வங்கிக் கடனுக்கான இ.எம்.ஐ. கணக்கு - என்ன செய்ய வேண்டும்?
'கடனின் மீதான வாழ்க்கை' என்பது தற்போதைய காலத்தில் இயல்பான ஒரு விஷயமாகி விட்டது. உங்களுக்குத் தேவையான பெரும்பாலான பொருட்களுக்கு வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் எளிதாகக் கடன் அளிக்கிறது. வீடு முதல் தொலைக்காட்சி, மடிக்கணினி போன்ற வீட்டுப் பொருட்கள் வரை உடனடியாகக் கடன்கள் கிடைக்கிறது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மொத்த தொகையில் நீங்கள் சிறிய அளவிலான தொகையை முதலிலேயே செலுத்த வேண்டும் (முன்தொகை). மீதமுள்ள தொகையை வாடிக்கையாளர் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்றுள்ள கடன் மூலமாக அடைக்கலாம் (Full payment on loan).
இ.எம்.ஐ.(Equated Monthly Installment - EMI)
நீங்கள் வாங்கும் இத்தகைய கடனைக் குறிப்பிட்ட ஒரு காலம் வரை செலுத்த வங்கி அல்லது நிதிநிறுவனங்கள் அனுமதி அளிக்கிறது. இந்தக் கடன் தொகை சமமான அளவில் சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றை ஒவ்வொரு மாதமும் கட்டியாக வேண்டும். இதைத் தான் மாத சுலபத் தவணை (இ.எம்.ஐ) என அழைக்கிறார்கள்.
கணக்கிடும் முறை
இருப்பினும், இந்த மாத சுலபத் தவணைகளை வங்கிகள் எப்படிக் கணக்கிடுகிறது என்பதைச் சிலர் புரிந்து கொள்வதில்லை. இந்தக் கணக்கிடுதல் முறையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாமா?
இ.எம்.ஐ. எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றி விளக்கும் சில குறிப்புகள் இதோ:
சமமான மாதாந்திர தவணை
இ.எம்.ஐ. என்பது மாதாமாதம் வங்கிக் கட்ட வேண்டிய நிலையான ஒரு தொகையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த கடனையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அடைத்து விடலாம். கடனின் மொத்த தொகையை அசல் (ப்ரின்சிபில்) என அழைப்பார்கள். கடன் வழங்கும் சேவைக்காக, அசல் தொகை மீது வங்கி வட்டி வசூலிக்கும்.
வங்கியில் இருந்து ஒருவர் வாங்கும் மொத்த கடனான அசல் தொகையின் மீது தான் இ.எம்.ஐ. தொகைக்கான கணக்கீடு செய்யப்படும்.
இ.எம்.ஐ.-யில் என்ன இருக்கும்?
ஒவ்வொரு இ.எம்.ஐ. தொகையிலும் அசலின் ஒரு பங்கும், அதனுடன் வட்டி தொகையும் அடங்கியிருக்கும். அதனால், இ.எம்.ஐ.-யின் ஒவ்வொரு தவணையை நீங்கள் கட்டும் போதும், காலப்போக்கில் அசலும் வட்டியும் குறையத் தொடங்கும்.
வருதாந்திர வட்டியில்ல, மாதாந்திர வட்டி
ஒவ்வொரு இ.எம்.ஐ.-யும் மாதாந்திர வட்டி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கடனின் மீதான வட்டி, அசலின் மீது ஒரு சதவீதமாகக் கணக்கிடப்படும். இந்தச் சதவீதத்தைத் தான் வட்டி விகிதம் என அழைக்கிறார்கள்.
பொதுவாக வட்டியை வருதாந்திர அடிப்படையில் தான் வங்கிகள் கணக்கிடும். உதாரணத்திற்கு, வருதாந்திர வட்டி 8% என்றால், ஒரு மாதத்திற்கான வட்டி கட்டணம் 0.66% ஆகும். இதைச் சுலபமாகக் கணக்கிடலாம். வருடாந்திர வட்டி விகிதத்தை (இதில் 8%) வருடத்தின் மொத்த மாதங்களால் (12) வகுத்துக் கொள்ள வேண்டும். மாதாந்திர வட்டி கிடைத்து விடும்.
கடன் அடைபடும் காலம்
இ.எம்.ஐ. என்பது மாதாந்திர அடிப்படையில் கட்டப்படுவதாகும். அதனால் கணக்கிடுவதற்கு, மாதாந்திர அடிப்படையில் உங்களது கடன் அடைக்கப்படும் காலம் கருதப்படும். அதனால் வட்டியுடன் கடனை கட்ட வேண்டிய மாதங்களின் எண்ணிக்கை மிகவும் அவசியமாகும்.
உதாரணத்திற்கு, ஏழு வருட காலத்திற்குக் கடன் வாங்கப்பட்டிருந்தால், மொத்த மாதங்களின் எண்ணிக்கை 84 ஆகும்.
