disalbe Right click

Saturday, June 11, 2016

உங்கள் குழந்தையுடன் வெளிநாட்டுக்கு பயணமா?


உங்கள் குழந்தையுடன் வெளிநாட்டுக்கு பயணமா?
என்ன செய்ய வேண்டும்?
வெளிநாடுகளுக்கு கைக்குழந்தையுடன் பயணம் மேற்கொள்ளப்போகும் பெற்றோரா நீங்கள்? அப்படியானால் நிச்சயம் இங்கிருக்கும் டிப்ஸ்களை படித்துவிடுங்கள் என்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த பிருந்தா. பலமுறை வெளிநாட்டு பயணம் தந்த அவருடைய அனுபவத்தில் இருந்து குறிப்புகள் சில…

1. தட்பவெட்பம்

நீங்கள் பயணம் மேற்கொள்ளப் போகும் நாட்டை பற்றி வெப்சைட்டில் நன்கு தேடி, படித்துப் பாருங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைக்கு அங்குள்ள தட்பவெட்பத்தை சமாளிக்க என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலாம், கூடாது என்று கணிக்க முடியும்.

2. பாஸ்போர்ட்

குழந்தை பிறந்தவுடன் பாஸ்போர்ட் எடுத்திருந்தால், அவர்களுக்கு ஐந்து வயது பிறப்பதற்கு முன்னர் பாஸ்போர்ட்டை புதுப்பித்து விடுங்கள். விசா அப்ளை செய்யும் முன், குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னர் வெளிநாடு செல்லும் அனைவரின் பாஸ்போர்ட்டையும், அதன் புதுப்பிக்கும் தேதியையும் பார்த்து விடுவது நல்லது.

3. விசா (Visa)

விசா என்பது ஒரு நாட்டிற்கு செல்ல நமக்கு கொடுக்கப்படும் அனுமதிச் சீட்டு. அதை முறையாக பாஸ்போர்ட்டுடன் அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு நாட்டுக்கு செல்லும் முன்னர் ஜெனரல் அல்லது ஆன் தி அரைவல் விசா வாங்கிச் செல்ல வேண்டும். தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு செல்லும்போது விமான டிக்கெட், பாஸ்போர்ட் இருந்தால் போதுமானது. அங்கே சென்று இறங்கியவுடன் நம் பாஸ்போர்ட்டை காண்பித்து பணம் கொடுத்து விசா வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த முறை எல்லா நாடுகளுக்கும் பொருந்தாது. எனவே பயணம் மேற்கொள்ளும் முன்னர் அந்த நாட்டு விசா முறையை பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள். விசா கிடைப்பதற்கு குறைந்தது 3 முதல் 4 வாரங்கள் வரை ஆகும்.


4. ஃப்ளைட் டிக்கெட் (Flight Ticket)

விமானத்தில் பயணிக்க, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிக்கெட் வாங்கியாக வேண்டும். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் விலையில் பத்து சதவிகிதத்தை நாம் டிக்கெட்டாக கட்டணமாக செலுத்த வேண்டும். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட்டுக்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். டிக்கெட் எடுக்கும் போது பயணக் காப்பீடு (இன்சூரன்ஸ்) அவசியம் எடுத்துக் கொள்வது நல்லது. கைக்குழந்தையுடன் பயணம் மேற்கொள்கிறவர்கள் டிக்கெட் புக் செய்யும்போது, குழந்தையை படுக்க வைக்கும் வசதி கொண்ட இருக்கையாக பார்த்து புக் செய்யவும். பொதுவாக இது போன்ற இருக்கைகள் 2 அல்லது 3 மட்டுமே ஒரு ஃப்ளைட்டில் இருக்கும். எனவே முதலில் முந்துபவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும்.

5. மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையுடன் பயணம் மேற்கொள்ளும்போது தாய்க்கு சிரமம் இருக்கதான் செய்யும். அதைத் தடுக்க முறையான திட்டமிடல் அவசியம். உங்கள் குழந்தையை கவனித்த டாக்டரிடம் இருந்து குழந்தைக்கு தேவையான மருந்து எழுதிய பிரிஸ்கிரிப்ஷன், தடுப்பூசி போட்டதற்கு ஆதாரமான அட்டை, அவர்கள் பிறந்தபோது கொடுத்த மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தை பிறந்து 15 நாட்களுக்குப் பிறகு, மருத்துவரின் அனுமதிச் சீட்டோடு விமானத்தில் பயணிக்கலாம். சில நாடுகளில் இது செல்லாது. பிறந்து 3 மாதங்கள் பூர்த்தியான குழந்தையோடு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டில் போடப்படுகிற தடுப்பூசியை உங்கள் டாக்டரிடம் சொல்லி, 5 வாரங்களுக்கு முன்பே உங்களுக்கும் குழந்தைகளுக்கும் போட்டு விடுங்கள். இல்லையென்றால் நாம் சென்று இறங்கியதும், நம்மை தனிமைப்படுத்தி ஆயிரம் கேள்விகள் கேட்டு, ஒருவழியாக்கி விடுவார்கள். தடுப்பூசிபோட்டதற்கான நகல் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.

