ஃபேஸ்புக் தொல்லைகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், நாம் விரும்பியும், விரும்பாமலும், பல அறிவிப்புகளை நம் கம்ப்யூட்டர் மற்றும் பிற இணைய இணைப்பு சாதனங்களில் சந்திக்கின்றோம். இவற்றில் பல அறிவிப்புகள் (Notifications) நாம் விரும்பாதவையாகவே உள்ளன.
இதில் அதிகம் நான் எரிச்சல் அடைவது பேஸ்புக் சமூக தளத்தில் நாம் பெறும் அறிவிப்புகள் தான். இவற்றை வேறு வழியின்றி நாம் சகித்துக் கொள்கிறோம். அல்லது, அவற்றை எப்படி தவிர்ப்பது அல்லது நிறுத்துவது எனத் தெரியாமல் இயங்குகிறோம். அதற்கான சில வழிகளை இங்கு காணலாம்.
இணையம் வழியாக நமக்கு வரும் அறிவிப்புகள் பல வகை. டெக்ஸ்ட், அலாரம் மற்றும் சமூக இணைய தளங்களில் எனப் பல வழிகளில் நமக்கு இவை கிடைக்கின்றன. மொபைல் போன்களில் இத்தகைய அறிவிப்புகள் ஏராளம். மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், இவற்றை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர். சிலர் இவற்றை ரசிக்கிறார்கள்.
ஆனால், பலர் இவை தேவைதானா என்று முகம் சுழிக்கின்றனர். விருப்பம் கேட்டால், இவை எனக்கு வேண்டாமே என்று முடிவெடுப்பார்கள். ஏனென்றால், தகவல் தரும் வகை மட்டும் என்றால் அனைவரும் இந்த அறிவிப்புகளை விரும்பலாம். ஆனால், எரிச்சலூட்டும் வகையில், இத்தகைய அறிவிப்புகள் குவிவதை நாம் விரும்பமாட்டோம். பேஸ்புக் சமூக இணைய தள அறிவிப்புகள் பெரும்பாலும் இத்தகையவையாகவே உள்ளன. இவற்றை நாம் எந்த அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.
முதலாவதாக, உங்கள் அக்கவுண்ட் சார்ந்து தரப்படும் அறிவிப்புகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இவை நீங்கள் எந்த வகையான சாதனங்களைப் பயன்படுத்தினாலும், ஒரே மாதிரியாக உங்கள் அக்கவுண்ட் சார்ந்து வந்து கொண்டே இருக்கும்.
சில அறிவிப்புகளை ஆப்பரேட்டிங் சிஸ்டம் அளவிலேயே மொத்தமாக தடுத்து நிறுத்தலாம். அல்லது குறிப்பிட்ட வகை அறிவிப்புகளை மொத்தமாக தடுத்து நிறுத்தலாம். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனை அதன் தொடக்கத்திலேயே இயங்காமல் தடுத்து நிறுத்த முடியும்.
இறுதியாக, குறிபிட்ட அப்ளிகேஷனில் இருந்து வரும் அறிவிப்புகளை நீங்களாக நீக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் பேஸ்புக் தள அறிவிப்புகளை வரவிடாமல் நிறுத்த முடியும். ஆனால், ஐ.ஓ.எஸ். இயக்கத்தில் பேஸ்புக் அறிவிப்புகளை நிறுத்த இயலாது.
எப்படி நிறுத்தலாம் என்று பார்ப்போம்.
பேஸ்புக் அக்கவுண்ட் அறிவிப்பு செட்டிங்ஸ்
பேஸ்புக் அக்கவுண்ட் அறிவிப்பு செட்டிங்ஸ்
நீங்கள் பேஸ்புக் தளத்திலிருந்து ஒருவரின் பிறந்த நாள் குறித்த அறிவிப்புகள் அல்லது ஒருவர் தன் நட்பு தொடர்பினை மூடுதல் (Close Friend’s activity) குறித்த அறிவிப்புகள் வர வேண்டாம் என விரும்பினால், இவற்றை பேஸ்புக் இணைய தளத்திலேயே நிறுத்தலாம். அல்லது இது பதியப்பட்ட ஆண்ட்ராய்ட் அல்லது ஐ.ஓ.எஸ். சாதனத்தின் மூலம் நிறுத்தலாம்.
