மறந்துபோன டிவிடெண்ட்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புவோர் நீண்ட காலத்துக்கு நல்ல பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல வருமானமும் லாபமும் பார்க்கலாம் என்று சொல்வதுண்டு. ஆனால், நீண்ட காலம் என்பதற்காக, அந்த முதலீட்டையே மறந்துபோகிற அளவுக்கு இருந்துவிடக்கூடாது. ஆண்டுக்கு ஒரு முறையேனும் நமது முதலீடுகளை ஆராய்வது மிகவும் அவசியம்.
நாம் இப்படி சொல்வதற்கு காரணம், இந்தியாவில் பங்கு முதலீட்டின் வாயிலாக டிவிடெண்ட் வழங்கப்பட்டும் அதைப் பெறாமல் இருக்கும் (Unclaimed dividends) தொகை பல ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதனால் நஷ்டம்என்னவோ, முதலீட்டாளர்களுக்குத்தான். பங்குகளில் முதலீடு செய்து, அதன் பலனாகக் கிடைக்கும் டிவிடெண்ட்டை அனுபவிக்க முடியாமல் இருப்பது துரதிஷ்டமே.
எந்தெந்த காரணங்களுக்காக இது போன்று நிறுவனங்கள் அளிக்கும் டிவிடெண்ட் தொகையானது முதலீட்டாளர் களுக்கு போய்ச் சேராமல் போகிறது? ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முகவரி மாற்றம்!
பல்வேறு காரணங்களுக்காக, குறிப்பாக தொழில் காரணங்களுக்காக பலர் தங்களது வீடுகளை மாற்றும் சூழல் ஏற்படும். அது போன்ற சமயத்தில் நிறுவனங்கள் முதலீட்டாளர் களுக்கு அனுப்பும் டிவி டெண்ட்டுக்கான காசோலை அந்த முகவரிக்கு அனுப்பி வைக்கபட்டும் முதலீட்டாளர் களுக்கு டிவிடெண்ட் தொகை கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களால் இயன்ற அளவு அவைகளை எடுத்துப் பாதுகாத்து வைத்தாலும் அதை உரியவரிடம் சேர்ப்பது பல நேரங்களில் நடைமுறையில் சாத்தியப்படாத காரியம்.
இந்தியாவில் பெறப்படாத டிவிடெண்ட் கணக்கில் பெரும்பாலான பணம் இந்த வகையைச் சாரும். உதார ணத்துக்கு, ஒரு முதலீட்டாளர் முதலீடு செய்யும் போது ஒரு வீட்டில் வசித்திருப்பார். சில ஆண்டுகளில் அவர் அந்த வீட்டை மாற்றி னாலோ அல்லது ஊரை மாற்றினாலோ, அவர் அந்த விவரத்தை நிறுவனங் களுக்கோ அல்லது நிறுவனங்களின் பதிவாளருக்கோ தெரியப்படுத்தாமல் இருந்தால், அவர் முதலீட்டுக்கான டிவிடெண்ட் அவருடைய அந்த பழைய முகவரிக்கே சென்று கொண்டிருக்கும்.
வீட்டை மாற்றி அதே ஊரில் வேறு வீட்டுக்குச் சென்று இருந்தாலாவது ஒரளவுக்கு தபால் களை கண்காணிக்க முடியும். ஊரை விட்டோ அல்லது நாட்டை விட்டோ செல்ல நேரிட்டால், பழைய ஊரில் வரும் தபால்களை கண்காணிப்பது இயலாத காரியம்.
பெரும்பாலான பெறப்படாத டிவிடெண்ட் தொகை முகவரி மாற்றத்தினாலேயே ஏற்படுகிறது. இப்போது இசிஎஸ் முறை வந்து விட்டாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெருவாரியான டிவிடெண்ட்டுகள் வங்கிக் காசோலை மூலமாக மட்டுமே முதலீட்டாளர்களின் வீட்டு முகவரிக்குச் சென்றுள்ளன. இசிஎஸ் மூலமாக டிவிடெண்ட் வழங்கப்படும் வசதி துவங்கப் பட்டதும்தான் ஓரளவுக்கு இந்த வீடு மற்றும் ஊர் மாற்றப் பிரச்னை கட்டுக்குள் உள்ளது என்று சொல்லலாம்.
