நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மேற்படிப்பு படிக்க
வழியில்லையா, என்ன செய்ய வேண்டும்?
ஏழை மாணவர்கள் வாழ்க்கையில்
ஆனந்தம்,ஆனந்தம்,ஆனந்தமே...
இது கொஞ்சம் வித்தியாசமான ஆனால் ஆரோக்கியமான முயற்சி.
ஒவ்வொரு வருடமும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் ஏழரை லட்சம் பேரில் எப்படிப்பார்த்தாலும் ஒரு லட்சம் பேர் உயர்படிப்பு படிக்கமுடியாமல் திணறுகின்றனர்.
இந்த திணறுலுக்கு சந்தேகமில்லாமல் வறுமைதான் காரணம்.
1200க்கு 1150ற்கு மேல் வளமையான மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும்,உயர்கல்வி படிக்கும் கனவுகள் சுமந்திருந்தாலும்,உண்மையில் அதற்கான கல்லுாரியில் சேர்வதற்கான விண்ணப்ப மனு வாங்கத்தேவையான இருநுாறு முன்னுாறு ரூபாய் பணம் கூட இல்லாத கொடுமை இவர்களுடையது.
இவர்களில் சிலர்
அப்பா,அம்மா இல்லாதவர்கள்
உடுத்த மாற்று ஆடை கூட இல்லாதவர்கள்
ஒரு வேளை மட்டுமே சாப்பிடுபவர்கள்
பகலில் பள்ளிக்கு போய்விட்டு இரவு வீட்டு வேலை பார்ப்பவர்கள்
செருப்பு வாங்கக்கூட காசு இல்லாதவர்கள்
என்று வறுமையின் உச்சகட்டத்தில் இருந்தாலும் எப்படியோ தட்டுத்தடுமாறி பிளஸ் டூ முடித்துவிடுகின்றனர்,அதுவும் நல்ல மதிப்பெண்களோடு.
உயர்கல்வி மட்டுமே இவர்களையும், இவர்களைச் சார்ந்தவர்களையும் மாற்றிப்போடும் என்ற நிலையில் யார் இந்த மாணவர்களுக்கு உதவுவர்,அதுவும் மெடிக்கல்,என்ஜீனிரிங் போன்ற அதிகம் செலவாகும் படிப்புகளுக்கு..
பாங்க லோன் என்பது இத்தகைய மாணவர்களுக்கு கிடைக்காது என்பதுதான் கசப்பான உண்மை.ஒன்று யாராவது உதவி செய்தால் படிப்பார்கள் அல்லது டீகடையில் கிளாஸ் கழுவுதல் உள்ளீட்ட கிடைத்த வேலைகளை பார்த்துக்கொண்டு முடங்கிப்போவர்.
இப்படிப்பட்ட மாணவ,மாணவியரை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான கல்வியை முழுமையாக தரும் அறக்கட்டளைதான் ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு.
பணம் புகழ் சம்பாதிப்பது அல்ல வாழ்க்கை, அதையும் தாண்டி நாம் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எனது எண்ணத்தோடு ஒத்த கருத்து கொண்ட நண்பர்களுடன் துவங்கப்பட்டதுதான் இந்த ஆனந்தம் அமைப்பு. ஆரம்பத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடத்தினர்.
ஆனால் தேவைக்கு அதிகமான விழிப்புணர்வுடன் இருந்த அந்த கிராமப்புற மாணவர்களுக்கு தேவைப்பட்டது எல்லாம் கல்லுாரியில் சேர்வதற்கான பணம்,பணம் மட்டுமே.
அவர்களில் மெடிக்கல்,என்ஜீனிரிங் சீட்டு கிடைத்தும் பணம் கட்டாமல் இருந்த மாணவர்களில் சிலரை தேர்வு செய்து நான்கு வருட படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டு படிக்கவைக்க முடிவு செய்தனர்.
இதைக்கேட்டதும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், உற்றோர், நண்பர்கள் மட்டுமல்ல, மொத்த கிராமமே கையை காலாக நினைத்து நன்றி கூறுகிறோம் என்றனர்.அன்று தொட்டு இன்று வரை இந்த தொண்டு தடையின்றி தொடர்கிறது.
கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள்.
பெற்றோரை இழந்த அல்லது இல்லாத மாணவர்கள்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள்.
குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருக்கப்போகிறவர்கள்.
உயர்கல்வியில் தகுதி அடிப்படையில் சேர்வதற்கான மதிப்பெண் பெற்றவர்கள்.
