பப் பெற விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. எனவே நேரடி விண்ணப்பங்களை நம்பிக்கொண்டு வழிமுறை சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

4) ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ் ஆகியவற்றை ஒப்பிட்டுச் சரிபார்த்தல் 

ஃபார்ம் 16-இல் (டிடிஎஸ்) மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள வருவாய் மூல வரித் தொகை சரியாக உள்ளதா எனப் பார்க்க வேண்டியது அவசியம். வருமான வரித்துறை ஃபார்ம் 26ஏஎஸ் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொகைப் படிதான் உபரிவருவாயை திரும்ப அளிக்கும். எனவே வரிவிவரத் தாக்கலுக்கு முன்னதாக இவ்விரு படிவங்களில் உள்ள தொகைகளையும் சரிபார்த்தல் மிகவும் அவசியம்

5) டான் எண்ணைச் சரியாக அளிக்க வேண்டியது அவசியம்

 டான் நம்பர் என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பிரத்தியேகமாக வழங்கப்படும் வரிவிதிப்பிற்கான எண்ணாகும். எனவே ஃபார்ம் 16 படிவத்தில் உள்ள டான் எண்ணைச் சரியாக அறிந்து வரிவிவரத் தாக்கல் செய்யும்போது குறிப்பிடவேண்டும். அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில் வரித்துறை உங்களுக்கு உபரி வரியைத் திரும்ப அளிக்காது அல்லது அதற்கான காரணம் கேட்டு உங்களுக்கு அறிவிப்பை அளிக்கும் (ஏனெனில் உங்கள் டான் எண் வெவ்வேறாக அல்லது தவறாக இருக்க வாய்ப்புள்ளது) 

6) சரியான வங்கி விவரங்களைத் தரவேண்டும் 

உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக உங்கள் உபரி வரித் தொகையைப் பெற நீங்கள் கோரியிருந்தால் அதற்கான சரியான வங்கி விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டியது அவசியம். இதில் தவறுகள் ஏற்பட்டால் உங்கள் பணம் திரும்பப் பெறுவதில் காலத் தாமதம் ஏற்படலாம். உங்கள் வங்கிக் கணக்கு எண் (பத்து இலக்க எண்), வங்கியின் எம்ஐசிஆர் குறியீட்டு எண் மற்றும் வங்கிக் கிளை மற்றும் தொடர்புக்கான முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.

7) சரியான முகவரியைத் தரவேண்டும் 

உங்கள் பணத்தைத் திரும்பப் பெற அஞ்சல் வழியைத் (காசோலை மூலம்) தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் முகவரியை சரியாகத் தரவேண்டியது அவசியம். இதில் தவறு ஏற்பட்டால் அனுப்பப்பட்ட காசோலை மீண்டும் வரித்துறைக்கே சென்றுவிடும். இதனால் தேவையற்ற தாமதங்கள் ஏற்படும். ஒருவேளை நீங்கள் காசோலையைத் தாமதமாகப் பெற்று அதற்கான பணம் பெறும் தேதி காலாவதி ஆகியிருந்தால் உங்கள் பகுதி கணக்கு அதிகாரியை அணுகவும். இது புதிய காசோலையைப் பெற உங்களுக்கு உதவும்

8) பான் கார்டிலுள்ள பெயரும் வங்கிக் கணக்குப் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். 
உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் பெயரும் பான் கார்டிலுள்ள பெயரும் வெவ்வேறாக இருந்தால் அது உங்கள் தொகையைப் பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும். ஒருவேளை உங்கள் தொகை கொடுக்கப் பட்டுவிட்டதாக் குறிப்பிடப்பட்டு ஆனால் நீங்கள் தொகையைப் பெறவில்லையெனில் உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள். அதில் எந்தக் குழப்பமும் இல்லாதபட்சத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையை அணுகவும். ஏனென்றால் இந்த வங்கி வருமான வரியைத் திரும்பத்தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. 
Cash Management Product (CMP) 
State Bank of India 
SBIFAST 
31, Mahal Industrial Estate Off Mahakali Caves Road 
Andheri (East) 
Mumbai - 400093 
Phone Number: 18004259760 
or 
email at itro@sbi.co

9) சரியான வருமான வரிப்படிவம் (ITR) தெரிவு செய்யுங்கள் 

இந்தப் படிவத்தைத் தெரிவு செய்வது மிகவும் சுலபம். ஆனாலும் இன்னும் பலர் இதனைத் தவறாகவே தெரிவு செய்கின்றனர். இந்தத் தவறு வரித் தொகையைத் திரும்பப் பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும்.

10) உங்கள் ரீஃபண்டை கவனித்து உறுதி செய்யுங்கள் 

உங்கள் ரீஃபுண்ட் திரும்பக் கிடைக்கவில்லையென்றால் அதன் நிலையினை அடிக்கடி கவனித்து அறிந்துகொள்ளுங்கள். இது ஏதாவது தடங்கல் அல்லது தடை இருப்பின் அதைக் களைந்து தாமதத்தைத் தவிர்க்க உதவும். இதைச் செய்ய வருமான வரித்துறையின் பின்வரும் இணையத் தளத்திற்குச் சென்று சரிபார்க்கலாம்

வேறு கடைசி வழி ஏதாவது இருக்கிறதா? 

