கைபேசியில் தமிழ் அகராதி - என்ன செய்ய வேண்டும்?
ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் இனி புரட்டலாம்
'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'!
சமகாலத் தமிழைத் தொழில்நுட்பரீதியாக அடுத்த யுகத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சிகளில் ஒரு மைல்கல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ‘க்ரியா பதிப்பகம்’. ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கான ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் செயலியைப் பதிவிறக்கிக்கொண்டால், இனி செல்பேசியிலேயே தமிழ் அகராதியைப் புரட்டலாம். தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கங்களோடு அவற்றுக்கு இணையான ஆங்கில வார்த்தைகளையும் விளக்கங்களையும் பெறலாம்.
வையாபுரிப்பிள்ளை ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘தமிழ்ப் பேரகராதி’ (Tamil Lexicon) பழந்தமிழ்ச் சொற்களிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையிலான சொற்களுக்கான அகராதி என்றால் ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’தற்காலப் பொதுத் தமிழுக்கான அகராதி. மொழியியல் அறிவு, கணினித் தொழில்நுட்பம் போன்றவை ஒருங்கே இந்த அகராதியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ‘க்ரியா’ அகராதி யின் முதல் பதிப்பு சிறப்பு வாய்ந்த அறிஞர்கள் குழு, நிபுணர்கள் குழுவின் ஆறு ஆண்டுகால உழைப் பில் 1992-ல் வெளியானது. அதற்குப் பிறகு, தமிழில் நிகழ்ந்த மாற்றங்களையும் சேர்க்கைகளையும் கணக்கில் கொண்டு, அந்த அகராதியை விரிவாக்கி 2008-ல் வெளியிட்டார்கள். 75 லட்சம் தமிழ்ச் சொற் களைக் கொண்ட ‘சொல்வங்கி’யின் உதவியுடன் உருவாக்கப் பட்டது இந்தப் பதிப்பு. 21,000 தலைச்சொற்கள், 38,000 எடுத்துக்காட்டு வாக்கியங்கள், 1,700 இலங்கைத் தமிழ்ச் சொற்கள் போன்றவை இதன் முக்கியமான அம்சங்கள்.
இணையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், க்ரியா அகராதியை மேம்பட்ட தேடல் வசதிகளுடன் க்ரியா இணையதளத்தில் வெளியிட்டார்கள். கூடவே, ஐபேட், ஐஃபோன் சாதனங்களிலும் இந்த அகராதியின் ஆப் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆண்ட்ராய்டில் இந்த அகராதி தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
செல்பேசியில் அகராதியைப் புரட்டுவதே அலாதியான அனுபவமாக இருக்கிறது. ‘அ’ என்ற எழுத்தைத் தட்டினாலே அகரத்தில் தொடங்கும் எழுத்துகளைக் கைபேசித் திரை காட்டுகிறது. அது மட்டுமல்லாமல், Options என்ற பகுதியில் சொற்களை அவற்றின் இலக்கண வகை, வழக்குக் குறிப்புகள், துறைகள் ரீதியாகவும் தேட முடியும். உதாரணத்துக்கு, ஒருவர் அச்சுப் பதிப்பு அகராதியில் இயற்பியல் சார்ந்த சொற்களைப் பக்கம் பக்கமாகப் புரட்டித் தேடுவதென்றால், ஒரு வாரம் பிடிக்கலாம். ஆனால், இந்த ‘ஆப்’பில் இயற்பியல் என்ற துறையை அழுத்தினால், ஒரு நொடிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட சொற் களின் பட்டியல் விரிகிறது. இந்த அம்சம் மாணவர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
இது ‘தமிழ்-தமிழ்- ஆங்கிலம்’ அகராதி என்பதால், ஆங்கிலச் சொல்லைத் தட்டச்சு செய்தால், அதற்குத் தமிழில் நிகரான பொருள் என்ன என்பதையோ அது தொடர்பான மற்ற தமிழ்ச் சொற்களையோ தேடலாம். தமிழறிவைத் தாண்டி, ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். தேடல் வசதியும், இண்டிக் கீபோர்டு என்ற விசைப்பலகையும் திறன் பொருந்தியவையாகவும் எளிமையாகவும் இருக்கின்றன. கணினித் தமிழில் நடந்திருக்கும் சாதனைகளில் ஒன்று என்றே இதைச் சொல்லலாம்!
சென்னைப் புத்தகக் காட்சியில் ‘க்ரியா பதிப்பகம்’ பங்கேற்றிருக்கிறது. அரங்கு எண்: 51, 52. இந்த அகராதிச் செயலியை அங்கு நேரடியாகப் பெறலாம் அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு கைபேசியில் உள்ள ‘பிளே ஸ்டோ’ருக்குச் சென்று creatamildictionary என்று ஆங்கிலத்தில் அடித்தால், இந்தச் செயலி வந்துவிடுகிறது. முதல் பத்துச் சொற்கள் வரை கட்டணமின்றிப் பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்பாடு பிடித்திருக்கும் பட்சத்தில் ரூ.199 செலுத்தினால், ஆயுளுக்கும் பயன்படுத்தலாம்!
நன்றி : இந்து நாளிதழ் - 03.06.2016
No comments:
Post a Comment