disalbe Right click

Thursday, August 25, 2016

92 பைசாவில் பயணக் காப்பீடு


92 பைசாவில் பயணக் காப்பீடு - என்ன செய்ய வேண்டும்?

92 பைசாவில் முன்பதிவு பயணிகளுக்கு பயணக் காப்பீடு

ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் கொண்டுவரப்பட்டுள்ள பயணக் காப்பீட்டுத் திட்டம் ஆக. 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ரயில்கள் விபத்துக்குள்ளாகும்போது, பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விருப்பத் தேர்வாக பயணக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ரயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் பயணக் காப்பீடுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

ஆன்லைன் மூலம் பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்யும்போது, விருப்பத் தேர்வாக இந்த பயணக் காப்பீடு திட்டம் இருக்கும். பயணிகள் விரும்பினால், ரயில் கட்டணத்துடன் கூடுதலாக 92 பைசாவை செலுத்தி பயணக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். 

பயணக் காப்பீடு 5 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கும், வெளிநாட்டினருக்கும் பொருந்தாது. 

அதேபோல், புறநகர் ரயில்களில் பயணிப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது.

 ரயில்கள் விபத்தை சந்தித்தாலோ அல்லது பயங்கரவாதத் தாக்குதலின்போதோ பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

விபத்தில் பயணிகள் முழுமையாக செயல்படாத அளவுக்கு ஊனமடைந்தால் ரூ.10 லட்சமும், கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகளை இழக்க நேரிட்டால், ரூ.7.5 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும். 

இதேபோல், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். 

முன்பதிவு செய்த பிறகு பயணச்சீட்டை ரத்து செய்தால் பயணக் காப்பீட்டுத் தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

நன்றி : தினமணி நாளிதழ் - 26.08.2016

No comments:

Post a Comment