உங்களுக்கு உங்கள் பணம் திரும்பக் கிடைக்க வில்லையென்றாலோ அல்லது உங்கள் புகாருக்குப் பதில் இல்லையென்றாலோ உங்களுக்கு இறுதியாக இருக்கும் வழி தகவல் பெறும் உரிமைச் சட்டம். அதற்கான எந்த ஒரு குறிப்பிட்ட படிவமும் இல்லை. நீங்கள் 10 ரூபாய் கட்டணம் அஞ்சல் ஆணை, வங்கி வரைவு அல்லது நீதிமன்ற கட்டண வில்லை (கோர்ட் ஃபீ ஸ்டாம்ப்) மூலம் செலுத்த வேண்டும். உங்கள் விண்ணப்பத்தில் உங்களைப் பற்றிய பெயர், முகவரி, வரி ஆய்வு வருடம், பான் கார்டு எண், நிலுவையிலுள்ள தொகை உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை உங்கள் பகுதி வருமான வரி ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். (பதிவுத்தபால மூலமாக அனுப்புவது நல்லது)

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 30.05.2016

கலப்பட உணவுப்பொருட்களை கண்டுபிடிக்க


கலப்பட உணவுப்பொருட்களை கண்டுபிடிக்க 
என்ன செய்ய வேண்டும்?
‘‘நம் கிச்சனில் இருக்கும் மளிகைப் பொருட்களில், 50 சதவிகிதத்துக்கும் மேல் கலப்படம் சேர்ந்த பொருட்களே! கலப்படத்தை எப்படிக் கண்டறிவது என்று தெரியாததால், அந்தப் பொருட்களைப் பயன்படுத்தப் பழகிவிட்டோம். ஆனால், மளிகைப் பொருட்களின் கலப்படத்தை சில எளிய வழிகள் மூலம் அறியலாம்!’’ என்று வழிகாட்டுகிறார், இந்திய நுகர்வோர் சங்கத்தின் துணை இருக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன்.
மளிகைப் பொருட்களின் கலப்பட சோதனைக்காக கிருஷ்ணன் குறிப்பிட்ட வழிமுறைகள்... இதோ!
மிளகு
கலப்படம்: மிளகில் எடை அதிகரிப்புக்காக பப்பாளி விதை சேர்க்கப்படுகிறது. பழைய ஸ்டாக் மிளகைப் பளபளப்பாக்கி ஃப்ரெஷ் ஷாகக் காட்ட, இப்போது மினரல் ஆயிலும் கலக்கப்படு கிறது.
கண்டறிதல்: டிஷ்யூ பேப் பரில் மிளகை வைத்தால், பேப்பரில் எண்ணெய் ஒட் டும். தண்ணீரில் மிளகைப் போட்டால் எண்ணெய் மிதக்கும். மிளகில் உள்ள எண்ணெய் வாசனையை வைத்தும், கலப்படத்தைக் கண்டுபிடிக்கலாம்.

பருப்பு வகைகள்
கலப்படம்: பாலிஷ் செய்யப் பட்ட பருப்பு வகைகளில் பெரும்பாலும் மெட்டானில் யெல்லோ கலர் (metanil yellow colour) கலக்கப்படுகிறது. நிறம் மங்கிய பருப்புகளை ஃப்ரெஷ்ஷாகக் காட்டவும்... பருப்பை பாலிஷிங் செய்யும்போது பருப்பில் இழந்த மஞ்சள் நிறத்தை மீண்டும் ஏற்றவும் இது கலக்கப்படுகிறது.
கண்டறிதல்: டைல்யூட் ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டை (dilute hydrochloric acid) டெஸ்ட் டியூப்பில் எடுத்துக்கொண்டு சிலதுளிகள் விட்டுப்பார்த்தாலே பருப்பில் ஏற்றப்பட்டிருக்கும் கலர் பிரிந்து கசடுபோல் கீழே தங்கிவிடும்.

ஜவ்வரிசி
கலப்படம்: ஆப்டிக்கல் வொயிட்னர் கெமிக்கலை (டினோபால் என்கிற பெயரில் இந்த ரசாயனம் விற்க்கப்படுகிறது.) ஜவ்வரிசி யுடன் கலக்கும்போது பளிச் என மாறும்.
கண்டறிதல்: இதை சோதனைச்சாலையில் ஆய்வு செய்து கண்டறியமுடியும்.

தனியா (கொத்தமல்லி)
கலப்படம்: பளபளப்புக்காக தனியாவில், சல்ஃபர் டை ஆக்சைடு (sulphur dioxide) பயன்படுத்தப்படுகிறது.
கண்டறிதல்: வெண்மையாக இருந்தால் அது கலப்பட தனியா. கறுப்பு தனியாதான் எப்போதும் சிறந்தது.

டீ பவுடர்
கலப்படம்: டீ வைத்த பிறகு ஃபில்டரில் இருந்து மீதமாகும் கசடுகளை 20, 30 கிலோ வரை சேகரித்து வைத்திருந்து அதை உலர்த்தி, அதில் சிறிதளவு நல்ல டீ தூளினை சேர்த்து, டார்டாரின் (tartarin) என்கிற கெமிக்கலையும் கலந்து இறுதியில் பாக்கெட் செய்து விற்கப்படுகிறது.
கண்டறிதல்: வெள்ளை பேப்பரில் சிறிது டீத்தூளை வைத்து தண்ணீரை விட்டால், பேப்பர் நிறம் மாறும். பொதுவாக சுடுநீரில்தான் டீத்தூளின் நிறம் மாறும். குளிர் நீரிலேயே நிறம் மாறி னால், உஷார்.