வங்கிக் கணக்கு மாற்றம்!
முதலீட்டாளர்களின் வங்ண்ட் தொகையும் நமது நாட்டில் அதிகமாகவே உள்ளன. முதலீடு செய்யும்போது கொடுத்த வங்கிக் கணக்கின் அடிப்படையில்தான் டிவிடெண்ட் காசோலையோ அல்லது நேரிடையாக இசிஎஸ் மூலமாகவோ டிவிடெண்ட் தொகை நிறுவனங்களால் அனுப்பப்படும். முதலீடு செய்யும் போது கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் ஏற்பட்ட மாற்றத்தை தெரிவிக்காத பட்சத்தில் மாற்றம் ஏற்பட்ட பிறகும் அதே கணக்கில் தான் டிவிடெண்ட் தொகை சென்று திரும்பிக் கொண்டிருக்கும்.
அதுமட்டுமல்லாது, அநேகமாக நாம் அனைவருமே நமது வங்கிக் கணக்குகளை ஏதாவது ஒரு காலகட்டத்தில் மாற்றி இருப்போம். அந்த விவரத்தைத் தெரியப்படுத்தாத வரை டிவிடெண்ட் தொகை யானது பழைய வங்கிக் கணக்கின் அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கும். அதுமட்டு மல்லாது, பல வருடங்களுக்கு முன்பு இருந்த வங்கிக் கணக்கின் எண்கள் புதிய முறைக்கு மாறுதலாகும்போதும் அதை தெரியப்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. அதன் காரணமாகவும் டிவிடெண்ட் தொகை நிலுவையில் இருப்பதை நாம் காணலாம்.
முதலீட்டாளர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்!
டிவிடெண்ட் வழங்கப்பட்டும் பெற்றுக் கொள்ளப்படாத டிவிடெண்ட் தொகை நமது சந்தையில் அதிகமாக இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், முதலீட்டாளர்களின் இறப்பும் அதனால் ஏற்படும் குழப்பமும் தான். ஒரு முதலீட்டாளர் மறைந்தால், அவரின் வாரிசுகளோ அல்லது குடும்பத்தினரோ அதை நிறுவனத்தின் பங்கு விஷயங்களை நிர்வகிக்கும் பதிவாளரிடம் (Registrar) தெரியப்படுத்தி, உரிமம் கோரவில்லை என்றால் அதன் காரணமாகவும் டிவிடெண்ட் தொகை உரிய நபரிடமோ அல்லது பரிந்துரைக்கப்பட்ட நபர்களிடமோ போய்ச் சேருவதில்லை.
மேலும், முதலீடுகள் பல வருடங்களுக்கு முன்பு செய்யப் பட்டிருப்பின், அந்த முதலீட்டாளர் அந்த முதலீட்டு விவரங்களை தனது குடும்பத் தாரிடம் முழுவதுமாகச் சொல்லத் தவறுவதும் இதற்கு ஒரு முக்கியமான காரணம். அதன் காரணங்களுக்காக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான டிவிடெண்ட் தொகை இன்னும் நேரடி வாரிசுகளாலேயோ அல்லது குடும்பத்தினாலேயோ பெறப்படாமலேயே உள்ளது.
திரும்பக் கோரப்படாத டிவிடெண்ட் தொகை!
