கம்ப்யூட்டரில் பணி செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கண்கள் பாதுகாப்பு - விதிமுறைஅவசியம்!
மூன்று மணி நேரத்துக்கு மேல், தொடர்ச்சியாக கணினியில் பணியாற்றும்போது, சி.வி.எஸ்., - கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் குறைபாடு ஏற்பட, 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
இந்த பிரச்னை, எந்த வயதினருக்கும் ஏற்படும். மனிதன் ஒரே இடத்திலேயே மணிக்கணக்கில் அமர்ந்து, கண்களுக்குப் பெரிய அசைவு எதுவுமின்றி, கணினியில் வேலை செய்வதால், கண் சோர்வு, வலி, அரிப்பு, எரிச்சல், மங்கலான பார்வை, தலைவலி மற்றும் இரட்டைக் காட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
20:20:20 விதிமுறை
நம் கண்களைப் பாதுகாக்க, 20:20:20 என்ற விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். அதாவது, 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால், 20 நொடிகள் தள்ளிச் சென்று, கண்களுக்கு ஓய்வு கொடுப்பதே இந்த விதிமுறை. மீண்டும், 20 நிமிடங்கள் வேலை செய்யலாம்.
ஒவ்வொரு முறை கண்களை சிமிட்டும்போதும் கண்களில் உள்ள நீர்ப்படலம் நிரம்புகிறது.
சராசரியாக, ஒரு நிமிடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு டஜன் தடவை கண்களைச் சிமிட்டுகிறோம்.
ஆனால், கணினி உள்ளிட்டவற்றில் அதிக நேரம் பணி செய்யும்போது, இந்த சிமிட்டும் அளவு குறைகிறது.
மேலும், கணினியில் பணியாற்றும்போது, கண்கள் நேர்கொண்ட பார்வையில் இருக்கிறது. அப்போது, கண்கள் பார்க்கும் பரப்பளவு அதிகமாக உள்ளது.
இதனால், நீர்ப்படலம் ஆவியாகிறது.
கணினி, ஐபோன் போன்ற சாதனங்களில் பணிபுரியும்போது, முடிந்த அளவுக்கு, அடிக்கடி கண்களை சிமிட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே, உடனடியாகக் கிடைக்கும் நிவாரணி.
குளிர்சாதன அறைகள் மற்றும் மின் விசிறிக்கு அடியில் அமர்ந்து பணிபுரிந்தால், கண்கள் விரைவாக வறண்டு போகின்றன.
உங்கள் கண்களின் மீதோ அல்லது கம்ப்யூட்டர் மானிட்டர் மீதோ, நேரடியாக விளக்கின் வெளிச்சம் படாதவாறு பணிச் சூழலை அமைத்துக் கொள்ள வேண்டும்.
சிகிச்சை செய்யப்படாத பார்வைக் குறைபாடுகள் அல்லது தவறான கண்ணாடியை அணிதல் போன்றவற்றின் மூலம், சி.வி.எஸ்., பிரச்னை மேலும் சிக்கலாகும்.
தரமான பர்னிச்சர்களை பயன்படுத்தி, நேராக அமர்ந்து, உங்களின் கண்களுக்கும், மானிட்டருக்குமான துாரத்தை குறைந்தபட்சம், 20 முதல், 28 அங்குலம் வரை அமைத்து பணியாற்றுங்கள்.
மானிட்டர் உங்கள் கண்களின் உயரத்தை விட, நான்கு முதல், ஒன்பது அங்குலம் வரை தாழ்த்தி வைக்கவும்.
இதன்மூலம் நம் கண்கள் கீழ் நோக்கிப் பார்க்கும். கழுத்து, முதுகு மற்றும் தோள்பட்டை ஆகியவற்றுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் நீங்கும்.
டாக்டர் அமர் அகர்வால், தலைவர்
அகர்வால் கண் மருத்துவமனை குழுமம்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 27.08.2016
No comments:
Post a Comment