அடுத்தவர்களுக்கு விபத்து நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?
விபத்தில் சிக்கியவர்களுக்கு அச்சமின்றி உதவலாம்
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் காவல் துறை அலைக்கழிக்குமோ என அச்சப்படத் தேவையில்லை. உச்சநீதிமன்றமே அதற்கான வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.
பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் வாகனம் மோதி படுகாயத்துடன் சாலையில் உயிருக்குப் போராடினர். அவர்களை மீட்க யாரும் முன்வரவில்லை. மாறாக பலரும் தங்களது செல்லிடப்பேசியில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இதேபோல, இளைஞர் ஒருவரது உடல் இரண்டு துண்டாகி சாலையில் கிடந்ததையும் செல்லிடப்பேசியில் பதிவேற்ற மட்டும் செய்தனர். உதவி கோரி கடைசி நேரத்தில் போராடியவர்களுக்கு யாரும் முன்வரவில்லை. போலீஸாரின் விசாரணை மற்றும் அலைக்கழிப்புகள், சாட்சியம் ஆகியவற்றுக்கு அஞ்சியே இந்த அவலநிலை அரங்கேறி வருவதை மறுப்பதற்கில்லை.
நாடு முழுவதும் விபத்தில் சிக்குவோர் சரியான நேரத்தில் முதலுதவி மற்றும் சிகிச்சை கிடைத்தால் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, சாலை விபத்துகளில் சிக்குவோரை காப்பாற்ற நினைப்பவர்களை போலீஸ் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யச் சென்றால் வழக்கு வருமோ என இனி அச்சமடையத் தேவையில்லை.
சாலை விபத்துக்களில் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறி, சேவ் லைஃப் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில், சாலை போக்குவரத்துத் துறை முன்னாள் செயலர் சுந்தர், முன்னாள் தலைமை விஞ்ஞானி நிஷி மிட்டல் அடங்கிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்.
இக் குழுவின் அறிக்கையில், மாநில சாலைப் பாதுகாப்பு கவுன்சில், விபத்து பகுதிகளை அடையாளம் காண்பது, நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை தடை செய்வது, ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகளை வழங்கியது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சாலைப் பாதுகாப்பு விதிகளில் மத்திய அரசு மாற்றம் செய்தது. விபத்துகளில் சிக்கும் நபர்களுக்கு உதவி புரிந்தால் போலீஸாரின் தொல்லைகள், அலைக்கழிப்புகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.
இதுதொடர்பாக, திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் திருஞானம் கூறுகையில், உச்சநீதிமன்ற புதிய வழிகாட்டுதல்களின்படி பொதுமக்கள் எந்தவித அச்சம், தயக்கமும் இன்றி, சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களை மீட்கலாம். அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்து அனைத்து உதவிகளையும் வழங்கி உயிரைக் காக்கலாம் என்றார்.
காவல்துறை நிர்பந்தம் கூடாது
சாலை விபத்தில் காயமடைந்த நபர்களை மருத்துவமனையில் சேர்த்த நபர்கள் கண்ணால் கண்ட சாட்சியாக இல்லையெனில், அவர்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து செல்ல அனுமதிக்க வேண்டும். கண்ணால் கண்ட சாட்சியிடம் முகவரி மட்டும் பெற்று அனுப்பவிட வேண்டும். சன்மானமும் வழங்க வேண்டும்.
விபத்து குறித்து நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தகவல் தரும் நபர்களது பெயர் விவரங்களை கேட்டு போலீஸார் நிர்பந்தப்படுத்தக் கூடாது. கண்ணால் கண்ட சாட்சியாக முன்வரும் நபர்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கக் கூடாது. மேலும், ஒரே கட்டமாக விசாரணையை முடித்து அனுப்ப வேண்டும். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்து வரும் நபர்களிடம் எந்தவித பணமும் கேட்டு மருத்துவமனை நிர்வாகம் நிர்பந்தம் செய்யக் கூடாது. முதலில் சிகிச்சையை தொடங்க வேண்டும். இல்லையெனில் உதாசீனப்படுத்தும் மருத்துவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் உதவி செய்வோரிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கமாட்டோம் என்பதை மருத்துவமனை நிர்வாகம் விளம்பரம் செய்ய வேண்டும். உதவி செய்யும் நபர்களுக்கு ஊக்கத் தொகை கிடைக்க தொடர்புடைய மருத்துவமனை அத்தாட்சி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பலி எண்ணிக்கை குறைய வாய்ப்பு!
உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்கள் மூலம் விபத்தில் சிக்கும் நபர்களுக்கு விரைந்து உதவிகள் கிடைக்கும். காலதாமதத்தால் உயிரிழக்கும் நிகழ்வுகள் குறையும். கடந்த சில ஆண்டுகளாக சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு நாடு முழுவதும் லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியாக 2 ஆயிரம் விபத்துகள் நடைபெறுகின்றன. 400 முதல் 500 பேர் வரை உயிரிழக்கும் சூழல் உள்ளது. இதில், குழந்தைகள் அதிகம் என்பது கவலைக்குரியது. இந்தச் சூழலில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், கட்டாயம் பலி எண்ணிக்கையை குறைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
நன்றி : தினமணி நாளிதழ் - 24.06.2016
No comments:
Post a Comment