மைதா மாவு
கலப்படம்: மைதா மாவில் அதிகளவில் கலக்கப்படுவது, மரவள்ளிக்கிழங்குத்தூள். இது அதிக வெளிர் நிறத்தை மாவுக்குக் கொடுக்கும்.
கண்டறிதல்: மைதா மாவில் இழுவைக்கான எலாஸ்டிக் தன்மை இருக்கும். இதுவே கலப்பட மைதாவாக இருந்தால், உதிரி உதிரியாக இருப்பதுடன் இழுவைத் தன்மையின்றி இருக்கும்.
இவை தவிர, எண்ணெ யின் கலப்படத்தை லேப்களில் மட்டுமே கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. கல் உப்பை பயன் படுத்தும்போது, அதை டம்ளர் தண்ணீரில் போட, கசடுகள் அடியில் தேங்கும். மேலே இருக்கும் தெளிந்த நீரை, உப்பு தேவைக்குப் பயன்படுத்தலாம்!’’ என்று விரிவாக பேசியவர்,
‘‘அந்தக் காலத்தில் வீட்டிலேயே போடப்படும் அப்பளம் மற்றும் வடாம் போன்றவை வெள்ளை நிறத்திலேயே இருக்கும். அதில் எந்தவிதமான கலர்களும் கலக்காமல் உணவுப்பொருளாக மட்டுமே உடலுக்கு நன்மை பயத்தன. ஆனால், இன்று எல்லா உணவுப்பொருட்களிலுமே கலர்களைப் பயன்படுத்து கிறார்கள். அப்பளங்களே பலவண்ணங்களில் வருகின் றன. இப்படிப்பட்ட கலர்கள் அனைத்துமே உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவைதான். இவற்றை தவிர்த்தலே நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும். கிச்சனை மாடுலர் கிச்சனாக மாற்றுவதைவிட, கலப்படமற்ற கிச்சனாக வைத்திருப்பது முக்கியம். அதுதான் ஆரோக் கியத்துக்கு அரண்!’’
- அழுத்தமாகச் சொல்லி முடித்தார் கிருஷ்ணன்.
வே.கிருஷ்ணவேணி
நன்றி : அவள்விகடன் - 14.07.2015 

Friday, May 27, 2016

கல்வி உதவித்தொகை பெற


கல்வி உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?

மாணவர்களே தயாரா.... 
உதவித் தொகை விண்ணப்பங்களை வரவேற்கிறது யுஜிசி!! 
சென்னை: மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு வசதியாக பல்வேறு உதவித்தொகைத் திட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழங்கி வருகிறது. அந்த உதவித் தொகைத் திட்டங்களின் கீழ் மாணவ, மாணவிகள் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி தற்போது வரவேற்றுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்காக பல்வேறு உதவித்தொகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை யுஜிசி தேர்வு செய்து மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
தற்போது 2016-17-ம் கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகைகளைப் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசித் தேதியாகும்.
அதுபோல, பெண்களுக்கான முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் சமூக அறிவியல் - மானிடவியல் பிரிவு கல்வி உதவித் தொகை, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான ஆராய்ச்சி உதவித் தொகை திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசித் தேதியாகும்.
எஸ்.சி. பிரிவினருக்கான ராஜீவ்காந்தி தேசிய கல்வி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான ராஜீவ்காந்தி தேசிய கல்வி உதவித் தொகை, சிறுபான்மை சமூகத்தினருக்கான தேசிய கல்வி உதவித் தொகை, ஓ.பி.சி. பிரிவினருக்கான தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டங்களின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதியாகும்.
ஒரே பெண் குழந்தைக்கான இந்திராகாந்தி முதுநிலை பட்ட கல்வி உதவித் தொகை, பல்கலைக்கழக அளவில் இளநிலை பட்டப் படிப்பில் ரேங்க் பெற்றவர்களுக்கான முதுநிலை பட்ட கல்வி உதவித் தொகை, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான தொழில் படிப்பு கல்வி உதவித் தொகை ஆகிய திட்டங்களின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசித் தேதியாகும்.
மேலும் விவரங்களுக்கு
www.ugc.ac.in
என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்
நன்றி : கேரியர் இந்தியா » தமிழ் » 28.05.2016

உங்க எடை கூடிக்கொண்டே இருக்கா!


உங்க எடை கூடிக்கொண்டே இருக்கா!
என்ன செய்ய வேண்டும்?
காரணங்கள் என்ன... கரை சேர்வது எப்படி?
'ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் அலறுகின்றன. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட ஒபிஸிட்டிக்கான காரணங்கள், இதன் விளைவுகள், குறிப்பாக பிசிஓடி (Polycystic Ovary Disease)  எனப்படும் நோய் முதல் குழந்தைப்பேறின்மை வரை பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், ஒபிஸிட்டிக்கான தீர்வுகள் என்று நிபுணர்களின் வழிகாட்டலை விரிவாகப் பார்ப்போம்!

பிழையாகிப் போன உணவுப் பழக்கம்!
இந்த விபரீத நோய் பற்றி பேசும் பெண்கள் சிறப்பு மருத்துவர் பிரேமலதா, ''ஒபிஸிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் (Modified Lifestyle). ஒவ்வொரு வேளை, ஒவ்வொரு வகை உணவிலும் பலவித நன்மைகள் அடங்கியபடி வகுத்து வைத்த நம் முன்னோர்களின் உணவுப் பழக்கங்கள், இன்றைக்கு அடியோடு மாறிவிட்டன. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் துரித உணவு என்று சொல்லப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். இதனால் பர்கர், கோலா பானங்கள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து, பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன.

தாண்டவமாடும் தைராய்டு!
வளரிளம் பருவத்தினர் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், தைராய்டு குறைபாடு. இது முழுக்க முழுக்க அயோடின் குறைபாட்டால் வரக்கூடியது. இது ஆண்களைவிட, பெண்களை 7 மடங்கு அதிகமாகத் தாக்குகிறது என்கிறது புள்ளி விவரம். உடல் சோர்வு, முறையற்ற மாதவிலக்கு, மலச்சிக்கல், மனஅழுத்தம் போன்றவை இதற்கான அறிகுறிகள். தவிர, எந்நேரமும் தூக்கம், கொஞ்சம் உணவு அருந்தினாலே உடல் எடை அதிகரிப்பது, சோர்வு, டென்ஷன், எரிச்சல், படபடப்பு போன்ற அறிகுறி இருப்பவர்கள் தைராய்டு சோதனை செய்துகொள்வது நல்லது. 

