மின்புகார் அளிக்க என்ன செய்ய வேண்டும்?
மின்வெட்டு அல்லது கோளாறு தொடர்பான புகார்களை தெரிவிக்க 1912 என்ற 24 மணி நேர ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.மின் இணைப்பு, மின்வெட்டு, மின்கோளாறு உள்ளிட்ட புகார்களை அந்தந்த மாநில அரசுகளும், மின்வாரியமும் நிர்ணயித்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தான் நுகர்வோர் தெரிவிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் மின்சாரம் சம்பந்தமான புகார்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
இதனால் மின் நுகர்வோர் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் மின் புகார்களை தெரிவிக்க 1912 என்ற ஒரே எண்ணை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்துள்ளது.
கோவா தலைநகர் பனாஜியில் அனைத்து மாநில மின்சார துறை அமைச்சர்களின் இரு நாள் கருத்தரங்கு கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. அப்போது மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடு முழுவதும் ஒரே புகார் எண்ணை அமல்படுத்தும் புதிய முறையை அறிமுகம் செய்தார்.
1912 என்ற இந்த தொலைபேசி சேவை 24 மணி நேரமும் இயங்கும். இந்த எண்ணை மின் நுகர்வோர் தொடர்பு கொண்டால் உடனடியாக அந்தந்த மாநில அரசு துறைகளுக்கோ அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டு அறைக்கோ அழைப்பு செல்லும்.
அப்போது மின்சாரம் சம்பந்தமான புகார்களை தெரிவித்தால், உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவர். மேலும் புகார் சம்பந்தமான அனைத்து விவரங்களும் இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் கிடைக்கும்.
நேரடி கண்காணிப்பு
தவிர மின் உதவி எண்ணை நுகர்வோர் ஒருவர் தொடர்பு கொண்டால், அவரது பிரச்சினை என்ன? எப்பொழுது அவர் புகார் தெரிவித்தார். பிரச்சினையின் தீவிரம் என்ன? என அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும்.
மத்திய அரசும் நேரடியாக இந்த சேவையை கண்காணிக்கவுள்ளது. இதனால் 1912 தொலைபேசி சேவை மின் நுகர்வோருக்கு மிகுந்த பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 19.06.2016
No comments:
Post a Comment