கொளுத்தும் வெயில்! குழந்தைகளை காக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் அனலாகக் கொதிக்கிறது. வெளியே சில நிமிடங்கள் நின்றால், அப்படியே உருகி ஓடிவிடுவோமோ என்கிற அளவுக்குச் சுட்டெரிக்கிறது அக்னி. பெரியவர்களுக்குச் சரி... பள்ளி விடுமுறையில் விளையாட நினைக்கும் குழந்தைகளுக்கு? சித்திரை வெயிலில் இருந்து சிறுவர் - சிறுமியரைப் பாதுகாக்க முத்தான யோசனைகளைச் சொல்கிறார் சருமப் பாதுகாப்பு நிபுணர் ஜி.ஆர்.ரத்னவேல்
நம் மொத்த உடல் எடை 70 கிலோவாக இருந்தால், அதில் 5.5 கிலோ சருமத்தின் எடைதான். அதாவது 12-ல் ஒரு பங்கு சருமத்தின் எடை. ஒரு சிறுவனின் எடை 12 கிலோவாக இருந்தால், அதில் ஒரு கிலோ தோலின் எடை. கைக்குழந்தை மூன்று கிலோ எடை இருந்தால் அதில் 500 கிராம் வரை தோலின் எடை. நம் உடலில் தோல்தான் பெரிய உறுப்பு. 70 கிலோ எடை உள்ளவர்களின், 5.5 கிலோ சரும எடையில், 2/3 பாகம் தண்ணீர்தான் இருக்கும். தண்ணீர்ச் சத்துதான் நம் சருமத்துக்கு அழகூட்டுகிறது. சருமத்துக்குத் தேவையான பாதுகாப்பைத் தருகிறது. உடலில் சரியான அளவில் நீர்ச்சத்து இருந்தால் வயதாவதுகூட தள்ளிப்போகும். தண்ணீர்க் குறையும்போதுதான் தோல் வறட்சி அடையும்; சுருங்க ஆரம்பிக்கும்; வயதானதற்கான அறிகுறிகள் தென்படும்.
கோடைக் காலத்தில் நம் உடலில் இருந்து, அதிகமாகத் தண்ணீர் வெளியேறிவிடுகிறது. இதற்குக் காரணம் வியர்வை. இதைச் சமன்செய்ய, தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
பொதுவாக ஒரு மனிதருக்குத் தேவையான தண்ணீரின் அளவு 1.5 முதல் 2 .5 லிட்டர் ஆகும். இதையே வெயில் காலத்தில் இரண்டு மடங்காக்கி குடிக்க வேண்டும். இல்லை என்றால் உடல் நிலை பாதிக்கும்.
வெயில் காலத்தில் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் பாக்டீரியல், ஃபங்கஸ் மற்றும் வைரல் பிரச்னைகள் வரும்.
பாக்டீரியல்
வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அதிகம் வருவது வேர்க்குரு பிரச்னைகள்தான். இதன் ஆரம்பம் வியர்வைக் குழாயில் அடைப்பு ஏற்படுவதே. வியர்வை வெளியே வராமல் இருந்துவிட, வியர்வை உள்ளே தங்கிவிடுவதால், வியர்வைச் சுரப்பி வீங்க ஆரம்பிக்கும். அதன்பின் சிறு சிறு கொப்புளம் வந்துவிடும். அதைக் குத்திப் பார்த்தால் அதனுள் தண்ணீர்தான் இருக்கும். எரிச்சல் அதிகரிக்க, குழந்தை அரிப்பு தாளாமல் சொறிய ஆரம்பிக்கும். இதனால் இன்ஃபெக்ஷன் பரவி வேனல் கட்டியாகிவிடும்.
உடனே அதைச் சரிசெய்வதாக நினைத்து சுண்ணாம்பு, நாமக்கட்டி தடவுவார்கள் ஆனால், அப்படிச் செய்யக் கூடாது. சிலர் குளிர்சியாக இருக்கட்டும் என்று சந்தனம், மஞ்சள், பயத்தம் மாவு அல்லது வியர்க்குரு பவுடர்களைக் குழந்தையின்மேல் அப்புவார்கள். அப்படிச் செய்யவே கூடாது. அது வியர்வைக் குழாயின் அடைப்பை மேலும் அதிர்கரித்துவிடும். அடைப்புதான் பிரச்னை. எனவே அடைப்பை நீக்கவேண்டும். கேலமைன் லோஷன் பயன்படுத்தினால் வியர்க்குரு வேனல் கட்டி ஆகியவை வராது. வேனல்கட்டி இருந்தாலும் குணமாகிவிடும். வேறு எதையும் பயன்படுத்தாமல் கேலமைனை மட்டுமே காலையும் இரவும் தடவி வர, நல்ல பலன் கிடைக்கும்.
ஃபங்கஸ்
எங்கே எல்லாம் தண்ணீர் நிற்குமோ அங்கே பூஞ்சைத் தொற்று வந்துவிடும். குழந்தைங்களுக்கு எங்கே ஈரம் இருக்கும் என்றால் நாப்கின் ஏரியா மற்றும் அக்குளில்தான். நாப்கின் போட்டுவிடும்போது அந்தப் பகுதியில் காற்று புகாது. வியர்வை அந்த இடத்தில் நிற்க, பூஞ்சைத் தொற்று உடனே வந்துவிடும். வெயில் காலங்களில் குழந்தைக்கு நாப்கின் அணிவிப்பதைக் கூடுமானவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் சிவப்பு நிறத்தில் இன்பெக்ஷன் வந்துவிட்டால், அங்கு உடனடியாக ஆன்டிஃபங்கல் பவுடரைத் தடவிவிட வேண்டும். இது வியர்வையை நன்கு உள்வாங்கும். இது ஃபங்கஸை மேலும் வளர விடாது தடுக்கும்.
வைரஸ்
குழந்தைகளுக்கு வெயில் நேரத்தில் அதிகம் வரக்கூடிய வைரஸ் நோய்களில் குறிப்பிடத்தக்கது அம்மை. அம்மை வருவதற்கு மூன்று, நான்கு நாட்கள் முன்பே காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஆரம்பிக்கும். பிறகு தோலில் எரிச்சலும், அரிப்பும் ஏற்பட்டு, முகம், கழுத்து, முதுகு, மார்பு என்று உடல் முழுவதும் கொப்புளங்கள் வரும். அம்மைக்கு என்றே தனியாக மாத்திரைகள், சிரப், ஆயின்மென்ட்டுகள் இருக்கின்றன. டாக்டரிடம் முதலிலேயே காட்டி சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோயின் வீரியத்தில் இருந்தும், பக்க விளைவுகளில் இருந்தும் தப்பலாம்.
- உமா ஷக்தி
அதிகப்படியாகத் தண்ணீர்க் குடிக்கவேண்டும்
அதிகப்படியாகத் தண்ணீர்க் குடிக்கவேண்டும்
வெயில் காலத்தில் குழந்தையை இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பாட்ட வேண்டும்.
வியர்க்குரு பவுடர் அல்லது டால்கம் பவுடரைப் பூசி வியர்க்குரு குழாய்களின் அடைப்பைக் கூட்டக் கூடாது
இவற்றைப் பின்பற்றினால்போதும்... குழந்தை நிம்மதியாகத் தூங்கும்.
நன்றி : டாக்டர்விகடன் - 16.05.2013
No comments:
Post a Comment