உலகம் முழுவதும் 200 மில்லியன் பேர் தைராய்டு காரணமாக தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்கிறது என்று தெரிந்தவுடனே டெஸ்ட் எடுத்துப் பார்ப்பது அவசியம். தைராய்டு பிரச்னை இல்லை என்றால், எடை குறைப்பதற்கான மற்ற முயற்சிகள், சிகிச்சைகளை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம். தவிர, மரபியல் ரீதியிலான பிரச்னைகளும் உடல் பருமனுக்குக் காரணமாகலாம்.

என்ன செய்ய வேண்டும்?
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள்.. தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வறுத்த, பொரித்த, இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இனிப்பை குறைத்தல் இதயத்துக்கு மிக நல்லது. தைராய்டு குறைவாக சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைகோஸ், சோயாபீன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. கடல் மீன் வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது, அயோடின் உப்பை பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைத்து பயன்படுத்துவது மிக நல்லது. 

எக்காரணம் கொண்டும் உப்பை திறந்து வைக்க வேண்டாம். அதனால், உப்பில் உள்ள அயோடின் காற்றில் கரைந்துவிடும். முக்கியமாக, முளைகட்டிய பயறு, பழச்சாறு, பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது'' என்றார் டாக்டர் பிரேமலதா.

அம்மா... குண்டம்மா!
பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்?

இதற்கு பதில் சொல்கிறார், மகப்பேறு சிறப்பு மருத்துவர் பிரபா. 

''கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக 8 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். குழந்தையின் வளர்ச்சி வேண்டி இந்நேரத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான உணவால் அதிகரிக்கும் எடை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. என்றாலும், முடிந்தவரை மாதத்துக்கு 1 முதல் 2 கிலோவுக்கு மேல் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. 

குழந்தை பிறந்த பிறகும், பாலூட்டும் காரணத்தால் எடுத்துக்கொள்ளும் அதிக உணவு, உடல் எடையைக் கூட்டுவது இயல்பு. ஆனால், இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவத்துக்குப் பிறகும் சரி, மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. சுகப்பிரசவம் எனில், குழந்தை பிறந்த இரண்டாவது நாளில் இருந்தும்... சிசேரியன் எனில் குழந்தை பிறந்து ஒரு மாதம் முடிந்த பிறகும் உடற்பயிற்சியைத் தொடங்கலாம். 

ஆனால், பெண்கள் பலரும் பிரசவத்துக்குப் பிறகு கவனம் அனைத்தையும் குழந்தைக்குக் கொடுத்து, தங்கள் உடம்பை கவனிக்க மறக்கிறார்கள். பால் கொடுக்கும் தாய்க்கு வீட்டில் உள்ளவர்கள், 'பச்ச உடம்பு... நல்லா சாப்பிடணும்...’ என்று கூறி, தேவையான காய்கறி, பழங்களைவிட, தேவையற்ற நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றை அதிகம் கொடுப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்யவிட மாட்டார்கள். 

ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் சரிவிகித உணவிலும், தகுந்த உடற்பயிற்சியிலும்தான் இருக்கிறதே தவிர, தேவையற்ற உணவிலும், தேவைக்கு அதிகமான ஓய்விலும் இல்லை. இப்படி உணவுக் கட்டுப்பாடு அறுந்து போவதுடன், உடற்பயிற்சியும் இல்லாமல் போவதுதான் பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடல் எடை அதிகரிக்கக் காரணம். ஆனால், இது கை மீறிய செயல் இல்லை, கட்டுக்குள் கொண்டு வரக்கூடியதே. 

தேவை...முயற்சியும், உடற்பயிற்சியுமே. இதை பின்பற்றாவிட்டால், உடல் எடை தொடர்ந்து அதிகரித்து, ஒபிஸிட்டி எனும் நோயில் கொண்டுபோய் நிறுத்தும்'' என்று எச்சரிக்கிறார் டாக்டர் பிரபா.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ன்னு சும்மாவா சொன்னாங்க?!

அன்று...
1. அம்மி, ஆட்டுரல், தண்ணீர் குடம் சுமப்பது என்று வீட்டு வேலைகளே பெண்களுக்கான உடற்பயிற்சியாக இருந்தன. அதிலும், கோலம் போடுவது சிறந்ததொரு யோகாசனம். கவிழ்ந்து கிடக்கும் கருப்பையை நேராக்கவும், இடுப்பு எலும்பு விரிவடையவும் வழிவகுக்கும். இதேபோல் ஆண்கள் சுமை தூக்குவது, ஏர் உழுவது என உடலுக்கு ஆரோக்கிய மான வேலைகளை விரும்பிச் செய்தார்கள்.  

2. குழந்தைகள் ஓடியாடி விளையாடிய தால் உடலின் அத்தனை பாகங் களுக்கும் இயக்கம் கிடைத்தது. இதனால் ஒபிஸிட்டி அவர்களை நெருங்க பயந்தது.

3. பிரசவத்துக்குப் பின்னரே பெண்கள் உடல் எடை அதிகரித்தார்கள்.

4. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த காலம்.

5. உடலுக்கு பயிற்சி தரக்கூடிய விளையாட்டுகளும், வேலைகளுமே பொழுதுபோக்கு விஷயம். அதனால் சாப்பிடும் உணவின் கொழுப் புகள் உடனுக்குடன் கரைந்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இன்று...
1. அனைத்து வேலைகளும் ஒரு ஸ்விட்சை ஆன் செய்து முடித்துவிடும் அளவுக்கு எந்திரமயமாக்கப்பட்டு விட்டது. அநேகம் பேர் ஒரு நாளின் பாதி தினத்துக்கு மேல் கணினி முன் அமர்ந்து வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழல். இதனால், 'மென்டல் ஸ்ட்ரெய்ன்’ அதிகரிக்கிறதே தவிர, எந்தவித 'ஃபிஸிகல் எக்சர்சைஸும்’ கிடைப்பதில்லை.

