disalbe Right click

Sunday, May 22, 2016

அலர்ஜி (அரிப்பு)


அலர்ஜி - என்ன செய்ய வேண்டும்?

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடலுக்குள் வேண்டாத பொருள் நுழைந்துவிட்டால், நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறி. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்ற ஓர் எதிர்வினை. இது, சில நேரங்களில் இதமாகவும் பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் மாறிவிடும். இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.
அடிப்படைக் காரணம்
அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளைக் கட்டுப்படுத்த ரத்தத்தில் உருவாகும் எதிர்புரதம்தான். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடலுக்குள் நுழைந்த பின், மீண்டும் வராமல் தடுக்க இந்தப் புரதம் உருவாகி, ரத்தத்தில் காத்திருக்கும். மீண்டும், அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின் (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை, ரத்தக் குழாய்களை விரிவடையச்செய்து அங்கு உள்ள நரம்புமுனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.
பெரும்பாலான நேரங்களில் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேண்ட்-லைன்’ போன் வேலை செய்வதைப் போன்ற இயந்திரவியல் இது. லேண்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான்.
எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும். இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே நரம்புதான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகின்ற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச்செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், இது அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால், அரிப்பு குறைகிறது.
நச்சு அரிப்பு
அரிப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, ‘அர்ட்டிகேரியா’ (Urticaria) என்று அழைக்கப்படுகிற ‘நச்சு அரிப்பு’ நோய். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்குத் தோலில் பல இடங்களில் பூரான் கடித்த மாதிரி வீங்கிவிடும். தோல் தடித்துச் சிவந்துவிடும். சிலருக்கு இந்தத் தடிப்பு தோலில் கத்தியால் கீறியதுபோல் கோடுகோடாக இருக்கும்; இன்னும் சிலருக்கு வட்ட வட்டமாகத் தோல் தடித்துவிடும். தோலில் வெவ்வேறு வடிவங்களில் தடிப்புகள் தோன்றி மறைவதும் உண்டு.
அரிப்பின் வகைகள்
சிலருக்கு இது திடீரென வரலாம். இன்னும் சிலருக்கு நாட்பட்டும் (Chronic) வரலாம். மிகவும் லேசான அரிப்பில் இருந்து கடுமையான அரிப்பு வரை தொல்லை தரலாம். இது சில நிமிடங்களிலும் மறைந்துவிடலாம். அரிப்பு பல வாரங்கள் வரை தொடரவும் செய்யலாம். ஆறு வாரங்கள் வரை நீடிப்பது ’திடீர்’ வகையைச் சேர்ந்தது. ஆறு வாரங்களுக்கு மேல் அரிப்பு நீடிக்குமானால், அது ‘நாட்பட்ட அரிப்பு’.
தூண்டும் காரணிகள்
நச்சு அரிப்புக்கு நாம் சாப்பிட்ட உணவு ஒவ்வாதது முக்கியக் காரணி. பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல்மீன், கருவாடு, கடலை, நட்ஸ், சாக்லெட் போன்றவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். உணவுகளில் கலக்கப்படும் செயற்கை நிறமூட்டிகள், மணமூட்டிகள், பதப்படுத்த உதவும் வேதிப்பொருட்கள் போன்றவையும் நச்சு அரிப்பைத் தூண்டக்கூடியவையே.
கொசுக்கடியில் தொடங்கி சிலந்திக்கடி வரை பலதரப்பட்ட பூச்சிக் கடிகள் நச்சு அரிப்பை உண்டாக்கும். சிலருக்கு, தோலை அழுத்துவதுபோல் உடைகளை அணிந்தால், அந்த அழுத்தம் காரணமாக நச்சு அரிப்பு ஏற்படுவது உண்டு. சிலருக்கு, அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பும் தடிப்பும் ஏற்படும்.
சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டு, தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால், பலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.
எச்சரிக்கும் நோய்கள்
உடலில் இருக்கும் எந்த ஒரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்பு உண்டு.
சொத்தைப் பல், தொண்டை அழற்சி, சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப்பாதை அழற்சி, சைனஸ் பாதிப்பு போன்றவை நச்சு அரிப்பை உண்டாக்குகின்றன. குடலில் புழு இருந்தாலும் அரிப்பு ஏற்படலாம். கர்ப்பக்காலத்திலும் குழந்தை பிறந்த பிறகும் பல பெண்களுக்கு நச்சு அரிப்பு ஏற்படுவதற்கு தைராய்டு சுய எதிரணுக்கள் (Thyroid Auto Antibodies) காரணமாகின்றன.
கட்டுக்கு அடங்காத நச்சு அரிப்புக்கு முடக்குவாதம், ‘லூபஸ் எரித்திமட்டோசஸ் (Lupus Erythematosus) ஆகிய நோய்கள் காரணமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. தவிர, சர்க்கரைநோய், ரத்தசோகை, மஞ்சள்காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்னை, பித்தப்பை பிரச்னை, ஹார்மோன் பிரச்னை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’ எனும் மூளை நரம்புப் பிரச்னை, பரம்பரைத்தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த நோய்களின்போது தோலில் தடிப்பு தோன்றாது.
கோபம், கவலை, பயம், மனஅழுத்தம் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள், தங்கள் உடலில் ஒரு பூச்சி ஊர்வதுபோல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால், இவர்கள் எந்த நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் இந்த அரிப்பு சரியாகும்.
என்ன பரிசோதனை?
ரத்தப் பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலப் பரிசோதனை முதலில் மேற்கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து அலர்ஜியை அறிய உதவும் தோல் பரிசோதனைகள் செய்யப்படும். காரணம் தெரிந்ததும் அதற்கு ஏற்ப சிகிச்சை வழங்கப்படுவது நடைமுறை.
என்ன சிகிச்சை?
அரிப்பைக் குறைக்க ஆன்டிஹிஸ்டமின் மாத்திரைகளும் லோஷன்களும், வீக்கத்தைக் குறைக்க ஸ்டீராய்டு மாத்திரைகளும், அரிப்பைத் தடுக்க மான்டிலூகாஸ்ட் மாத்திரைகளும் தரப்படும். இவற்றை, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குச் சாப்பிட வேண்டியது மிக முக்கியம். அப்போதுதான் அரிப்பு மீண்டும் வராமல் இருக்கும்.

