disalbe Right click

Friday, May 13, 2016

வாகனப்பதிவு

வாகனப்பதிவு - என்ன செய்ய வேண்டும்?
💧 வாகனப் பதிவு என்றால் என்ன?
வாகனப் பதிவு என்பது அந்த வாகனத்தின் அடையாளம். சம்பந்தப்பட்ட வாகனத்தின் முழு விவரமும் வாகனப் பதிவு சான்றிதழில் இடம் பெறும்.
💧 ஏன் வாகனப்பதிவு செய்யப்பட வேண்டும்?
25 சி.சி. திறன் தொடங்கி அதற்கு அதிகமான சி.சி. திறன் கொண்ட வாகனங்கள் எதுவும் மோட்டார் வாகன சட்டத்தின்படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படாமல் சாலையில் இயங்கக் கூடாது. அதற்காக வாகனத்தை பதிவு செய்ய வேண்டும்.
💧 எத்தனை நாட்களுக்குள் வாகனத்தை பதிவு செய்ய வேண்டும்?
வாகனத்தை வாங்கியதில் இருந்து 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வாகனம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத் தில் பதிவு செய்யப்பட வேண்டும். மோட்டார் வாகனச் சட்டப்படி பதிவு செய்யாமல் வாகனங்களை சாலையில் இயக்கக் கூடாது. அவ்வாறு இயக்குவது சட்டப் படி குற்றமாகும். அப்படி இயக்கினால் அபராதம் விதிக்கப் படும்.
💧 வாகனப்பதிவில் என்னென்ன வகைகள் உள்ளன?
தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவு என இரு வகை உண்டு. சிலர் வாகனத்தை சொந்த மாவட்டம், மாநிலம் நீங்கலாக வேறு இடத்தில் வாங்க நேரிடும். எனினும் பதிவு செய்யாமல் வாகனங்களை சாலையில் இயக்கக்கூடாது என்பதால், வாகனம் வாங்கிய இடத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்இது தற்காலிகப் பதிவு. இந்தப் பதிவு ஒரு மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் தங்களது வாகனங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்து வந்து நிரந்தரப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
💧 வாகனப் பதிவிற்கான வழிமுறைகள் என்ன?

வாகன விற்பனையாளர், அதை வாங்குவோரிடம் பதிவு செய்யாமல் வழங்கக் கூடாது என மோட்டார் வாகனச் சட்டம் சொல்கிறது. அதன்படி படிவம் 20, 21 உட்பட இருப்பிடச் சான்று, வாகனத்தை விற்பனை செய்ததற்கான படிவம் மற்றும் வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
💧 இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கனரக வாகனம் பதிவு செய்யும் முறையில் வித்தியாசம் உள்ளதா?

இருசக்கர வாகனங்கள், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் முழுவதுமாக பாடி கட்டப்பட்ட பிறகே விற்கப்படுகின்றன. அவற்றை எவ்வித மாற்றமும் செய்யாமல் சாலையில் ஓட்டுகிறோம். அவற்றுக்கு எப்படி வாகனப்பதிவு செய்வது என்று நேற்று பார்த்தோம். லாரி, பேருந்து போன்ற வாகனங்கள் பாடி கட்டாத நிலையில் விற்கப்படுகின்றன.வாங்குவோர்தான் மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு பாடி கட்டிக்கொள்ள வேண்டும். மோட்டார் வாகன சட்டப்படி வாகனத்துக்கு பாடி கட்டியிருப்பதாக பாடி கட்டுவோர் சான்று வழங்குவர். அந்த சான்றுடன் இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றையும் சமர்ப்பித்து கனரக வாகனங்களை பதிவு செய்ய வேண்டும்.
💧 வாகனப் பதிவிற்கு கட்டணம் எவ்வளவு?

இலகு ரக வாகனம், மத்திய ரக வாகனம், கனரக வாகனம் என வாகனங்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. 7 ஆயிரம் கிலோ வரை உள்ளவை இலகு ரக வாகனம். அதற்கு பதிவுக் கட்டணம் ரூ.300 ரூபாய். 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோ வரை உள்ள மத்திய ரக வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.400. 12 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட கனரக வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.500. இருசக்கர வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.30.
💧 சொந்த ஊர் இல்லாத மாவட்டத்தில் மற்றும் மாநிலத்தில் வாகனத்தை பதிவு செய்ய முடியுமா?

