disalbe Right click

Sunday, June 19, 2016

பெண்களுக்கு சொத்துரிமை உண்டு


பெண்களுக்கு சொத்துரிமை உண்டு-என்ன செய்ய வேண்டும்?

நம் பெண்கள், தங்களுக்கு அனைத்து சட்டங்களும் தெரியும் என்கிற, மேலோட்டமான மனநிலையிலும், முழுதாக தெரிந்து ஒன்றும் செய்யப் போவதில்லை எனவும், வீட்டு ஆண்கள் பார்த்துக் கொள்வர் என்ற நினைப்பிலும் இருந்து விடுகின்றனர். 

மிகச் சரியான உதாரணம். பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்கிற சட்ட உண்மை. பொதுவாக ஆண்களுக்கு சமம் பெண்களும். இருபாலருக்கும் சொத்தில் பங்கு, உரிமை உண்டு என்று, மேலோட்டமாக தெரிந்து வைத்திருப்போம். 

ஆனால், பாக பிரிவினையில், பெண்களுக்கு எந்த சூழ்நிலைகளில், நேரிடையாக சொத்து கிடைக்கும் என்று தெரியாது. 

பெண்களுக்கான சொத்துரிமை பற்றிய சட்ட விழிப்புணர்வு, இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்கான உரிமையை தெளிவாக தெரிந்து கொண்டால் தான், அதற்காக நாம் போராட முடியும்.

நம் பாட்டி, கொள்ளு பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள், அந்தக் கால கொடுமைகளையெல்லாம் சொல்வர். அவர்கள் காலத்தில், இந்து பெண்கள் சொத்து சட்டம் என்று ஒன்று இருந்தது. இந்து வாரிசு சட்டம், 1956 என்கிற, 'பெண்களுக்கும் உரிமை உண்டு' என்ற சட்டம், 1956ல் இருந்தது. 
அது எதற்கு தெரியுமா? பெண்கள் பிறந்த வீட்டில் தங்குவதற்கு மட்டுமே. தங்கிக் கொள்ளலாம், படிக்கலாம், கல்யாணம் பண்ணிக்கலாம், சீர் சீதனம் செய்து அனுப்பி வைப்பர்; அவ்வளவு தான் பெண்களுக்கான சொத்து பங்கு. பரம்பரை சொத்திலோ, வீட்டு ஆண் சம்பாதித்த சொத்திலோ பங்கு கேட்கும் உரிமை கிடையாது.

இந்த சட்டத்தில், தமிழ்நாடு மாநில அரசு சட்ட இந்து மத வாரிசு சட்ட திருத்தம், 1990ன் படி, ஒரு ஆணின், அப்பாவின், கணவனின் சொத்து, அவனுக்கு பின் அவன் மனைவி, மகன், மகள் என, அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று, சொல்கிறபடி நடைமுறைக்கு வந்தது. 

மத்திய அரசின், 2005ம் ஆண்டு திருத்தம் செய்த இந்து மத வாரிசு சட்டத்தில், இதே சம உரிமை இருக்கிற சட்டத்தை கொண்டு வந்தது.

வாரிசு இல்லாத பெண்ணின் பரம்பரை சொத்து என்ன ஆகும்?

வழக்கமாக, ஆண் வாரிசுகள் இருந்தால், அந்த சொத்து எந்த பிரச்னையும் இன்றி, அடுத்த தலைமுறைக்கு மாறிவிடும். ஆனால், ஆண் வாரிசு இல்லாமல், பெண் மட்டுமே, அந்த தலைமுறையில் வாரிசாக இருந்தால், அந்த சொத்து அடுத்த தலைமுறைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்.

குறிப்பாக, தந்தையிடம் இருந்து, மகள் பெயருக்கு ஒரு பரம்பரை சொத்து மாறுகிறது என்றால், சொத்து பெற்ற மகள் திருமணமாகி குழந்தைகள் இருந்தால், அந்த சொத்து அக்குழந்தைகளின் பெயருக்கு, அந்த மகளின் விருப்பத்தின் அடிப்படையில் சென்றுவிடும்.

