disalbe Right click

Friday, May 13, 2016

ஃபேஸ்புக்கில் பெண்கள்

ஃபேஸ்புக்கில் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

ப்போது இருக்கும் டிஜிட்டல் உலகில் வங்கியில் கணக்கில்லாத மனிதர்கள் கூட இருக்கலாம், ஆனால் முகநூலில் கணக்கில்லாத மனிதர்களைக் காண முடியாது.
ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்:
இதுதான் பிரச்னை ஆரம்பமாகும் இடம். நாம் ஒருவரை நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்க்கும் முன், முதலில் அவரது புரொஃபைல் புகைப்படம், நண்பர்கள் லிஸ்ட், அவர் பதிவிடும் ஸ்டேட்டஸ்கள் எல்லாவற்றையும் கவனியுங்கள். பெண்களைக் குறித்து தவறாகவோ அல்லது குறையாகவோ, அல்லது கோபமாகவோ ஸ்டேட்டஸ் போட்டால் யோசிக்காமல் அவரை நிராகரிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு அவர் கொடுக்கும் கமென்ட்டுகளையும் கவனிப்பது அவசியம். இல்லையேல் நீங்கள் போடும் கமென்ட்டுகள் அல்லது புகைப்படங்களுக்குக் கொஞ்சம் நக்கலாகவோ அல்லது மனதைப் புண்படுத்தும்படியோ கமென்ட்டுகள் வருவதைத் தவிர்க்க முடியாது.
மெசேஜ் பூதம்:
அலுவலகத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு மெசேஜ் பாக்ஸை முடிந்தவரை ஆஃப் செய்து வைத்து விடுங்கள். “ஹாய் பேபி”, ” ஹலோ டியர்” என வரும் நல்லுள்ளங்களை மியூட்டில் வைத்து விடுவது அதைவிட நல்லது. அவர்களைக்கூட மன்னிக்கலாம். சில மிக நல்லவர்கள், டக்கென மோசமான புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ பகிர்ந்துவிடுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை இதற்கு ஒரே தீர்வு மெசேஜ்களை, முடிந்தவரை பொது இடங்களில் ஓபன் செய்யாமல் இருப்பதுதான். சில மோசமான இன்பாக்ஸ் மக்களின் ஃப்ரெண்ட் லிஸ்டை கட் செய்வது நல்லது. வேண்டுமானால் மெசேஜை மட்டும் ப்ளாக் செய்யலாம்
மெனக்கெட வைக்கும் மெசெஞ்ஜர் கால்
உண்மையில் பல பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் பிரச்னை இந்த மெசெஞ்சர் காலாகத்தான் இருக்கும். நம் மொபைல் அலைபேசிபோல், சைலன்ட்டில் போட்டாலும் மெசெஞ்சர் கால் சப்தத்தை கட் செய்ய முடியாது. இதற்கு ஒரே தீர்வு முக்கிய மீட்டிங், வீட்டில் இருக்கும்போது என நோட்டிஃபிகேஷன்களை அணைத்து விடுவது நல்லது. அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதிகபட்சம் உங்களால் மெசெஞ்சரில் 24 மணி நேரம் மட்டுமே நோட்டிபிகேஷன் அல்ர்ட்டை கட் செய்ய முடியும். அதனால் அதையும் நீங்கள் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கு ஒருமுறை செக் செய்து அணைத்து வையுங்கள்.
கமென்ட்டில் வரும் கலகம்
நீங்கள் போடும் ஸ்டேட்டஸ்களில்கூட உங்கள் மனதைப் புண்படுத்தும்படி கமென்ட்கள் கொடுக்க முடியும். முடிந்த வரை புரட்சி, போர் என நீங்கள் போடும் ஸ்டேட்டஸ்களைக் கவனிப்பிலேயே வைத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் பல்ப் வாங்கக் கூடும்.
ஷேரிங்:
நாம் சொல்லும் கருத்தை மற்றவர்கள் ஷேர் செய்கிறார்கள் எனில், அதற்கு என்ன கருத்தை அவர்கள் சொல்கிறார்கள் என செக் செய்யுங்கள். எல்லாவற்றிற்கும் மேல் உங்கள் புரொஃபைல் புகைப்படங்களையோ அல்லது செல்ஃபிக்களையோ யாரேனும் ஷேர் செய்தால், உடனே சந்தேகப்படுங்கள். சற்றே அந்த ஆசாமியின் அக்கவுன்ட்டைப் பார்த்தால், உங்களைப்போன்றே பல பெண்களின் புகைப்படங்களைப் பகிர்ந்திருப்பார்.
அப்படி இருந்தால் கேள்வியே இல்லாமல் அந்த நபரை அன்ஃப்ரெண்ட் செய்யுங்கள். அன்ஃப்ரெண்ட் செய்த அடுத்த கணம் உங்கள் புகைப்படம் அவரது ஸ்டேட்டஸில் இருந்து மறைந்து விடும். காரணம் அவர்களுக்கு வேலையே இப்படி சில பெண்களின் புகைப்படங்களை ஷேர் செய்து லைக்குகளையும், கமென்ட்டுகளையும் பெறுவதே! மேலும் அப்படிப்பட்ட நபர்களைப் பின்தொடர்பவர்களும் அதே நோக்கத்துடன் இருப்பார்கள் என்பதால், உங்களுக்கு இன்பாக்ஸ்களிலும் பிரச்னைகள் எழ வாய்ப்பு உள்ளது.
நாம் செய்யும் தவறு:
ஒரு நபர் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து, அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் 'ஹாய்' என அடித்து விடுவார்கள். ஆனால், அந்தக் கால இடைவெளியை நாம் தருவதே இல்லை. ரெக்வெஸ்ட் கொடுத்த அடுத்த நொடி, ஓகே கொடுத்து விடுகிறோம்; அதுதான் பிரச்னை. அதே சமயம் யாரையும் நாம் திருத்த முடியாது. ஒரு நபர் நம்மைத் தவறாகப் பாவித்து சாட் செய்கிறார் எனில், கேட்காமல் ப்ளாக் செய்வதே நல்லது. அதை விடுத்து அறிவுரை கூறுகிறேன், நல்வழிப்படுத்துகிறேன் என ஆரம்பித்தால் பஞ்சாயத்துதான். முடிந்தவரை அதைத் தவிர்த்து விடுங்கள். 
தீ என்றால் சுடத்தான் செய்யும். முடிந்தவரை எட்ட நிற்பது சிறப்பு.
(இது ஆண்களுக்கும் பொருந்தும் மக்கா!)
- ஷாலினி நியூட்டன் 
நன்றி : விகடன் செய்திகள் - 12.05.2016

No comments:

Post a Comment