எளிதாக ரெஸ்யூமை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?
வேலைவாய்ப்புத் தேடலில் முதல் படி ரெஸ்யூமைத் தயார் செய்வதுதான். வேலைக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி, திறமைகளைச் சரியாக அடையாளம் காட்டும் வகையில் ரெஸ்யூம் அமைந்திருந்தால் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம். நல்ல ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடிப்படையான கோட்பாடுகளும், வழிகளும் இருக்கின்றன.
அது மட்டும் அல்லாமல் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்புக்கான பரிசீலனை முறைகளும் மாறியிருக்கின்றன. எனவே அதற்கேற்ப ரெஸ்யூம் தயாரிப்பையும் அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு
பெரும்பாலான நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களை மனிதர்கள் பரிசீலிப்பதில்லை. பிரத்யேக மென்பொருள்கள் ரெஸ்யூம்களைப் பார்த்து, வடிகட்டுகின்றன. இதற்குப் பிறகே மனித வள அதிகாரி அவற்றைப் பரிசீலிக்கிறார்.
ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவியும்போது, எல்லா ரெஸ்யூம்களையும் படித்துப் பார்த்துப் பொருத்தமானவற்றைத் தேர்வு செய்வது அலுப்பூட்டக்கூடியது; நேரத்தை விழுங்கக்கூடியது. அதனால்தான் ரோபோ தேர்வு மென்பொருள்களைக் கொண்டு சரியான ரெஸ்யூம்களை அகழ்ந்தெடுக்கின்றனர். இவை ஆட்டமேட்டட் டிராக்கிங் சிஸ்டம் (ஏடிஎஸ்) என்றும் குறிப்பிடப்படுகின்றன.
எனவே மென்பொருள் வடிகட்டலில் தப்பிப் பிழைக்கக் கூடியதாக ரெஸ்யூமைத் தயாரிப்பது அவசியம். ஆனால் இதை நினைத்து அதிகம் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், ரெஸ்யூம் அப்டேட்டான தன்மையுடன் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதற்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்ளவும் உதவும் இணையதளங்களும், செயலிகளும் இருக்கின்றன.
பொதுவாக ரோபோ தேர்வு மென்பொருள்கள் ரெஸ்யூம்களில் குறிப்பிட்ட வார்த்தைகள், பதங்களைத் தேடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேலைக்கான தகுதி, அனுபவம், படிப்பு ஆகியவற்றை உணர்த்தக்கூடிய சொற்களை அவை தேடிக் கண்டுபிடிக்கின்றன. அதோடு மோசமான அமைப்பு, எழுத்துப் பிழைகளையும் கண்டுணர்ந்து அதனடிப்படையில் வடிகட்டிவிடுகின்றன.
எனவே, ரோபோக்களின் கடைக்கண் பார்வையைப் பெற முதல் வழி ரெஸ்யூம் எளிமையாக, புரியும்படி இருக்க வேண்டும். அலங்கார அமைப்புகளையும், வார்த்தை ஜாலங்களையும் தவிர்த்துவிட வேண்டும்.
முடிந்தால் வேர்டு பைலாக இருந்தால் நல்லது. முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்ட புல்லட் புள்ளிகளைப் பயன்படுத்தலாம். இப்படி நிறைய அம்சங்களைக் கவனிக்க வேண்டும். வேலைக்கான விவரிப்பு, தகவல் தொடர்புக்கான முகவரி ஆகியவற்றையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று வேலைவாய்ப்பு தேர்வு வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த முறையில் ரெஸ்யூம் தயார் செய்ய உதவி தேவை என்றால், எச்லூம் (http://www.hloom.com/ats-resume-samples/) தளத்துக்குச் சென்று பார்க்கலாம். இந்தத் தளத்தில் பலவிதமான ரெஸ்யூம் மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமாக மென்பொருள் பார்வைக்கு ஏற்ற வகையிலான ரெஸ்யூம் மாதிரிகள் ஏடிஎஸ் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ரெஸ்யூம் அருகிலும் அதற்கான வழிகாட்டுதல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பார்த்து பரிசீலித்துப் பொருத்தமான ரெஸ்யூம் மாதிரியைத் தேர்வு செய்துகொள்ளலாம். அப்படியே நகெலெடுக்க வேண்டும் என்றில்லை, இவற்றை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம்.
