வருமானவரி கணக்குத் தாக்கல் - என்ன செய்ய வேண்டும்?
வருமான வரி கணக்குத் தாக்கல்… புதிய மாற்றங்களை கவனியுங்கள்!
ஏ டு இசட் டிப்ஸ்
வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது நுணுக்கமான பல விஷயங்களை கவனிக்க வேண்டும். எனவேதான், ஒரு ஆடிட்டரின் துணையோடு இதை செய்ய முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது. ஆனால், சிற்சில விஷயங்களை உங்களால் கவனமாக செய்ய முடியும் எனில், நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் ரீஃபண்ட் கோரிப் பெறுவதும் சுலபமாகிவிட்டது.
ஆனால், இதை ஒழுங்காக செய்ய வேண்டும் என்பது மட்டும் கட்டாயம்.
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது யார் எந்தப் படிவத்தை உபயோகிக்க வேண்டும், கடந்த வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் உள்ள மாறுதல்கள் என்ன, பொதுவாக ஏற்படக்கூடிய தவறுகள் என்ன என்பதைப் பார்ப்போம். முதலில், நிதி ஆண்டு 2015-16, மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year) 2016-17-க்கான விவரங்களை பார்ப்போம்.
யாருக்கு எந்தப் படிவம்?
ஐடிஆர் 1 (சகஜ்) – ITR 1 (SAHAJ)
தனிநபர்கள் – இவர்களின் வருமானம் பின்வரும் வகையைச் சார்ந்ததாக இருந்தால், அவர் களுக்கு ஐடிஆர் 1 படிவம்தான்.
1. பென்ஷன் அல்லது சம்பளம்.
2. வீட்டு வாடகை – முன்வருடத்திய இழப்புக்களை (carry forward loss) இவ்வாண்டுக்கு கொண்டு வரப்படாததாக இருக்க வேண்டும். ஒரே ஒரு சொந்த வீடு மட்டும் தான் இருக்க வேண்டும்.
3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம் போன்றவைகளிலிருந்து வருமானம் இருக்கக்கூடாது.
4. விவசாய வருமானம் ரூ.5,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
5. செக்ஷன் 90/91-ன் கீழ் எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணமும் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது (Double Taxation Relief).
ஐடிஆர் 2 – (ITR 2)
தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப (HUF) அமைப்புக்களும் – வருமானம் பின்வரும் வகை சார்ந்ததாக இருந்தால், அவர் களுக்கு ஐடிஆர் 2 படிவம்தான்.
1. சம்பளம் அல்லது பென்ஷன்
2. வீட்டு வாடகை – வீடுகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருந்தால்.
3. முதலீட்டு வரவு (Capital gains)
4. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம்
5. தனிநபர்கள், இந்தியர்களாக கருதப்பட்டு வெளிநாட்டு சொத்துக்கள் இருந்தால் அல்லது வெளிநாட்டு வருமானம் வந்தால்.
ஐடிஆர் 2ஏ ( ITR 2A)
தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்களும் – வருமானம் இந்த வகை சார்ந்ததாக இருந்தால்.
1. சம்பளம் அல்லது பென்ஷன்
2. வீட்டு வாடகை – ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வந்தாலும்
3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம் சேர்த்து
4. செக்ஷன் 90/91-ன் கீழ் எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணம் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது
5. வெளிநாட்டில் சொத்து அல்லது வெளிநாட்டு வருமானம் இருக்கக்கூடாது
ஐடிஆர் 4 எஸ் (ITR 4S -SUGAM)
தனிநபர்கள், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்கள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்களாக இருக்கக்கூடாது
1. சம்பளம் அல்லது பென்ஷன்
2. வீட்டு வாடகை – இதில் முன்வருடத்திய நஷ்டம் இருக்கக் கூடாது.
3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் லாட்டரி குதிரைப் பந்தயம் தவிர்த்து.
4. தொழில் வருமானம் – இந்த வருமானம் செக்ஷன் 44 AD அல்லது செக்ஷன் 44 AE-ன் கீழ் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.
5. விவசாய வருமானம் ரூ.5,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
6. செக்ஷன் 90/91 அடியில் நிவாரணம் கேட்கப்பட்டிருக்கக் கூடாது.
ஐடிஆர் 3 (ITR 3)
தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்புக்கள், பார்டனர்ஷிப் நிறுவனங்களில் பார்ட்னராக இருந்து இவர்கள் வேறு தனி உரிமை (proprietorship) நிறுவனத்திலிருந்து வருமானம் இல்லாது மற்றும் இவர்களின் வருமானம், வட்டி, கமிஷன் அல்லது ஊதியம் மற்றும் போனஸ், இப்படி ஒன்றாக இருக்குமென்றால்.
ஐடிஆர் 4 (ITR 4)
இது தனி உரிமை நிபுணத்துவ வணிகம் (proprietary business profession) நடத்துபவர்களுக்கு. வருமான வரம்பு கிடையாது. சம்பளம், வீட்டு வாடகை, மற்ற எல்லாவித வருமானங்களும், குதிரைப் பந்தயம் லாட்டரி உட்பட, இந்தப் படிவத்தில் காட்டலாம்.