2. பெரும்பாலான பெற்றோர், குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியில் சென்று விளையாட அனுமதிப்பதில்லை. அதனால், வீடியோ கேம் அடிமைகளாகவும், நோய் சங்க உறுப்பினர்களாகவும் இளைய சமூகம் மாறிவருகிறது.

3. ஜங்க் ஃபுட் மோகத்தால் வளரிளம் வயதுப் பெண்களில் பலர் இரண்டு மடங்கு எடையுடன் இருப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.

4. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி, இளைஞர்கள் பலரையும் இன்றைக்கு சோம்பேறிகளாக மாற்றி வர, பக்கத்து கடைக்கு சென்று வரக்கூட பைக் எடுப்பதும்... ஆன்லைனில் வீட்டுக்கே பொருட்களை வரவழைத்து பயன்படுத்தும் அவலமும் அதிகரித்துள்ளது.  

5. டி.வி. முன்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன், சாக்லேட், ஸ்வீட் போன்றவற்றுடன் ஆஜராகி சேனல்களை மாற்றிக்கொண்டே இருப்பதும், ஏ.சி அறையில் உட்கார்ந்தபடியே சாட்டிங் செய்வதும் இன்றைய பொழுதுபோக்கு. இதனால் உடல் இயக்கம் முற்றிலும் குறைந்து... உணவின் மூலமாக உடலில் சேரும் கொழுப்புகளைக் கரைக்க வழியின்றி சேமித்து, ஒபிஸிட்டியை பரிசளிக்கிறது.
உணவைத் தவிர்த்தாலும் ஒபிஸிட்டி!
அதிக உணவு எடுத்துக்கொள்வதால் மட்டுமல்ல, அந்தந்த வேளை உணவை 'ஸ்கிப்’ செய்தாலும்கூட.. ரத்த சோகை, ஒபிஸிட்டி வரக்கூடும்.

 இளம் பெண்களில் அதிகமானோர் காலை உணவைத் தவிர்ப்பதால் எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால், சாதரண நோய் தொடங்கி... குழந்தை பாக்கியம் இல்லாமை வரை பலவித பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.  

 பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்குத் தரப்படும் உளுத்தங்களி போன்ற பாரம்பர்ய உணவுகள், ரத்த விருத்திக்கு தேவையான ஊட்டச்சத்தை தரவல்லவை. ஆனால், இன்றைய டீன் ஏஜினரோ... காலை எழுந்தவுடனே பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடவே விரும்புகின்றனர்.

உயரத்துக்கேற்ற எடை அவசியம்..!
ஒருவரின் சரியான எடையைக் கண்டறிய ஓர் எளிய வழி. உயரம் (செ.மீ)  100  = சராசரி எடை (கிலோவில்). அதேபோல், ஒருவரின் பி.எம்.ஐ (BMI-Body mass Index) 24-க்கு மேல் இருந்தால், அவர் 'உடல் பருமன்’ வகையில் சேருவார். அதாவது, ஒருவரின் எடை (கிலோ) / உயரம் (மீ)2 = பி.எம்.ஐ. உதாரணமாக, உங்கள் மகளின் எடை 45 கிலோ, உயரம் 155 செ.மீ என்றால், 45 / (1.55ஜ்1.55) = 18.7. உங்களது மகள் ஆரோக்கியமான எடையில் இருக்கிறார் என்று அர்த்தம்.
குறிப்பு
சென்ற தலைமுறையில் செப்பு மற்றும் மண்பானையில் வைத்து தண்ணீர் குடித்தார்கள். அதனால், அதில் உள்ள தாதுப்பொருட்கள் உடலில் சேர்ந்து கருமுட்டை மற்றும் கருப்பை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. இன்றோ, பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் வைத்து அருந்துவதால்... அதில் உள்ள ஸினோ ஈஸ்ட்ரோஜென்' (Xeno Estrogen) எனும் வேதிப்பொருள், ரத்தத்தில் உள்ள இயற்கையான ஈஸ்ட்ரோஜென்னை வேலை செய்ய விடாமல் தடுத்து, கருமுட்டை வளர்ச்சியின்றி சினை உறுப்பில் நீர்க்கட்டிகள் ஏற்பட வாய்ப்பாகிறது. இதை, பாலிசிஸ்டிக் ஓவரி டிசீஸ்' (Polycystic Ovary Disease) என்று சொல்லுவார்கள். இந்த பிசிஓடி, அதிகமான உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய்க் குளறுபடிகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

தீர்வுகள் என்ன?

 போதிய உணவுக் கட்டுப்பாடு.
 ஆரோக்கியமான உணவுப் பழக்கமும், சீரான உடற்பயிற்சியும்.

இளம் பருவத்தில் எடுத்துக்கொள்ளும் உணவு களும், கட்டமைக்கும் ஆரோக்கியமுமே வாழ்க்கை முழுவதற்குமான அடிப்படை என்பதால்.. ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட்களை முற்றிலும் தவிர்த்தல்.

கேழ்வரகு, கம்பு, வரகு, தினை போன்ற தானியங்கள். காய்கறிகள், பழங்கள் என உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது.

பீன்ஸ், நாட்டு அவரை, காலிஃப்ளவர், கேரட், பீட்ரூட், புரோக்கோலி உள்ளிட்ட அதிக நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுவது.


பூச்சிக்கொல்லி தெளிப்பில்லாத ஆர்கானிக் உணவுகளைத் தேர்வுசெய்து பயன்படுத்துவது.

வறுத்த, பொரித்த, எண்ணெய் சார்ந்த உணவுப் பொருட்கள் தவிர்த்து, ஆவியில் வேகவைத்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது.

வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு இருக்குமாறு அன்றாட பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக்கொள்வது.