வாகனங்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம். அவ்வாறு வாங்கும் இடத்தில் வீடு அல்லது அலுவலக முகவரி இருக்கவேண்டும். அதற்கான சான்று இருந்தால் மட்டுமே வாகனம் வாங்கும் இடத்தில் அவற்றை பதிவு செய்ய முடியும். இல்லாவிட்டால், தற்காலிகமாக பதிவு செய்துகொள்ள வேண்டும்பிறகு நிரந்தர, தற்காலிக முகவரி உள்ள பகுதிக்கு வந்து, அந்த எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
💧வங்கிக் கடன் மூலம் வாங்கும் வாகனங்களுக்கு பதிவுச் சான்று (ஆர்.சி) யாரிடம் வழங்கப்படும்?

வாகன உரிமையாளரிடம் மட்டுமே வாகனப் பதிவுச் சான்று வழங்கப்படும். வங்கிக் கடன் மூலம் வாகனம் வாங்கியிருந்தால் அடமானம் என பதிவுச் சான்றில் குறிப்பிடப்பட்டிருக்கும். வங்கிக் கடன் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட வங்கி மூலம் நிலுவையில்லாச் சான்று வழங்கப்படும்

அதை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்து, ‘அடமானம்என்று குறிப்பிட்டிருப்பதை நீக்கம் செய்துகொள்ளலாம். வங்கிக் கடனை சரிவர செலுத்தாத பட்சத்தில், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பைனான்சியரிடம் பதிவுச் சான்று வழங்கப்படும்.
பொதுப் போக்குவரத்து வாகனத்துக்கு பர்மிட் ஏன் அவசியம்?
💧 பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனத்திற்கு அனுமதி பெற வேண்டியது எதற்காக?

