disalbe Right click

Sunday, June 19, 2016

பிறவிக் கோளாறு (ஃபோலிக் அமிலக் குறைபாடு)


பிறவிக் கோளாறு - என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பிணி பெண்களுக்குஉயிர் காக்கும்  ஃபோலிக் அமிலம்!

கர்ப்பம் உறுதியானதுமே பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஃபோலிக் அமில மாத்திரைகள். அதன்அவசியம் உணராமல்  அலட்சியப்படுத்துகிற பெண்களுக்கு, ஃபோலிக் அமிலக் குறைபாடு எப்படிப்பட்ட பயங்கரங்களை ஏற்படுத்தலாம் என விளக்குகிறார்  மருத்துவர் நிவேதிதா.ஃபோலிக் அமிலம் என்பது ஒருவகையான பி வைட்டமின். புதிய செல்கள் உருவாக உடலுக்கு மிக  அத்தியாவசியமானது அது. எல்லா மக்களுக்குமே ஃபோலிக் அமிலம் அவசியம் என்றாலும் கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு  அது மிக மிக அவசியம். கருத்தரிப்பதற்கு முன்பும் கருத்தரித்த பிறகும் ஒரு பெண்ணின் உடலில் போதிய அளவு ஃபோலிக்  அமிலம் இருக்குமானால், அது குழந்தையின் பிறவிக் கோளாறுகள் பலவற்றைத் தவிர்க்கும்.

ஃபோலிக் அமிலக் குறைபாடு என்ன செய்யும்?

குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் முதுகெலும்பை பாதிக்கும் Spina bifida  என்கிற இந்தப் பிரச்னையால் முதுகெலும்பு மட்டுமின்றி,  கால் அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளின் இயக்கமும் பாதிக்கப்படும். இப்படிப் பிறக்கும்  குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பிரச்னைகள் தொடரும். நிறைய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டியிருக்கும். ஃபோலிக் அமிலக் குறைபாட்டால் உண்டாகிற Anencephaly பிரச்னை குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்.  இதனால் குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது பிறந்த உடனேயோ இறந்து போகலாம். போதுமான ஃபோலிக் அமிலம்  இருக்கும் பட்சத்தில் ரத்தசோகை, இதயக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் அபாயங்களும் தவிர்க்கப்படுகின்றன.

யாருக்குத் தேவை?

கர்ப்பமாகும் திட்டத்தில் இருக்கிற பெண்களுக்கு தினசரி 400 முதல் 800 மைக்ரோகிராம் அளவுக்கு ஃபோலிக் அமிலம் தேவை.  கர்ப்பமாகிற திட்டம் இல்லாதவர்களுக்கும் இதே அளவு எடுத்துக் கொள்கிற பட்சத்தில், பின்னாளில் அவர்களுக்குக் குழந்தைகள்  பிறக்கும் போது பிறவிக் கோளாறுகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து கர்ப்ப  காலம் முழுவதற்குமான ஃபோலிக் அமில மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் இல்லை, குடும்பக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றிக்  கொண்டிருப்பவர்கள்கூட ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்.மூளை  வளர்ச்சிக் குறைபாட்டுடன் குழந்தை பெற்ற பெண்கள், மறுபடி இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தால்...

பெண்ணின் குடும்பத்தில் யாருக்காவது Spina bifida பிரச்னை இருந்தால்...வலிப்பு நோய், டைப் 2 நீரிழிவு, ருமட்டாயிட்  ஆர்த்ரைட்டிஸ், கல்லீரல் கோளாறு, சிறுநீரக பாதிப்பு, சோரியாசிஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின்  ஆலோசனைக்குப் பிறகே அவர்களுக்குத் தேவையான ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவில் உண்டா?

காய்கறிகள், கீரைகள், சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், முழு தானியங்கள் ஆகியவற்றில் இயற்கையிலேயே ஃபோலிக் அமிலம் நிறைய  உள்ளது. ஆனாலும் உணவின் மூலம் கிடைக்கிற அளவு மட்டுமே ஒருவருக்குப் போதுமானதாக இருக்காது. மருத்துவரின்  பரிந்துரைக்கு மேல் அளவுக்கதிகமான ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொண்டால் வைட்டமின் பி 12 குறைபாடு இருந்தால்  தெரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. அதுவும் ஆபத்தானது.

- வி.லஷ்மி

 Date: 2016-02-05@ 15:39:34
நன்றி குங்குமம் டாக்டர்

No comments:

Post a Comment