விளையாட்டைவிட சிறந்த மருந்தில்லை என்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை, தினமும் விளையாட அனுமதித்தல்... இதுபோன்றவற்றால் உடல் பருமன் பிரச்னையை முற்றிலும்

மூன்றாம் இடத்தில் இந்தியா!
கடந்த ஆண்டு ‘University of Washington Institute for Health Metrics’  வெளியிட்ட புள்ளிவிவரம், உலகளவில் 2.1 பில்லியன் மக்கள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்.. இது 1980-ம் ஆண்டு வெளிவந்த புள்ளிவிவரத்தைக் காட்டிலும் கற்பனை செய்துகொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

அதாவது, 80-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகளவில் 857 மில்லியன் (85 கோடியே 70 லட்சம்) மக்கள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது கடந்த ஆண்டு நிலவரப்படி 2.1 பில்லியன் (210 கோடி) என்று உயர்ந்துள்ளது. இது வருங்காலத்தில் இன்னும் அதிகமானோரை தாக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது உலக அளவில் அமெரிக்கா (86.9 மில்லியன்), சீனா (62.0 மில்லியன்) 

இந்த வரிசையில் 40.4 மில்லியன் என்ற எண்ணிக்கையுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. அதாவது, 4 கோடியே 4 லட்சம் இந்தியர்கள், உடல்பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒல்லி பெல்லி, சரியா... தவறா?
உடல் பருமன் பிரச்னையை மையமாக வைத்து உலகெங்கிலும் கோடிகளில் தொழில் நடக்கிறது. அதிலும், 'உடல் எடையை குறைக்க’ என்று சொல்லி வெளிவந்து கொண்டிருக்கும் பொருட்கள் முன்னிலை வகிக்கின்றன. இதில் நல்லது எது... கெட்டது எது என்பதை வெறும் விளம்பரங்களைப் பார்த்து மட்டுமே வாங்குவது தவறு. குறிப்பாக, மருத்துவரின் ஆலோசனை இன்றி இதுபோன்ற பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது மிக தவறானது. 
அது நிச்சயம் தேவையற்ற பிரச்னைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, இன்றைக்கு விற்கப்படும் பொருட்களில் சிலவற்றை பயன்படுத்துவதால் சத்துக்குறைபாடு, விட்டமின் பிரச்னை தொடங்கி, கிட்னி பாதிப்பு வரை பலவித பிரச்னைகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மிகமுக்கியமாக, மாதத்துக்கு 1 முதல் 2 கிலோ வரை உடல் எடை குறையலாம். அதைவிட அதிகமாகக் குறைந்தால், அது உடலை நம் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு செல்வதோடு, தேவையில்லாத பிரச்னைகளை கொண்டுவந்து சேர்க்கவும் செய்யும்.

தைராய்டு சோதனை!
தைராய்டு டெஸ்ட்டின் அளவு 4ஐ விட அதிகமாக இருந்தால், தைராய்டு குறைவாக சுரக்கிறது, தைராய்டின் அளவு 0.5ஐ விட குறைவாக இருந்தால் தைராய்டு அதிகமாக சுரக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். உடல் எடை அதீதமாக அதிகரிப்பவர்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். 

மிகமுக்கியமாக... கர்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு அதிகமாக சுரந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி, பல் வளர்ச்சி, உடல் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் என அனைத்துமே பாதிக்கப்படும்.

சா.வடிவரசு

நன்றி : அவள் விகடன் - 13.01.2015

Wednesday, May 25, 2016

தேசிய ஓய்வூதியத் திட்டம்


தேசிய ஓய்வூதியத் திட்டம்- என்ன செய்ய வேண்டும்?
சென்னை: தேசிய ஓய்வூதிய அமைப்பு என்பது ஒரு ஓய்வூதிய சேமிப்புக் கணக்காகும். இந்த ஓய்வூதிய கணக்கில் தனிநபர் தன் பங்களிப்பை அளித்து வருவார், இது சாதாரண வங்கி சேமிப்பு கணக்கு போன்று தோன்றினாலும் சற்று வித்தியாசமானது.
புதிய என்.பி.எஸ். 2015-ஐ சுலபமாக அணுகக்கூடியதாக, குறைந்த செலவுடையதாக, சிறந்த வரி விலக்கைக் கொண்டுள்ளதாக, நெகிழ்வானதாக மற்றும் கையடக்கமானதாக அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களையும் என்.பி.எஸ். கணக்கில் பதிவு செய்திட அரசாங்கம் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது, 18-60 வயதிற்குள் உள்ள என்.ஆர்.ஐ.-கள், கே.ஒய்.சி. நெறிகளுக்கு இனங்கள், என்.பி.எஸ். கணக்கைத் திறக்கலாம்.

முக்கிய மாற்றங்கள் 

இத்திட்டத்தைப் பிரபலமாக்க, மத்திய பட்ஜெட் 2015-ல் நிதி அமைச்சர் என்.பி.எஸ்.-ல் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். என்.பி.எஸ். பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்:

ஓய்வூதிய கணக்கு எண் 

என்.பி.எஸ். கணக்கு திறக்கப்பட்டவுடன், கணக்கைத் திறந்துள்ள ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் தனித்துவமான 12 இலக்கு எங்களைக் கொண்டுள்ள நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (பெர்மனன்ட் ரிடைர்மெண்ட் அக்கௌன்ட் நம்பர் - பி.ஆர்.ஏ.எண்) வழங்கப்படும்.

2 அடுக்குக் கணக்குகள் 

என்.பி.எஸ். கணக்கின் கீழ், அடுக்கு-I மற்றும் அடுக்கு-II என இரண்டு துணை கணக்குகள் வழங்கப்படும். அடுக்கு-I கணக்குக் கட்டாயமானதாகும். அடுக்கு-II கணக்கைத் திறப்பதும் செயல்படுத்துவதும் உடைமையாளரின் விருப்பமாகும்.