ஐபேட் சாதனத்தில், பேஸ்புக் அப்ளிகேஷனைத் திறக்கவும். மேல் இடது புறம் உள்ள மூன்று கோடுகள் உள்ள ஐகானில் தட்டவும். இதன் மூலம் சைட் பார் காட்டப்படும். இதனை உருட்டிக் கொண்டு கீழாகச் சென்று, “Settings” மற்றும் அதன் பின் “Notifications” என்பனவற்றில் தட்டவும்.
அப்டேட் செய்யப்பட்ட பேஸ்புக் பதிந்து இயக்கப்படும் ஆண்ட்ராட்ய் சாதனத்தில், மேலே காட்டியது போல சைட் பார் திறக்கவும். இதில் “Account Settings” மீது தட்டிப் பின்னர் கிடைக்கும் திரையில் “Notifications” என்பதில் தட்டவும்.
இறுதியாக, பேஸ்புக் இணைய தளத்தில், மேல் வலது மூலையில் உள்ள அம்புக்குறியில் தட்டவும். இங்கு கீழ் விரி பட்டியல் ஒன்று கிடைக்கும். இங்கு “Settings” மற்றும் அதன் பின் “Notifications” என்பனவற்றில் தட்டவும்.
இங்குதான், நீங்கள் பிறந்த நாள் மற்றும் பிற அறிவிப்புகள் வேண்டுமா, வேண்டாமா என்பதனை முடிவு செய்திடலாம். இங்கு “What You Get Notified About” என்பதனை அழுத்தி, பேஸ்புக் இணையதளத்தில் நீங்கள் எது குறித்த அறிவிப்புகளைப் பெற இருக்கிறீர்கள் என்பதனை அறியலாம்.
எடுத்துக் காட்டாக, போட்டோ அல்லது தகவல் ஒன்றில் நீங்கள் டேக் (Tag) செய்யப்பட்டால், யார் அதனைச் செய்தது என்ற அறிவிப்பு கிடைக்கும். இதனை நிறுத்தலாம். அல்லது யார் (உங்கள் நண்பர்களா? அல்லது உங்களின் நண்பர்களின் நண்பர்களா?) இதனை மேற்கொண்டது என்ற அறிவிப்பினை மட்டும் நிறுத்தலாம்.
மேலும், சில பக்கங்களை (Page) உருவாக்கி அதனை நீங்கள் நிர்வகிக்கையில், அதில் ஏதேனும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகையில், யார் அதனை மேற்கொண்டது என உங்களுக்கு வரும் அறிவிப்புகளை நிறுத்தலாம்.
இதே பட்டியலில் தொடர்ந்து சென்று “Birthdays” என்பதில் டேப் செய்தால், நண்பர்கள் பிறந்த நாள் குறித்து வரும் அறிவிப்புகளை நிறுத்தலாம் அல்லது அனுமதிக்கலாம்.
இந்த அறிவிப்புகள் குறித்த செட்டிங்ஸ் அமைப்பதில், “Friends’ life events” மற்றும் “Group activity.” ஆகியவையும் உள்ளன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இன்னொன்றையும் மேற்கொள்ளலாம். நீங்கள் சார்ந்துள்ள ஒரு குரூப், எப்போதும் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் பதிவுகளை மேற்கொண்டு, அதின் சார்பாக, நிறைய அறிவிப்புகள் உங்களுக்கு வருவதாக வைத்துக் கொள்வோம். அந்த அறிவிப்புகளை நிறுத்த, அந்த குழு அமைந்துள்ள இடத்திலேயே, அதன் பக்கத்திலேயே அதற்கான வழி இருக்கும். அல்லது account settings பக்கத்திலேயே இதனை மேற்கொள்ளலாம்.