சாலை வரி உள்ளிட்டவற்றை செலுத்திவிட்டுத்தான் கார் போன்ற சொந்த வாகனங்களை வாங்குகிறோம். அதனால், வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது அங்கு தனியாக சாலை வரி செலுத்தத் தேவையில்லை. அதனால்தான் அவற்றுக்கு அனுமதி (பர்மிட்) தேவையில்லை.
அதே வாகனத்தை பொதுப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும்போது அனுமதி பெற வேண்டும். ஏனெனில் வெளி மாநிலத்துக்கு செல்ல நேர்ந்தால் ஆகும் சாலை வரியைத்தான் பர்மிட் கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஒரு வாகனம் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்றதுதானா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து, பின்னர் அதை சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு இயங்க அனுமதி அளிப்பர். இது லாரி போன்ற சரக்கு வாகனங்களுக்கும் பொருந்தும்.
💧 இவ்வாறு அனுமதி வழங்குவதில் எத்தனை வகைகள் உள்ளன?
ஒப்பந்த ஊர்தி அனுமதி (கான்டிராக்ட் கேரேஜ் பர்மிட்), பொது சரக்கு வாகன அனுமதி (கூட்ஸ் கேரேஜ் அனுமதி), நிலைய அனுமதி (ஸ்டேஜ் கேரேஜ் பர்மிட்) என மூன்று வகைகளில் அனுமதி வழங்கப்படுகிறது. பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ, மேக்ஸி கேப் போன்ற வாகனங்களுக்கு ஒப்பந்த ஊர்தி அனுமதி வழங்கப்படுகிறது. லாரி போன்ற வாகனங்களுக்கு பொது சரக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதிலும் மாநிலம் மற்றும் தேசிய அனுமதி என இரு முறைகளில் அனுமதி வழங்கப்படுகிறது. பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும் பேருந்துகளுக்கு நிலைய அனுமதி வழங்கப்படுகிறது.
 💧  அனுமதி பெறுவதற்கான கட்டணம், அவற்றுக்கான கால அளவு எவ்வளவு?
கார் போன்ற ஒப்பந்த ஊர்திகளுக்கு ரூ.325, பொது சரக்கு வாகனங்களுக்கு ரூ.750 கட்டணமாக செலுத்தவேண்டும். அதிலும், நாடு முழுவதும் ஒரு வாகனத்தை இயக்க தேசிய அனுமதி பெற வேண்டும். அதற்கு ரூ.1,450 மற்றும் ரூ.500 கட்டணம் செலுத்தவேண்டும்இந்த அனுமதி 5 ஆண்டு காலத்துக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பின், அனுமதியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதே நேரம், போக்குவரத்து வாகனங்களுக்கான வரியை ஒவ்வொரு காலாண்டும் செலுத்த வேண்டும். அல்லது, ஆண்டுக்கு ஒருமுறை நான்கு காலாண்டுக்கான வரியை சேர்த்து ஒரே முறையாகவும் செலுத்தலாம்.
வாகனங்களுக்கு அனுமதி (பர்மிட்) பெறும் வழிமுறைகள் என்ன?
வாகனங்களுக்கு பல்வேறு வகைகளில் பர்மிட் வழங்கப்படுகின்றன என்பதைப் பார்த்தோம். வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உள்ளன. அவற்றை பெற்று இருப்பிடச் சான்று, வாகன தகுதிச் சான்று, வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்டவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அவை சரியாக இருந்தால், ஒரே நாளில் பர்மிட் வழங்கப்படும்.
வாகனம் இல்லாமல்கூட, பர்மிட் கேட்டு விண்ணப்பம் செய்யலாம். அதற்கு செயல்முறை ஆணை வழங்கப்படும். அந்த ஆணை 3 மாத காலம் வரை மட்டும் செல்லுபடியாகும். அதன்பின், செயல்முறை ஆணை தானாக காலாவதியாகிவிடும். அதற்குள், சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு உரிய தகுதிச் சான்று, வாகனப் பதிவு போன்ற ஆவணங்களை வழங்கினால் பொது போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும்.
தற்காலிக அனுமதி என்றால் என்ன?
தேசிய அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே நாடு முழுவதும் வாகனத்தை இயக்க முடியும். ஒரு மாநிலத்துக்குள் இயக்கும் அனுமதி பெற்றிருந்தால், மாநிலத்துக்குள் மட்டுமே இயக்க முடியும். அவ்வாறு மாநில அனுமதி பெற்ற போக்குவரத்து வாகனம், வெளிமாநிலத்துக்கு செல்ல நேரிட்டால் அவற்றுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து, மோட்டார் வாகன அலுவலகத்தில் தற்காலிக அனுமதி வழங்கப்படுகிறது
💧தற்காலிக அனுமதி பெறாத சூழலில் அவசரமாக வெளி மாநிலம் செல்ல நேர்ந்தால் என்ன செய்வது?
பிரச்சினை இல்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக அனுமதி பெற முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாநில எல்லையில் சோதனைச் சாவடியில் தற்காலிக போக்குவரத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்
💧 தற்காலிக போக்குவரத்து வாகன அனுமதி கட்டணம், வரி எவ்வளவு?
வெளி மாநிலங்களுக்குச் செல்ல ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாகன வரி வேறுபடும். எனவே, எந்த மாநிலத்துக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாநிலத்துக்கான வாகன வரியில் 10-ல் ஒரு பங்கு செலுத்தி தற்காலிக போக்குவரத்து அனுமதி பெறலாம்.
இந்த அனுமதி 7 நாட்கள், ஒரு மாதம், 3 மாதங்கள் என்ற அளவில் வழங்கப்படுகிறது. 7 நாட்களுக்கு மேல் ஒருநாள் தங்கும் சூழல் ஏற்பட்டாலும் ஒரு மாத வரி செலுத்த வேண்டும். அதுபோல, ஒரு மாதத்துக்கு மேல் ஒருநாள் தங்க நேரிட்டாலும் 3 மாத வரி செலுத்தவேண்டும்.
💧 எதன் அடிப்படையில் வாகனங்களுக்கு பதிவு எண்கள் வழங்கப்படுகின்றன?
