disalbe Right click

Wednesday, May 11, 2016

இணையதளம் மூலம் கடன் பெற


இணையதளம் மூலம் கடன் பெற என்ன செய்ய வேண்டும்?

இணையதளம் மூலம் கடன்: நல்லதா கெட்டதா?

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

உங்களுக்கு திடீரென்று கடன் வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? முதலில் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் கேட்டுப் பார்ப்பீர்கள். இல்லையென்றால் வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களை நாடிச் செல்வீர்கள்.

அதேபோல், உங்களிடம் பணம் உபரியாக உள்ளது எனில்,  அக்கம்பக்கத்தினர் யாரேனும் கடன் கேட்டால் கொடுப்பீர்கள். இன்னும் சிலர் வங்கியில் டெபாசிட்டாக போடுவார்கள் அல்லது வேறு சொத்துக்களில் முதலீடு செய்வார்கள். 

ஆனால், நீங்கள் சொந்தக்காரர்களிடம் அல்லது நண்பர்களிடம் கடன் கேட்கக் கூடாது என்ற கொள்கையை உடையவர் என்று வைத்துக் கொள்வோம்; அதே சமயம், வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களிடம் சென்று கடன் வாங்கவும் விருப்பமில்லை எனில் இருக்கவே இருக்கிறது, பி2பி லெண்டிங் வெப்சைட்டுகள். 

இந்த இணையதளங்களில் சென்று உங்களது தேவைகளை (கடன் கொடுப்பதென்றாலும் சரி, கடன் வாங்குவதென்றாலும் சரி) நீங்கள் பதிவு செய்யலாம். உங்களது தேவையைப் பூர்த்தி செய்ய பலர் உங்களுடன் இந்த இணையதளங்கள் மூலமாக உடனே தொடர்புகொள்வார்கள். முன்பின் தெரியாத காஷ்மீரில் இருக்கும் ஒருவர் கன்னியாகுமரியில் இருக்கும் மற்றொருவருக்கு கடன் கொடுக்க அல்லது வாங்க இந்த பி2பி லெண்டிங் வெப்சைட்டுகள் வழி செய்கின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக இந்த வெப்சைட்டுகள் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே கடன் கொடுக்கலாம் அல்லது வாங்கலாம். உதாரணமாக, மாதாந்திர சம்பளம் வாங்குபவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் போன்றோருக்கு இந்த பி2பி கடன் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இந்தியாவில் இந்தத் தொழிலில் தற்போது கிட்டத்தட்ட 30 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டில் (2015) மட்டும் புதிதாக 20 பி2பி வெப்சைட்டுகள் துவங்கப்பட்டதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இந்த வெப்சைட்டுகள் நிதி சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் இதுவரை எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இந்த நிறுவனங்களுக்கு இல்லை. 

இந்தத் தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்குமென்றும், கடன் வாங்குபவர்களுக்கு இதனால் வட்டி விகிதம் குறையும் என்றும் நமது மத்திய ரிசர்வ் வங்கி நம்புகிறது. ஆகவேதான், இந்தத் தொழிலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முறைப்படுத்தவும், நெறிப்படுத்துவதற்காகவும் பொதுமக்களிடமிருந்து ஆலோசனை கோரி விவாத அறிக்கையை (Discussion paper) ஆர்.பி.ஐ. தனது இணையதளத்தில் சென்ற மாதத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த விதமான நிறுவனங்களை வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFC – Non Banking Finance Companies) கேட்டகிரியில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது  ஆர்.பி.ஐ. குறைந்தபட்ச நெட்வொர்த் ரூ.2 கோடியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. இது போன்ற நிறுவனங்களை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவது அவசியமா அல்லது இல்லையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது ஆர்.பி.ஐ.

 மேலும், இந்த நிறுவனங்கள் வெறும் மத்தியஸ்தர் வேலையை மட்டும் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறது. இந்த விவாத அறிக்கையைப் படித்தபின் பொதுமக்கள் சொல்லும் கருத்துக்கள் அடிப்படையில் குழந்தைப்பருவத்தில் இருக்கும் இந்தத் தொழிலுக்குத் தேவையான சட்டதிட்டங்களை ஆர்பிஐ கொண்டுவரும். 

