disalbe Right click

Wednesday, May 11, 2016

ஹாஸ்டல் தேடும் பெண்கள்

ஹாஸ்டல் தேடும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
ஹாஸ்டல் தேடும் பெண்கள் கவனிக்க வேண்டிய 10 முக்கிய பாயின்ட்கள்!
புதிதாக சென்னையில் ஹாஸ்டல் தேடும் பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான 10 பாயின்ட்கள் இதோ...
1.தொலைவு
தங்களுடைய அலுவலகத்திற்கு அருகிலேயே ஹாஸ்டல் இருந்தால் நல்லது. சென்று வரக்கூடிய தொலைவு வேலை நேரத்தினைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்பதற்கே இந்த முதல் பாயின்ட். டிஸ்டன்ஸ்தான் பெரிய ப்ராப்ளம்.
2.போக்குவரத்து
அடுத்ததாக அலுவலகம் சென்று வருவதற்கு பேருந்து வசதிகள், வண்டியில் செல்வதென்றால் அதற்கான வழி, அருகாமையில் இருக்கும் கடை, மருத்துமனை போன்றவற்றின் விவரங்கள் ஆகியவற்றையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
3.அடிப்படை வசதிகள்
ஹாஸ்டலைத் தேர்வு செய்யும் போதே அங்கிருக்கும் அறையின் வசதி, தேவையான காற்றோட்டம், சரியான பாதுகாப்பு, கழிவறை வசதிகள், குடிநீர் போன்றவைக் குறித்த தெளிவான விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டே சேர வேண்டும்.
4.ஹாஸ்டலின் சட்டதிட்டங்கள்
நீங்கள் அலுவலகத்தில் இருந்து இரவு நேரப் பணி முடித்தெல்லாம் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக அதனை ஏற்றுக் கொள்ளும் ஹாஸ்டல்களில் சேருவது நல்லது. இல்லையெனில் இரவு நேரத்தில், கதவு திறக்கப்படாமல் நடு ரோட்டில் நிற்கும் பரிதாபகரமான நிலை வரலாம் ஜாக்கிரதை.
5.மாற்று வழிகள்
பெரும்பான்மையான சென்னை ஏரியாக்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், சென்டர் ஆப் தி சிட்டி பகுதிகளில் ஹாஸ்டல் தேடும் பெண்கள் பாதுகாப்பான குறுக்கு வழிகளையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
6.ஹாஸ்டலின் அங்கீகாரம்
சென்னையின் புறநகர் பகுதிகளில் ஹாஸ்டல்களைத் தேர்வு செய்யும் பெண்கள், கண்டிப்பாக அவற்றின் உண்மைத் தன்மையை பரிசோதித்துக் கொள்வது நலம். ஏனெனில், உரிய அங்கீகாரம் இல்லாமல் தவறான பாதையில் பெண்களைத் தள்ள நினைக்கும் கும்பல்கள், ஹாஸ்டல் என்ற பெயரில் பொய்யாக பெண்களை ஏமாற்றவும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
7.புறநகர் பெண்களின் கவனத்திற்கு
சென்னை பொண்ணுங்களுக்கு மட்டுதான் சொல்வீங்களா எங்களுக்கெல்லாம் கிடையாதா என்று கேட்கும் மற்ற பகுதி பெண்களுக்கு, மாநகரம் அல்லாத ஊர்களில் இவற்றுடன் கூடுதலாக சுற்று வட்டார மனிதர்களையும் கவனித்து வைத்துக் கொள்ளுதல் அவசியம். ஏனெனில், வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பகுதிகளில் அமைந்துள்ள ஹாஸ்டல்களில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
8.உணவு
உணவு என்பது கண்டிப்பாக வீட்டின் சுவைக்கு கிடைக்காதுதான். ஆனாலும், தேவையில்லாத நிறமூட்டிகள், சுவைக் காரணிகள், அஜினமோட்டோ போன்றவை சேர்க்காமல் சமைக்கும் ஹாஸ்டல்கள் பெஸ்ட். 
அதிலும், சுத்தமான கிச்சன் அமைந்திருக்கின்றதா என்பதையும் கண்டிப்பாக கணக்கில் கொள்ள வேண்டும். ஏற்கனவே இடம் மாறுபவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் வரலாம் என்கின்ற நிலையில் சுகாதாரமற்ற உணவால் மேற்கொண்டு வாந்தி, வயிற்றுவலி போன்றவையாவது தாக்காமல் பார்த்துக் கொள்வது நலம்.
9.வாகனம் நிறுத்த
வண்டி வைத்திருப்பவர்கள் என்றால், வண்டி நிறுத்துவதற்கான இட வசதி, திருட்டு போகாமல் இருக்க பாதுகாப்பு வசதி இருக்கின்றதா என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். கைக்காசினைப் போட்டு வாங்கும் ஸ்கூட்டி தொலைந்து போய்விட்டால் பின்பு வீட்டில் வண்டி, வண்டியாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.
10.உடன் தங்குபவர்கள்
ஹாஸ்டலில் சிங்கிள் ரூம் என்றால் பிரச்னையில்லை. பழக்கமில்லாத பெண்களுடன் அறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில், அவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். மேலும், உங்களுடைய எண்ணத்திற்கு ஏற்றவர்களாக இருந்தால் மட்டுமே ஹாஸ்டல் வாழ்க்கை நல்லபடியாக அமையும். அதனால் அறைத் தோழிகளை புரிந்து கொள்வதுடன், தேவையில்லாத பிரச்னைகளை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது உங்களுடைய ஹாஸ்டல் வாழ்க்கை அருமையான ஒன்றாக அமைய வழிவகுக்கும். ஃபிரெண்ட்ஸாகிடுங்க
- பா.விஜயலட்சுமி 
நன்றி : விகடன் செய்திகள் -10.05.2016

No comments:

Post a Comment