இன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியமானது.
உங்களுடைய பக்கத்தின் Timelineல் யாராவது எழுதினால் உங்களுக்கு அறிவிப்பு வரும். நீங்கள் ஏதேனும் நிலைத் தகவல்களை (status update) அமைத்து அதில் உங்கள் நண்பர்கள் ‘கமெண்ட்’ செய்தாலோ, அல்லது ‘லைக்’ செய்தாலோ, உங்களுக்கு அறிவிப்புகள் கிடைக்கும். ஏதேனும் ஒரு போட்டோவில் நீங்கள் டேக் செய்யப்பட்டாலும், உங்களுக்கு அறிவிப்புகள் கிடைக்கும். இது உங்கள் செயல்பாட்டில் குறுக்கிடுவதாக நீங்கள் உணர்ந்தால், இதன் ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் தனியே சென்று, அதனை உங்கள் விருப்பப்படி கையாள வேண்டியதிருக்கும். (அல்லது இன்னும் சுருக்கமாக, சமூக இணைய தளம் சென்று பார்ப்பதையே நிறுத்த வேண்டியதிருக்கும்.)
நீங்கள் உங்கள் நண்பரின் தகவல் ஒன்றில், ‘கமெண்ட்’ ஒன்றை அமைக்கிறீர்கள். அதனைத் தொடந்து, உங்களின் குறிப்புரையின் மீது, மற்றவர்கள் ‘கமெண்ட்’ செய்திடுகையில், உங்களுக்கு அது குறித்த அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும். இது உங்களுக்கு எரிச்சல் தருவதாக இருந்தாலோ, அல்லது அளவிற்கும் அதிகமாக இருந்தாலோ, அந்த தகவல் அமைந்துள்ள இடத்திற்குச் சென்று, “Stop Notifications” என்பதில் கிளிக் செய்து நிறுத்தலாம்.
இதே போல, நீங்கள் ஒரு நிலைத் தகவலை அப்டேட் செய்து, அதில் யார் கமெண்ட் அல்லது லைக் அல்லது ஷேர் செய்தாலும், அது குறித்த அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும். இவற்றை நிறுத்த, நீங்கள் அப்டேட் செய்த தகவல் இருக்கும் இடம் சென்று, அங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில், அறிவிப்புகளை நிறுத்துவதற்கான (“Stop Notifications”) டேப்பிள் கிளிக் செய்திட வேண்டும்.
இதிலிருந்து நாம் ஒன்றை உணரலாம். பேஸ்புக் சமூக இணைய தளத்தில், நம் செயல்பாடுகளை, அந்த தளம் ஊடுறுவப் பல வாய்ப்புகள் உள்ளன. இதனை நாம், அது குறித்துத் தொடர்ந்து சிந்தித்து, நம் அக்கவுண்ட்டிற்கு வரும் தகவல்களை ஆய்வு செய்து நாம் அறிந்து கொள்ளலாம் என்பதே. மொத்தத்தில், நாம் பேஸ்புக் தளம் செல்லாமல், நமக்கு எந்த அறிவிப்பும் வராத வகையில் அமைத்துக் கொண்டால், நாம் இதிலிருந்து தப்பிக்கலாம்.
சாதனத்திலேயே நிறுத்துதல்
நாம் பயன்படுத்தும் மொபைல் சாதனங்களிலேயே, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைப்பில், இந்த அறிவிப்புகளை நிறுத்த முடியும் என்றால், அது மிக மிக எளிய வேலையாக அமையும். நீங்கள் லாலிபாப் எனப்படும் ஆண்ட்ராய்ட் பதிப்பு 5 ஐ பயன்படுத்தினால், செட்டிங்ஸ் திறந்து, “Sound & notification -> App notifications” என்று வரிசையாகச் சென்று, பின் கிடைக்கும் பட்டியலில், உங்கள் அப்ளிகேஷனத் தேர்ந்தெடுத்து, அறிவிப்புகளை நிறுத்தலாம்.