உலகெங்கிலும் இந்த விதமான பி2பி வெவ்வேறு விதமான வளர்ச்சியிலும், கட்டுப்பாட்டிலும் உள்ளன. ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்த விதமான பி2பி கடன் வழங்கும் தொழில்களை தடை செய்துள்ளன. அமெரிக்காவில் மத்திய மற்றும் மாநில அளவில் கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு டெக்ஸாஸ் போன்ற மாகாணங்கள் முழுவதுமாக இந்தத் தொழிலை தடை செய்துள்ளன. சீனா போன்ற நாடுகளில் பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் கொண்டு வரப்படவில்லை. அந்த நாட்டில் பல நூறு நிறுவனங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இத்தாலி, ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த நிறுவனங்கள் வங்கிகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆதலால், பி2பி கடன் தொழிலை ஆரம்பிப்பதற்கு அந்த நாடுகளில் வங்கி லைசென்ஸ் பெற வேண்டும். 

பி2பி லெண்டிங் நிறுவனங்களின் வேலை என்ன?

** கடன் கொடுப்பவரையும் வாங்குபவரையும் சந்திக்கச் செய்கின்றன

**  வாடிக்கையாளர்களின் கேஒய்சி-யை பூர்த்தி செய்கின்றன

**   கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப பெறுவதில் உதவி செய்கின்றன

**  பிரச்னைகள் ஏதும் ஏற்பட் டால் சட்ட ஆலோசனையில் உதவி செய்கின்றன

**  பலர் ஒரு நபருக்கு கடன் கொடுப்பதை அல்லது ஒருவர் பலருக்கு கடன் கொடுப்பதை வழிமுறை செய்கின்றன

என்ன லாபம்? 

இந்த வகையில் கடன் வாங்கிக் கொடுக்கும்போது, ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை தங்களின் சர்வீஸ் சார்ஜாக எடுத்துக் கொள்கின்றன இந்த பி2பி நிறுவனங்கள். பொதுவாக, கடன் தொகையில் 1% – 2% சர்வீஸ் சார்ஜாக இருக்கும். இது தவிர, வேறு சேவைகளுக்கு தனியாகவும் கட்டணம் கிடைக்கும்.

வளர வாய்ப்புள்ள துறை!

இந்தியாவில் இந்த சந்தையின் அளவை தெரிந்துகொள்ள தற்போது புள்ளிவிபரங்கள் ஏதும் இல்லை. உலகளவில் 2012-ம் ஆண்டு ரூ.20 கோடிக்கும் சற்று அதிகமாக இருந்த சந்தை, கடந்த ஆண்டு இறுதியில் ரூ.42,000 கோடிக்கும் அதிகமாக ஆகியுள்ளதாக யூ.கே-வைச் சார்ந்த பி2பி அஸோசியேஷன் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இச்சந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாம் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்? 

தனிநபராகிய நாம் அல்லது சிறுதொழில் செய்யும் நாம் இந்தத் திட்டத்தின் மூலம் எவ்வாறு பயனடையலாம்?

நாம் பல சமயங்களில் அடமானம் ஏதும் இல்லாத, அதே சமயத்தில் சீக்கிரமாக கிடைக்கக்கூடிய கடனை எதிர்பார்க்கிறோம். வட்டியும் குறைவாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அல்லது சிறு தொகை வைத்திருப்பவர்கள், வங்கி டெபாசிட் அல்லது பிற முதலீடுகளைவிட அதிகமான வருமானம் வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இது போன்றோருக்கு, இந்த விதமான வாய்ப்பு உபயோகமாக இருக்கும்.

ரிஸ்க் என்ன?

கடன் கொடுக்க நினைப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காரணம், கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வராமல் போவதற்கு வாய்ப்புண்டு.  மேலும், உங்களின் முக்கியமான தேவைகளுக்காக வைத்திருக்கும் பணத்தை வட்டிக்கு விடாதீர்கள். கடனை முறையாக வசூலிப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

கடன் வாங்க நினைப்பவர்கள் வேறு எங்கும் கடன் கிடைக்கவில்லையே என அதிக வட்டிக்கு கடனை வாங்கிவிட்டு, திரும்பச் செலுத்துவதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  

ஆக மொத்தத்தில் இது ஒரு பெரிய தொழிலாக எதிர்காலத்தில் மாற வாய்ப்பிருக்கிறது. ஆர்.பி.ஐ இந்த வகையான சந்தைத் தளங்களை முறைப்படுத்துவது இது போன்ற தொழில்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பதுடன், கடன் கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கும் ஒரு நல்ல சந்தை அமைப்பை உருவாக்கும். 

இணையதளம் மூலம்கடன் தரும் சில நிறுவனங்கள்!

www.faircent.com

www.i2ifunding.com

www.worldoflending.com

www.lendenclub.com

www.kiva.org

www.loanmeet.com

www.lendbox.in

www.indialends.com

www.loanzen.in

நன்றி :நாணயம் விகடன் - 15 May, 2016



No comments:

Post a Comment