6. முதல் உதவிப்பெட்டி

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முதல் உதவிப் பெட்டி, காய்ச்சல், ஜலதோஷ மருந்து, சைனஸ் பிரச்னைகளுக்கான மருந்து போன்றவற்றை உரிய மருந்து சீட்டுடன் வைத்துக் கொள்வது நலம்.

7. ஸ்நாக்ஸ்

பயண செலவினங்களை ஓரளவுக்கு கணித்து, அதற்கேற்ப அந்த நாட்டு பணத்தை மாற்றி வைத்துக் கொள்வது நலம். குழந்தையுடன் செல்லும்போது பலவித அடுக்குகளைக் கொண்ட ஷோல்டர் பையை அவசியம் வைத்துக் கொள்ளுங்கள். அதில் டயப்பர், வெட் டிஷ்யூ பேப்பர், பிடித்த பொம்மை, சின்ன போர்வை, குடை, பால் பாட்டில், பால், பால் பவுடர், தண்ணீர், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஒரு செட் அவசியம் இருக்கட்டும். சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வாழைப்பழம், பிஸ்கட், ஆப்பிள், உலர்ந்த பழங்கள் என்று உங்கள் குழந்தையை சமாளிக்கும் உணவு பொருட்களை அவசியம் வைத்துக் கொள்ளுங்கள். எந்த விமானத்தில் பயணிக்கிறீர்களோ அந்த விமானத்தின் சேவை கையேட்டை பல முறை நன்கு படித்துவிடுவது நல்லது.

8. விமானத்தில் உதவி

விமானத்தில், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுடுதண்ணீர் தருவது, அழுது கொண்டே இருக்கும் குழந்தையை நடந்து கொண்டே தட்டிக் கொடுக்க நம்மை அனுமதிப்பது, குழந்தை வாந்தியெடுத்தால் அதை வந்து க்ளீன் செய்து விடுவது போன்ற உதவிகள் செய்வார்கள். எனவே கவலை வேண்டாம்.

9. அவசிய தேவைகள்

குழந்தைகளுக்கான பொருட்களை அதிக அளவில் எடுத்துச் சென்று உங்கள் சுமையை அதிகரிக்க வேண்டாம். அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்றவறை எல்லா நாட்டிலும் தாராளமாக கிடைக்கிறது. குளிர் பிரதேசங்களுக்கு செல்லும் போது ஷூ, சாக்ஸ், ஜெர்கின் அல்லது ஓவர் கோட், டிரஸ், சன்ஸ்க்ரீன் லோஷன், நீச்சல் உடைகள், ஸ்விம்மிங் டயப்பர், சோப்பு, ஷாம்பு என்று அனைத்தும் இருக்கட்டும். குழந்தைகளுக்கான ஆடைகள் பளிச்சென்று இருந்தால், கூட்டத்தில் எளிதில் உங்கள் குழந்தையை அடையாளம் கண்டு கொள்ளலாம். அதிக கனமான ஆடைகளை தவிர்க்கவும்.

10.  தங்கும் விடுதிகள் (Hotels)

நீங்கள் சுற்றி பார்க்கும் இடத்துக்கும் உங்கள் தங்கும் விடுதிக்கும் அதிக தூரம் இருக்க வேண்டாம். குழந்தை அழுது கொண்டே இருந்தால் மறுபடியும் தங்கும் விடுதிக்கு வர அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத அளவுக்கு விடுதிகளை தேர்ந்தெடுங்கள். விடுதி அதிக தூரத்தில் இருந்தால் அதுவே குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு அசதியை தரும்.

11. கைடு புத்தகம் கட்டாயம்

சுற்றுலா செல்லும் பட்சத்தில், பல இடங்களை தேர்வு செய்து குழந்தைகளை சோர்வாக்கிவிடாமல், அவர்களுக்கு செளகரியமான இடத்திற்கு அழைத்து செல்லுங்கள். அதற்கு முன் அந்த நாட்டின் கைடு புத்தகம், மேப், இன்பர்மேஷன் சென்டர் பற்றிய விவரம் போன்றவற்றை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்.

12. உணவில் கவனம்

உணவுகளை பொறுத்தவரை நாம் விரும்பும் உணவு வெளிநாட்டில் கிடைக்காமல் போகலாம். எனவே பிரெட் போன்ற அதிகம் தொல்லை தராத உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் பிரச்னைகள் வராது.

நன்றி : விகடன் செய்திகள் - 06.06.2016

No comments:

Post a Comment