நாம் பயன்படுத்தும் மொபைல் சாதனங்களிலேயே, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைப்பில், இந்த அறிவிப்புகளை நிறுத்த முடியும் என்றால், அது மிக மிக எளிய வேலையாக அமையும். நீங்கள் லாலிபாப் எனப்படும் ஆண்ட்ராய்ட் பதிப்பு 5 ஐ பயன்படுத்தினால், செட்டிங்ஸ் திறந்து, “Sound & notification -> App notifications” என்று வரிசையாகச் சென்று, பின் கிடைக்கும் பட்டியலில், உங்கள் அப்ளிகேஷனத் தேர்ந்தெடுத்து, அறிவிப்புகளை நிறுத்தலாம்.
எடுத்துக் காட்டாக, பேஸ்புக் இணைய தள அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்து, அதில் கிடைக்கும் ஸ்லைடரில் “Block” என்பதனைத் தேர்ந்தெடுத்தால், அந்த தளத்திலிருந்து எந்த விதமான அறிவிப்பும் உங்கள் மொபைல் சாதனத்திற்கு வராது. நீங்கள் பேஸ்புக் தளத்தில், உங்கள் அக்கவுண்ட்டில், அறிவிப்புகள் கிடைப்பது குறித்து எந்த செட்டிங்ஸ் அமைத்திருந்தாலும், உங்கள் மொபைல் சாதனத்தில் மேலே குறித்துள்ளபடி செட்டிங்ஸ் அமைத்துவிட்டால், பேஸ்புக் தளத்திலிருந்து எந்த அறிவிப்பும் வராது.
ஐபோன் மற்றும் ஐபேட் போன்ற ஆப்பிள் நிறுவன சாதனங்களில், இது போன்ற அறிவிப்புகளை நிறுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. அவற்றில் செட்டிங்ஸ் திறந்து, “Notifications” என்ற பிரிவில் சென்றால், இவற்றை அறியலாம்.
ஆண்ட்ராய்ட் 5 க்கு முந்தைய சிஸ்டத்தில்: ஆண்ட்ராய்ட் பதிப்பு 5 சிஸ்டத்திற்கு முன்னால் வந்த சிஸ்டங்களைப் பதிந்த சாதனங்களை நீங்கள் பயன்படுத்தினால், என்ன செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம்.
மேலே சுட்டிக் காட்டியது போல, இந்த சிஸ்டம் இயங்கும் சாதனத்தில், அப்ளிகேஷன் மேனேஜர் சென்று, அப்ளிகேஷனத் தேர்ந்தெடுக்கவும்.
மேல் வலது மூலையில் உள்ள மூன்று கோடுகளில் கிளிக் செய்திடவும். பின் இங்கு கிடைக்கும் ஸ்லைடர் பாரில் கீழாகச் சென்று, “App Settings” என்பதனை டேப் செய்திடவும். உடன், பலவகையான நோட்டிபிகேஷன்ஸ் செட்டிங்ஸ் குறித்து காட்டப்படும். இவை அனைத்தையும் மொத்தமாக நிறுத்தலாம். வைப்ரேஷனை அமைக்கலாம். ரிங் டோன் தேர்ந்தெடுக்கலாம். அறிவிப்புகளில் கமெண்ட், நண்பர்கள் விண்ணப்பம், நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள் எனப் பலவகையான பிரிவுகளுக்கான அறிவிப்புகள் குறித்து செட்டிங்ஸ் அமைக்கலாம்.
உங்களுக்கு நூற்றுக் கணக்கான நண்பர்கள் அமைந்த வட்டம் பேஸ்புக்கில் இருந்தால், நிச்சயம் அவர்களின் பிறந்த நாள் குறித்து வரும் அனைத்து அறிவிப்புகளை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். எனவே, இவற்றை நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்திலேயே நிறுத்தி விட்டால், எந்த பிரச்னையும் எழாது.
நன்றி : தினமலர் - கம்ப்யூட்டர் மலர், 28.12.2015
No comments:
Post a Comment