ஆஞ்சியோஎடீமா தெரியுமா?

அலர்ஜியின் வெளிப்பாடாகத் தோலில் தோன்றுகிற இன்னொரு முக்கிய அறிகுறி ஆஞ்சியோஎடீமா (Angioedema).
இதில் தோலில் அரிப்புடன் ஏற்படுகிற தடிப்பும் வீக்கமும் பெரிதாகக் காணப்படும். அடித்தோலும் அங்குள்ள ரத்தக்குழாய்களும் சேர்ந்து வீங்குவதால் இந்த வீக்கம் பெரிய அளவில் ஏற்படுகிறது. இது நச்சு அரிப்பைப் போலவே காணப்படும் அறிகுறிதான் என்றாலும் சிறிதளவு வித்தியாசம் உண்டு.
இது தோலில் எல்லா இடங்களிலும் தோன்றாது. குறிப்பாக, கண்ணுக்குக் கீழ் வீக்கம் ஏற்படும். உதடுகள் வீங்கும். சிலருக்கு கை, கால் பாதங்களிலும், பிறப்பு உறுப்புப் பகுதிகளிலும் இந்த வீக்கம் தோன்றலாம். இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்; இந்த வீக்கம் தொண்டையில் தோன்றினால், மூச்சு விட சிரமப்படுத்தும். உணவை விழுங்க முடியாது. இதை அலட்சியப்படுத்தாமல் உடனே கவனிக்க வேண்டும். தவறினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
அரிப்பைத் தடுக்க 8 வழிகள்

ஒவ்வாத உணவுகளைப் பட்டியலிட்டு அவற்றை ஒதுக்க வேண்டும்.
சுய மருத்துவம் தவிர்க்க வேண்டும்.
கடுமையான ரசாயனங்களால் ஆன சோப்பைப் பயன்படுத்தக் கூடாது.
தளர்ந்த உடைகளை அணிய வேண்டும்.
குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டாம்.
சருமத்துக்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.
வீட்டில் பூச்சிகள் வளர்வதைத் தடுக்க, வீட்டுச் சுவர்களில் சில வேதிப்பொருள்களைத் தடவ வேண்டும்.
குடல் புழுவுக்கு முறைப்படி மருந்து சாப்பிட வேண்டும்.
கு.கணேசன், பொதுநல மருத்துவர்,
நன்றி : டாக்டர் விகடன் - 01.06.2016

No comments:

Post a Comment