ஆனால், இத்தகைய வாரிசாகும் பெண் திருமணம், குழந்தைகள் என்று மாறாமல், தனி நபராகவே வாழ்கிறார் என்றால், அவருக்கு பின் அந்த சொத்து யார் பெயருக்கு சேரும் என்பதில் சிக்கல் ஏற்படும்.

 சொத்தை எழுதிக் கொடுத்த பெற்றோர் இருந்தால், மீண்டும் அவரிடமே போய் சேர்ந்துவிடும். அவர்களும் இறந்திருந்தால் அந்த பெண்ணின் சகோதர, சகோதரிகளுக்கு சென்றடையும்.

திருமணம் செய்யாமல், வாரிசு இல்லாமல் சொத்துடைய பெண் இறப்பதற்கு முன், தனக்கு விருப்பமானவர்களுக்கு அந்த சொத்தை முழுமனதுடன் எழுதி வைத்திருந்தால், அதன்படியே அந்த சொத்து அவர்களுக்கே போய் சேரும். பெற்றோரோ, சகோதர உறவுகளோ தலையிட முடியாது.

பெரும்பாலான நாட்டுச் சட்டங்கள், ஆணுக்குப் பெண் சமம் என்றே கூறுகின்றன. ஆனால், நடைமுறையில் அப்படி இல்லையென்பதே உண்மை. நம் சமுதாயத்தில் மதத்தின் அடிப்படையாகக் கொண்டு இருக்கும் சட்டமே முடிவு செய்கிறது.

இஸ்லாமியப் பெண்களைப் பொறுத்தவரை, எப்போதுமே ஆண்களுக்கு சமமாக சொத்தில் பங்கு கோர முடியாது. ஒரு ஆண் வாரிசு, இரண்டு பாகம் சொத்தில் பங்கு எடுக்கும் போது, பெண்ணுக்கு ஒரு பாகமே ஒதுக்கப்படும்.

கிறிஸ்துவப் பெண்களின் நிலை இன்னும் சரி செய்யப்படவில்லையென்றே கூறப்படுகிறது. கிறிஸ்துவ கைம்பெண்ணுக்கு மூன்றில் ஒரு பாகமும், மூன்றில் இரண்டு பாகம் மற்ற நபர்களுக்கும் போய் சேரும். 

இதை சரி செய்யவே இந்தியாவில் பெண்களின் சொத்துரிமை நிலையை, 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து சில சட்டங்கள் இயற்றப்பட்டன. பெண்களுக்கான சொத்தின் மீது உள்ள உரிமைகள் என்ன என்பது போன்றவை The Hindu Succession Act 1956ல் குறிப்பிடப்பட்டுள்ளன. 

கூட்டு குடும்பங்களில் பரம்பரை சொத்துக்களை பங்கிடுவதில் பல்வேறு பிரச்னைகள் எழும். குறிப்பாக, ஒவ்வொரு தலைமுறையிலும் யார் பிரதான வாரிசாக இருக்கின்றனர் என்ற அடிப்படையில் தான், அது அடுத்த தலைமுறைக்கு எப்படி சேரும் என்பது முடிவாகும்.

 ஆனால், பெண்ணுக்குரிய சொத்துரிமை, எதுவரை, எப்படி பிரிக்கப்படுகிறது, எதிலெல்லாம் உரிமை கோரலாம், நமக்கு பின், நாம் யாருக்கு அதை மாற்றி எழுதலாம் போன்ற அடிப்படை சட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. 

ஒன்றை நினைவில் வையுங்கள், சட்ட அறியாமையை சட்டம் ஏற்காது. எனவே, தெளிவாகவே பெண்களுக்கான சொத்துரிமை சட்டத்தை தெரிந்து கொள்வோம். பின் நமக்கான உரிமைக்காக போராடுவோம்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 19.06.2016

No comments:

Post a Comment