disalbe Right click

Monday, July 25, 2016

வீடுகட்டும்போது வருவாய்த்துறையில் என்.ஓ.சி.


வீடுகட்டும்போது வருவாய்த்துறையில் என்.ஓ.சி. இனி வாங்க வேண்டாம்
என்ன செய்ய வேண்டும்?

வீடுகட்டுவோருக்கு வசதி

கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது, சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான கிராம வரைபடங்களை ஆய்வு செய்ய, நகரமைப்பு துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

இதனால், வீடு கட்டுவோர், என்.ஓ.சி., எனப்படும், தடையின்மை சான்றுக்காக, வருவாய் துறையினரிடம் நிற்பதில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது.

தமிழகத்தில், சென்னை பெருநகருக்கு வெளியே உள்ள பகுதிகளில் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், நகர் மற்றும் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,க்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, திட்ட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், இதில் திட்ட அனுமதி கோரப்படும் நிலம் தொடர்பான உண்மை நிலவரத்தை சரி பார்க்க வேண்டும்.

சிக்கல்

இதற்கான வசதி நகரமைப்பு துறை அதிகாரிகளுக்கு இல்லாததால், சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று வர, அவர்கள் விண்ணப்பதாரரை அறிவுறுத்துவர். 

இதன்படி, ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தடையின்மை சான்று கேட்டு வருவாய் துறை அலுவலகங்களை அணுகுவதால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.

குறிப்பாக, ஏற்கனவே பணி சுமையில் இருக்கும் வருவாய்துறை அதிகாரிகள், தடையின்மை சான்று வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியே ஆர்வம் காட்ட முன்வந்தாலும், உரிய முறையில், 'கவனிக்கும்' விண்ணப்பதாரருக்கு மட்டுமே சான்று கிடைக்கும். 

இதனால், வீடு கட்ட அனுமதி பெறுவோர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
'இத்தகைய சான்று பெறும் நடைமுறையில் உரிய மாற்றங்கள் செய்ய வேண்டும்' என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பான, 'கிரெடாய்' உட்பட, சில அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

சுற்றறிக்கை

இது தொடர்பாக, நகர் மற்றும் ஊரமைப்பு துறை ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் தர்மேந்திர பிரதாப் யாதவ், நகரமைப்பு துறையில் அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:திட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நில விவரங்களை வருவாய் துறையில் நில நிர்வாக பிரிவின் இணையதளத்துக்கு சென்று நகரமைப்பு துறை அதிகாரிகளே ஆய்வு செய்யலாம்.

இதற்காக, நில நிர்வாகத்துறை ஒப்புதலுடன் நகரமைப்பு துறையின் அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கு தனித்தனியாக, 'யூசர் ஐடி' எனப்படும்பயனாளர் பெயர்; 'பாஸ்வேர்டு' எனப்படும் ரகசியகுறியீடு ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

பயன்பாடு

இதை பயன்படுத்தி கிராம அளவில் நிலங்களின் தன்மை, உரிமை நிலை, பயன்பாடு, வகைபாடு, அரசுக்காக கையகப்படுத்துவதா, உச்சவரம்பு சிக்கல் உள்ளதா என்பது போன்ற விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரரிடம் தனியாக வருவாய் துறை தடையின்மை சான்று கேட்காமல், அனைத்து விவரங்களையும் இணையதளம் வாயிலாகவே சரிபார்த்து கொள்ளலாம். இந்த வசதியை அனைத்து பிரிவு அதிகாரிகளும் முறையாக பயன்படுத்தும்படி அறுவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 26.07.2016

No comments:

Post a Comment