ரெஸ்யூமை எப்படி வடிவமைப்பது எனத் தெரிந்துகொண்ட பின், அதில் முக்கிய விவரங்களை எப்படி இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். என்ஹான்ஸ்சிவி (https://www.enhancv.com/ ) இணைதளம் இதற்கு வழிகாட்டுகிறது. ரெஸ்யூமில் இடம்பெற வேண்டிய தகவல்களைத் தெரிந்து கொள்வதோடு, மாதிரி ரெஸ்யூம்களையும் பார்க்கலாம். ரெஸ்யூம்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள இந்தத் தளம் உதவும்.
இதே போல ஜாப்ஸ்கேன் (https://www.jobscan.co/ ) இணையதளம், ரெஸ்யூமில் ரோபோ தேர்வாளர் கவனிக்கக்கூடிய குறிச்சொற்கள் இருக்கின்றனவா? எனக் கண்டறிந்து சொல்கிறது. இந்தத் தளத்தில் ரெஸ்யூம் விவரம் மற்றும் அதன் அருகே விண்ணப்பிக்கும் பணிக்கான விவரங்களைச் சமர்ப்பித்தால் இரண்டையும் பரிசீலித்து அந்த ரெஸ்யூம் எப்படி இருக்கிறது எனும் தகவல் தந்து வழிகாட்டுகிறது. ஆனால் இது கட்டணச் சேவை.
ரெஸ்யூமைக் கவனமாகத் தயார் செய்த பிறகு அதன் தன்மை குறித்து உறுதி செய்து கொள்ள விரும்பினால், ரெஸ்ஸ்கோர் (http://rezscore.com/) தளம் வழிகாட்டுகிறது. அடிப்படையில் இந்தத் தளம் ரெஸ்யூமின் பல்வேறு அம்சங்களை அலசி ஆராய்ந்து அதற்கு மதிப்பெண் கொடுக்கிறது. ரெஸ்யூமை இந்தத் தளத்தில் பதிவேற்றி அது எந்த அளவு சிறந்ததாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இன்னும் வழிகாட்டுதல் தேவை எனில் ரியல் ரெஸ்யூம் (https://www.visualcv.com/resume-samples) தளத்தில் ஆயிரக்கணக்கான ரெஸ்யூம்களைப் பார்வையிடலாம். எல்லாமே தொழில் வல்லுநர்களின் ரெஸ்யூம் மாதிரிகள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணிகளுக்கான ரெஸ்யூம் மாதிரிகளையும் பார்க்கலாம்.
இவற்றில் உள்ள ரெஸ்யூம் மாதிரிகள் பிடித்திருந்தால் அதையே பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. ரெஸ்யூம் பற்றி இன்னமும் தெளிவு தேவை என்றால் கேள்வி பதில் தளமான குவோராவில் ரெஸ்யூம் வடிவமைப்பு தொடர்பான கேள்விகளைப் படித்துப் பார்க்கலாம். - https://www.quora.com/topic/Resumes-and-CVs வேலைவாய்ப்புத் துறையில் நிபுணத்துவம் மிக்க வல்லுநர்கள் தரும் விரிவான பதில்கள் நிச்சயம் புதிய பார்வையை அளிக்கக் கூடியதாக இருக்கும்.
இன்னொரு முக்கியக் குறிப்பு, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்குத் தொழில்முறை வலைப்பின்னல் சேவையான லிங்க்டுஇன் தளத்தில் கணக்கு இருந்தால் இன்னும் நல்லது. பல விதங்களில் அது உதவியாக இருக்கும். பேஸ்புக் கணக்கு நட்புக்கும், அரட்டைக்கும் வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம், ஆனால் தொழில்முறையாக நீங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றால் லிங்க்டுஇன் நல்ல தேர்வாக இருக்கும்.
இது தவிர, ஒரு ரெஸ்யூமில் தவிர்க்க வேண்டிய முக்கிய அம்சங்களையும் அறிந்திருப்பது அவசியம். குறிப்பிட்ட சில பணிகள் தவிர பிறவற்றுக்கு ஒளிப்படத்தை இணைக்க வேண்டாம். உயரம், எடை போன்ற தனிப்பட்ட விவரங்களையும் தவிர்க்க வேண்டும் போன்ற 17 அம்சங்களை இந்த வரைபடச் சித்திரம் மூலம் அறியலாம்:
http://www.resumetiq.com/17-things-to-avoid-in-resume-infographic/
**********************************************நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 03.06.2016
No comments:
Post a Comment