இதுவரை குறிப்பிட்டவை தனிநபர்களுக்கான படிவங்கள். இவை தவிர, ஐடிஆர் 5, 6, 7 படிவங்கள் இருக்கின்றன. அவை முற்றிலும் நிறுவனங் களுக்கானவை என்பதால் அவற்றை விட்டுவிடலாம்.
இந்த வருடம் என்ன மாற்றங்கள்..?
இந்த வருடம் என்ன வகை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன என்று பார்ப்போம்.
1. வரி செலுத்துபவரின் வருமானம் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்குமானால்,
ஷெட்யூல் ஏஎல் (AL) பூர்த்தி செய்யவேண்டும். இந்த ஷெட்யூல் தனிநபரின் அசையா மற்றும் அசையும் சொத்துக்களின் கணக்காகும். இது ITR 1, 2, 2A, 3, 4, 4S படிவங்களுக்கும் பொருந்தும். அதாவது, 31.3.2016 நிலவரப்படி இருக்கும் நிலம், வீடு, கையிருப்பு பணம், நகை, தங்கம், வாகனம் (படகு, விமானம்) தவிர, இந்தப் பொருட்களின் மீதான கடன்.
ஏஎல் ஷெட்யூலில் தரப்பட வேண்டிய சொத்துக்கள் அவை வாங்கப்பட்ட விலையில் காண் பிக்கப்படவேண்டும். அவை வெகுமதியால் அல்லது மரபுரிமை யால் பெற்றிருந்தால் அதன் முன் உரிமையாளரின் வாங்கப்பட்ட விலையைக் குறிப்பிட வேண்டும்.
2. வணிக அறக்கட்டளை அல்லது முதலீட்டு நிதியிலிருந்து (Business Trust or investment fund) பெறப்பட்ட வருமானம்.
ஷெட் யூல் பி.டி1-ல் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இது ஐடிஆர் 1, 2, 2ஏ, 3, 4-க்கு பொருந்தும்.
3. மூலத்தில் வரிப் பிடித்தம் (Tax Collected at Source – TCS):
இந்த விவரங்கள் ஷெட்யூல் டிசிஎஸ்-ல் கொடுக்கலாம். ஐடிஆர் 1, 2, 2 ஏ-க்கு பொருந்தும். ரூ. 2 லட்சத்திற்கு மேல் தங்கம் அல்லது ரூ. 5 லட்சத்திற்கு மேல் நகை, ரொக்கம் கொடுத்து வாங்கும்போது, விற்பவர் நம்மிடம் அந்த தங்கத்தின் மேல் வரி விதித்து அதை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பார். டிடிஎஸ் போல, இது டிசிஎஸ். போன வருடம் வரை இதற்கு படிவத்தில் இடம் இல்லாதிருந்தது. இப்போது படிவம் மாறுதலால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
4 ஐசிடிஎஸ் (ICDS – Income computation and Disclosure Statement) –
இது ஐடிஆர்4-க்கு பொருந்தும். இதை வர்த்தகத்தில் வரும் வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்வது என சில விதிமுறைகள், சர்வதேச கணக்கியல் முறைப்படி (international accounting standard) அமைக்கப்பட்டுள்ளது. காண்பிக்கப்பட்ட வருமானக் கணக்கின்படி இதில் ஏதேனும் மாறுதல் இருப்பின், அதை இந்த ஷெட்யூலில் காண்பிக்க வேண்டும்.
ஐசிடிஎஸ் என்பது தனி மனித வருமானம் காட்டப்படும்போது வரும். உதாரணமாக, ரூ.10 லட்சம் டெபாசிட் மார்ச் மாதம் 20-ம் தேதி போடப்படுவதினால் அந்த வருட வட்டி வருமானத்தில் இந்த 11 நாட்களுக்கான வட்டி காட்டப்படாமல் அடுத்த வருடம் காண்பிக்கப்படும். ஆனால், சர்வதேச கணக்கியல் முறைப்படி, அக்குரூட் (Accrued) என்று காட்டப்பட்டு, இந்த வருட வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
செக்ஷன் 80 சிசிடி (1பி) {CCD(1B)} கீழ் ரூ.50,000 வரை கூடுதல் வரிச் சலுகை உண்டு. அதாவது, தேசிய பென்ஷன் முறையில் (National Pension Scheme) இந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டால். இதற்கான கூடுதல் இடமும் இந்தப் படிவத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இவை தவிர, கூட்டாண்மை நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்களுக்கான (Partnership, Trust, companies) மாறுதல்களும் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாலும், அவை எல்லாம் நிறுவனங்களுக்கானவை என்பதால் அவற்றைப் பற்றி நாம் இங்கே விவரிக்கவில்லை.
புதிய படிவங்களும் அவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் கவனித்து வரி கணக்குத் தாக்கல் செய்வது அவசியம்!
லதா ரகுநாதன், ஆடிட்டர், எல்ஆர் அசோசியேட்ஸ், சென்னை.
நன்றி : நாணயம் விகடன் - 12.06.2016
No comments:
Post a Comment