இப்படிப்பட்ட மாணவ,மாணவியரை பற்றி பள்ளி தலைமையாசிரியருக்குதான் நன்கு தெரியும் ஆகவே அவர் முதலில் சிபாரிசு செய்யவேண்டும்,பின்னர் ஆனந்தம் குழு நேரிடையாக போய் விசாரித்து உண்மையை உறுதி செய்யும்
இவர்களில் முப்பது பேர் தேர்வு செய்யப்பட்டதும் அவர்கள் விரும்பும் படிப்பு படிக்கலாம்.கல்வி தொடர்பான அனைத்து செலவுகளையும் படித்து முடிக்கும் காலம் வரை ஆனந்தம் ஏற்கும்.
தேர்ந்து எடுக்கப்படும் ஒவ்வொரு மாணவரையும் ஆனந்தம் அமைப்பை சார்ந்தவர் படித்து முடிக்கும் காலம் வரை வழிகாட்டியாக இருந்து உதவுவார்.
படிப்பு மட்டுமின்றி உடல்நலம்,மனநலம்,ஆளுமைத்திறன் மற்றும் வாழ்விற்கு தேவையான நற்பண்புகளை மேம்படுத்துவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.
மேலும் அவர்களை பட்டதாரியாக்கியதோடு நிறுத்திவிடாமல் வாழ்வின் சவால்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு ஆனந்தமாகவும்,சமூக அக்கறையோடும் வாழக்கூடிய சிறந்த மனிதர்களாக உருவாக்குதல்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்த சேவையின் காரணமாக இப்போது பலர் இன்போசிஸ்,டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர்.சிலர் டாக்டர்களாக வரவிருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் காரணமாக முப்பது மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்து படிக்கவைக்கின்றனர்,நீங்க சரியா செய்றீங்க உங்க நோக்கமும் செயல்பாடும் தெளிவா இருக்கு, உங்ககிட்ட கொடுக்கிற ஒவ்வொரு பைசாவும் மாணவர்களுக்கு மட்டுமே பயன்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது ஆகவே எங்களது நன்கொடையையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என பலர் இப்போது மனமுவந்து ஆனந்தம் அமைப்பிற்கு உதவ தயராகிவருகின்றனர்.இதன் காரணமாக இன்னும் கொஞ்சம் கூடுதல் மாணவர்களை படிக்கவைத்து அவர்களது இல்லத்திலும்,உள்ளத்திலும் விளக்கு ஏற்றிவைக்க ஆனந்தம் அமைப்பு விரும்புகிறது.
கொடுக்கும் பணத்திற்கு கணக்கு காட்டுவதுடன் உங்கள் பணத்தால் எந்த மாணவன் எந்த மாணவி படித்துக்கொண்டு இருக்கிறார்,எங்கு படித்துக்கொண்டு இருக்கிறார்,என்ன செய்கிறார் என்பது உள்பட எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் தெளிவான நடைமுறையை ஆனந்தம் மேற்கொண்டு வருகிறது.
சந்திராயன் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை,சொல்வேந்தர் சுகிசிவம்,யுசிஜி துணைத்தலைவர் எச்.தேவராஜ்,சரவணா ஸ்டாக்ஸ் நிர்வாக இயக்குனர் டி.சத்யமூர்த்தி உள்ளீட்டோர் ஆனந்தம் அமைப்பின் செயல்பாடுகளை நேரில் பார்த்து பாராட்டி அவர்களது தொண்டுக்கு தோள்கொடுத்து வருகின்றனர்.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாயினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் என்று முழங்கிய பாரதியின் வரிகளை நிஜமாக்க நம்மில் பலருக்கு மனமும் உண்டு பணமும் உண்டு.
அப்படி பணமும் மனமும் கொண்ட உங்களாலும், உங்களுக்கு தெரிந்தவர்களாலும் இது போன்ற மாணவர்களுக்கு தேவைப்படும் கல்வித்தொகை கிடைத்தாலும் ஆனந்தமே.
உங்களுக்கு தெரிந்த வறுமையில் வாடும் கிராப்புற அறிவுபூர்வமான மாணவர்கள் பற்றி அமைப்பினருக்கு தகவல் தந்தாலும் ஆனந்தமே.
இதைப்படித்துவிட்டு உங்களது கருத்துக்களை அமைப்பின் நிறுவனர் தலைவர் எஸ். செல்வகுமாரிடம்
எண்:98410 13532
பகிர்ந்து கொண்டாலும் ஆனந்தமே.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
நன்றி : தினமலர் நாளிதழ் - 04.06.2016
No comments:
Post a Comment