கால், கை வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
கட்டுக் கதையா உண்மையா? வலிப்பு ஏன்?
வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?..
இடது கண் துடித்தால் நல்லது நடக்கும், கை அரித்தால் பணம் வரும், புரை ஏறினால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என நம் உடல் மாற்றங்களுக்கு பேச்சுவழக்கில் பல்வேறு காரணங்களைச் சொல் வார்கள். இதை அப்படியே நம்புபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
இதெல்லாம் உண்மையா?
இதற்கான அறிவியல் காரணங்கள் என்ன?
யாருக்காவது வலிப்பு வந்தால் கையில் சாவிக்கொத்து அல்லது இரும்புக் கம்பியைத் திணிப்பார்கள். இந்தக் காட்சியை சினிமாக்களில் அடிக்கடி பார்த்திருப்போம். சாவியை கையில் வாங்கியதும் வலிப்பு கொஞ்சம், கொஞ்சமாக சரியாகிவிடும். இது உண்மையா? இரும்பைக் கையில் கொடுத்தால் வலிப்பு சரியாகிவிடுமா? வலிப்பு நோய் ஏன் வருகிறது என விளக்குகிறார் நரம்பியல் மருத்துவர் திலோத்தம்மாள்.
மூளையின் நரம்பணுக்கள் நியூரான்ஸ் (Neurons) என்று அழைக்கப்படுகின்றன. மூளை, நரம்புகள், நரம்பணுக்கள் போன்றவற்றில் மின்னோட்டம் சென்று கொண்டிருக்கும். இது இயல்பு. தானாகவோ, காரணமே இல்லாமலோ, அதிகப்படியான மின்னோட்டம் நரம்பணுக்களில் பாய்ந்தால், வலிப்பு வரும். அதாவது நரம்பணுக்களின் இயல்பான நிலையிலிருந்து அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டால், அதுவே வலிப்பு நோய்.
கை, கால், வாய் போன்றவை கோணலாக இழுத்துக்கொள்வது மட்டும் வலிப்பு அல்ல. ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இரண்டு நிமிடங்கள் எல்லாம் மறந்து, நாம் எங்கு, என்ன செய்கிறோம் என யோசித்து பின் நினைவுக்கு வந்தால், அதுவும்கூட வலிப்புதான். கண் முன்னால் வண்டி ஓடுவதுபோல தெரிவது, திடீர் வெளிச்சம் வருவது என வலிப்பு வெவ்வேறு வடிவத்தில் வரலாம்.
அடிக்கடி வலிப்பு வந்தால் மட்டுமே, அவர் வலிப்பு நோயாளி. ஒரே ஒருமுறை வலிப்பு வந்தால், அவர் வலிப்பு நோயாளி கிடையாது.
இரும்பைக் கையில் கொடுத்தால், வலிப்பு சரியாகிவிடாது. அதிகப்படியான மின்னோட்டம் பாய்வது சில நிமிடங்களே நீடிக்கும், அதன் பின்பு தானாகவே சரியாகிவிடும். மின்னோட்டம் சரியாகும்போது வலிப்பு நின்றுவிடும்.
வலிப்பு வந்தவரை ஒருபக்கமாக திரும்பிப் படுக்க வைக்க வேண்டும். மல்லாந்து படுக்கவைத்தால், வாயில் நுரை தள்ளினாலோ, வாந்தி எடுத்தாலோ, அவை நுரையீரலுக்குச் சென்று உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, கவனம் தேவை.
கை, கால்களை அழுத்திப் பிடித்தல், நோயாளியின் மேல் ஏறி உட்காருதல், வாயில் எதையாவது அடைத்து வைத்தல், இரும்புப் பொருட்களை பிடிக்கக் கொடுத்தல் போன்றவற்றை செய்யவே கூடாது.
அருகில் நோயாளியைக் காயப்படுத்தும் சூழல் இருந்தால் மட்டுமே, நோயாளிக்கு ஆதரவாக மென்மையாகப் பிடித்து அவரை நகர்த்தலாம். இறுக்கமான ஆடைகளைத் தளர்வுபடுத்தலாம்.
சுற்றிலும் கூட்டமாக நின்று, சுவாசிப்பதை சிரமப்படுத்தக் கூடாது. வீடு எனில் கதவு, ஜன்னல் அனைத்தையும் திறந்துவைக்கலாம்.
முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. மயக்கத்தில் இருக்கும்போது குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. நினைவுக்கு வந்த பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொடுக்கலாம்.
-------------------------------------------------------------------ப்ரீத்தி
நன்றி : டாக்டர்விகடன் - 16.01.2015
No comments:
Post a Comment