இந்தியாவில் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பல முதலீடுகளிலிருந்து வழங்கப்பட்டும் பெற்றுக் கொள்ளப்படாத டிவிடெண்ட் தொகை ஏறக்குறைய ரூ.65,000 கோடி என்ற அளவில் உள்ளது. இந்தக் கூட்டுத் தொகையானது கடந்த பல வருடங்களாக அறிவிக்கப்பட்ட டிவிடெண்ட், முதலீட்டாளர்களால் பெற்றுக் கொள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கும் தொகையே ஆகும்.
இந்த நிலையை முடிவுக்குக் கொண்டுவர சில ஆண்டுகளுக்கு முன்னால், அன்றைய மத்திய அரசு, இதற்கு ஒரு தீர்வை வகுத்தது. அதாவது, டிவிடெண்ட் கொடுக்கப்பெற்று ஏழு ஆண்டுகளுக்குள் அவற்றை பெற்றுக்கொள்ள முதலீட்டாளர்கள் முயற்சி எடுக்கவில்லை எனில், அந்தத் தொகையானது “முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி” (Investor education and protection fund) என்ற அரசின் அமைப்பினுடன் சேர்க்கப்பட்டு விடும் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தது.
இதன் காரணமாக இது போன்ற நிலுவைத் தொகை வருடக்கணக்கில் கேட்பாரற்று இருப்பது என்ற நிலை மாறி, அது முதலீட்டாளர்களின் விழிப்பு உணர்ச்சி நிதிக்காகப் பயன் படுத்தப்படுகிறது என்பது ஓர் ஆறுதலான விஷயமாக இருந்தா லும், முதலீட்டாளர்களின் பணம் அவர்களுக்குப் போய்ச் சேராமல் விரையமாகி போகிறது என்பதே உண்மை.
அதுமட்டுமல்லாது, நிறுவனங்கள் தங்களிடம் உள்ள டிவிடெண்ட் பெற்றுக் கொள்ளாத முதலீட்டாளர் பட்டியலை தங்களது இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்பதும் ஒரு விதியாக கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், பெற்றுக்கொள்ள படாத டிவிடெண்ட் தொகையை முதலீட்டாளர் நிதியில் ஒப்படைக்கும்முன் அந்த முதலீட்டாளர்களுக்கு கட்டாயம் தெரியப்படுத்தவேண்டும் என்பதும் ஒரு முக்கியக் கட்டளை.
என்ன செய்ய வேண்டும்?
முதலீட்டாளர்கள் தங்களுக்கு டிவிடெண்ட்டுகள் வழங்கப்பட்டு அவற்றை பெறவில்லை என்று அறிந்தால் மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதலில், நிறுவனத்தின் பங்குகளின் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் பதிவாளரிடம் ஒரு விரிவான, அனைத்து விவரங் களையும் உள்ளடக்கிய ஒரு கடிதத்தைக் கொடுக்க வேண்டும். அதில் முதலீட்டாளர்கள் எந்த நிறுவனத்தின் பங்கை வைத்திருக்கிறார், எவ்வளவு பங்குகள், எவ்வளவு காலம் டிவிடெண்ட் பெறவில்லை என்ற தகவல்களுடன் முதலீட்டாளரின் டீமேட் கணக்கின் எண்ணைக் குறிப்பிட வேண்டும். அதுமட்டுமல்லாது, அந்தப் பங்கில் உரிமம் எது போன்ற அமைப்பில் உள்ளதோ, அதாவது தனியாகவோ (single holding) அல்லது கூட்டாகவோ (Joint holding) இருப்பின், அதன் அடிப்படையில் முதலீட்டாளரின் அல்லது முதலீட்டாளர்களின் கையொப்பம் அந்தக் கோரிக்கைக் கடிதத்தில் இருக்கவேண்டும்.
அந்தக் கடிதத்துடன், டிவிடெண்ட் வாரண்ட் அல்லது பங்குகளின் பட்டியலை இணைத்து நிறுவனம் பரிந்துரைக்கிற வகையில் ஒரு இண்டம்னிடி பத்திரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் ஆராய்ந்த பின், கொடுக்கப் பெற்ற தகவல்களை சரிபார்த்து உறுதி செய்தபின் நிறுவனத்தின் பதிவாளர் டிவிடெண்ட் தொகையை முதலீட்டாளர் களுக்கோ அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கோ வழங்குவார்கள்.