எளிமையாக மாற்றிக்கொள்ளும் வசதி
தனி நபரின் வேலை மற்றும் இருப்பிடம் ஏதுவாக இருந்தாலும், என்.பி.எஸ். கணக்கை நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் செயல்படுத்தலாம். இதனைத் தனியாரிலிருந்து அரசாங்கத்திற்கு, அல்லது அரசாங்கத்திலிருந்து தனியாருக்கு, அல்லது தனியாரிலிருந்து கார்ப்பரேட்டுக்கு அல்லது கார்ப்பரேட்டிலிருந்து தனியாருக்கு என ஒரு பிரிவில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
நாமினி நியமனம்
பி.ஆர்.ஏ.என். பதிவின் போது நீங்கள் நாமினேஷன் வசதியைப் பயன்படுத்தினால், அதற்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
2 திட்டங்கள் 
தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் இரண்டு நிதி நிர்வாகத் திட்டங்கள் உள்ளது; ஒன்று உயிர்ப்புள்ள தேர்வாகும் - இதில் தான் பங்களிக்கும் தொகையை எந்தச் சொத்து வகுப்புகளில், எந்த விகிதத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அந்தத் தனிப்பட்ட நபரே முடிவெடுக்கலாம்.
முதலீடு அளவுகள் 
மற்றொன்று தன்னியலான தேர்வாகும் - வாழ்க்கை சுழற்சி நிதியம் (லைஃப்சைக்கில் ஃபண்ட்) - இதுவே என்.பி.எஸ்.-ன் முன்னிருப்புத் தேர்வாகும். இதில் பதிந்தவரின் வயதைப் பொறுத்து, நிதியை முதலீடு செய்யும் நிர்வாகம் தானாகவே நடக்கும்.
வரிச் சலுகை 
இந்த நிதிநிலையிற்குப் பிறகு, பிரிவு 80 சிசிடி-யின் கீழ் என்.பி.எஸ். ஒரு பகுதியாவதால், ரூ.50,000/- கூடுதல் வரி விலக்கு கிடைக்கும்.
பங்கு முதலீடுஇதனால் கிடைக்கும் மற்றொரு பயன் - இனி பங்குகளிலும் (ஈக்விட்டி) ஒருவர் தன் முதலீட்டை மேற்கொள்ளலாம். அதனால் உங்கள் நிதியைப் பங்கில் அல்லது கடனில் முதலீடு செய்ய வேண்டுமா என்பதை உங்களது இடர்பாடு அளவு, வயது போன்ற காரணிகளைக் கொண்டு நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
3 முறை மட்டுமே 
தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ், பதிந்தவர்கள் ஒட்டு மொத்த பதிவு காலத்தில், அதிகப்படியாக மூன்று முறை மட்டுமே பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். அப்படிப் பணத்தை எடுக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த ஐந்து வருடத்திற்குக் குறையாமல் மீண்டும் பணத்தை எடுக்க முடியாது.
அடுக்கு-I கணக்கு
பதிவு செய்தவர் தன்னுடைய அடுக்கு-I கணக்கில், ஒரு நிதியாண்டில் குறைந்தது ரூ.6,000/-ஐ வருடாந்திர பங்களிப்பாக அளிக்க வேண்டும். அப்படிப் பங்களிக்காத பட்சத்தில் அந்தக் கணக்கு முடக்கப்படும்.
40% தொகை 
பதிவு செய்தவருக்கு 60 வயது பூர்த்தியானவுடன், அவருடைய ஓய்வூதிய சொத்தில் குறைந்தது 40%-ஐ ஆண்டுத்தொகை வாங்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மீதமுள்ள தொகை அவருக்கு முழுவதுமாகக் கிடைத்து விடும்.
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 25.05.2016

Monday, May 23, 2016

பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்


பொறியியல் கல்லூரி கவுன்சிலிங் - என்ன செய்ய வேண்டும்?

பொறியியல் கவுன்சிலிங் வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துகள் .
மிக மிக எளிமையாக பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும்.
உங்களுக்கு வந்திருக்கும் பொறியியல் கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்துக் கொண்டு வந்தால் பயணம் செய்யும் சென்னை மாநகராட்சி பேருந்தில் கட்டணச்சலுகை உண்டு. ஆகவே, முன்னமே அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்து வாருங்கள்.
இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Counseling Tips :
மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள், கவுன்சிலிங் நடப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்னமே வந்து விடுங்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் வங்கி கவுண்டர்களில் உங்களின் அழைப்புக் கடிதத்தை காட்டி, ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும். நீங்கள் எஸ்.சி. அல்லது எஸ்.டி. மாணவராக இருந்தால், ரூ.1000 கட்டினால் போதுமானது.
இதைக்கட்டியதும் ஒரு ரசீதை எண்ணோடு தருவார்கள்.
நீங்கள் அங்கிருக்கும் டிஸ்ப்ளே அரங்கில் ஒவ்வொரு கல்லூரியில் உள்ள காலி இடங்கள் தொடர்ந்து பெரிய திரைகளில் வந்து கொண்டிருக்கும். அதைப் பார்த்து, அதற்கேற்ப கல்லூரிகளை தெரிவு செய்து கொள்ளலாம்.
முன்னதாகவே, குறைந்தபட்சம் மூன்று கல்லூரிகளை, அதுவும் அவற்றுக்கான எண்ணோடு (விண்ணப்பம் பெற்றபொழுது கொடுக்கப்பட்ட புத்தகத்தில் அந்த எண் இருக்கும்) குறித்துக்கொண்டு வாருங்கள்.
உங்களுக்கான கவுன்சிலிங் நேரத்துக்கு முன்னமே நீங்கள் வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தப்படுவீர்கள். மாணவர் உடன் ஒரே ஒரு நபர் (பெற்றோர் அல்லது காப்பாளர்) மட்டுமே கூட செல்ல இயலும்.
உள்ளே சென்றதும் கொஞ்ச நேரம் காத்திருப்பீர்கள். உங்களிடம் ஒரு சிறிய படிவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் பெயர், விண்ணப்ப எண் முதலிய விவரங்களைப் பூர்த்தி செய்து வைத்திருங்கள். மூன்று கல்லூரிகளும் கேட்கப்பட்டு இருக்கும். அதை கவுன்சிலிங் அறைக்குள் போனபிறகு பூர்த்தி செய்து கொள்ளலாம்.