இ.எம்.ஐ.-களைக் கணக்கிடுதல்
அனைத்து அத்தியாவசியங்களும் தயாராகி விட்ட நிலையில், இப்போது இ.எம்.ஐ.-யை கணக்கிடும் நேரம் வந்து விட்டது. அதற்கு இரண்டு வழிகள் உள்ளது .
ஒன்று எக்சல் ஷீட் பயன்படுத்துதல், மற்றொன்று சிக்கலான கணக்கைக் கொண்டது. எக்சல் வழியைச் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். எக்சல் கோப்பில், பி.எம்.டி. என்ற கருவியைப் பயன்படுத்தலாம்.
மைக்ரோசாப்ட் எக்சல்
எக்சல் மென்பொருளில் புதிய ஷீட் ஒன்றினை திறந்து, மெனுவில் உள்ள 'ஃபார்முலாஸ்' பிரிவுக்குச் செல்லவும். நிதி சார்ந்த ஃபார்முலாவான பி.எம்.டி.-யை தேர்ந்தெடுக்கவும். சில தகவல்களை உங்களை உள்ளீடு செய்யச் சொல்லும். மாதாந்திர வட்டி, 'என்.பி.ஈ.ஆர்' அல்லது கடனை கட்டப்போகும் மொத்த மாதங்களின் எண்ணிக்கை, மற்றும் அசல் தொகையைப் 'பி.வி.' பிரிவில் உள்ளீடு செய்யவும். பின் 'பேமென்ட் அட் தி எண்டு ஆஃப் தி பீரியட்' தேர்வைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவு தான்! கட்ட வேண்டிய மாதாந்திர இ.எம்.ஐ. தொகையை எக்சல் பிரயோகமே காண்பித்து விடும்.
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை
வட்டி விகிதம் என்பது ஒரு சதவீதமே. அதனால் உள்ளீடு செய்யும் போது, எப்போதும் அதனை நூறால் வகுத்துக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு, வட்டி விகிதம் 8% என்றால், எக்சல் பிரயோகத்தில் அதனை 8 என உள்ளீடு செய்வதற்குப் பதிலாக 0.08 என உள்ளீடு செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, கடனைக் கட்டும் போது, மாத கடைசியில் தான் கடனை கட்டுவீர்கள். அதனால் தான் நாம் 'பேமென்ட் அட் தி எண்டு ஆஃப் தி பீரியட்' தேர்வைத் தேர்ந்தெடுக்கிறோம்.
இது முக்கியமானவை; இல்லையென்றால் இ.எம்.ஐ. கணக்கீடு தவறாக நடந்து விடும்.
உதாரணம்
நீங்கள் ஒரு கார் வாங்க வங்கியில் இருந்து 10 லட்ச ரூபாய்க்குக் கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ஏழு வருட காலத்திற்கு வங்கி, வருடத்திற்கு 8% வட்டி வசூலிக்கிறது.
அசல் தொகை 10,00,000/- ஆகும்.
மாதாந்திர வட்டி விகிதம் 0.66% ஆகும்.
மொத்த மாதங்களின் எண்ணிக்கை 84 ஆகும்.
அதனால் கடனுக்கான மாத தவணை தொகை ரூ.15,546.39 ஆகும்.
இ.எம்.ஐ. செயல்பாட்டைப் புரிந்து கொள்ளுதல்
ஒவ்வொரு இ.எம்.ஐ. தொகையிலும் அசல் மற்றும் வட்டியின் ஒரு பங்கு இருக்கும். முதல் மாதத்தில், மாதாந்திர வட்டி விகிதமான 0.66% மற்றும் அசல் தொகையின் அடிப்படையில் வட்டி காட்டப்படும். இது ரூ.6,600/- ஆகும்.
அப்படிஎன்றால் இ.எம்.ஐ. தொகையான 15,546.39-ல் ரூ.8,946.39 அசலாகும். அதனால் நீங்கள் இன்னமும் ரூ.9,91,053.61-ஐ அசலாகக் கட்ட வேண்டும்.
இனி அடுத்த மாதத்திற்கு, இந்தத் தொகையின் மீது விகிதமாக வட்டி கணக்கிடப்படும். அதனால் இரண்டாவது மாதத்திற்கான வட்டி தொகை ரூ.6,540.95 ஆக இருக்கும்.
மீதமுள்ள இ.எம்.ஐ. தொகையான ரூ.9,005.44 தான் அசலுக்காகச் செலுத்த வேண்டிய தொகையாகும். இது நீங்கள் கட்ட வேண்டிய அசலை மேலும் குறைக்கும்.
தொடர்ந்து குறையும்
இந்த முறையில், இ.எம்.ஐ.-யின் வட்டி தொகை ஒவ்வொரு மாதமும் குறைந்து கொண்டே வரும். அதே நேரத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய அசல் தொகை குறைந்து கொண்டே வரும். ஆனால் ஒவ்வொரு மாதமும் இ.எம்.ஐ. அதே அளவில் தான் இருக்கும்.
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 14.06.2016
No comments:
Post a Comment