மேலும், முதலீட்டாளர் அல்லது முதலீட்டாளர்களின் அடிப்படை விஷயங்களான வீட்டு முகவரி, வங்கிக் கணக்கு மற்றும் முதலீட்டாளர்களின் தனி மனித விஷயங்கள் (அதாவது, முதலீட்டாளர் தவறி இருந்தால்) அதற்குண்டான சட்டப் பூர்வமான விஷயங்களையும் சேர்த்து இணைக்க வேண்டும். அப்படி முழுமையாக இணைத்து அனுப்பினால், நிலுவையில் உள்ள டிவிடெண்ட்டுகளைப் பெறுவது சுலபமாகும்.
வரும்முன் காப்பது எப்படி?
இந்தப் பிரச்னையில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஐடியா இதோ:
டிவிடெண்ட் நிலுவைத் தொகையை சரியான ஆவணங்கள் கொண்டு பெற்று விடலாம் என்றாலும் முதலீட்டாளர்கள் தங்களின் உழைப்பால் உருவாக்கிய பணத்தை முதலீடுகளில் அதுவும் குறிப்பாக, பங்கு முதலீடுகளில் போடும்போது எப்போதும் விழிப்புடன் இருப்பது நல்லது. அதுவும் பங்குகளில் டிவிடெண்ட் என்பது நாம் எதிர்பாராத நேரங்களில் வந்துகொண்டு இருக்கும் ஒரு வருமானம்.
அப்படி நாம் விழிப்புடன் இருக்கும் பட்சத்தில் இது போன்ற டிவிடெண்ட் விஷயங்களை நாம் கண்காணித்து வருவது நமது முதலீடுகளுக்கு மிகவும் அவசியமாகிறது. நமது வாழ்க்கை காலச் சூழலுக்கேற்ப மாறி வந்தாலும், நமது முதலீடுகளின் மேல் விழிப்புடன் இருந்தால் இது போன்ற டிவிடெண்ட் கிடைக்கப் பெறாத நிலையை நிச்சயமாகத் தவிர்க்க முடியும்.
அதிலும் குறிப்பாக, வீடு மாற்றமோ, ஊர் மாற்றமோ அல்லது வங்கிக் கணக்கு மாற்றமோ ஏற்பட்டால், உடனடியாக உங்களின் பங்கு ஆலோசகரைத் தொடர்பு கொண்டு, அந்த மாற்றங்களை நிறுவனத்தின் பதிவாளர் மூலம் செய்ய சொல்லவேண்டும்.
அதுமட்டுமல்லாது, தாங்கள் செய்த முதலீடுகளை தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியம். எதிர்காலத்தில் பங்குகளின் உரிமத்தை சரியான முறையில் மாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும். மேலும், இது போன்ற குழப்பங்கள் எழாமல் இருக்கவும் உதவும்.
ஏனென்றால், பல பிள்ளைகளுக்கும் குடும்பத்தி னருக்கும் தங்களது தகப்பனார் எந்தப் பங்குகளில் முதலீடு செய்துள்ளார் என்ற விஷயமே தெரியாமல் போய் விடும் சூழலை அனுபவத்தில் நாம் கண்டிருக்கிறோம். அப்படித் தெரியாமலே போய்விட்டால் அவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய பணம் அவர்களுக்குக் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.
மேலும், தக்க ஆலோசகரைக் கொண்டு செய்த முதலீடுகளை ஆண்டுக்கொருமுறை ஆய்வு செய்துவருவதும் அவசியம். அப்போதுதான் இது மாதிரி பிரச்னைகள் ஏற்படாது!
நன்றி : நாணயம் விகடன் - 10.04.2016
No comments:
Post a Comment