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தையும் அடையாளப்படுத்தும் வார்த்தைகள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. உதாரணமாக தமிழகப் பதிவெண் கொண்ட அனைத்து வாகனங்களிலும் ஆங்கிலத்தில் TN என எழுதப்பட்டிருக்கும். TN என்பது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதுபோல, கேரளத்துக்கு KL, கர்நாடகத்துக்கு KA, புதுச்சேரிக்கு PY என ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே ஆங்கில எழுத்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து வரும் 2 எண்கள், அதாவது TN என்ற எழுத்தைத் தொடர்ந்து வரும் 01, 02, 30, 88 என்பன போன்ற எண்கள் மாநில அரசால் ஒதுக்கப்படுகின்றன. இந்த எண்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களைக் குறிக்கும் எண்களாகும். அதற்கு அடுத்து வரும் நான்கு இலக்க எண்கள் 1 முதல் 9999 வரை வரிசைப்படி வாகனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த எண்கள் முடிந்த பின் A என, அகர வரிசைப்படி மீண்டும் 1 முதல் 9999 எண் வரை வரிசைப்படி ஒதுக்கப்படும். அடுத்து B, C, D, E... என அடுத்தடுத்து செல்லும்.
💧 வரிசைப்படி எண்கள் ஒதுக்கப்படும்போது, தானாகவே ஃபேன்ஸி எண் கிடைத்துவிட வாய்ப்பு இருக்கிறதா?
1 முதல் 9999 வரை 1111, 2222 என்பது போல மொத்தம் 98 எண்கள் ஃபேன்ஸி எண்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரிசைப்படி எண் ஒதுக்கப்படும்போது, இந்த எண்கள் கிடைக்காது. அரசின் வருவாய் கருதி, அந்த எண்கள் யாருக்கும் இலவசமாக வழங்கப்படுவதில்லை.
ஃபேன்ஸி எண் வேண்டுவோர் சென்னை தலைமைச் செயலக உள்துறை (போக்குவரத்து) அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து குறிப்பிட்ட எண் வேண்டும் என்று உத்தரவு பெற்று வரவேண்டும். அவ்வாறு பெற்று வந்தால் ஃபேன்ஸி எண் வழங்கப்படும்.
💧 ஃபேன்ஸி எண் வழங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுமதி உள்ளதா?
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆயிரம் வரை உள்ள நடப்பு எண் வாகனங்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக ஒரு நாளைக்கு 500 வாகனங்களுக்கு மட்டும் எண்கள் வழங்கப்பட்டால். மறுநாள் 500-ல் இருந்து ஆயிரம் எண்கள் வரை வாகனங்களுக்கு வழங்கலாம். அதில் உள்ள ஃபேன்ஸி எண்களை வாகனங்களுக்கு வழங்குவதற்கும் கட்டணம் உள்ளது. அந்த எண்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஒதுக்க அனுமதி உள்ளது.
💧 வாகனத்துக்கு பேன்ஸி எண் பெற கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும்?
இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு அதன் மதிப்பு நான்கு லட்சம் ரூபாய் வரை இருந்தால் ரூ.10 ஆயிரமும், நான்கு லட்சத்துக்கும் மேல் வாகன மதிப்பு இருந்தால் ரூ.16 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மொத்தமுள்ள 98 பேன்ஸி எண்களில் ஆங்கில அகர வரிசைப்படி , பி, சி, டி என்ற வரிசையில் எண்கள் ஒதுக்கினால் ரூ. 40 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு அடுத்து வரும் சீரியல்களில் எண்கள் ஒதுக்க ரூ. 60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த 98 எண்களையும் யாரும் கேட்கவில்லை எனில், அடுத்துவரும் ஆங்கில அகர வரிசை சீரியலில் ஒதுக்கப்படும் எண்களோடு சேர்த்து வாகனங்களுக்கு வழங்கப்படும்.
💧 வாடகைக்கு இயக்கும் வாகனங்கள், சொந்த வாகனங்களை எவ்வாறு கண்டறியலாம்?
வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களின் நம்பர் பிளேட் மஞ்சள் நிறத்திலும், எண்கள் கறுப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்கும். சொந்த வாகனம் என்றால் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும், எண்கள் கறுப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்கும். எண்கள் எழுதும் பிளேட்டில் எண்களை தவிர, பெயர் உள்ளிட்ட எதுவும் இருக்கக்கூடாது. அதேபோல் புரியாத மொழியிலும், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களுக்கு இருக்கும் எண்களையும் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது. அப்படி எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
💧 வாகனங்களில் எவ்வாறு எண்கள் எழுதலாம்? அதற்கு ஏதேனும் அளவுகள் உள்ளதா?
இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் அதிக திறன் கொண்ட வாகனங்கள் என ஒவ்வொரு வாகனத்துக்கும் குறிப்பிட்ட அளவுகளில் எண்கள் எழுத வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தில் விதி உள்ளது. அந்த அளவுகளைக் காட்டிலும் வேறு வடிவங்களில் எண்கள் எழுத கூடாது. அவ்வாறு எழுதினால், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சோதனையின்போது அபராதம் விதிக்கப்படும்.
💧 வாகன எண்களை வைத்து சம்பந்தப்பட்டவரின் முழு முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற முடியுமா?
கட்டாயம் பெற முடியும். வாகன எண்கள் மூலம் சம்பந்தப்பட்டவரின் பெயர், முகவரி ஆகியவற்றை அறிய முடியும். அதற்காகத்தான் வாகனங்களில், மோட்டார் வாகனச் சட்ட விதிப்படி எண்களை எழுத வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
கி.பார்த்திபன்
நன்றி : தி இந்து நாளிதழ் - 21.06.2014

No comments:

Post a Comment