disalbe Right click

Saturday, July 16, 2016

நீதிமன்ற விசாரணை


நீதிமன்ற விசாரணை - என்ன செய்ய வேண்டும்?

இந்திய சாட்சிய சட்டத்தின் அடிப்படையில்தான் நமது நாட்டு நீதிமன்றங்கள் தனது தீர்ப்புகளை வழங்கி வருகின்றன.

உரிமையியல் நீதிமன்றத்தில், ஒரு வழக்கை தாக்கல் செய்பவர்கள் வாய்மொழிச் சான்றுகள் மற்றும் ஆவணச் சான்றுகள் ஆகியவற்றை சரியான முறையில் அளிக்கா விட்டால், வழக்கின் முடிவு அவர்களுக்கு எதிராகவே அமைந்துவிடும்.

உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற குற்றவியல் வழக்குகளில் செய்யப்படுகின்ற பொதுவான   விசாரணையைப் பற்றி நாம் இங்கு காணலாம்.

விசாரணைகள்  

1) முதல் விசாரணை 

2) குறுக்கு விசாரணை

3) மறு விசாரணை

என மூன்று விதமாக செய்யப்படுகிறது. 

முதல் விசாரணை என்றால் என்ன?

வழக்கு தொடுத்தவரை  அல்லது அவரது சாட்சியை அவரது வழக்கறிஞர் அழைத்து  விசாரிக்கப்படுவது முதல் விசாரணை எனப்படுகிறது.

குறுக்கு விசாரணை என்றால் என்ன?

வழக்குத் தொடுத்தவரை அல்லது அவரது சாட்சியை எதிர்தரப்பு வழக்கறிஞர் அழைத்து விசாரிக்கப்படுவது குறுக்கு விசாரணை எனப்படுகிறது.

இதனை செய்வது எதிர்தரப்பு வழக்கறிஞரின் விருப்பத்தைப் பொறுத்தது ஆகும்.

மறு விசாரணை என்றால் என்ன?

வழக்கு தொடுத்தவரை  அல்லது அவரது சாட்சியை அவரது வழக்கறிஞர் மறுபடியும் அழைத்து  விசாரிக்கப்படுவது மறு விசாரணை எனப்படுகிறது.

இதனை செய்வது வழக்குத் தொடுத்தவரின் வழக்கறிஞரின் விருப்பத்தைப் பொறுத்தது ஆகும்.

விடை பொதி வினா

 சாட்சியை கேள்விகள் கேட்கும் வழக்கறிஞர் தான் பெற விரும்புகின்ற அல்லது எதிர்பார்க்கின்ற விடையை குறிப்பாக உணர்த்தும் எந்த ஒரு வினாவும் விடை பொதி வினா என்று அழைக்கப்படுகிறது.

உதாரணமாக,

நீங்கள்தான் குணசேகரனா?

சம்பவத்தன்று நீங்கள் சென்னையில்தான் இருந்தீர்களா?

உங்களிடம் மணிகண்டன் 2 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியிருந்தாரா?

மேற்கண்ட கேள்விகள் விடை பொதி வினாக்கள் ஆகும்.  

குறுக்கு விசாரணையில் மட்டும் இதனை கேட்க நீதிபதியின் அனுமதி தேவை இல்லை.

விடை பொதி வி்னாக்கள் முதல் விசாரணையிலோ அல்லது மறு விசாரணையிலோ எதிர்தரப்பினரால் ஆட்சேபிக்கப்பட்டால் நீதிபதியின் அனுமதியின்றி அவற்றை கேட்கக் கூடாது.

மறுவிசாரணை செய்யப்பட்ட பின்பு, விருப்பப்பட்டால்  வழக்குத் தொடுத்தவரை அல்லது அவரது சாட்சியை எதிர்தரப்பு வழக்கறிஞர் நீதிபதியின் அனுமதியோடு மீண்டும் குறுக்கு விசாரணை செய்யலாம்.

 -புலமை வெங்கடாச்சலம் அவர்கள் எழுதிய இந்திய சாட்சியச் சட்டம் என்ற நூலில் படித்தது-
*************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி************ 


No comments:

Post a Comment