காசோலை மோசடி வழக்குத் தொடர என்ன செய்ய வேண்டும்?
படத்தில் காணும் காசோலையை திரு. செந்தில்குமார் அவர்களுக்கு 16.05.2016 தேதியிட்டு திரு ராமசாமி என்பவர் வழங்குகிறார்.
காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் அதை செந்தில்குமார் வங்கி கணக்கில் போட்டு பணத்தை வசூலிக்க வேண்டும்.
( முன்பு காசோலை 6 மாதங்கள் வரை செல்லும்)
செந்தில்குமார் அதனை வங்கியில் போடுகிறார்.
வங்கியில் ராமசாமியின் அக்கவுண்டில் பணம் இல்லை என்று அந்த காசோலை திருப்பித் தரப்பட்டு, வங்கியில் இருந்து அதற்கான மெமோ செந்தில்குமார் அவர்களிடம் வழங்கப்படுகிறது.
சட்ட அறிவிப்பு வழங்க வேண்டும்
.
காசோலை வழங்கியவர் (ராமசாமி) கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமோ வழங்கும் வழங்கும் பட்சத்தில், அந்த மெமொ பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கிய ராமசாமிக்கு ஒரு சட்டப்படியான அறிவிப்பை காசோலையை பெற்றவரான செந்தில் குமார் வழங்க வேண்டும்.
இந்த அறிவிப்பு வழங்குவது மிக கட்டாயமானதாகும்.
.என்ன செய்ய வேண்டும் : 1
அறிவிப்பு வழங்கிய பின்னர் காசோலை வழங்கிய ராமசாமி அறிவிப்பை பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் செந்தில்குமாருக்கு பணத்தை திருப்பி அளிக்க வேண்டும்.
காசேலை வழங்கியவரான ராமசாமிக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பான 15 நாட்கள் முடிந்ததும், அதன்பின்னர் 30 நாட்களுக்குள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கை ராமசாமி மீது செந்தில்குமார் தாக்கல் செய்யலாம்.
இந்த கால அளவில் ஏதாகிலும் தவறு ஏற்பட்டால், காசோலை மோசடி வழக்கு தொடரமுடியாது.
.
என்ன செய்யக் கூடாது?
படத்தில் கண்ட காசோலையை 16.05.2015 அன்று வங்கியில் பணம் வசூலிக்க செந்தில்குமார் தாக்கல் செய்கின்றார். காசோலை வழங்கிய ராமசாமி கணக்கில் பணம் இல்லை என்று வங்கியாளர் செந்தில்குமாருக்கு தெரியப்படுத்துகின்றார்.
காசோலை வழங்கிய ராமசாமியை செந்தில்குமார் தொடர்பு கொண்டால், சற்று பொறுத்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுவேன் என்கின்றார்.
அவர் பேச்சை கேட்டு காசோலை பெற்றவரான செந்தில்குமார் சட்டப்படியான நோட்டிஸ் 30 நாட்களுக்குள் அனுப்பாமல் இருக்கிறார்.
ஒரு மாதம் கழிகின்றது. பணம் தரவில்லை.
பணத்தை செந்தில்குமார் கேட்டால், காசோலை கொடுத்த ராமசாமி பணம் கொடுக்க மறுக்கின்றார்.
30 நாட்களுக்குள் சட்டப்படியான அறிவிப்பு அனுப்பவில்லை என்பதால். இப்போது திரும்பி வந்த காசோலையை வைத்து வழக்கிடமுடியாது.
என்ன செய்ய வேண்டும் : 2
காசோலையை தாக்கல் செய்வதற்கான கால அளவு 15.08.2016 வரை இருப்பதால், திரும்பவும் ஒரு முறை அந்த காசோலையை செந்தில்குமார் அவரது வங்கியில் தாக்கல் செய்யவேண்டும்.
அது திரும்பி வந்த பிறகு, உடனடியாக ராமசாமி அவர்களுக்கு சட்ட அறிவிப்பு அனுப்ப வேண்டும்.
அனுப்புகின்ற அந்த சட்ட அறிவிப்பில் முதலாவதாக பணம் வசூலிக்க காசோலை வங்கியில் போட்ட விபரத்தையும், காசோலை திரும்பி வந்த விபரத்தையும், ராமசாமி பணத்தை ஒரு மாதத்துக்குள் தருவதாகக் கூறியதால் சட்டப்படியான அறிவிப்பு வழங்காமல் இருந்ததையும் தெளிவாக அதில் குறிப்பிடவேண்டும்.
பணத்தை வசூலிக்க 15.08.2016க்கு முன்னர் எத்தனை முறை வேண்டுமானாலும் வங்கியில் காசோலையை தாக்கல் செய்யலாம். காசோலை திரும்பி வந்ததும் சட்ட அறிவிப்பு வழங்கலாம்.
ஆனால், கடைசி 15 நாட்கள் இருக்கும் போது தாக்கல் செய்து, காசோலை திரும்பி வந்தால், காசோலை வழங்கியவர் சொல்லும் கதைகளை (பணத்தை இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்) கேட்காாமல் சட்ட அறிவிப்பு வழங்குவது நல்லது.
என்ன செய்ய வேண்டும் : 3
காசோலை வழங்கியவர் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், புதிதாக ஒரு காசோலையை அவரிடம் பெற்ற பிறகே, அவர் நமக்கு பணத்தை கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.
காசோலை அளித்தவர் இறந்துவிட்டால்?
வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் உள்ள உறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அதன் பின்னர் வங்கியானது வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை கழிக்க முடியாது.
வாடிக்கையாளர் இறந்துவிட்டார் என்று வங்கி காசோலையை திருப்பி அனுப்பினாலும் அதன் அடிப்படையில் காசோலை மோசடி வழக்கிடமுடியாது ஏனெனில் சட்டப்படியான அறிவிப்பை காசோலை வழங்கியவருக்கு மட்டுமே அனுப்பவேண்டும்.
மேலும் இறந்தவர் மீது குற்றவியல் வழக்கு தொடரமுடியாது.
ஆனால், காசோலை கொடுத்தவரின் வாரிசுதாரர்கள் மீது சிவில் வழக்கு போடலாம். இறந்தவர் ஏதாவது சொத்தை விட்டு சென்றால் அந்த சொத்தின் மீது நீதிமன்றத்தின் வாயிலாக உரிமை கோரலாம்.
இறந்தவருக்கு எந்தவித சொத்தும் இல்லையென்றால் இறந்தவர் கடனை அடைக்க அவரின் வாரிசுதாரர்கள் கடமைபட்டவர்கள் அல்ல.
வாரிசுதாரர்களின் கடமையானது இறந்தவரின் சொத்தில் அடையும் உரிமை அளவே ஆகும்.
நன்றி :
வழக்கறிஞர் திரு Leenus Leo Edwards அவர்கள்
No comments:
Post a Comment