டிராபிக் போலீஸ் அதிகாரங்கள் - என்ன செய்ய வேண்டும்?
சாலையில் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்வதற்காக டிராஃபிக் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் சில வேளைகளில் பெரும் களேபரங்களை ஏற்படுத்துவதை தினசரி பார்க்க முடியும்.
சிலவேளைகளில் போலீசாருக்கு பயந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுவதும், தாறுமாறு வேகத்தில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
லஞ்சம், அலைகழிப்புக்கு பயந்துதான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், இதுபோன்று டிராஃபிக் போலீசார் நிறுத்தும்பட்சத்தில், வாகன ஓட்டிகளுக்கான உரிமைகளை தெரிந்து வைத்துக் கொண்டால், ஓரளவு இந்த அச்சத்திலிருந்து விடுபட முடியும்.
இது நிச்சயம் உங்கள் அச்சத்தை போக்கி தேவையில்லாத பதற்றத்தை தணிக்கும் என நம்புகிறோம்.
வாகன தணிக்கை
சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லது போக்குவரத்து துறை அதிகாரி எந்தவொரு வாகனத்தையும் ஆய்வு செய்ய உரிமை உண்டு. அவ்வாறு, உங்கள் வாகனத்தை ஆய்வுக்காக நிறுத்த சொல்லும்பட்சத்தில், வண்டியின் வேகத்தை குறைத்து, சாலையின் ஓரமாக நிறுத்துங்கள். தப்பித்துச் செல்ல முயற்சிப்பது விபத்துக்களுக்கு வழிகோலும்.
காவலருக்கான அதிகாரம்
சாதாரண போக்குவரத்து காவலர் உங்களது வாகனத்தின் ஆவணங்களை கேட்பதற்கோ, வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கோ அதிகாரம் இல்லை. ஏஎஸ்ஐ, எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மட்டுமே ஸ்பாட் ஃபைன் போட அதிகாரம் கொண்டவர்கள்.
ஏஎஸ்ஐ ரேங்கிற்கு கீழே உள்ள தலைமை காவலர் மற்றும் காவலர்கள் செல்லான் போட முடியாது. அதேநேரத்தில், விதிமீறல்கள் மற்றும் அதன் தன்மை குறித்து குறிப்பெடுக்கவும், அதுகுறித்து காவல்துறை புகார் பதிவு மையத்திற்கு தகவல் அளிக்க முடியும்.
கைது அதிகாரம்
சாதாரண போக்குவரத்து காவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்யவோ அல்லது வாகன ஓட்டிகளை கைது செய்யவோ முடியாது. வாகன புகை பரிசோதனை சான்றையும் அவர்கள் கேட்க முடியாது. அது போக்குவரத்து அதிகாரிகளால் மட்டுமே கேட்க முடியும். மேலும், வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கும் அதிகாரம் இல்லை.
ஸ்பாட் ஃபைன்
சிக்னல் ஜம்ப், குடிபோதை டிரைவிங், மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஸ்பாட் ஃபைன் போடப்பட்டால், அதனை உடனே கட்ட இயலாத சூழல் இருந்தால் மட்டுமே, டிரைவிங் லைசென்ஸை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். நீதிமன்றத்தில் அபாரதம் கட்டிய பிறகு திரும்ப பெற முடியும்.
அதேபோன்று, நிர்ணயித்ததைவிட அதிக அபராதம் விதித்தாலும், கோர்ட்டில் கட்டி விடுகிறேன் என்று கூறிவிட்டு செல்லானை பெற்றுக் கொண்டு வந்துவிடலாம்.
டிரைவிங் லைசென்ஸ்
சிக்னல் ஜம்ப், குடிபோதை டிரைவிங், அதிக பாரம் ஏற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய வழி உள்ளது. அதேநேரத்தில், அதற்குண்டான உரிய செல்லான் இல்லாமல் உங்களது டிரைவிங் லைசென்ஸை டிராஃபிக் போலீஸ் எடுத்து செல்ல இயலாது. எனவே, அதற்குண்டான உரிய ஆவணத்தை கேட்டு பெறுவது அவசியம்.
காரை எடுத்துச் சென்றால்...
காரில் யாரேனும் அமர்ந்திருக்கும்போது, காரை போலீசார் வேறு வாகனம் டோ செய்து எடுத்துச் செல்ல முடியாது. அதேநேரத்தில், போலீசாரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டு காரை விட்டு இறங்கிவிடுவது அவசியம்.
பெண்களுக்கு...
மாலை 6 மணிக்கு மேல் பெண் வாகன ஓட்டிகள் அல்லது பெண்களை ஏற்றி வரும் வாகனங்கள் போலீசாரால் நிறுத்தப்பட்டால், அவரை பெண் காவலர் மூலமாகவே ஆய்வு செய்ய முடியும் . மேலும், பெண் காவலர் இல்லாதபட்சத்தில், அவரை வரவழைத்து ஆய்வு செய்ய சொல்லவும் பெண்களுக்கு உரிமை உண்டு.
அபராதம்
அபராதம் விதிக்கும் டிராஃபிக் போலீசாரிடம் அதற்குண்டான செல்லான் புத்தகம் அல்லது மின்னணு எந்திரம் கைவசம் இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர்கள் அபராதம் விதிக்க முடியாது.
இதுதான் விதி...
சாலை விதியை மீறிய நிலையில், உங்களது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை போக்குவரத்து போலீசாரிடம் காட்டுவது அவசியம். மோட்டார் வாகனச் சட்டம் 130-ன் படி சீருடையுடன் பணியில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம் வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்களை காட்டுவது அவசியம், ஆனால், ஒப்படைக்கும் அவசியம் இல்லை.
இதுவும் செய்ய முடியாது...
இன்று பல போலீசார் வண்டியை நிறுத்தியவுடன் வாகனத்தில் உள்ள சாவியை முதலில் பிடுங்கிக் கொள்கின்றனர். இதுவும் தவறு. அதேபோன்று, காரின் கதவுகளை கட்டாயமாக திறந்து உங்களை வெளியேற்றுவதும் தவறு.
கைது செய்தால்...
விதி மீறலுக்காக கைது செய்யும்பட்சத்தில், நேராக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து 24 மணி நேரத்திற்குள் உங்களை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்.
எனவே, விதிமுறைகளை மீறும்பட்சத்தில் இந்த விதிகளை மனதில் வைத்தால் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க முடியும்.
இதெல்லாம் விடுங்க...
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்பதுடன், போலீசாருக்கு பயந்து விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
அதேநேரத்தில்,
வாகனங்களில் உரிய ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில்தான் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்பதையும் மனதில் வைக்கவும்.
Written By: Saravana Rajan
நன்றி : டிரைவ் ஸ்பார்க் - 12.08.2016
No comments:
Post a Comment