உங்களை உள்ளே அழைத்ததும் கவுன்சிலிங் அறைக்குள் செல்லலாம். முதலில் சான்றிதழ்களை சரிபார்ப்பார்கள். ஒரிஜினல்களை காட்ட வேண்டும்; சரிப்பார்த்து முடிந்ததும் ஒரிஜினல்களை கட்டாயம் வாங்கிக்கொள்ளுங்கள்.
அதற்குப் பிறகு கணினி முன் போய் உட்காருவீர்கள். துறை அல்லது கல்லூரி சொன்னால் அதில் காலியாக உள்ள இடங்களை சொல்வார்கள். இப்படி மூன்று
சாய்ஸ்களை நீங்கள் தரவேண்டும். (கல்லூரி பெயரில் கவனமாக இருங்கள். ஒரே பெயரில் எண்ணற்ற கல்லூரிகள் இருக்கின்றன. கல்லூரி குறியீட்டு எண் இங்குதான் பயன்படும்).
நீங்கள் கேட்ட துறை இருக்கிறது என்றால் பச்சை விளக்கு எரியும். நீங்கள் அத்துறையை எடுத்து கொள்ளலாம். சிவப்பு எரிந்தால் அத்துறை இடங்கள் பூர்த்தி ஆகிவிட்டன என்று அர்த்தம். ஒருவேளை மஞ்சள் எரிந்தால் உங்களுக்கு முன்னர் இருக்கும் மாணவர் எடுக்கும் சீட்டுக்கு ஏற்ப உங்களுக்கு அவ்விடம் கிடைக்கலாம். அதுவரை காத்திருங்கள் என்று அர்த்தம்.
கல்லூரியை தெரிவு செய்ததும், உங்களிடம் அந்தக் கல்லூரிதானா என்று வழிகாட்டும் நபர் உறுதி செய்துவிட்டு உங்களை மேலே அனுப்புவார். அங்கே உங்களுக்கு அந்தக் கல்லூரி கிடைத்ததற்கான உத்தரவை தருவார்கள். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். கூடவே நீங்கள் தேர்வு செய்த கல்லூரியில் கட்ட வேண்டிய மீத தொகைக்கான வங்கி சலானை தருவார்கள். அதையும் வாங்கிக்கொள்ளுங்கள். குறிப்பிட்டு இருக்கும் தேதிக்கு ஏற்ப மீதிப் பணத்தை கட்ட வேண்டும். இவ்வளவுதான் கவுன்சிலிங்.
பின்குறிப்புகள்:
ஒரு வேளை அழைப்புக் கடிதம் வராமல் போயிருந்தாலும் சிக்கலில்லை. உங்கள் கவுன்சிலிங் நாள் என்று என்று அறிந்துகொண்டு ஒரு மணி நேரம் முன்னரே வந்துவிடுங்கள்.
என்கொயரி பிரிவுக்கு போய் உங்கள் விண்ணப்ப எண்ணை சொன்னால் உங்களுக்கான அழைப்பு கடிதத்தை தந்து விடுவார்கள்.
குறிப்பிட்ட தினத்தன்று கவுன்சிலிங் வரமுடியாமல் போனால், அடுத்த செஷனில் கலந்துகொள்ள முடியும். எனினும் அப்பொழுது உள்ள இடங்களில் இருந்தே தெரிவு செய்ய முடியும்.
முழுக்க முழுக்க வெளிப்படையாக நடக்கும் இந்த கவுன்சிலிங்கில் சீட் வாங்கித் தருகிறேன் என்று யாராவது பணம் கேட்டால் நம்பவே நம்பாதீர்கள். உங்களின் மதிப்பெண்ணுக்கு உரிய சீட் கண்டிப்பாக கிடைக்கும்.
கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
முறையான அங்கீகாரம்!
காற்றோட்டமான வகுப்பறைகள், நல்ல முறையில் இயங்கும் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள், விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்கள் நல்ல முறையில் இருக்கின்றனவா எனக் கவனித்தல்.
பேராசிரியர்களின் படிப்பு, அனுபவம் ஆகியவை.
கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள் போன்றவை.
படிப்பு முடிந்ததும் சிறந்த ப்ளேஸ்மென்ட் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா என ஆராய்தல்.
பிடித்த பாடத்தை, பிடித்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பல சமயங்களில் பிடித்த பாடம் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியாக இருக்காது. இல்லையென்றால், விரும்பிய கல்லூரி கிடைக்கும். ஆனால், பிடித்த பாடத்தில் இடம் கிடைக்காது. இதுபோன்ற சமயத்தில், எது நமக்குக் கிடைக்கிறதோ அதை நாம் விரும்பிப் படிக்க வேண்டும்.
பொறியியல் கவுன்சிலிங் க்கான பட முடிவு
நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்தால், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே, என்ன பாடம், எந்தக் கல்லூரியில் கிடைத்தாலும், அதை விரும்பிப் படியுங்கள்.
மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், சிறந்த முறையில் அடிப்படை வசதிகள்கொண்ட கல்லூரியாக இருக்கிறதா என்பதுதான்!
- பூ.கொ.சரவணன்
விகடன் செய்திகள் - 28.06.2014